அமெரிக்க இராணுவ ஆய்வகத்தில் தோன்றியதா கொரோனா வைரஸ்?

மெரிக்காவில் உள்ள டெட்ரிக் கோட்டை (Fort Detrick ) உயிரியல் ஆய்வகத்தின் சோதனைகள் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்துதான் பரவியது என்று தொடர்ந்து அமெரிக்கா பிரச்சாரம் செய்து வருகிறது. மேற்கத்திய ஊடகங்களின் வாயிலாக, உலகம் முழுவதும் இது பரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ டெட்ரிக் கோட்டை உயிரியல் ஆய்வகம் (Bio Lab) குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை சீனா முன்வைத்துள்ளது. அந்த ஆய்வகத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  மாவோ நிங் (Mao Ning), “அறிவியல் அடிப்படையிலும், நோக்கத்தை அடையும் எண்ணத்திலும் மற்றும் எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் உலகச் சுகாதாரக் கழகம் தனது நிலைபாட்டை எடுக்கும் என்று நம்புகிறோம். அரசியல்படுத்துவதில் அவர்கள் விழுந்துவிடக்கூடாது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவியது பற்றிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள் என்றும் நம்புகிறோம்” என்றார்.

மேலும் பேசிய அவர்,

“இந்த விவகாரத்தில் சீனா தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய ஆய்வில் முதல் நாளில் இருந்து  தன்னை முழுமையாக சீனா ஈடுபடுத்திக் கொண்டது. உலக சுகாதாரக் கழகம் நடத்திய பல்வேறு நிபுணர்கள் கூட்டங்களில் சீனாவின் வல்லுநர்களும் பங்கேற்றுத் தாங்கள் கண்டு பிடித்தவற்றைப் பகிர்ந்து கொண்டனர்” என்றார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து உலக  சுகாதாரக் கழகத்தின் வல்லுநர்கள் இரண்டு முறை சீனாவுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை உலகச் சுகாதாரக்கழகம் அமைத்தபோது, அதில் சேர்ந்து கொள்ளுமாறும், இது தொடர்பான கூட்டங்களை சீனாவில் நடத்து மாறும் சீன அரசு வல்லுநர்களைக் கேட்டுக் கொண்டது. “துவக்க கட்டத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளை சீனத்தரப்பில் இருந்து ஆய்வுக்காகத் தந்திருக்கிறோம். உலகில் வேறு எந்த நாடும்  இந்த அளவுக்கு மாதிரிகளை சோதனைகளுக்காகத் தரவில்லை” என்று மாவோ நிங் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகரித்த சந்தேகம்

விபத்து ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள டெட்ரிக் கோட்டை உயிரியல் ஆய்வகம் மூடப்பட்டது என்ற செய்தி வெளியானதில் இருந்தே பல்வேறு சந்தேகங்கள் வெளியாகின. என்ன காரணம் என்று தெரியாமலேயே நிமோனியா பெருமளவில் பரவியது. மேலும், கொரோனா பாதிப்பு பற்றிய அமெரிக்காவின் முதல் அறிவிப்புக்கு முன்னதாகவே, அந்நாட்டில் கொரோனா பரவியிருந்திருக்கிறது.  

கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக்  கண்டுபிடிப்பதற்கு, இதுவரையில் எந்தவித பொறுப்பான நடவடிக்கையையும் அமெரிக்கா எடுக்கவில்லை. தங்களிடமுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாததோடு, உலகச் சுகாதாரக் கழகத்தின் வல்லுநர்களை ஆய்வுக்கு ஒருமுறை கூட அழைக்கவும் இல்லை. உயிரியல் ஆயுதங்களுக்கான இராணுவ ஆய்வகம் குறித்து சர்வதேச சமூகம் தெரிவித்த கவலைகளைப் புறந்தள்ளியே அமெரிக்கா வந்துள்ளது. டெட்ரிக் கோட்டை இராணுவ ஆய்வகம் குறித்த விபரங்களை உலகச் சுகாதாரக்கழகம் கேட்டும் இதுவரையில் பகிரப்படவில்லை என்று மாவோ நிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: