மணிப்பூர் மக்கள் எதிர் கொண்ட கொடூரங்கள்!
-சாவித்திரி கண்ணன்
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக களம் கண்டனர். அதை அடக்க ஆயுதப் படை சிறப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த மணிப்பூர் 76 வருடங்களில் டெல்லி அதிகார மையத்தாலும், அரசியல் சித்து விளையாட்டுகளாலும் மணிப்பூர் சந்தித்த கொடுமைகளின் பட்டியல் இதோ...
சுதந்திரம் பெற்றது தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பதற்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. காரணம், ‘தாங்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவில் இணைக்கப் பட்டுள்ளோம்’ என அவர்கள் கருதியது தான்! பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்திய குறுநில மன்னர்கள் ஒடுக்கப்பட்டு, மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்றிணைக்கப்பட்டு ‘இந்தியா’ என்ற தேசம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, ‘தங்களுக்கும் சுதந்திரம் வேண்டும்’ என பழங்குடிகள் போராடினர்.
இதனால், 1942 ஓகஸ்ட் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஒடுக்குவதற்காக, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய ‘சிறப்பு அதிகாரச் சட்டம்’ நாட்டின் விடுதலைக்குப் பின்பு, ‘எங்களை தன்னாட்சி உரிமையுடன் வாழ அனுமதியுங்கள்’ எனக் கேட்ட வடகிழக்கு மாநில போராட்டங்களை ஒடுக்க 1958 செப்டம்பரில் தூசித் தட்டி எடுத்து ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்ட’மாக பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்திய அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த நாகா, மிசோ பழங்குடி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் 1958-ம் ஆண்டு இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இது படிப்படியாக மணிப்பூர், திரிபுரா அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் ஆகிய அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் அமுல்படுத்தப்பட்டது.
இது தவிர, வடகிழக்கு மாநிலங்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சினை எதுவென்றால், பக்கத்தில் உள்ள வங்காளத்தில் இருந்து குடியேறிக் கொண்டே இருக்கும் வங்கமக்கள் திரளாகும். இப்படிக் குடியேறிய 19 இலட்சம் வங்க மக்களுக்கு இந்தியக் குடியுரிமையும், ஓட்டுப் போடும் உரிமையும் தருவதாக பழங்குடிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 1983 பெப்ரவரி மத்தியில் அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அன்றைய பா.ஜ.க பெருந்தலைவர் வாஜ்பாய் ”அஸ்ஸாமிற்குள் அந்நிய வங்காளிகள் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அவர்களை தடுக்கவில்லை. இதுவே பஞ்சாப்பிற்குள் நுழைந்திருந்தால், மக்கள் அவர்களை கண்டந்துண்டமாக வெட்டி கொன்று போட்டிருப்பார்கள்”எனப் பேசினார்.
அடுத்த ஓரிரு நாளில், சரியாக பெப்ரவரி 18, காலையில் நெல்லியில் வன்முறை கோரத்தாண்டவம் ஆடியது. அது வங்களாத்தில் இருந்து வந்து குடியேறிய இஸ்லாமிய அகதிகளைக் குறிவைத்து அரிவாள் வெட்டு மற்றும் துப்பாக்கியால் சூடு என தொடர்ந்து ஆறு மணி நேரம் மத்திய அசாமில் நடந்தது. இந்த படுகொலையில் அலிசிங்கா, குலபதர், பசுந்தாரி, புக்தூபா பீல், புகுபாபா..உள்ளிட்ட என்று 14 கிராமங்களைச் சேர்ந்த 2,191 நபர்கள் உயிரிழந்தனர் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு. ஆனால், உயிரிழப்பு இதைவிட மிக அதிகம் என சொல்லப்படுகிறது.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் உரிமை தருகிறது. இந்த சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. சட்டத்தை எதிர்கொண்டு பல இன்னல்களை அனுபவித்த மாநிலங்கள் மணிப்பூரும், அசாமும் தான். அதனை தொடர்ந்து படிப்படியாக வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுராவுக்கும் இந்தச் சட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
இது என்னென்ன விளைவுகளை உருவாக்கியது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சரியாக 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி, மணிப்பூர் மாநிலம் மாலோம் என்ற பகுதியில் அப்பாவி பழங்குடிகள் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது தீடீரென இந்திய இராணுவத்தின் துணைப்படையான, அசாம் துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த அப்பாவி பழங்குடிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். இதில் 10 பேர் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். மாலோம் பகுதியில் ஏதோ வெடிகுண்டு சத்தம் கேட்டதன் காரணமாக ராணுவத்தினர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், வெடிகுண்டு தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் இந்திய ராணுவத்தினர் இதுவரை உறுதிபடுத்தவில்லை. அதேபோல் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய இராணுவ வீரர்களில் ஒருவர் கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை கூட நடக்கவில்லை.
இந்த சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம் மணிப்பூர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தினர் சந்தேகத்தின் பெயரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
2015ல் திரிபுராவிலும், 2018ல் மேகலாயாவிலும் இந்த சட்டம் திரும்பப்பெறப்பட்டது. ஆனால், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த சட்டம் இன்றும் அமலில் உள்ளது.
இந்த ஆயுதப்படை சிறப்பு சட்டதை எதிர்த்து மணிப்பூரில் 2000ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி தொடங்கி ஷரோம் ஷர்மிளா ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், தொடர்ந்து 16 ஆண்டுகள் நீடித்தது. மணிப்பூரில் நடந்த இதுவே உலகின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் எனப்படுகிறது.
மற்றொரு மனதை உலுக்கும் மணிப்பூர் சம்பவம் 2004ம் ஆண்டு ஜூலை 10ம் திகதி இரவு நடந்தேறியது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாமன் கம்பு கிராமத்தில் குடும்பத்துடன் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த 32 வயது பழங்குடி பெண்ணான தங்கம் மனோரமாவை இந்திய இராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் வீட்டிலிருந்து தரதரவென்று இழுத்து வெளியே கொணர்ந்து எங்கோ அழைத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தினர். அவரைத் தேடியலைந்த போது, நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஓரிடத்தில் மனோராமாவின் உடல் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக இருந்தது.
பின்னர் மருத்துவ பரிசோதனையில் மனோரமா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அறிய வந்தது. அவரது பிறப்புறுப்பு உட்பட உடலில் மொத்தம் 16 இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் இருந்தன! அன்றைக்கு இது போல சோஷியல் மீடியா இருந்திருந்தால் இந்தியாவே இதற்காக கொந்தளித்து இருக்கும்.
இந்த கொடுர சம்பவத்தை அறிந்து கொந்தளித்து போன மணிப்பூர் பெண்கள் உலகையே தங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படி ஒரு போராட்டத்தை நடத்தினர். அது தான் தங்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிக் கொண்டு ‘இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி’ என்று எழுப்பப்பட்டிருந்த பதாகைகளைத் தாங்கியபடி மணிப்பூர் பெண்கள் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகம் முன்பு நடத்திய வலிமிக்க போராட்டமாகும்.
கடைசியாக 2014 ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது தொடங்கி ஒன்றாக வாழ்ந்து வந்த மெய்தி-குக்கி இனங்களுக்கிடையே பிரிவினையை உருவாக்க திட்டமிட்டனர். மணிப்பூரின் இயற்கை சூழ் மலைப் பகுதியில் தாங்கள் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கு பழங்குடியிரராக இல்லாமை ஒரு காரணமாயிருப்பதால் தங்களையும் பழங்குடிகளாக அறிவிக்க மெய்தியின் வசதியான பிரிவினர் வைத்த கோரிக்கையை கையில் எடுத்து பா.ஜ.க பற்ற வைத்த தீ தான் இந்தக் கலவரங்கள்!
1962இலேயே எங்களை பழங்குடிகளாக பார்க்க வேண்டாம். நாங்கள் முன்னேறியவர்கள் என்று சொன்ன வரலாற்றைக் கொண்டவர்கள் தான் மெய்தி இனத்தினர். கிறிஸ்துவர்களான பழங்குடிகளை காலியாக்க பா.ஜ.க வலிந்து மெய்தியினத்தை பழங்குடியாக்க செய்த சூழ்ச்சியின் விளைவு தான் இன்றைக்கு நாம் காணும் அவலங்கள்! வெளிவந்த செய்திகள் மிகக் குறைவு வெளிவராமல் முடக்கப்பட்டவை ஏராளம், ஏராளம்! பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த சம்பவம் வெளியானதால் தற்போது உஷாராகி கண்கொத்திப் பாம்பாக எந்த உண்மைச் சம்பவங்களும் ஊடகங்களில் மட்டுமின்றி, சோஷியல் மீடியாவிலும் வெளிவராமல் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
மணிப்பூரில் கணிசமான அளவில் தமிழர்களும் உள்ளனர். சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் படையில் சேர்ந்து பர்மாவில் போராடிய தமிழர்கள் பெரும் தோல்விக்கு பிறகு நடந்து வந்து குடியேறியது மணிப்பூரில் தானாம். அங்கு மோரே என்ற இடத்தில் வசிக்கும் தமிழர்களின் தலைவரான சேகர் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். இப்போது நடக்கும் கலவரங்களில் மோரே பகுதி வாழ் தமிழர்கள் 30 பேரின் வீடுகளும் எரிக்கப்பட்டன.
இந்தப் பகுதியைப் பொறுத்த வரை நாங்கள் மிகவும் சிறுபான்மையினர்! ஆகவே நாங்கள் மெய்தி,குக்கி இரு பிரிவினரிடமும் அன்பு பாராட்டி தான் வாழ்கிறோம். எனினும், இங்குள்ள அரசியல் மற்றும் இன மோதல்கள் தமிழர்களை விட்டுவைப்பதில்லை. ஏறத்தாழ சுமார் 30,000 தமிழர்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இந்த ஆபத்து காரணமாக தற்போது 3,500 தமிழர்கள் தான் வசிக்கிறோம். 1990 களில் நாகா-குக்கி பழங்குடிகள் மோதலில் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். ஏராளமான தமிழர்கள் அதில் இறந்தனர். மிகப் பலர் படிப்படியாக வெளியேறினர்’’ என்றார்.
வட கிழக்கு மக்களை அழுத்தி அதிகாரம் செய்யாமல் அவர்களை இந்திய நீரோட்டத்தில் அன்பு, சமத்துவம், நீதி தவறாத நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றின் வழி தான் இணைக்க முடியும். அதை செய்யும் பக்குவம் ஆட்சியாளர்களுக்கு வருமா?