தோழர் என்.சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்த தினம்!

-முரளிதரன் காசிவிஸ்வநாதன்

பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, தன் வாழ்வின் குறிப்பிடத்தக்க காலகட்டத்தை நாட்டிற்கான போராட்டங்களில் சிறையில் கழித்தவர். சங்கரய்யாவின் வரலாறு என்பது தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும்கூட.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் சங்கரய்யா.

தற்போது தூத்துக்குடியில் உள்ள ஆத்தூரைச் சேர்ந்தது சங்கரய்யாவின் குடும்பம். சங்கரய்யாவின் தாத்தா எல். சங்கரய்யா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் நரசிம்முலு பம்பாயில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, கோவில்பட்டியில் செயல்பட்டுவந்த ஜப்பானிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கும் அவருடைய மனைவி ராமானுஜத்திற்கும் 1922 ஜூலை 15 ஆம் திகதி சங்கரய்யா பிறந்தார். அவருக்கு எட்டு சகோதர – சகோதரிகள். சங்கரய்யாவுக்கு பெற்றோர் இட்டபெயர் பிரதாபசந்திரன்.

ஆனால், தனது பெயரையே தன் பேரனுக்கு வைக்க வேண்டுமென தாத்தா வலியுறுத்தியதால், அவரது பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது. 1930இல் நரசிம்முலு மதுரை ஹார்வி மில்லில் பணியாற்ற மதுரைக்கு குடும்பத்தோடு சென்றார். புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937 ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார்.

அந்த காலத்தில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடமும் மேலோங்கிவந்த அந்த உணர்வை கல்லூரி முதல்வர் பிளிண்ட் விரும்பவில்லை. இருந்தபோதும் சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் தேசிய உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டனர். அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் சங்கரய்யா.

இதற்குப் பிறகு சுதந்திர போராட்டத்திற்கென சென்னையில் செயல்பட்ட சென்னை மாணவர் சங்கத்தைப் போலவே மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கரய்யா அதன் செயலாளரானார். மதுரையில் உள்ள மக்கள் பிரச்சனைக்காக இந்த சங்கம் தொடர்ந்து ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதன் பிறகு பல்வேறு இடங்களில் மாணவர் சங்கங்கள் துவக்கப்பட்டன.

இதில் கலவரமடைந்த கல்லூரி முதல்வர் பிளின்ட், சங்கரய்யாவை அழைத்து வேறு கல்லூரிக்குச் சென்றுவிடும்படி கூறினார். ஆனால், சங்கரய்யா மறுத்து விட்டு, அமெரிக்கன் கல்லூரியிலேயே படிப்பைத் தொடர்ந்தார்.

துவக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சங்கரய்யா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேசிய விடுதலை இயக்கத்தின் பக்கம் திரும்பினார். அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ‘பூரண சுதந்திரம்’ கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்ததால், அந்த கட்சியில் இணைவதென முடிவெடுத்தார் சங்கரய்யா. ஆனால், அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1941இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அதனைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரியில் கூட்டம் நடத்தி, பேசினார் சங்கரய்யா. முடிவில் பெப்ரவரி 28ஆம் திகதி காலையில் காவல்துறை ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தனால் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார்.

பி.ஏ. தேர்வுக்கு 15 நாட்களே இருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதால், அவர் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. மதுரைச் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சங்கரய்யா 1942 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வெளிப்படையாக தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இதையடுத்து பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கண்ணணூர் சிறைக்கும் பிறகு தஞ்சாவூர் சிறைக்கும் மாற்றப்பட்ட சங்கரய்யா 1944இல் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வானார். இதற்குப் பிறகு, ஆங்கிலேய அரசால் தொடரப்பட்ட மதுரைச் சதி வழிக்கில் சங்கரய்யா சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சங்கரய்யா 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது பொய் வழக்கு என்பதை நிரூபித்து, 1947 ஓகஸ்ட் 14ஆம் திகதி இரவு, அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் சங்கரய்யா விடுவிக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியையான நவமணியைத் திருமணம் செய்தார் சங்கரய்யா.

இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுவதற்கு முன்பாகவே கைது நடவடிக்கைகள் துவங்கின. சங்கரய்யா தலைமறைவானார். சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்தபடி, மாறுவேடம் பூண்டு கட்சிப் பணியை மேற்கொண்டார் சங்கரய்யா.

1948-51இல் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறை கடுமையாக இருந்தது. பலர் கொல்லப்பட்டனர். பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி. சுப்பய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். 1950இல் உமாநாத் இருந்த தலைமறைவு மையம் கண்டுபிடிக்கப்பட்டு, உமாநாத் பாப்பா, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 1951ல் சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா, முதல் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்வதில் தீவிரமானார். இந்தத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் பி. ராமமூர்த்தி வெற்றிபெற்றார்.

1957இல் நடந்த பொதுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார் சங்கரய்யா. ஆனால், வெற்றிகிடைக்கவில்லை.

1962 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் யுத்தம் மூண்டபோது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டார்.ஆறு மாதங்களுக்குப் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

1963இல் மார்க்சிய – லெனினியப் பார்வையோடு ‘தீக்கதிர்’ நாளேடு வெளியாக ஆரம்பித்தது. சங்கரய்யா, பி. ராமமூர்த்தி உள்ளிட்டோரின் கட்டுரைகள் புனைப்பெயரில் வெளியாக ஆரம்பித்தன. இந்த கட்டத்தில் கட்சி, தி.மு.கவுக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது. இதனை சங்கரய்யா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

1964இல் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மாநிலக் குழுவில் சங்கரய்யா இடம்பெற்றார். 1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

1967இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்வானார். 1967இல் திருவாரூரில் நடந்த விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில், சங்கரய்யா மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். 1969இல் மாநிலத் தலைவராகவும் தேர்வானார். 1982, 1991இலும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். இந்த காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கூட்டங்களிலும் போராட்டங்களிலும் பங்கேற்றார் சங்கரய்யா.

1977இலிலும் 1980இலும் நடந்த தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட சங்கரய்யா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசிய சங்கரய்யா, மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினார்.

1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார் சங்கரய்யா. அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வருகிறார் அவர்.

1995இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரிவரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

என். சங்கரய்யா – நவமணி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். நான்கு பேரன்களும் மூன்று பேத்திகளும் உள்ளனர்.

-பிபிசி தமிழ்
2021.07.15

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை!

கைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா இன்று (2023.07.15) தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சுதந்திரப்‌ போராட்டத் தியாகியும்‌ மிகச்‌ சிறந்த பொதுவுடைமைத்‌ தலைவராகவும்‌ திகழும்‌ மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகைசால்‌ தமிழர்‌ விருதினை வழங்கி கௌரவித்தது.

இன்று 102 வது பிறந்த நாள்‌ காணும்‌ சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில்‌ பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில்‌ ஈடுபட்டதால் சிறையில்‌ அடைக்கப்பட்டார். அதன்‌ காரணமாக அவர்‌ கல்லூரித்‌ தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு, 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான்‌ 1947 ஆம்‌ ஆண்டு ஓகஸ்ட்‌ 15ஆம்‌ திகதியன்று அவர்‌ விடுதலை செய்யப்பட்டார்.

ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச்சிறந்த சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: