டொலரை விட்டு நகர்கிறது பிரேசில்

ர்வதேச நாணய இருப்பில் சிறிது, சிறிதாக அமெரிக்க டொலரின் இருப்பைக் குறைக்கும் முயற்சியில் பிரேசில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான சரக்குப் பரிமாற்றங்கள் அமெரிக்க டொலரின் மதிப்பிலேயே இன்றும் நடந்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அமெரிக்க டொலரையே பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் அமெரிக்க டொலரின் கையிருப்பே அந்நாட்டின் பொருளாதார வளத்தைக் காட்டுவதாக வல்லுநர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் அமெரிக்க டொலரை மட்டும் நம்பியிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்றன. தென் அமெரிக்காவின் பெரிய பொருளாதாரமும், ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பின் உறுப்பு நாடாகவும் இருக்கும் பிரேசில், பிற நாணயங்களை இருப்பு வைக்க முடிவு செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியான விபரங்களின்படி, 5.37 விழுக்காடுடன் சீன நாணயமான யுவான் (Yuan) இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பிரேசிலின் இருப்பில் இரண்டாவது இடத்தில் இருந்த யூரோ (Euro), மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. முதலிடத்தை இருக்கும் அமெரிக்க டொலர் முதன்முறையாக 80 விழுக்காட்டிற்கு சரிந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டில்தான் சீன நாணயத்தை பிரேசில் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. அப்போது சுமார் 90 விழுக்காடு என்ற அளவில் பிரேசிலின் அந்நிய நாணய இருப்பில் இருந்த அமெரிக்க டொலர், 2021ல் 86.03 விழுக்காடாகவும், தற்போது 80 விழுக்காடாகவும் குறைந்திருக்கிறது. அந்நிய நாணய இருப்பில், உலக அளவில் ஐந்தாவது இடத்தை சீன யுவான் எட்டிப் பிடித்துள்ளது. முதல் நான்கு இடங்களில் அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானின் யென் மற்றும் பிரிட்டனின் பவுண்ஸ் ஆகியவை இருக்கின்றன.

யுவான் மதிப்பு அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டில் இருந்து ரூபிள்-யுவான் வர்த்தகம் எட்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக, தங்கள் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் நிதிப் பரிமாற்றங்களுக்கு அமெரிக்க டொலரை பயன்படுத்தாமல் இருப்பது என்று சீனாவும் பிரேசிலும் உடன்பாட்டை எட்டின. தங்கள் நாணயங்களிலேயே, அதாவது யுவானுக்கு ரியால் என்ற முறையில், வர்த்தகத்தையும், நிதிப்பரிமாற்றத்தையும் செய்யப் போகிறார்கள். யுவான் மேலும் சர்வதேசமயமாகி வருவதை இது எடுத்துக் காட்டுகிறது.

நாணயம் தொடர்பான உடன்பாட்டை ரஷ்யா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சீனா போட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organisation – SCO) உள்ள நாடுகள், வர்த்தகத்தின்போது அவரவர் நாணயங்களை பயன்படுத்த முடிவு செய்தன. இந்த அமைப்பில் இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia), பாகிஸ்தான் (Pakistan), உஸ்பெகிஸ்தான் (Uzbekistan), கஜகிஸ்தான் (Kazakhstan), தஜிகிஸ்தான் (Tajikistan) மற்றும் கிரிக்ஸ்தான் (Kyrgyzstan) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

மார்ச் மாதத்தின் நிறைவில் அமெரிக்காவுக்கு மேலுமொரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டொலர் பயன்பாட்டைக் குறைப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டு வந்தாலும், அந்த உடன்பாடுகள் நடைமுறைக்கு வருவதில் சிக்கல்கள் இருந்து வந்தன. இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் (UAE) இருந்து 65 ஆயிரம் தொன் திரவ இயற்கை வாயுவை சீனா வாங்கியது. இந்த வாயுக்கான விலையை யுவான் மூலமாக சீனா செலுத்தியது. அதை ஐக்கிய அரபு இராச்சியம் ஏற்றுக் கொண்டது. இவ்வளவு பெரிய தொகையை யுவானில் வேறொரு நாடு பெற்றுக் கொள்வது இதுவே முதன்முறையாகும்.

Tags: