காஸா போர் நிறுத்த மத்தியஸ்த பணியை கட்டார் மீளாய்வு

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தை பலவீனம் அடைந்திருப்பதாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.

‘இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண முடியுமானவரை முயற்சித்து வருகிறோம்’ என்று கட்டார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani) தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டாருடன் எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கின்றன. பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமது மத்தியஸ்த பணி தொடர்பில் மீளாய்வு செய்யவிருப்பதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் குறைகூறல்கள் மற்றும் குறைமதிப்புக்கு ஆளாகி வருகிறது என்று அல் தானி தெரிவித்தார்.

‘துரதிருஷ்டவசமாக, இந்த மத்தியஸ்த முயற்சியில் குறைகூறல்களுக்கும் குறுகிய அரசியல் நலனுக்காக குறைமதிப்புக்கும் உட்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம்’ என்று டோஹாவில் கடந்த புதனன்று (17.04.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

‘இதனால் கட்டார் தனது பணி குறித்து விரிவான மீளாய்வு ஒன்றை செய்யவுள்ளது. இந்த நேரத்தில் நாம் மத்தியஸ்த பணியை மீளாய்வு செய்வதோடு இந்த மத்தியஸ்த தரப்புகள் எவ்வாறு ஈடுபடுகின்றன என்பதையும் நாம் மீளாய்வு செய்யவுள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் தம்மீது குறைகூறும் தரப்புகள் பற்றி கட்டார் குறிப்பிடாதபோதும் ஹமாஸ் அமைப்புக்கு போதுமான அழுத்தம் கொடுக்க கட்டார் தவறி இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பு 40 பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் அல்லது நோயுற்ற பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை மத்தியஸ்தர்கள் கடைசியாக பரிந்துரைத்திருந்தபோதும் ஹமாஸ் அமைப்பு அதனை நிராகரித்திருந்தது.

எனினும் காஸாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறி அங்கு முழுமையான போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது. மறுபுறம், இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடரும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயற்சித்து வருவதால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் காஸாவில் 195 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்தன. பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் தெற்கு காஸாவின் ரபா (Rafah) நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1.4 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையிலேயே அந்த நகர் மீதான தாக்குதல்கள் படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரபாவுடனான எல்லை பகுதிக்கு அருகில் இஸ்ரேல் மேலும் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை குவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரபா மீதான படையெடுப்பு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எச்சரித்து வருகின்றபோதும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கு அந்த நகரை தாக்குவது தீர்க்கமானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

காஸா நகர் மீது தொடர்ந்தும் சரமாரித் தாக்குதல்கள் இடம்பெற்றதோடு, மத்திய காஸாவின் வடக்கு நுசைரத் பகுதியில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற பின் பல சடலங்களை மீட்டதாக காஸா சிவில் பாதுகாப்பு பணியாளர்களை மேற்கொள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா (WAFA) செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு மீட்கப்படாத நிலையில் பல சடலங்களும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அந்தப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில்கள் காரணமாக காஸாவுக்குள் 85 வீதத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோன்று காஸாவின் 60 வீதமான உட்கட்டமைப்புகள் சேதமடைந்து அல்லது அழிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் தனது பிடியை இறுக்கி வருவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி (Philippe Lazzarini) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளார். காசாவில் மனிதாபிமான உதவிகளை முடக்கி இருப்பதாகவும் அங்கு ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் இஸ்ரேல் மீது அவர் குற்றம்சாட்டினார்.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் காஸா, மேற்குக் கரை, ஜோர்தான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள மில்லியன் கணக்காக பலஸ்தீனர்களுக்கான கல்வி, சுகாதாரம் மற்றம் உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸாவில் போர் வெடித்தது தொடக்கம் உதவிச் செயற்பாடுகளில் இந்த நிறுவனம் முதுகெலும்பாக செயற்படுவதாக ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

‘காஸா எங்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் தனது பிடியை இறுக்கி வருகிறது. வடக்கில் சிசுக்கள் மற்றும் இளம் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பினால் மரணிக்க ஆரம்பித்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் உணவு மற்றும் சுத்தமான நீருக்கு காத்துள்ளனர். ஆனால், இந்த உதவிகளை வழங்குவது மற்றும் உயிர்களை காப்பதற்கு பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது’ என்று லசரினி குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply