கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று!

-யோகேந்திர யாதவ்

ர்நாடகத்தில் மூன்றாவது நாளாக நாங்கள் மேற்கொண்ட பயணத்தின்போது யெலஹங்கா என்ற ஊரில், காங்கிரஸைவிட்டு பாஜகவுக்கு ஆதரிக்கப் போவதாகக் கூறிய வாக்காளரைச் சந்தித்தோம். யெலஹங்கா பெங்களூரின் புறநகர்த் தொகுதி. இரவு முழுவதும் காட்டில் காத்துக் கிடந்தவர்களுக்கு புலியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்படும் மகிழ்ச்சியையே அவரைப் பார்த்தவுடன் அடைந்தேன். அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.நாராயணா, கன்னடப் பத்திரிகையாளர் என்.ஏ.எம்.இஸ்மாயில், சங்கேத் நாகராஜ் அங்காடி ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்களில் நாராயணா, கர்நாடக அரசியலில் ஆழங்கால்பட்டவர், இஸ்மாயில், ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர், நாகராஜ் அங்காடி மனிதர்களிடம் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர், கன்னடியர் அல்லாதவர்களுக்குத் தேவைப்படுவதைத் தெளிவாக விளக்குகிறவர். இன்ன ஊருக்குப் போக வேண்டும், இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளாமல், போகிற வழியில் எதிர்ப்படுவோரைச் சந்தித்தோம், பேச விரும்பியவர்களிடம் மேலும் கேள்விகள் கேட்டு கள நிலவரத்தைத் தெரிந்துகொண்டோம்.

வாக்களிக்கக்கூடியவர்களில் அனைத்துத் தரப்பினரையுமே சந்தித்துவிட்டோம்: அவர்கள் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவாளர்கள். அவர்களில் சிலர் ஏற்கெனவே வாக்களித்த கட்சியை விட்டுவிட்டு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறினர். மிகச் சிலர் தங்களுடைய வாக்கு யாருக்கு என்று சொல்ல மறுத்துவிட்டனர். கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்துவிட்டு இந்த முறை பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறிய ஒருவரைக்கூட சந்திக்கவில்லை. காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதையே இது காட்டுகிறது.

காங்கிரஸ் காற்று

இந்தச் சமயத்தில்தான், மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஒருவரை அவருடைய நண்பர்கள் சூழ, காபிக் கடையில் சந்தித்தோம். அவருக்கு 40 வயது இருக்கும். சங்கேத் அவரிடம் பேசிவிட்டுச் சொன்னார், “இந்த முறை பாஜகவுக்கு வாக்களிக்கப் போகிறாராம்” என்று. அதற்கும் முன்னரே அவருடைய கொச்சை இந்திப் பேச்சைக் கவனித்த நான், அவருடைய முடிவை ஊகித்திருந்தேன். “ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். “பாஜக ஏழைகளை (ஏழ்மையை) ஒழித்துவிடும்” என்று (தவறாக) இந்தியில் பேசினார். “இப்போதைய முதல்வர் பசவராஜ பொம்மை, காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யாவைவிட எந்த அளவுக்குச் சிறந்தவர்?” என்று கேட்டேன். “எப்படி ஒப்பிட முடியும், சித்தராமய்யா பெரிய ஆள்” என்று கைகளை மேலே உயர்த்திக் காட்டினார். “அப்படியென்றால் பாஜகவுக்கு ஏன் வாக்கு” என்று கேட்டேன். அவர் புன்னகைத்துவிட்டு, “எங்கள் பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர் கடந்த மாதம்தான் காங்கிரஸைவிட்டு பாஜகவைச் சேர்ந்தார். எங்களுடைய இன்ப துன்பங்களில் எல்லாம் துணை நிற்பவர் அவர், இப்போது அவருக்கு நாங்கள் துணையாக இருந்தாக வேண்டும்” என்றார். அவருடைய பெயரைச் சொல்லவில்லை. இவரைத் தவிர நாங்கள் சந்தித்த மற்றவர்கள் பாஜக அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் அல்லது காங்கிரஸ் ஆகியவற்றை விட்டு, வேறு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதாகவே கூறினர். இவரைப் போலவே ஒரேயொருவர் காங்கிரஸுக்குப் பதிலாக இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பேன் என்றார்.

சந்தேகமே இல்லாமல் காங்கிரஸுக்குச் சாதகமாகத்தான் இம்முறை காற்று வீசுகிறது. 2018 கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போதே பாஜகவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளைவிட 2% கூடுதலாகவே காங்கிரஸுக்குக் கிடைத்தது; ஆனால் வென்ற பேரவைத் தொகுதிகள் எண்ணிக்கைக் குறைவுதான். ஆனால், இந்த முறை நம்பகமான தேர்தல் கணிப்புகள் அனைத்துமே இந்த இடைவெளி மிகப் பெரியதாகிவிட்டதையே கூறுகின்றன. ஜனவரியில் கணிப்பு நடத்திய ‘சிசிரோ’ இந்த வேறுபாடு 4% என்றது, ‘சி-வோட்டர்’ 6% என்றது, ‘லோக்நீதி – சிஎஸ்டிஎஸ்’ நிறுவனம் என்டிடிவிக்காக நடத்திய கணிப்பும் அப்படியே தெரிவித்தது, ‘ஈ-தினா’ நடத்திய கணிப்பில் காங்கிரஸ் 10% அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆட்சி மீது அதிருப்தி

பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது மக்களுக்குள்ள அதிருப்தி அப்படியே வெளிப்படுகிறது. எந்த வாக்காளரும் பாஜகவை உற்சாகமாக ஆதரித்துப் பேசவில்லை. “பொம்மை அரசின் செயல்பாடு எப்படி?” என்று கேட்டால் ஒன்று மௌனம் காக்கிறார்கள் அல்லது பரிதாபமாகப் புன்னகைக்கிறார்கள். எல்லோரும் மறக்காமல் சொல்வது, “இந்தத் தேர்தல் மோடிக்கானது (பிரதமர் பதவி) அல்ல, நாங்கள் அவருக்காக (கர்நாடக பாஜகவுக்கு) வாக்களிக்க மாட்டோம்” என்பது.

அரசின் எல்லா பெரிய திட்டங்களிலும் பொம்மை அரசு 40% கமிஷன் பெறுவதாகக் கூறப்படுவது குறித்து கேட்டபோது, அப்படியில்லை இது நேர்மையான அரசுதான் என்று ஒருவர்கூட கூறவேயில்லை. சிலர் மட்டும் கோபத்துடன் பதில் அளித்தார்கள். “இதில் புதிய விஷயமென்ன, எந்த அரசில் வாங்காமல் இருந்தார்கள், காங்கிரஸ் ஊழலற்ற கட்சியா?” என்றார்கள்.

மக்களுடைய இந்த உணர்வுகள்தான் தேர்தல் கணிப்பில் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அறிய நான் கடைப்பிடிக்கும் சாதாரண உத்தி, நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்பது அல்ல. “இப்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு இன்னொரு வாய்ப்பு தரலாமா?” என்று கேட்பேன். கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ‘ஆட்சி தொடரட்டும்’ என்றவர்களும் ‘கூடாது’ என்றவர்களும் 1:1 என்ற விகிதத்தில் இருந்தார்கள். இந்த முறை, ஆட்சி தொடரக் கூடாது என்பவர்கள்தான் அதிகம்.

இது ‘சிஎஸ்டிஎஸ்’ கணிப்பில் 1.7:1, ‘ஈ-தினா’ கணிப்பில் 2:1. சில தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதற்குக் காரணம் அங்கே பதவியில் இருக்கும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட செல்வாக்கு. தொகுதி மக்களுக்காக அவர்கள் நிறைய உழைத்திருக்கிறார்கள். மாநில அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தவர்கள்கூட தங்களுடைய தொகுதி உறுப்பினருக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளாகவே, ஆட்சியில் இருக்கும் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதே கர்நாடக தேர்தல் மரபாக இருக்கிறது, இந்த முறையும் அதில் விதிவிலக்கு ஏற்படப் போவதில்லை.

வர்க்க பிளவு

வர்க்கரீதியாக பாஜகவுக்கு ஏழைகளிடத்தில் எதிர்ப்பு பலமாக இருக்கிறது. எந்த ஏழை வாக்காளரும் பாஜகவுக்கு சாதகமாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. கடந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தபடி ஏழை – பணக்கார வாக்காளர்களிடையே கட்சி ஆதரவு நிலை நேரெதிராக இருக்கிறது. பணக்கார வாக்காளர்களிடத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகம், ஏழைகளிடத்தில் காங்கிரஸுக்கே அதிக ஆதரவு.

ஏழை வாக்காளர்களிடம் காரணம் கேட்டால் அன்றாடம் தாங்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு தொடங்கி, பால், காய்கறி, மளிகைச்சாமான்கள், அரிசி, பருப்பு என்று எல்லாமே கடுமையாக விலையேறிவிட்டதை கட கடவென்று ஒப்பிக்கிறார்கள். “இதற்கு முன்னால் நாங்கள் விறகு வைத்து அடுப்பு எரித்தோம்; இவர்கள் சமையல் கேஸ் இணைப்பை இலவசமாகக் கொடுத்து சிலிண்டரை வாங்க வைத்தார்கள். இப்போது விலையுயர்வால் சிலிண்டர் வாங்க பணமில்லை, பழையபடிக்கு விறகு அடுப்புக்கும் போக முடியவில்லை” என்று புலம்புகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் அட்டைக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாகத் தந்ததை, இந்த அரசு 5 கிலோவாகக் குறைத்துவிட்டதை அனைவருமே சுட்டிக்காட்டுகிறார்கள். பெட்ரோல் – டீசல் விலை உயர்வையும் பேசுகின்றனர். உர விலை அநியாயமாக உயர்ந்துவிட்டதை விவசாயிகள் கண்டிக்கிறார்கள். ‘கிசான் சம்மான் நிதி’ என்று 2,000 ரூபாய் கொடுப்பதையும் ஏளனம் செய்கிறார்கள். கொடுப்பதைப்போலக் கொடுத்து அதையும் பறித்துக்கொள்கிறார்கள் என்கின்றனர். சாமானியர்கள்கூட ஜிஎஸ்டி பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஜிஎஸ்டியால்தான் இப்படி அதிகமாக விலை உயர்ந்துவிட்டது என்று சாடுகிறார்கள்.

அப்படியானால் ஏழைகள் முழுக்க பாஜகவுக்கு எதிராகத்தானா என்று கேட்டால், அப்படியும் சொல்லிவிட முடியாது. உள்ளூர் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறுவோர்கூட, அதைத் தங்களுடைய கட்சியாகப் பார்ப்பதில்லை. கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையே பெரும்பான்மையினர் பாஜகவுக்குத்தான் தங்களுடைய வாக்கு என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

ஏழைகளின் நாயகனாகத் திகழ்கிறார் சித்தராமய்யா. இங்கே ஏழைகள் என்றால் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. வாக்காளர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் காங்கிரஸை ஆதரிப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஏழைகள் ஆதரிக்காவிட்டால் பெரும்பான்மை போவது நிச்சயம்.

மதத்துக்கு முக்கியப் பங்கு இல்லை

வாக்காளர்கள் வாக்களிக்க மதம் ஒரு தடையாக இருக்கப்போவதில்லை. அரசியல் விவாதங்களில் யாரும் இந்து – முஸ்லிம் பதற்றம் குறித்துப் பேசுவதில்லை. ஹிஜாப், ஆசான் (பாங்கு ஒலிப்பது), லவ் ஜிகாத், பஜ்ரங் தளம் மீதான உத்தேசத் தடை என்று பல இருந்தாலும் இந்து – முஸ்லிம் பிரச்சினை தேர்தலில் பெரிதாகப் பேசப்படுவதில்லை என்பது வினோதமாகவே தெரிகிறது.

மத அடிப்படையிலான உணர்வுகள் இந்து, முஸ்லிம் வாக்காளர்களிடையே நன்கு பரவியிருக்கிறது, ஆனால் வெளிப்படையாக அதைப் பேசுவதில்லை. முஸ்லிம்கள் இதற்கு முன்னுரிமை தர விரும்பவில்லை. பஜ்ரங் தளத்துக்குத் தடை விதிப்போம் என்று காங்கிரஸ் கூறியது தொடர்பாக பாஜக தலைமை மக்களை உசுப்பிவிட்டாலும் தேர்தல் முடிவை இது மாற்றிவிடும் என்று தோன்றவில்லை.

வெறிச்சோடிய சாலைகள்

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றாலும் பெரும்பாலான கர்நாடக சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன. மிகப் பெரிய வாசக விளம்பரங்களோ, டிஜிட்டல் போர்டுகளோ, சுவர் எழுத்துகளோ கிடையாது. பிரச்சார வாகனங்கள்கூட அபூர்வமாகத்தான் கண்ணில் படுகின்றன. தேர்தல் வேலையெல்லாம் ‘அண்டர்-கிரவுண்’டில் நடப்பதைப் போல இருக்கிறது. இதனாலேயே பிரச்சார செலவுகள் பல மடங்காக உயர்ந்திருக்கின்றன. ஒரு பேரவைத் தொகுதியில் வெற்றிபெற வேட்பாளர்கள் குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலவிட வேண்டி இருக்கிறது.

தொகுதியின் பரப்பளவைப் பொருத்து ரூ.20 கோடி முதல் ரூ.40 கோடி வரை ஆகும் என்கிறார்கள். சில சமயம் இதற்கும் மேலும்கூட போகலாம். எந்தக் கட்சியும் இந்த செலவுக்குத் தயங்குவதே இல்லை. பாஜகதான் அதிகம் செலவழிக்கிறது. அன்றாடம் வீதியோரம் நின்று அரசியல் பேசுகிறவர்கள், தங்கள் தொகுதியில் எந்த வேட்பாளரை யார் விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்றுதான் பேசுகிறார்கள். யார் கட்சி மாறினார்கள், யார் – யாருடைய காலை வாருவார்கள் என்றும் பேசுகிறார்கள். வழக்கமான இந்த உரையாடல்தானே நாம் பார்க்கும் ஜனநாயகம்!  

கண்ணுக்குத் தெரியாத ‘ஒரு கை’ – கர்நாடகத்தைப் பொருத்தவரை அது ‘நான்கு’ ஆகக்கூட இருக்கலாம் – நடுப்பகல் வரை சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க காற்றை விசிறிவிடுகிறது. ஆதிக்க அரசியலுக்கு ஒரு முடிவு கட்டப்படும் என்பதையே கர்நாடகச் சூழல் சுட்டிக்காட்டுகிறது. ‘அதிருப்தி’ என்பது தண்ணீரைப் போன்றது, ஓடுவதற்கான வழியை அது தானே தேடிக்கொண்டுவிடும். 

Tags: