என்னுடைய கைதும், விடுதலையும்!

-சாவித்திரி கண்ணன்

ன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்!

நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம்

”நீங்கள்ளாம் யாரு” என்றேன்.

”சைபர் கிரைமில் இருந்து வருகிறோம். விசாரிக்கணும்” என்றனர்.

”சைபர் கிரைம்மா..” என்ற நான் கேட்டு முடிப்பதற்குள் என் கையில் இருந்த செல்பேசியை வெடுக்கென்று பிடுங்கி விட்டனர். என தோள்களையும், கைகளையும் அழுத்திப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

”விசாரணனைக்கு வர வேண்டும் என்றால், வருகிறேன். இந்த மாதிரி ஏன் பிஹேவ் பண்ணீறீங்க..” என நான் கேட்டதை பொருட்படுத்தவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி அதிர்ந்துவிட்டர்.

”அவரை ஏன் இப்படி பிடித்து இழுக்கிறீர்கள்.., எங்கே அழைத்துச் செல்கின்றனர் எனக்கு தெரிய வேண்டும்” என அவர் குரல் எழுப்பவும், அவரது கையில் உள்ள செல்பேசியையும் பிடுங்க முயன்றனர். அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

அதேசமயம் ஒரு காவலர் என்னை சாஸ்த்திரி நகர் காவல் நிலையம் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

பிறகு என்னை செருப்பு போடவும் விடாமல் அவசரப்படுத்தினர். தெருவின் கோடியில் அவர்கள் நிறுத்தி இருந்த கார் வரையிலும், என் கைகளை இறுக்கி பிடித்தபடி தான் நடந்தனர். கார் அருகில் வந்ததும் தோளை அழுத்தி உள்ளே நெருக்கி தள்ளினர்.

நான் விசாரணைக்கு வருகிறேன் என்று சொன்ன பிறகும் இப்படி போர்ஸ்சாக அவர்கள் நடந்து கொண்டனர். இதனால், வீட்டில் உள்ளவர்களும், தெருவில் உள்ளவர்களும் கலவரப்படும் நிலை உருவாகிவிட்டது. என் குடும்பத்தாருக்கு என்னை எங்கே அழைத்து செல்கிறார்கள் என்ற உண்மைத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. என் மகன் மாணிக்க சுந்தரம் இந்தக் காரைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பின் வந்தான். கார் சாஸ்திரி நகர் காவல் நிலையம் அருகே நின்றது. அங்கு இரண்டு போலீசார் விடுபட்டுக் கொண்டனர். அங்கே என் மகனும் வந்து சேர்ந்தான். அங்கே இருந்து கார் புறப்படவும் அவன் அங்கிருந்த போலீசாரிடம் ”என் அப்பாவை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்” என பதற்றத்துடன் கேட்டான்!

அப்போது அவர்கள் அவனிடம், ”நீயும் கூடப் போறீயா” என அவன் கையை பிடித்து இழுத்தனர். அவன் திமிறவும், ”அப்ப ஒழுங்கா வீட்டுக்கு போ, இல்லாட்டி உன்னையும் சேர்த்தே கூட்டிட்டு போக வேண்டியதாயிடும், காருல ஏறு” என அதட்டினார்கள்!

அவனுக்கு அப்பாவை இவர்கள் எங்கே கூட்டிச் செல்கின்றனர் என புரிபடாத நிலையில் காரை பின் தொடர்ந்து நீலாங்கரை வரையிலும் வந்து, பின் தொடர முடியாமல் திரும்பி விட்டான்.

வந்தவர்கள் என்னை இ.சி.ஆர் ரோட்டில் வேகமாக அழைத்துச் செல்லவும் தான், ”எங்கே கொண்டு போகிறீர்கள்” என்றேன். அப்போது தான் ”கள்ளக் குறிச்சி அழைத்துச் செல்கிறோம்” என்றனர்.

பிறகு ஏனோ தெரியவில்லை. திண்டிவனம் ஒலக்கூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அங்கு கள்ளக் குறிச்சியின் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் என்னை விசாரித்தார். அறம் இணைய இதழில் வந்த கட்டுரைகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினார் . நான் அதற்கு தெளிவான விளக்கங்கள் தந்தேன்.

எனினும் என் மீது 153, 153A, 504, 505 ஆகிய பிரிவுகளில் எப்.ஐ.ஆர் போட்டு உள்ளனர்!

நாம் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது கள்ளக் குறிச்சி மாணவியின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையுடன் நடக்க வேண்டும் என்பதே! அதையே போலீசாரிடமும் வலியுறுத்தி சொன்னேன்.

நான் முப்பத்தி ஏழு வருடங்களாக பத்திரிகை துறையில் இயங்கி வருகிறேன். இதழியல் பணியை ஒரு மக்கள் தொண்டாகத் தான் மேற்கொண்டுள்ளேன். என் செயல்பாடுகளை, எழுத்துக்களை, பேச்சுக்களை கவனிக்கும் யாருமே இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

உண்மைக்கான தேடல், நியாயங்களுக்கான போராட்ட குணம், எளிய மக்களுக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் என்ற தாகம் இவையே என்னை உயிர்த் துடிப்போடு இயக்கிக் கொண்டுள்ளது.

என்னுடைய இந்த இயல்பை எந்தச் சூழல்களிலும் நான் இழக்கமாட்டேன். என்னை அறிந்த யாருக்குமே இது தெரியும். அதனால் தான் என் கைதை தங்களுக்கான கைதாகக் கருதி பத்திரிகையுலக நண்பர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், இடதுசாரி மற்றும் தமிழ் தேசிய தோழர்களும்  தீவிரமாக களம் கண்டனர். திராவிட இயக்க தோழர்கள் பலரும் கூட என் கைதை வன்மையாக கண்டித்துள்ளனர்! இது அவர்களின் சமூகக் கடமை என கருதி, தன்னிச்சையாக அவர்கள் செய்துள்ளனர். இதில் நான் தற்பெருமை பட்டுக் கொள்வது சரியாக இருக்காது. இதற்கு நன்றி பாராட்டுவது கூட அவர்களின் சமூக பொறுப்புணர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதாக ஆகிவிடும். எனக்கு நேரில் அறிமுகமானவர்கள் தொடங்கி நான் அறியாத பலரும் என் கைதில் காட்டிய பதற்றமும், வேதனையும், தவிப்பும் என்னை  மிகவும் நெகிழ வைத்தது. அனைவருமே என் கைதை பத்திரிகை உலக சுதந்திரத்திற்க்ட் தற்போது நேர்ந்துள்ள ஆபத்தாகவே பார்த்தனர்.

நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் ஒரு பெரிய மாறல் சப்போர்ட்டாக இருந்தார். வழக்கறிஞர் தோழர்கள் கோதண்டராமன், திருஞான சம்பந்தன், ஏ.எல்.ரவி, சுரேஷ் குமார், பூபால், பிரபு  மற்றும் ஜீனியர் வழக்கறிஞர்கள் பலர் களத்திற்கு நேரடியாக வந்து என்னை விடுவிக்க காரணமாயினர்! தம்பி செழியனும், சிற்றரசும் களத்திற்கே என்னை அழைக்க வந்துவிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக என்னை போனில் விசாரித்து வந்தார்! அண்ணன் நக்கீரன் கோபால் களத்திற்கே வழக்கறிஞர் சுரேஷ் குமாரை அனுப்பியதோடு தொடர்ச்சியாக போனில் பேசியபடி இருந்தார். மேலும், அரசியல் தலைவர்கள் பெ.மணியரசன், தொல் திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் , சீமான், செந்தில் ஆறுமுகம்( மக்கள் நீதி மையம்) போன்றவர்களும் ஏராளமான சமூக அமைப்புகளும் அறிக்கை தந்திருந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் மு.வீரபாண்டியன், ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் ஆகியோர் போனில் விசாரித்தனர்.

சென்னை பத்திரிக்கையாளர் சங்க தோழர்கள், தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்கம். சென்னை பத்திரிகையாளர் மன்றங்களின்  நிர்வாகிகள் தொடங்கி அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும், முன்னணி பத்திரிகையாளர்கள், காட்சி ஊடக நண்பர்கள் பலரும் தொடர்ந்து களத்தில் என் விடுதலைக்காக செயல்பட்டனர். பலருடைய தொலைபேசி அழைப்பை என்னால் எடுத்து பேச முடியாத அளவுக்கு ஆதரவு குரல்கள் ஒலித்தன. அதே போல சமூக வலைதளங்களில் ஏராளமானோர் இதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளனர்! இவை யாவும் முதலமைச்சர் அவர்களே என் விடுதலையில் தலையிடும் சூழலை உருவாக்கியதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இவையாவும் இது வரை நான் ஆற்றிக் கொண்டிருக்கும் அரசியல், சமுதாயப் பணிக்காக இயல்பாக வெளிப்பட்ட எதிர்வினைகள்! இவை நான் தொடர்ந்து செயல்படும் ஊக்கத்தை தந்துள்ளன என்பதைக் கடந்து, இன்னும் அநீதியை எதிர்க்கவும், நேர்மையாளர்களை ஆதரிக்கவுமான மனிதர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என உணர்வதற்கு வாய்ப்பானது!

அதைவிட முக்கியமாக சாவித்திரி கண்ணன் கைது என்பது தனி நபர் விவகாரமல்ல, இது  ஊடகத் துறைக்கு தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் சவால்களையும், ஆபத்தையும் உணர்த்திடும் சமிக்சையாகும்!

Tags: