ராகுல் காந்தி வழக்கில் காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியவை!

– ஹரி பரந்தாமன்

ன்னைச் சுற்றி பின்னப்பட்டு வந்த சூழ்ச்சி வலை குறித்த எந்த பிரக்ஜையும் இன்றி இருந்துள்ளார் ராகுல் காந்தி! ஆனால், அந்தக் கட்சியில் கூட யாரும் சுதாரித்துக் கொண்டு அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறியாமல் விட்டனரே! அவதூறு பேச்சையே கிரிமினல் குற்றமாக்கும் சட்டப் பிரிவை நீக்க என்ன செய்ய வேண்டும்..?

குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றம் (மாவட்ட நீதிமன்றம்) ஏப்ரல் 13 ஆம் நாள் வரும் வியாழக்கிழமை அன்று அளிக்கும் தீர்ப்பில் தான் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக தொடர்வாரா, மாட்டாரா? என்பது அடங்கி இருக்கிறது.

சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், “மோடி சமூகத்தினரை” ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என்ற குற்றச் சாட்டிற்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை ஒட்டி ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

குற்ற வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பில் இரண்டு கூறுகள் உண்டு.

ஒன்று, குற்றம் நிரூபிக்கப்பட்டது அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது.

இரண்டாவது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், விடுதலையுமாகும்.

வழக்கமாக குற்ற வழக்குகளில் சிறை தண்டனைக்கு உள்ளாவோர், தண்டனைக்கு மட்டுமே தடை கோருவார்கள். அதாவது, மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது பிணை கோருவார்கள். எவரும்  குற்றவாளி என்று அளிக்கப்பட்ட ‘தீர்ப்பிற்கு’ தடை கோர மாட்டார்கள். கோரினாலும், வழக்கமாக நீதிமன்றம் லேசில் தந்து விடாது.

பாராளுமன்றத்திற்கு அல்லது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் குற்ற வழக்கில் இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை அளிக்கப்பட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. அச்சட்டம் தகுதி நீக்கம் பற்றி பலவற்றை சொல்கிறது. அதில், ஒன்றுதான் மேலே சொன்ன தகுதி நீக்கம்.

மேற் சொன்ன மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர், மேல்முறையீடு செய்வதற்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அப்படி மேல்முறையீடு செய்தால் மேல்முறையீடு முடியும் வரை அந்த நபர் பாராளுமன்ற உறுப்பினராக அல்லது சட்டமன்ற உறுப்பினராக தொடரலாம்.

ஆனால், அந்த சட்டப்பிரிவை 2013 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம், ‘அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’  என்று கூறி ரத்து செய்தது. இந்த தீர்ப்பின்படி, தண்டனைக்கு மட்டும் தடை பெற்றால் போதாது. தீர்ப்பிற்கே தடை பெற வேண்டும். அதாவது, குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் கூறுக்கும் தடை  பெற வேண்டும்.

2013 இல் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அந்த தீர்ப்பை இல்லாமல் செய்யும் விதத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய மசோதாவை தாக்கல் செய்தது.

அப்போது காங்கிரசின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ‘கிரிமினல் குற்றவாளிகள் தப்பிக்க அவகாசம் தரக் கூடாது’ என்று அந்த மசோதாவை பொது வெளியில் கிழித்து எரிந்து தனது ஆட்சேபனையை தெரிவித்தார். அதனால், அந்த திருத்தம் கொண்டு வரப்படாமல் கைவிடப்பட்டது.

சூரத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து ராகுல் காந்தி செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே தண்டனைக்கு தடை விதித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட  தலைமை குற்றவியல் நடுவர் தீர்ப்பின் கூறுக்கு தடை அளிப்பது குறித்த மேல்முறையீட்டை சென்சஸ் நீதிமன்றம் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

எனவே, ஏப்ரல் 13ம் தேதி சூரத் செசன்ஸ் நீதிமன்றம் அளிக்க போகும் தீர்ப்பில் தான் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா, இல்லையா ? என்பது தீர்மானம் ஆகும் என்று மேலே சுட்டிக் காட்டினேன்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 அவதூறான பேச்சுகளை குற்றச் செயல்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த சட்டம் பிரித்தானிய அரசால் 1860இல் உண்டாக்கப்பட்டது.

அவதூறான பேச்சுகளுக்காக குற்ற நடவடிக்கையை மட்டுமின்றி, உரிமை இயல் நடவடிக்கையும் அந்த செயலை செய்தவர் எதிர் கொள்ள வேண்டி வரும்.

இன்றைய நவீன உலகில் குறிப்பாக மேற்கத்திய உலகில், அதாவது பிரிட்டனை உள்ளடக்கிய ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும்  பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘அவதூறான பேச்சுகள் குற்ற செயல்கள்’ என்கின்ற சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது.

அதாவது, மேற்கத்திய உலகில் இன்று அவதூறான பேச்சுகளுக்காக ஒருவர் மேல் உரிமை இயல்  வழக்கு மட்டுமே (சிவில் வழக்கு) தொடுக்க முடியும். இந்த சிவில் வழக்கில், உரிய நட்ட ஈட்டை கோரலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499-ஐ குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும், ஊடகங்களுக்கு எதிராக பயன்படுத்துவதுமான தவறான நடைமுறை இந்தியாவில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா  பல குற்ற வழக்குகளை இந்த பிரிவின் கீழ்  நக்கீரன் இதழ் போன்ற ஊடகங்கள் மீதும், எதிர்கட்சித் தலைவர்  விஜயகாந்த் மீதும் தாக்கல் செய்து அவர்களை அலைக்கழித்தார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மகாத்மா காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என்று இப் பிரிவின் கீழ் குற்ற வழக்கு தாக்கல் செய்தனர். அதேபோல அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றவழக்கை எதிர்கொண்டார். சுப்பிரமணியசாமி கூட இது போன்ற குற்ற வழக்கை எதிர்கொண்டார்.

விஜயகாந்த், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணியசாமி எனப் பலரும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்குமாறும், அந்தப் பிரிவை ரத்து செய்யுமாறும் வழக்கு போட்டனர்.

துரதிஷ்டவசமாக 2016 ல் மேற் சொன்ன வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தீபக் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. உலகின் முன்னேறிய நாடுகளில் -ஜனநாயகம் செழித்தோங்கும் நாடுகளில் – அவதூறான பேச்சு என்பதன் அடிப்படையில் குற்ற வழக்கு தொடர முடியாது என்ற முக்கியமான வாதத்திற்கு பதில் கூறாமலே வழக்கு தள்ளுபடி ஆனது.

அடுத்த சட்டபூர்வமான வழி, இந்திய பாராளுமன்றம் உரிய திருத்தத்தின் மூலம் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 499 -ஐ நீக்க வேண்டும். அதை நிச்சயம் இத்தருணத்தில் பாராளுமன்றம் செய்யாது.

2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் கோளார்  பகுதியில் ராகுல் காந்தி பேசிய பேச்சின் அடிப்படையிலேயே பிரதேஷ் மோடி என்ற குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்  குற்ற வழக்கை தொடர்ந்தார். நிரவ் மோடி,  லலித் மோடி என பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுபவர்களாக மோடிகள் இருக்கிறார்கள் என்று பேசியதே வழக்கிற்கான அடிப்படை.

இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி அலட்சியம் செய்து உள்ளதாக கருதுகிறேன். வழக்கு பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் போடப்படுகிறது என்பதை பிரத்யேகமாக காங்கிரஸ் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான வழக்குகளில் இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை முன்னிட்டு உச்ச நீதிமன்றம் அந்த வழக்குகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பைக்கு மாற்றியது என்பதை அறிந்தது தானே காங்கிரஸ்.

வழக்கைப் போட்டவரே உயர்நீதிமன்றம் சென்று ஏதோ காரணத்திற்காக வழக்கு நடக்காமல் இருப்பதற்காக தடை பெறுகிறார். பின்னர், அவர் போட்ட வழக்கை திரும்ப பெறுகிறார். இந்த நேரத்தில் விசாரணை நீதிபதியும் மாற்றல் ஆகி இருக்கிறார். இப்படி எல்லாம் வழக்கு பயணிக்கிறது. எந்தக் கட்டத்திலாவது காங்கிரஸ் விழித்து கொண்டிருக்க வேண்டாமா?

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு செயலுக்காக குஜராத் மாநிலத்தில் வழக்கு போட முடியாது என்ற ஆட்சேபனையை  கூறியே குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை கோரி இருக்கலாம். குஜராத் உயர் நீதிமன்றம் மறுக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். இதே போல தான் பேசியது மோடி சமூகத்தை அவதூறாக அல்ல என்ற காரணத்தையும் கூறி தடை கேட்டிருக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் தான் அதாவது நிரவ் மோடியோ அல்லது லலித் மோடியோ அல்லது என்னைத் தான் கூறினார் என்று நரேந்திர மோடியோ வழக்கு போட்டிருக்கலாமே அன்றி, பிரதீஷ் மோடி வழக்கு போட முடியாது என்று தடை கோரி இருக்கலாம்.

அப்படி எல்லாம் செய்தால் வழக்கு இவ்வளவு விரைவில் முடிந்து இருக்காது. ஜெயலலிதா எப்படி 18 ஆண்டுகள் ஒரு வழக்கை நடத்தினார் என்பதை அரசியலில் இருப்பவர்கள் பார்த்திருக்க வேண்டும். குறிப்பாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பா.ஜ.க ஆட்சி செய்வதால் சற்று கவனத்துடனே காங்கிரஸ் அணுகி இருக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499-இன் கீழ் குற்ற செயல் நிரூபிக்கப்பட்டால் இச்சட்டம் பிரிவு 500 கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம். சேகரிக்கப்பட்ட விவரங்களில் இருந்து அவதூறான செயலுக்காக குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளில் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு சிறை  தண்டனை எப்போதும் வழங்கப்பட்டது இல்லை.

மேற்சொன்ன பிரிவு 499 போலவே பிரிவு 304A கீழ் கீழ் குற்ற வழக்கை எதிர்கொள்பவரும் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம். வாகனத்தை அதிவேகமாகவும், கவன குறைவாகவும் ஒட்டி மரணத்தை உண்டாக்கும் செயலே பிரிவு 304A-வின் கீழ் குற்ற செயல். எத்தனை வாகன ஓட்டுநர்கள் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறைக்கு செல்கிறார்கள். குற்றத்தை ஒப்புக் கொண்டாலே வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் மட்டுமே குற்றவியல் நீதிமன்றங்கள் தண்டனையாக அளிக்கிறது. எனவே, அதிகபட்ச தண்டனையை சூரத் குற்றவியல் நீதிமன்றம் அளித்திருப்பது விவாதத்திற்குரியது.

ஏப்ரல் 13 அன்று சூரத் செசன்ஸ் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று அளித்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை அளிக்குமா? என்பது தெரியாது. தடையளிக்க  மறுத்து விட்டால் ராகுல் காந்தி, அடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்திற்கும்,  குஜராத் உயர்நீதிமன்றம் தடை அளிக்க மறுத்து விட்டால், உச்ச நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டி இருக்கும். எப்படி எல்லாம் வழக்கு செல்லும் என்று தெரியாது.

சமீபத்தில் லட்சத்தீவு பாராளுமன்ற உறுப்பினர், செசன்ஸ் நீதிமன்றத்தால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒட்டி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீடு கேரள உயர் நீதிமன்றத்தில். கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து செசன்ஸ் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்று அளித்த தீர்ப்பிற்கு தடை பெற்றார், அந்த பாராளுமன்ற உறுப்பினர். அதனால் அவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற முடிந்தது.

ராகுல் காந்தி வழக்கில் விசாரணை நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம் அல்ல. விசாரணை  நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்த மேல்முறையீடு, செசன்ஸ் நீதிமன்றத்தில் தான் செய்ய வேண்டும். எனவே சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை என்னவென்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது.

Tags: