நாட்டுச் சுதந்திரம் ஏட்டுச் சுரைக்காய் அல்ல!

-ஜி.ராமகிருஷ்ணன்

ன்று, இந்தியாவின் 77 வது சுதந்திர திருநாள். 1947 ஓகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திரத்தைக் கொண்டாடுகிற போது, இந்தியாவின் விடுதலைக்காக போராடிய பல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிறையில் இருந்தனர். “நாடு சுதந்திரம் பெற்றபோது நான் வேலூர் சிறையில் இருந்தேன்” என கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.கோபாலன் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர் தோழர் பி.சீனிவாசராவ். ‘மாணவர்களே! கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுங்கள். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்’ என அண்ணல் காந்திஜி விடுத்த அறைகூவலை ஏற்று பெங்களூரில் தன்னுடைய கல்லூரிக் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு அன்றைய மெட்ராசுக்கு வந்தவர் பி.சீனிவாசராவ். 1947 ஜனவரி மாதத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கட்சி முடிவின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கிற்காகச் சென்ற பி.சீனிவாசராவ், தலைமறைவாகி கட்சிப் பணியை தொடர்ந்தார். ஜனவரி 20 ஆம் திகதியன்று தலைமறைவான தோழர் சீனிவாச ராவ் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நாடு விடுதலையடைந்த பின்னணியில் பதுங்குமிடத்தை விட்டு வெளியேறினார். இந்த எட்டு மாதங்களில் தன்னுடைய தலைமறைவு அனுபவத்தை 20 கடிதங்களாக கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனுக்கு அனுப்பினார். தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் முன்னுரையோடு அந்தக் கடிதங்கள்  1947 ஓக்ரோபர் மாதத்தில் நூலாக வெளியாகின. அந்நூலை பரிசல் வெளியீட்டகம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மறுபதிப்பு செய்துள்ளது.

ரயிலில் இருந்து குதித்து…

கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாவது காவல்துறையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல. கட்சி கொடுத்துள்ள புரட்சிகர அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகத்தான். ஜனவரி 23 ஆம் திகதியன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு, போலீஸ்காரர்களின் பூட்ஸ் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியேறினார் தோழர் சீனிவாசராவ். “வேட்டை நாய்கள் மோப்பம் பிடித்துவிட்டதென அறிந்து உடனே வீட்டின் பின் கட்டிற்கு ஓடி அடுத்த வீட்டில் தாவிக் குதித்து ஏறி அங்கிருந்து பின் நகர சுத்தித் தொழிலாளர் காலனியில் விழுந்தடித்து ஓடினேன். அரைக்கால் டவுசரும் உடலை மூட ஒரு துண்டும்தான் அணிந்திருந்தேன்” என தனது அனுபவத்தை முதல் கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

ரயிலில் திருச்சிக்கு செல்கிறபோது காவல்துறையினர் ரயிலிலேயே இவரைக் கைது செய்திட முயற்சித்தனர். ஆனால் அவர் ரயிலில் இருந்து குதித்து போலீசாரிடம் இருந்து தப்பித்தார். இதனால் அவருடைய காலில் சதை பிய்த்துக்கொண்டது. அந்தக் காலுடனே 10-12 கி.மீ., நடந்தே திருச்சிக்குச் சென்று சேர்ந்தார். சில நாட்கள் அங்கே இருந்து கட்சிப் பணியை முடித்துக் கொண்டு பெப்ரவரி 17 அன்று மதுரைக்குச் சென்றார். பல நாட்கள் உணவு கிடைக்காது. “நாள் முழுவதும் நான் ஒரு கவளம் சோறுகூட சாப்பிடவில்லை. முழுப் பட்டினி. மேலும் கால் ஓயுமட்டும் நடந்திருக்கிறேன். நான் எனது தற்காலிகத் தங்குமிடத்திற்கு வந்த பொழுது என் ஒவ்வொரு அங்கமும் மேற்கொண்டு வேலை செய்ய மறுத்தன. களைப்பு வந்து என்னைக் கவ்விக் கொண்டது. எனக்கு இடமளிக்கும் தோழர், உடனே சென்று இரண்டு டசின் நல்ல வாழைப்பழங்களும், குளிர்ந்த பானமும் வாங்கி வந்தார். எல்லாப் பழங்களையும், பானத்தையும் வயிற்றிற்குள் தள்ளிய பிறகுதான்  எனக்கு உயிர் வந்தது.” என மதுரையில் அவர் தங்கியிருந்த அனுபவத்தைக் கூட சுவைபட எழுதியிருக்கிறார்.  காவல்துறையிடம் சிக்காமல் கட்சி வேலை செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் தலைமறைவாக இருப்பதால் பல கொடுமையான கஷ்டங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்கு இது உதாரணம். அக்காலத்தில், மதுரை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சி பலமான இயக்கமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது மக்கள் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 

சிறையிலிருந்தே  பி.ஆர்.வென்றதன் ரகசியம்

தோழர் சீனிவாசராவ் எழுதியுள்ளதைப் பார்ப்போம்; “ஒருநாள் அடுத்த வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பாஷணையை நான் கேட்க நேரிட்டது. தோழர் ராமமூர்த்தியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், “தலைவர் நல்லாத் தலையை மொட்டை போட்டுக்கிட்டிருக்காரு. இன்னிக்கு லொறியிலே கோர்ட்டுக்கு கொண்டு வந்தாங்க,  தொழிலாளிகள் லொறியை மறிச்சிக்கிட்டு “தோழர் ராமமூர்த்திக்கு ஜே!” என பலமா கோஷிச்சாங்க”.  முடிவாக தம்பதிகளிருவரும் ராமமூர்த்தி வெற்றிகரமாக விடுதலையாவார் எனத் தீர்ப்புக் கட்டினர். எங்குமே ராமமூர்த்தி மேல் தொழிலாளர்களுக்குள்ள அன்பும் மரியாதையும் அசாத்தியம். தினமும் அவர் பெயர் அடிபடாத தொழிலாளர் வீடே இல்லையெனலாம்.” சுதந்திர இந்தியாவில், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் சிறையில் இருந்தபடியே எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை தோழர் சீனிவாசராவின் கூற்றில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தோழர் சீனிவாசராவ், இன்றைய தேனி மாவட்டம் பாளையத்தில் நடைபெற்ற விவசாய சங்க மாநில மாநாட்டிற்குச் செல்கிறார். மாநிலக் குழுவிற்காக அவர் தயாரித்த அறிக்கையை மாநாடு விவாதிக்கிறது. தலைமறைவாக இருக்கக் கூறியதால் நேரடியாக மாநாட்டில் கலந்துகொள்ளாமல் மாநாட்டிற்கு அனைத்து வகையிலும் வழிகாட்டினார் அவர். மாநாடு வெற்றிகரமாக முடிந்த பிறகு அவரும் மணலி கந்தசாமியும் தனித்தனியாக வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டனர். நெல்லை மாவட்டத்திற்குச் சென்றபோது அங்கு தோழர் ஆர்.நல்லக்கண்ணுவை சந்தித்ததைப் பற்றி சீனிவாசராவ் பதிவு செய்திருக்கிறார்: “இவரைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம். இன்டர்மீட்யட் வரை படித்திருக்கிறார். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல துடியான வாலிபன். பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இருக்கிறார். கிராமம், கிராமமாக சளைப்பின்றி நடந்து வேலைகளை கவனிப்பார்”. இவ்வாறு மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனுக்கு எழுதிய 19 கடிதங்களில் தலைமறைவாக இருந்து கொண்டு அரசியல் மற்றும் ஸ்தாபன பணியாற்றிய விபரங்களை சுவைபட எழுதியிருக்கிறார் தோழர் சீனிவாசராவ். 

அரசியல் ஞானம் அளித்த புத்தகம்

1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி தனது இருபதாவது கடிதத்தை எழுதி முடித்திருக்கிறார். பெங்களூரில் இருந்து மெட்ராஸ் நகரத்திற்கு வந்த அவர், ஆங்கிலேய அரசுக்கு எதிராக அன்னியத் துணிகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று 1932 ஆம்  ஆண்டு கைது செய்யப்பட்டார். மெட்ராஸ் சிறையில் சுபாஷ் சந்திரபோசை சந்திக்கிறார். அவரோடு உரையாடுகிறார். அடுத்த நாள் சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் அமீர் ஹைதர் கானை சந்தித்து அவரோடும் உரையாடினார். “சுபாஷ் சந்திரபோஸ் மீது எனக்கு கவர்ச்சி ஏற்பட்டது. பொழுது போவது தெரியாமல் பேசுவேன். ஆனால் எனக்கு எந்தவிதமான அரசியல் தெளிவும் அதனால் ஏற்படவில்லை” என்று குறிப்பிடுகிறார் சீனிவாச ராவ். மேலும் அவர் “ஒரு நாள் மாலை ஒரு சிறு சம்பவம் நடந்தது. அச்சம்பவம்தான் என் வாழ்க்கையை அடியோடு மாற்றி அரசியல் ஞானத்தை எனக்கு அளித்தது. நான் இன்று கட்சிக்குள் இருக்கும் பெரும் பேற்றிற்கு அடிகோலியது. நான் சுபாஷ் போஸிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு என்னுடைய இடத்திற்கு திரும்பினேன். என் பின்னாலேயே தோழர் அமீர் ஹைதர் கானும் கையில் ஒரு சிறு புத்தகத்துடன் வந்தார். அந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அந்தப் புத்தகம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை” என்கிறார்.

“கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்னுடைய பிரியமான புத்தகமாகிவிட்டது. இதற்கு பின் எனக்கு லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் மற்றும் அரசும் – புரட்சியும் புத்தகம் கிடைத்தது. இதுவரை நான் “ஏகாதிபத்தியம் ஒழிக” என்று எத்தனையோ மேடைகளில் இருந்தும் ஊர்வலங்களிலும் இடிமுழக்கம் செய்துள்ளேன். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது” என விவரிக்கிறார் சீனிவாசராவ். ஓகஸ்ட் 15 அன்று கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனை சந்தித்து, இருவரும் தீவுத்திடலில் விழாக்கோலம் பூண்டுள்ள மக்களைச் சந்திக்க சென்றுள்ளார்கள். அங்கே திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்களைக் கண்டபோது அவருக்கு நினைவிற்கு வந்ததெல்லாம் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்தவர்கள்தான். அதை நினைத்து உணர்ச்சி மேலோங்கி கண்ணீர் வடித்துள்ளார் தோழர் சீனிவாசராவ். நாட்டிற்கு அரசியல் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தன்னுடைய 20 வது கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இன்று நாட்டில் உடை, உணவுப் பஞ்சம் தாண்டவமாடுகிறது. நம் முன் நிற்கும் அந்த முக்கிய பிரச்சனையை பைசல் செய்திட நம் கட்சி உடனே முனைந்து செயலில் இறங்க வேண்டும். நாம் இதைச் செய்யத் தவறினால் நம் மக்களுக்கு சுதந்திரம் ஏட்டுச்சுரைக்காயாகத் தான் இருக்கும். நாமும் இதரர்களுடன் படுகுழியில் விழுந்துவிடுவோம்”. இது அவரின் எச்சரிக்கை.

இன்றுள்ள நிலைமை என்ன?

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் விலையேற்றமும், வேலையின்மையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இதற்கெதிராக நாடு தழுவிய வீரம் செறிந்த போராட்டத்திற்கு கட்சி யின் மத்தியக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று, சுதந்திர நன்னாளில் மக்களின் நல்வாழ்க்கைக்காக, வாழ்வாதாரத்திற்காக  போராடுவதுடன் கண்ணீரும், செந்நீரும் சிந்தி போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் அனைவரும் உறுதியேற்போம்!

Tags: