ஸ்ரீமதி வழக்கில் திமுக அரசுக்கு தைரியம் பிறக்குமா?

-சாவித்திரி கண்ணன்

ஓராண்டு கடந்தும் ஓயாத பெரு நெருப்பாய் மக்கள் நெஞ்சங்களில் கழன்று கொண்டிருக்கிறது  தமிழக மாணவி ஸ்ரீமதியின் கொலை. அதிகார அழுத்தங்கள், நெருக்கடிகள், தடைகள் அனைத்தையும் மீறி, ஸ்ரீமதியின் முதலாமாண்டு நினைவஞ்சலி நடந்துள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் திமுக அரசுக்கு ஏற்பட்ட தைரியம்  இதில் தொடருமா..?

காலம் கடந்த போதிலும், ஆலம் விழுதைப் போல ஆழமாக வேறூன்றி நிற்கும் ஆகிருதியாய் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி திகழ்கிறாள் என்பதற்கு சாட்சியாய் நேற்றைய தினம் (12.07.2023) அவளது முதலாமாண்டு நினைவு தினம் ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலியோடு நிகழ்ந்துள்ளது. ஒரு தனிப்பட்ட மாணவியின் மரணம் தமிழக மக்களின் துயரமாய் மாறிய விந்தையை ஊடக உலகமே அதிசயமான ஒன்றாகவே அவதானித்து வருகிறது. சாதியப் பின்புலம் இல்லை. அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லை. பணபலம் இல்லை… இப்படி இல்லை, இல்லைக்கள் பல இருக்கும் நிலையில், எதிர்தரப்போ எல்லா விதத்திலும் அசூர பலங்களை பெற்று அநீதிகளை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது!

சக்தி வாய்ந்த சாதிய பலம், அதிகார வர்க்கத்தின் அபரிமிதமான ஆதரவு, காவல்துறையின் விசுவாசம், எதையும் விலைபேசி வாங்க முடிந்த பணபலம், பாஜக மற்றும் அதிமுகவின் மறைமுக ஆதரவு, மத்திய ஆட்சியாளர்களின் அரவணைப்பு, மாநில ஆட்சியாளர்களின் இயலாமை, உண்மையை ஊனப்படுத்தும் ஊடகங்களின் துணை எல்லாம் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு வரை சக்தி பள்ளியில் படித்த அழகிய மாணவி ஸ்ரீமதி பத்தாம் வகுப்பிற்கு பிறகு ப்ளஸ் ஒன்னுக்கு அருகாமை பள்ளியில் பணம் கட்டி சேர்ந்த நிலையில், சக்தி பள்ளியின் தாளாளர் சாந்தி வற்புறுத்தி தன் பள்ளிக்கு அழைத்ததின் உள் நோக்கத்திற்கு அடுத்த சில நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொலையில் விடை கிடைத்தது. எத்தனையோ கொலைகளை அரங்கேற்றிய அனுபவத்தில் இதையும் அசல்ட்டாக பள்ளி நிர்வாகம் கடக்க பார்த்த போது, ஏழைத் தாயின் ஆவேசமும், மக்களின் எழுச்சியும் விஸ்வரூம் எடுத்தன!

# இரவு பத்தேகால் மணி வரை தோழிகளுடன் கலகலப்பாகப் பேசி படுக்க சென்ற ஸ்ரீமதி, அதிகாலை பிணமாக பள்ளி மைதானத்தில் கிடக்கிறாள்!

# மூன்றாம் தளத்தின் தாழ்வாரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தாழ்வாரத்தின் காம்பவுண்டு சுவரில் கிரில் கம்பி ஆளுயரத்திற்கு எழுப்பட்டுள்ளது. அதில் ஏறி நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. பிறகெப்படி அதில் இருந்து குதிக்க முடியும்..?

# ஸ்ரீமதியின் உடலோ, சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சம்பந்தமில்லாத தூரத்தில் கிடந்தது. ஐந்து விரல்களும் இருக்கமாக மூடப்பட்டு இருந்தது. இரத்தக் கறை அந்த இடத்தில் இல்லை.

# இரவே இறந்து உறைந்த நிலையில் இருந்த உடலை அப்புறப்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு மட்டுமே உண்டென்ற நிலையிலும் பள்ளி நிர்வாகம் உடலை எடுத்து தடயங்களை மறைத்தது.

# மக்கள் போராட்டங்கள் எழுந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார் டெல்லி அதிகார மையத்திடம் அடைக்கலமான தகவல்கள் வந்தன. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை தொடங்கும் முன்பே பள்ளிக் கூட நிர்வாகத்திற்கு நற்சான்றிதழ் தந்தார்.

# பிரேத பரிசோதனையை உரிய மருத்துவரைக் கொண்டு நடத்தாமல் அவசர கதியில் நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஒரு மருத்துவர் இருப்பதற்கான உலகளாவிய மனித உரிமையை தமிழக அரசின் வழக்கறிஞர் உறுதிபட மறுத்தார். உச்ச நீதிமன்றம் வரை மாணவியின் தந்தை சென்றும் அந்த உரிமை மறுக்கப்பட்டுவிட்டது தான் இந்த வழக்கில் மிகப் பெரிய பின்னடைவு. இது சாத்தியமாகி இருந்தால் அன்றே வழக்கு முடிவுக்கு வந்து குற்றவாளிகள் கம்பி எண்ணியிருப்பர்.

# மூன்றாவது முயற்சியான ஜிப்மர் அறிக்கையும் பொதுவெளிக்கு வைக்கப்படாமல் இரகசியமாக நீதிபதிக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பிரேத பரிசோதனையில் இடுப்பு எலும்பும், விலா எலும்பும் நொறுங்கிய செய்தி வெளியானது. பாலியல் பலாத்காரம் தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் கிடைக்கவில்லை.

#  மக்கள் திரள் தன்னிச்சையாகத் திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பள்ளி உரிமையாளர்தரப்பு குற்றச் செயல்களில் தேர்ந்த தொழில்முறை சாதி ரவுடிகளைப் பயன்படுத்தி பள்ளிக் கூடத்தை எரித்து தடயங்களை மேலும் அழித்தது. போராட்டத்திற்கு வந்தவர்களின் இரு சக்கர வாகனங்கள் அனைத்துமே எரித்து அழிக்கப்பட்டது.

#  போராட்டம் தொடர்பாக சுற்றுவட்டாரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் நலிந்த பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு எதிர்காலத்தையே தொலைத்தனர்.

#  குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தமிழக காவல்துறை அளவு கடந்த தாமதங்களை அரங்கேற்றியது. பள்ளிதரப்பில் கைதாகி இருந்த ஐவரின் ஜாமீனை விசாரித்த நீதிபதி சம்பந்தமில்லாமல் பள்ளி தரப்பிற்கு வலிந்து நற்சான்றிதழ் வழங்கினார்.

#  பள்ளிக் கூட வளாகத்தில் அதுவும் பெண்கள் விடுதி உள்ள கட்டிடத்தின் கீழ் தளத்தில் இரவு நேர விருந்து நடத்தலாமா? அதில் மது பானங்கள் பரிமாறப்பட்டது தவறல்லவா? அதில் யார், யார் கலந்து கொண்டனர்? இது குறித்த உண்மைகள் இன்று வரை மறைக்கபடுவதேன்…?

#  ஸ்ரீமதி வழக்கில் தரப்படும் அதிகார அழுத்தங்கள் குறித்து எழுதிய நான் கைது செய்யப்பட்டேன். நக்கீரன் மூத்த நிருபர் பிரகாஷும், புகைப்படக்காரரும் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

# மனித உரிமை அமைப்புகள் – மக்கள் உரிமைக் கழகம்(PUCL), சிபிஎம்மின் மனிதம் போன்ற அமைப்புகள்  உண்மை அறியும் குழுவை அனுப்பி பொது விசாரணை நடத்தி , ”இது ஒரு கொலை தான்” என்று அறிக்கைகளை பொது வெளியில் வெளியிட்டுள்ளது கவனத்திற்கு உரியது.

நீதிதுறையே பாரபட்சமாக நடப்பதைக் கண்டு கொதிதெழுந்த நேர்மையான வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, ரத்தினம், பா.ப.மோகன், எம்.எல்.ரவி, திருஞான சம்பந்தம் ஆகியோர் ஏழைத் தாய்க்கு பிரதிபலன் பாராது உதவ முன்வந்தனர்! இவர்களைத் தொடர்ந்து வட இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் சித்தார்த் லூர்து என்பவரும் உதவிக்கு வந்தார். உண்மையில் மக்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருப்பது இவர்களின் தன்னலமற்ற முயற்சியைத் தான்!

வழக்கறிஞர் சித்தார்த் லூர்து உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தந்த ஜாமீனை இரத்து செய்யத் தொடர்ந்த வழக்கில், ஜாமீன் தந்ததோடு, வரம்புக்கு மீறிப் பேசி குற்றவாளிகளுக்கு ஆதரவு நிலை எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உச்ச நீதிமன்றத்தால் விமர்சனத்திற்கு ஆளானார். ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்திற்கு எதிரேயே தடையை மீறி போராடிக் கைதாகினர்.

அதிகார அழுத்தங்களால் ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீமதி மரணத்தை தற்கொலையாக பிரேம் செய்ய காய் நகர்த்திய காவல்துறை குற்றப் பத்திரிகையையும் அவ்விதமே வடிவமைத்து சமீபத்தில் தான் தாக்கல் செய்தது. ஸ்ரீமதிக்கு காதல் இருந்ததாகவும், ஸ்ரீமதி தாயார் செல்வியின் நடத்தை தொடர்பாகவும் அயோக்கியர்கள் சிலரால் ஜோடிக்கப்பட்ட கதைகளுக்கு கற்பனை வடிவம் தர காவல்துறை துணியவில்லை என்பது ஒன்று தான் ஆறுதல்.

ஸ்ரீமதி கொலையில் உண்மையை வெளிக் கொணர்ந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கோடானுகோடி தமிழ் மக்கள் ஏக்கத்திலும், தவிப்பிலும் உழலும் சூழலை தமிழக ஆட்சியாளர்களும் சரி, எதிர்கட்சியான அதிமுகவும் சரி உணரவில்லையா? அல்லது உணர்ந்தாலும் செயல்பட முடியாதவாறு  மத்திய பாஜக அரசின் அதிகார அழுத்தம் வலுவாக உள்ளதா..?

2024  பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் இந்த வழக்கில் விரைந்து நீதி கிடைக்க வழி பிறக்கும். ஆனால், அதற்கு முன்னதாக, ‘மாநில திமுக அரசு கள்ளக் குறிச்சி வழக்கில் உண்மைக்கு ஆதரவாக இல்லை’ என்ற பழி விலக வேண்டும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் காட்டிய துணிவை  ஸ்ரீமதி கொலை விஷயத்தில் திமுக காட்டுமா? இல்லாவிடில், இது தேர்தலில் திமுகவிற்கு பலத்த பின்னடைவைத் தரும்.

எப்படி டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் எந்தக் கட்சியின் துணையுமின்றி வீறுகொண்டு நடந்ததோ.., அதே போல ஸ்ரீமதிக்கான நீதி கேட்கும் போராட்டமும் மக்களின் தன்னிச்சையான எழுச்சியோடும், உறுதிபாட்டோடும் தொடர்கிறது! மக்கள் நீதியை நிச்சயமாக வென்றெடுப்பர்.

Tags: