இந்தியா (I.N.D.I.A) என்ற அரசியல் கூட்டணியும், என்.டி.ஏ (N.D.A) என்ற அரசியல் பிணியும்!

ராஜன் குறை

சென்ற வாரம் (18.07.2023) இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான வாரம். பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் மீண்டும் பெங்களூருவில் கூடி தங்கள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி அதாவது, Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A) என்று பெயர் சூட்டியுள்ளன. அதே நாளில் பா.ஜ.க-வும் அவசரமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை உயிர்ப்பித்து, பல உதிரிக்கட்சிகளை அழைத்து கூட்டம் போட்டுள்ளது. எனவே, வரப்போகும் 2024 தேர்தலில் மோதப்போகும் இரு அணிகள் தயாராகிவிட்டன.

தேர்தல் என்பது ‘கிரிக்கெட் மாட்ச்’ அல்ல. நாம் அதில் பார்வையாளர்கள் அல்ல. தேர்தலில் மிக முக்கியமான பங்கு வாக்களிக்கும் மக்களுடையது. அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பதில் எத்தகைய தேர்வைச் செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும், பேச வேண்டும். ஊடகங்களைப் பொறுத்தவரை ஒரு சிக்கல் இருக்கிறது. அவை நடுநிலையாகப் பேச வேண்டும் என்பது ஒரு நியதியாக இருக்கிறது. இரண்டு கூட்டணிகள் குறித்தும் அவை விவாதிக்க வேண்டும். மென்மையாக ஒரு சில அம்சங்களை அவர்கள் கோணத்திற்கேற்பக் கூறினாலும், முழுமையாக ஓர் அரசியல் நிலைப்பாட்டினை அவை எடுப்பது அவர்களது பணியல்ல என்று கருதப்படுகிறது. ஆனால், வட இந்திய ஊடகங்கள் பலவும், இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள், வெளிப்படையாக பாரதீய ஜனதா கட்சி சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி சார்பாகவும் செயல்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் கூட நாளிதழ்கள் சிலவும், தொலைக்காட்சி சேனல்கள் சிலவும் வெளிப்படையாக பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவையாக உள்ளன. என்னைப்போன்ற அரசியல் விமர்சகர்கள், தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் அரசியலை ஆராய்பவர்கள், தேவையற்ற நடுநிலையை பாவிப்பது மிகவும் தீங்கானதாகும். எங்கள் சிந்தனையில், ஆய்வில் நாங்கள் உணரும் விதத்தில் உண்மையை எடுத்துரைப்பதுதான் சரியான செயல்பாடாக இருக்கும். அதனால்தான் கட்டுரையின் தலைப்பில் இந்தியா என்பது ஓர் அரசியல் கூட்டணி, என்.டி.ஏ என்பது ஓர் அரசியல் பிணி, அதாவது நோய் என்று தெளிவாக அறிவித்துள்ளேன். நான் இப்படிச் சொல்வது சரியானதா, அதற்கு ஏதாவது காரணங்களை வலுவாகச் சொல்ல முடியுமா என்றால் நிச்சயம் சொல்ல முடியும். இந்திய வரலாற்றை அறிந்த யாருக்கும் அந்த காரணங்கள் தெளிவாகப் புரியும்.

இந்தியா என்பது இந்திய மக்களின் கூட்டணி

இந்தியா என்ற தேசமே பல்வேறு மக்கள் தொகுதிகளின் கூட்டாட்சிதான். அதனால்தான் மாநிலங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் ஸ்டேட் (State) என்று அழைக்கப்படுகின்றன. அனைத்தும் இணைந்த இந்திய அரசு ஒன்றிய அரசாங்கம் (Union Government) என்று அழைக்கப்படுகிறது. அதாவது பல்வேறு மக்கள் தொகுதிகளின் அரசுகளின் கூட்டாட்சிதான் இந்தியக் குடியரசு என்பதே இந்த தேசிய உருவாக்கத்தின் அடிப்படை. இதற்கான காரணங்கள் மிகத் தெளிவாக இருந்தன. எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றை அரசால் ஆளப்பட்டதில்லை.

பெரிய நிலப்பகுதியை நிர்வகித்த பேரரசுகள் கூட பல்வேறு சிற்றரசர்களின் தொகுதியாகத்தான் செயல்பட்டன. அவ்வப்போது இந்தச் சிற்றரசுகள் வரி செலுத்த மறுப்பதும், பேரரசு அதன் மீது படையெடுப்பதும் வாடிக்கை எனலாம். வரலாறு இப்படியிருக்க, சமகாலத்தில் மொழி அடிப்படையிலும், பண்பாட்டு அடிப்படையிலும் அளப்பரிய பன்மை கொண்ட தேசம் இந்தியா என்பதால்தான் இந்தக் கூட்டாட்சிக் குடியரசு என்ற வரையறை அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றது. மாநில அரசுகளின் அதிகாரங்கள், ஒன்றிய அரசின் அதிகாரங்கள், இரண்டும் பகிர்ந்து கொள்ளும் அதிகாரங்கள் என மூன்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.

அரசியலமைப்புக்கு எதிரான இந்து ராஷ்டிர சிந்தனை

இந்த பன்மைத்துவ அரசமைப்பினை இந்து மஹாசபா, ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் ஏற்கவில்லை. அவை இந்தியா என்பது ஓர் ஒற்றை வல்லரசாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான அடிப்படை பார்ப்பனீய இந்து மதம், இந்து அடையாளம் ஆகியவைதான் என்றும் நம்பின. சாவர்க்கர் இந்துத்துவம் என்ற அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்கினார். இந்துத்துவம் என்பதன் அடிப்படை என்னவென்றால் எந்த ஒரு நபர் இந்திய நிலப்பரப்பையே புண்ணிய பூமி என்று நினைக்கிறாரோ அவரே இந்து, இந்திய குடிநபர் என்பதுதான்.

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள மெக்காவையும், கிறிஸ்துவர்கள் வாடிகனையும் புண்ணிய பூமிகளாக நினைத்தால் அவர்கள் இந்துவாக, இந்திய குடிநபர்களாக இருக்க முடியாது அல்லது இந்துக்களுடன் சம உரிமையுள்ள குடிமக்களாக இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார், கோல்வால்கர் ஆகியோரும் இந்து மத அடையாளத்தையே, ஆரிய வேதப் பண்பாட்டையே, பார்ப்பனீய சமஸ்கிருத தர்ம சாத்திரங்களையே, அதாவது சனாதன தர்மத்தையே தேசத்தின் அடிப்படை எனக் கொண்டனர். எனவே இந்த ஒற்றை பண்பாட்டின் அடிப்படையில் ஒற்றை தேசமாகவே இந்தியா இருக்க வேண்டுமென்று கருதினர். அதனால் துவக்கத்திலிருந்தே அவர்கள் இந்தியாவின் அரசியல் பிணியாக, நோய்க்கூறான ஓர் அடையாளவாதத்தை, வெறுப்பரசியலை பேசுபவர்களாக இருந்தார்கள், வளர்ந்தார்கள்.

வெறுப்பரசியலே ஆர்.எஸ்.எஸ் உயிர்மூச்சு!

இந்து பண்பாட்டின் மீது பற்று, இந்து தெய்வங்களின் மீது பக்தி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியமான இயக்க அடிப்படை என்பது சிறுபான்மை மதத்தவர், குறிப்பாக இஸ்லாமியர் மீதான வெறுப்பு. இதை நான் இளமையில் நேரடியாக அனுபவித்து அறிந்துள்ளேன். எனது பள்ளி இறுதியாண்டுகளில்தான் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தார். ஓரளவு அரசியல் செய்திகளை குமுதம், விகடன், கல்கி, துக்ளக் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் படித்துவந்த எனக்கு நெருக்கடி நிலை என்பது அதிர்ச்சியளித்தது. எனவே, 1977ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஜனதா மற்றும் சி.பி.ஐ (எம்) கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வது, அவர்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது கூடவே போவது ஆகியவற்றை செய்து வந்தேன்.

ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. ஆனால், நான் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும்போது ஜனதா அரசு கவிழ்ந்தது. அதற்கடுத்த 1980 பொதுத்தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தார். எனக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஏன் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது என்பதை அலசும்போதுதான் ஜனதா கட்சிக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகத் தொடரும் பிரச்சினை ஒரு காரணம் என்பது குறித்து பேச்சு வந்தது.

அப்போது என் கல்லூரி நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் ஒரு தன்னலமற்ற தொண்டு நிறுவனம் என்றெல்லாம் சொன்னார். அவருடன் தொடர்ந்து உரையாடியதில், அவர் என்னை ஒரு ஆர்.எஸ்.எஸ் முழுநேர பணியாளரைச் சந்திக்க வரச்சொன்னார். நானும் ஓர் ஆர்வத்தில் சரி என்று சொன்னேன். வந்தவர் மிகவும் எளிமையாகவும், உயர்ந்த லட்சியங்களைப் பேசுபவராகவும் இருந்ததால் எனக்கு முதலில் அவரை பிடித்துப் போயிற்று. ஆனால் தொடர்ந்து பேசும்போதுதான் அவர் முஸ்லிம்களைக் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது நான் வசித்த நகரத்தில் முஸ்லிம்கள் நிறைய வசித்த பகுதியின் பெயரைச் சொல்லி அங்கே அவர்கள் மக்கள் தொகை பெருகிக் கொண்டே வருவது தெரியுமா என்று கேட்டார். நான் அதனாலென்ன என்று கேட்டேன். அவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் அவர்கள் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள் என்றார். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருப்பதாகச் சொன்னார்.

அது என்னவென்றால் வளைகுடா நாடுகளில் நிலத்தடியில் உள்ள பெட்ரோல் சேகரிப்பு மெள்ள தென்கிழக்காக நகர்ந்து தமிழ்நாட்டின் நிலத்துக்கடியில் வரப்போகிறது என்றார். அப்படி எண்ணெய் வளம் தமிழ்நாட்டு நிலத்துக்கடியில் வரும்போது தமிழ்நாட்டில் முஸ்லிம் பெரும்பான்மை இருக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு வேலை செய்வதாகக் கூறினார். நல்ல மனிதராகத் தெரிந்த அவர் இப்படி ஒரு கட்டுக்கதையை ஆவேசமாகப் பேசியதும், என்னை நம்பச் சொன்னதும் எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. அப்போதுதான் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். வேறு ஏதேதோ பேசினாலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உயிர்மூச்சு வெறுப்பரசியல்தான். சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அவர்களை தங்கள் வசப்படுத்துவதுதான் அவர்கள் செயல்முறை. இன்று மணிப்பூர் வரை அதுதான் நடக்கிறது.

வன்முறை நாட்டமும், காந்தி கொலையும்

காந்தியின் உன்னத தத்துவமான அகிம்சை பலவீனமானது, ஆண்மையற்றது என்று நினைத்தார் சாவர்க்கார். விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று நினைத்தார். அவரது அந்தமான் சிறைவாசத்துக்குப் பின்னால், அவர் காந்தியின் மத நல்லிணக்கத்தையும் எதிர்த்தார். இஸ்லாமியர்களுக்கு எந்த சலுகையும் காட்டக் கூடாது என்று கருதினார். காந்தி இந்துக்களை கோழைகள் ஆக்குவதாகக் கருதினார். தேசப் பிரிவினைக்குப் பிறகு காந்தி பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய பணத்தை உடனே கொடுக்கும்படி வலியுறுத்தினார். தான் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் உரியவன் என்றார். பாகிஸ்தானுக்கு பயணம் செல்லப்போவதாகக் கூறினார். இவையெல்லாம் இந்து அடையாளவாத அமைப்புகளை மேலும் கோபப்படுத்தின.

சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களது பிரச்சாரம் காந்திக்கு எதிரான மன நிலையை உருவாக்கியது. காந்தி சாவர்க்கரின் நெருங்கிய சீடன் விநாயக் நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட காரணமாயிற்று. கோட்சே ஆர்.எஸ்.எஸ் அல்ல, இந்து மகாசபா அல்ல என்றெல்லாம் மறுப்பார்கள். ஆனால் அவர்களே மற்றொருபுறம் கோட்சேவைக் கொண்டாடுவார்கள். கோரக்பூர் மஹந்த் திக்விஜய் நாத், காந்தி கொல்லப்படுவதற்கு மூன்று தினங்கள் முன்பு தில்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காந்தியைக் கொல்ல அறைகூவல் விடுத்தார். அதனால் அவர் காந்தி கொலையுண்டபோது கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்குக் கொலையுடன் நேரடி தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். அவர் இந்து மகாசபை தலைவராக இருந்தவர்.

ராமர் பெயரால் கலவரங்கள்

விடுதலையான திஜ்விஜய் நாத் மிக முக்கியமான ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டார். அதுதான் அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்திற்குள் இரவோடு இரவாக ராமர் சிலையை கொண்டுபோய் வைக்க வகை செய்தது. அந்த சிலைகள் தானாகவே அங்கு தோன்றிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். இதனடிப்படையில் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என ஒரு பிரச்சாரத்தை நிகழ்த்தினார்கள். வி.பி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை 1989ஆம் ஆண்டு அமல்படுத்தியபோது நாடெங்கும் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் பெரும் வலிமை பெற்றது. இதை எதிர்கொள்ள பாஜக அத்வானி தலைமையில் அயோத்தியை நோக்கிய ரத யாத்திரையைத் தொடங்கியது. பின்னர் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தே விட்டது.

பத்தாண்டுகளுக்குப் பின் அயோத்திக்குச் சென்று வந்த இந்து அடையாள செயற்பாட்டாளர்கள் இருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் குஜராத்தின் கோத்ரா நிலையத்தில் தீக்கிரையானதால் குஜராத்தில் பெரும் கலவரம் மூண்டு, முஸ்லிம்கள் மீது வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. முதல்வராகப் பதவியேற்றிருந்த நரேந்திர மோடி பிரபலமடைந்தார். அந்த கலவரத்தைத் தடுக்காததற்காகக் கண்டிக்கப்படாமல், தண்டிக்கப்படாமல், மேலும் மேலும் புகழடைந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு பிரதமரானார்.

பாஜக அரசியல் என்பது என்ன?  

இந்து என்ற பெரும்பான்மை மத அடையாளத்தை சிறுபான்மையினர் மீதான வெறுப்பின் அடிப்படையில் கட்டமைத்து, அதன் மூலம் ஒற்றை தேசிய அரசை உருவாக்கி, அதில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து மீண்டும் ஒரு பார்ப்பனீய பண்பாட்டுப் பேரரசை மீட்டுருவாக்கம் செய்வதுதான் பாஜக-வின் அரசியல் லட்சியம். இதை அவர்கள் கொண்டுவரும் குடியுரிமை சீர்த்திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், அவர்கள் கட்டும் ராமர் கோயில், காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிப்பு என்பன போன்ற பல்வேறு செயல்பாடுகளை இணைத்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இந்தப் போக்குகளைத்தான் பாசிச தன்மை கொண்டவை என்று கூறுகிறோம்.

காந்தி கொலை – 1948, பாபர் மசூதி இடிப்பு – 1992, குஜராத் முஸ்லிம் படுகொலை-2002 என்று புள்ளிகளை இணைத்துப் பார்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகவே கடந்த பத்தாண்டுகளில் நடந்த அக்லுக் கொலை, பசு குண்டர்களின் தாக்குதல்கள், பன்சாரே-தபோல்கர்-கல்புர்கி-கெளரி லங்கேஷ் ஆகிய சிந்தனையாளர்கள் படுகொலை, காஷ்மீர் ராணுவ வன்கொடுமைகள், மணிப்பூர் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகியவற்றைக் காண வேண்டும். இந்தப் பெரும்பான்மைவாத அதிகாரக் குவிப்புக்குத்தான் அண்ணாவின் பெயரால் இன்றுவரை கட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி காவடி எடுக்கிறார். குறைந்தபட்சம் கட்சியின் பெயரில் இருக்கும் அண்ணா பெயரையாவது அவர் நீக்கி விடலாம்.

தொடரும் தி.மு.க-வின் லட்சியப் பயணம்

இந்து மகா சபையின் இந்து ராஷ்டிர கோஷத்திற்கு மறுப்புரையாகத்தான் “ஆரிய மாயை” என்ற தன் அரசியல் பிரகடனத்தை எழுதினார் அறிஞர் அண்ணா. தயவுசெய்து அண்ணா தி.மு.க தொண்டர்கள் அந்த நூலைப் படித்துப் பார்க்க வேண்டும். அண்ணாவின் அறிவுரைக்கு மாற்றாக ஆரிய மாயைக்கு பலியாகலாமா என்பதை பரிசீலிக்க வேண்டும். இதற்கு எதிர்முனையில் அனைத்து மாநில அரசியல் சக்திகளை, மக்கள் தொகுதிகளின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது தி.மு.க. அண்ணாவின் கருத்தியலை ஐம்பதாண்டுக் காலம் கட்டிக்காத்த கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலின் இந்தியா அரசியல் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதில் முக்கிய பணியாற்றி வருகிறார்.

மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரும் அதைக் காக்க முன்வர வேண்டும். இந்தியா அரசியல் கூட்டணிக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்தி பெரும்பான்மைவாத பாசிச எதேச்சதிகார ஆட்சியினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நடுநிலை வகிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ நேரமில்லை இது. மக்களாட்சியைக் காக்கும் போராட்டக்களம்.

Tags: