தடம் புரளும் ரயில்களும், நெறி பிறழும் அரசியலும்

ராஜன் குறை

ரிசாவில் நடந்த கோர ரயில் விபத்து வெகுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இயல்பு. ஏனெனில் இறந்தவர்களில் பலர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், குளிரூட்டப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால் உழைக்கும் மக்கள், கீழ் மத்தியதர வர்க்க மக்கள். அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியிலும், காணொலிகளாக செல்பேசியிலும் கண்ணுற்ற மக்கள் அதுகுறித்து பலவகையாகப் பேசிக்கொள்வது இயல்புதான்.

தமிழ் நாட்டில் வசிக்கும் தூய்மைப் பணியாளர் ஒருவரும், இல்லப் பணியாளர் ஒருவரும் ஒரே மாதிரியான கருத்தொன்றை கூறியதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். அது என்னவென்றால் செங்கோல் ஒன்றை அரசு சின்னமாக வைத்தால் நெறி பிறழாமல் ஆட்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இது போன்ற கோர விபத்துகள் நடக்கும் என்ற கருத்துதான்.

இது போன்ற மூட நம்பிக்கை சார்ந்த கருத்தை நாம் ரசிக்க முடியாது. செங்கோல் புனிதமானது; அரசு பிழை செய்தால் விபத்து நடக்கும் என்பதெல்லாம் எளியோர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதேயாகும். அதனால் அவர்கள் மனதில் இருக்கும் கோபத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அதை பகுத்தறிவு நோக்கில் பார்க்கவும் முடியும்.

அரசு உண்மையை பேசுமா?

ரயில் விபத்து நடந்தவுடன் ரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் முக்கியமான சில பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினார்கள். அது என்னவென்றால் வெகுகாலம் பயன்படுத்தப்பட்டு தேய்மானமடைந்த ரயில் பாதைகளை செப்பனிட போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை, சிக்னல்களை பழுது பார்க்க, செப்பனிட போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை, காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது போன்ற பிரச்சினைகளால் விபத்து நிகழும் சாத்தியங்கள் மிகவும் அதிகரித்து உள்ளன என்பதைத்தான் சுட்டிக் காட்டினார்கள்.

இதை அவர்கள் மேலோட்டமாகக் கூறவில்லை. சி.ஏ.ஜி என்ற Comptroller and Auditor General of India என்ற தலைமைக் கணக்காளரின் 2019ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டியே கூறினார்கள். பயணிகளின் பாதுகாப்பு குறித்த இந்த முக்கியமான அறிக்கையையே அரசு அக்கறையின்றி புறக்கணித்திருப்பது அதற்கடுத்த ஆண்டுகளில் வெளியான நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்தால் தெளிவாகிறது. ஏனெனில் மேற்கூறிய பிரச்சினைகளை சரிசெய்ய போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, பல்வேறு விரைவு ரயில்கள் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் தடங்களில் வந்தே பாரத் என்ற ஆடம்பர விரைவு ரயிலை விடுவதில்தான் அரசு முனைப்புக் காட்டியது. பிரதமரே ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் தடத்தையும் நேரில் சென்று பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தார். தண்டவாளங்களைச் சீரமைக்க நிதி ஒதுக்காமல் ஆடம்பர விரைவு ரயில்களைத் தொடங்குவது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்பதே கேள்வி.

இந்த நிலையில்தான் விபத்துக்கு அரசு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. இது ஒரு குறியீடுதான் என்றாலும் சில சீரமைப்புகளுக்கு வழிவகுக்கும். பயணிகள் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது என்பதை சிந்திக்க புதிய அமைச்சர் முயற்சி செய்வார். ஏனெனில் இந்த விபத்து தவிரவும் நாட்டில் ரயில்கள் தடம் புரள்வது பரவலாக நடந்துகொண்டுதான் உள்ளது.

ஆனால் ஒன்றிய அரசு சீரமைப்பு குறித்து ஆராய்வதற்குப் பதிலாக சிபிஐ மூலம் ஏதேனும் சதிச்செயல் நடந்துள்ளதா, சிக்னல்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டுள்ளனவா என்று ஆராயத் தலைப்படுகிறது. பொதுவாக துறை சார்ந்த விசாரணைகள் முடிந்த பிறகே தேவைப்பட்டால் உளவுத்துறையிடம் விசாரணையை ஒப்படைப்பது வழக்கம்.  அப்படிச் செய்யாமல் எடுத்தவுடன் சிபிஐ விசாரணை என்பது அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதுடன், சதி கோட்பாட்டின் மூலம் பிரச்சினையை திசை திருப்பவும் பயன்படுத்தப்படலாம் என்பதே பலரது ஐயமாக இருக்கிறது.

அடடா, அரசின் மீது இப்படிச் சந்தேகப்படலாமா என்று சில நல்ல உள்ளங்கள் நினைக்கலாம். இரண்டு சமீபத்திய நிகழ்வுகள் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை. ஒன்று, சென்ற 2019 தேர்தலின் போது பேசுபொருளாக இருந்த புல்வாமா தாக்குதலுக்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என்று அன்றைய ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கூறியது. இரண்டாவது திருவாடுதுறை ஆதீனத்தின் செங்கோல் ஆட்சி மாற்றத்தைக் குறிக்க மவுண்ட்பேட்டன் கையில் கொடுத்து வாங்கப்பட்டது என்ற கட்டுக்கதை.

புல்வாமா தாக்குதலுக்கு யார் பொறுப்பு?

நாற்பது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் 2019 பிப்ரவரி 14 அன்று அவர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது வெடிமருந்து நிரம்பிய கார் மோதியதால் மரணமடைந்தார்கள்.

எப்படி அந்த வெடிமருந்து நிரம்பிய கார் புலனாய்வு நிறுவனங்களின், பாதுகாப்பு வளையங்களின் கண்காணிப்புகளைத் தாண்டி பல நாட்கள் உள் நாட்டில் பயணம் செய்து, வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது மோதியது, அது அரசின் பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வி இல்லையா என்று யாரும் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பாஜக கேட்டிருக்கும்.

ஆனால், காங்கிரஸ் இது போன்ற துயர நிகழ்வுகளில் அரசியல் செய்யக்கூடாது என்று நினைப்பதால், பாஜக இந்தத் தாக்குதலை வைத்து தேசபக்தி உணர்ச்சியைத் தூண்டி, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, மற்ற பிரச்சினைகளை மழுங்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றது.

அதனால்தான் அந்தத் தாக்குதல் நடந்தபோது ஜம்மு, காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் நமது ராணுவ வீரர்களின் உடல்களின் மீது தேர்தல் நடந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீரர்கள் பயணம் செய்ய விமானம் கேட்டார்கள். உள்துறை அமைச்சகம் தரவில்லை. அதனால்தான் தரை வழியாக பயணம் செய்தார்கள். பாதுகாப்பு அமைப்புகளின் கவனக்குறைவால் தாக்குதலுக்கு ஆட்பட்டு உயிரை இழந்தார்கள் என்று சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு விதங்களில் அரசு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பயணம் செய்ய விமானம் தராதது. தாக்குதல் நடப்பதை உளவுத் தகவல்கள் மூலமும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலமும் தடுக்காதது. இந்த இரண்டுமே அரசின் பிழைகள் என்றுதான் சத்யபால் மாலிக் கூறுகிறார்.  

அவர் அன்றைய தினமே இது நம்முடைய தவறு என்று கூறிய போது பிரதமர் அவரை பேசாமல் இருக்கும்படி அறிவுறுத்தினார் என்று கூறுகிறார். ஏனெனில் அரசின் தவறு என்று எல்லோரும் பேசினால் தேர்தலில் வாக்குகளைப் பெற முடியாது. பாகிஸ்தான் என்று மட்டும் பேசினால் தேசபக்தி உணர்ச்சியைத் தூண்டி வாக்குகளைப் பெறலாம் என்பதே கணக்கு.

பா.ஜ.க இட்டுக்கட்டிய கற்பனை கதை: ஆட்சி மாற்றமும், செங்கோலும்

இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில் ஒன்றுதான் Press Information Bureau. இது அதிகாரபூர்வமான செய்திகளை அரசின் தரப்பில் வெளியிடுவது. கடந்த மே மாதம் 24ஆம் தேதி ஏழு நிமிடம் பதினேழு நொடிகள் கொண்ட ஒரு ஆவணப்படம் போன்ற சித்தரிப்பை வெளியிட்டுள்ளது. இதன் தலைப்பு “Transfer of Power to India in 1947” என்பதாகும். அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதை ஆட்சி மாற்றம் என்று குறிப்பிடுகிறது.

இந்த ஆவணப்படத்தில் உண்மையாக நிகழ்ந்தவற்றின் புகைப்படங்களும், நடிகர்களைக் கொண்டு நடிக்கப்பெற்ற நிகழ்வுகளும் கலந்து உள்ளன. இதில் கூறப்படுவது என்னவென்றால் சென்னையிலிருந்து ஒரு குழு டெல்லிக்கு ஒரு முக்கியமான பணிக்காகச் சென்றது. அவர்கள் கிளம்புவது, பயணம் செய்வதெல்லாம் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்தப் பணி என்னவென்றால் இந்தியா சுதந்திரமடைவதை புனிதமான ஒரு நிகழ்வாக மாற்றுவது.

இதைத்தொடர்ந்து நடிக்கப்பட்ட காட்சிகளாக நாம் காண்பது: இங்கிலாந்தின் கடைசி வைசிராயான லார்டு மெளண்ட் பேட்டன் ஆட்சியை உங்களிடம் கொடுப்பதை எப்படி அடையாளப்படுத்துவது, ஒரு குறியீடாக நிகழ்த்துவது, என்று நேருவிடம் கேட்கிறார். நேரு அதற்கான விடையைக் குறித்து ராஜாஜியிடம் கலந்து ஆலோசிக்கிறார்.

இதைத் தொடர்ந்து ராஜாஜி நிறைய நூல்களைப் படித்துப் பார்ப்பதாகவும், சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி சிந்திப்பதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னர் அவர் திருவாடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டதாகக் கூறிவிட்டு, சில சித்திரப் படங்களாக எப்படி சோழ அரசர்கள் முடிசூட்டிக்கொள்ளும்போது செங்கோலை மத குருவிடமிருந்து பெறுவார்கள் என்று காட்டப்படுகிறது. தஞ்சை கோயிலும் காட்டப்படுகிறது.

பிறகு ஆதீனம் உம்மிடு பங்காரு செட்டி என்ற நகை வியாபாரிகளிடம் செங்கோல் செய்யச் சொன்னதாகக் கூறிய பிறகு, முதியவர் ஒருவர் அந்த செங்கோலை தான் செய்து கொடுத்ததாக நேர்காணலில் கூறுகிறார். வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசியதாகக் கூறுகிறார். அதன் பின் அந்த செங்கோல் பலமுறை அண்மைக்காட்சியாகக் காட்டப்படுகிறது.

அதன்பின்  1947 ஆகஸ்ட் 14 அன்று அந்தச் செங்கோலை ஆதீனத்தின் உதவியாளர் குமாரசுவாமி தம்பிரான் எடுத்துக்கொண்டு போய் மெளண்ட் பேட்டனிடம் கொடுக்கிறார். அதை வாங்கிக்கொள்ளும் மெளண்ட் பேட்டன் அதை திரும்ப அவரிடமே கொடுக்கிறார். அதன் மீது புனித நீர் தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் அதை எடுத்துக்கொண்டு போய் நேருவிடம் கொடுக்கிறார்கள்.

அதாவது பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதியான மெளண்ட் பேட்டனிடமிருந்து ஆட்சியதிகாரத்தை குறிக்கும் செங்கோலை குமாரசாமி தம்பிரான் பெற்று நேருவிடம் கொண்டுபோய் கொடுத்ததுதான் இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளம், அந்த செங்கோல்தான் சுதந்திரத்தின் குறியீடு என்று இந்தத் திரைப்படம் கூறுகிறது. அதற்கு ஆதாரமாக சில செய்தித்தாள்கள், பத்திரிகைச் செய்திகளைக் காட்டுகிறது. சில நூல்களை இறுதியில் குறிப்பிடுகிறது.

இந்தப் படம் குறிப்பிடும் தகவல்களை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அத்தகைய செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதை இப்போது புதிய நாடாளுமன்றத்தில் நடுநாயகமாக நாடாளுமன்ற அவைத்தலைவர் இருக்கைக்கு அருகில் வைக்கப்போவதாகவும் கூறினார். பிரதமரும் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து ஆதீனங்களையும் வரவழைத்து அவர்கள் முன்னால் செங்கோலை தரையில் விழுந்து வணங்கி அதனை கொண்டு போய் அவைத்தலைவர் இருக்கைக்கு அருகே செருகி வைத்தார்.  

உண்மையும் புரட்டும்

இந்தச் செங்கோல் நிகழ்வைக் குறித்து ஆராய்ந்தவர்கள் அனைவரும், இது பாதி உண்மை நிகழ்வை வைத்து பின்னப்பட்ட கட்டுக்கதை என்றே கூறுகிறார்கள். உதாரணமாக இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளிப்படையாக இந்தச் சித்தரிப்பிற்கு ஆதாரம் எதுவுமில்லை, கட்டுக்கதை என்று கூறியுள்ளார்.

சரியாகச் சொன்னால் திருவாடுதுறை ஆதீனகர்த்தர் நேருவிற்கு ஒரு செங்கோலை பரிசாக அனுப்பியதற்கு ஆதாரம் உள்ளது. அதை அவர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நேருவின் இல்லத்தில் கொடுத்துள்ளார்கள். அவரும் அதை மரியாதை நிமித்தமாகப் பெற்றுக்கொண்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விட்டார்.

இந்த செங்கோலை மெளண்ட்பேட்டன் பெற்றுக்கொண்டார், அதைத் திரும்ப குமாரசாமி தம்பிரானிடம் கொடுத்தார் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. தற்போதைய திருவாடுதுறை ஆதீனம், டெல்லி வரை தனி விமானத்தில் சென்று வந்தவர், மெளண்ட் பேட்டனிடம் கொடுத்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றுதான் கூறுகிறார்.

ராஜாஜியின் வாழ்க்கையை நன்கு அறிந்த ஆய்வாளரான, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான அவரது பெயரன் ராஜ்மோகன் காந்தி இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை கேள்விப்பட்டதேயில்லை என்று கூறுகிறார். இது போன்று மெளண்ட் பேட்டன் கேட்டதற்கும், ராஜாஜி செயல்பட்டதற்கும் ஆதாரங்கள் இருந்தால் அரசு வெளியிட வேண்டும், அப்போதுதான் அரசின் நம்பகத்தன்மை காப்பாற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு அந்த ஆவணப்படத்தில் நடித்து காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்கான எந்த ஆதாரத்தையும் இன்னமும் வெளியிடவில்லை. திருவாடுதுறை ஆதீனம் அவராக முன்வந்து நேருவுக்கு அளித்த பரிசு ஆட்சி மாற்றத்தைக் குறித்த அதிகாரபூர்வமான அடையாளம் என்பதை அரசு நிரூபிக்கவேயில்லை.

காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒரு கட்டுரை எழுத, அதை பத்மா சுப்ரமண்யம் என்ற நடனக் கலைஞர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பிரதமருக்கு அனுப்ப, அதன் அடிப்படையில் அந்த செங்கோல் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. குருமூர்த்தியின் கட்டுரையில் செவி வழி செய்தியாகக் கூறப்பட்ட ஒரு கதையையே ஆதாரமாகக் கொண்டு  இந்திய ஒன்றிய அரசு ஆட்சி மாற்றம் குறித்த மிகப்பெரிய கட்டுக்கதையை வரலாறாக மாற்றியுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தன் பொறுப்பை மறைத்த பாஜக அரசு, செங்கோல் விஷயத்தில் ஆதாரமேயில்லாத ஒரு கட்டுக்கதையை உலகமே அறிய வரலாறு என்று கூறியுள்ளது. இவர்கள் எப்படி ஒரிசா ரயில் விபத்து விஷயத்தில் திசை திருப்பும் வேலையைச் செய்ய மாட்டார்கள் என்று மக்கள் நம்புவார்கள்?

எளிய அடித்தட்டு மக்கள் இப்படியெல்லாம் ஆராய்ந்து விவாதிப்பதில்லை. மாறாக அவர்கள் கட்டுக்கதையை அதன் தளத்திலேயே எதிர்கொள்கிறார்கள். புனிதமான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்துவிட்டு நெறிபிறழ்ந்து அரசாண்டால், ரயில்கள் தடம் பிறழும் என்று அவர்களாக ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அரசு மக்களிடம் உண்மையைப் பேச வேண்டும். அவர்களுடைய நம்பகத்தன்மையைப் பெற வேண்டும். அவர்களிடம் உண்மையை மறைத்தால், அவர்களும் தங்கள் கற்பனையாற்றலை வெளிப்படுத்துவார்கள் அல்லவா?  

Tags: