சமத்துவம் என்றொரு கனவு!

எஸ்.ராமகிருஷ்ணன்

ன்றைய அரசியல் தலைவர்கள் ஆற்றும் உரைகள் பெரிதும் பிறரால் எழுதப்படுபவை. சுயபிம்பத்தைப் பெருக்கிக் காட்டவும் புகழைத் தேடவும் அலங்காரமான சொற்களால் தயாரிக்கப்பட்டவை. சர்வதேச அளவில் இதற்கென நிறைய நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. அவர்கள் அரசியல் தலைவர்களின் முக்கிய உரைகளைத் தயாரித்து அளிக்கிறார்கள். அதற்காகச் செலவிடப்படும் பணம் மிகப் பெரியது. பொது மேடையில் எப்படிப் பேச வேண்டும், என்ன உடை அணிந்துகொள்ள வேண்டும், எங்கே பேச்சை நிறுத்த வேண்டும், எப்படிப் பாவனை செய்ய வேண்டும் என்பதற்கான ஒத்திகைகள்கூட நடைபெறுகின்றன.

அந்த உரைகளுக்குக் கைதட்டுவதற்கான ஆள்களையும் அவர்களே ஏற்பாடு செய்துதருகிறார்கள். ஆனால், அது போன்ற உரைகளில் உண்மையின் குரல் ஒலிப்பதில்லை. அவை காகித மலர்கள்போல் இருக்கின்றன. அச்சிட்டுப் படிக்கும்போது சல்லடையில் தண்ணீர் அள்ளியது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நல்ல சொற்பொழிவு என்பது கேட்பவரின் இதயத்தைத் தொட்டு, அவர்களின் சிந்தனையிலும் செயலிலும் மாற்றத்தை உருவாக்கக்கூடியது. 1963இல் வாஷிங்டன் லிங்கன் சதுக்கத்தில் இரண்டரை லட்சம் மக்களின் முன்பாக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய உரை, அது போன்றதொரு நிகரற்ற உரை.

இணையத்தின் உதவியால் இன்று அந்த உரையைக் கேட்க முடிகிறது. எழுச்சிமிக்க மக்களின் கூட்டத்தைக் காணும்போது, அது எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்பதையும் உணர முடிகிறது மார்ட்டின் லூதரின் குரல் கம்பீரமானது, வசீகரமானது. அவரது உரையை ஒரு சொற்பொழிவு என்று சொல்வதைவிடவும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் என்றே கூற வேண்டும்.

மார்ட்டின் லூதர் நிதானமாக, அழுத்தமாக நீதியின் குரலை வெளிப்படுத்துகிறார். எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்ட உரை அது. ஆனால், அதை மனதிலிருந்தே மார்ட்டின் லூதர் பேசுகிறார். அவரது குரலின் வழியே அமெரிக்க தேசத்தின் வரலாறும் கறுப்பின மக்களின் துயர வாழ்வும் போராட்டத்தின் தேவையும் அழுத்தமாக வெளிப்படுகின்றன.

விடுதலைக்கான கனவு: “நான் ஒரு கனவு காண்கிறேன்” என்கிற அவரது முழக்கம் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியது. சத்தியத்தின் ஆற்றலை உணரவைத்தது. இந்த உரையில் எட்டு முறை தனது கனவைப் பற்றி மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார்.

கனவின் பக்கங்களைப் புரட்டி அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்கிறார். உண்மையில் தனக்குள் என்றைக்கோ உருவாகி, வளர்ந்து நிற்கும் மாறாக் கனவை மக்களிடம் நினைவுபடுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்கச் சமூகத்திடம் மட்டுமின்றி இனவெறியோடு நடந்து கொள்ளும் அனைவரின் முன்பும் அவர் தனது கனவை எடுத்துச்சொல்கிறார். அது சமத்துவத்துக்கான கனவு; சமூக நீதிக்கான கனவு; அடிமைப்படுத்தப்பட்ட இனம் தன் விடுதலைக்காகக் கண்ட கனவு!

தூய அன்பின் அழைப்பு: நிறபேதம், இனபேதம் கொள்ளாமல் மனிதர்களைச் சமமாகக் கருதவும் அவர் தம் உரிமைகளைப் பெறவும் போராட்டமே வழி, தீர்வு. முடிவில்லாத போராட்டமே நீதியைப் பெற்றுத்தருகிறது என்பதை மார்ட்டின் லூதர் கிங் உணர்ந்திருக்கிறார்.

அதிகாரத்தின் அடக்குமுறைகள் பற்றி அவருக்குப் பயமில்லை. தான் காலத்தின் பிரதிநிதி என்று உணர்ந்திருப்பதை அக்குரலில் காண முடிகிறது. போராட்டத்துக்கான அறைகூவல் என்றாலும், அதில் துளிகூட வெறுப்பில்லை. மோதலுக்கான தூண்டுதல் இல்லை. தூய அன்பின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

நாம் தனித்து நடக்கவும் முடியாது. திரும்பிச் செல்லவும் முடியாது என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்வது முற்றிலும் உண்மை. போராட்டக் களத்தில் நிற்பவர்களுக்கு என்றைக்குமான ஆப்த வாசகம் அது. “அமெரிக்க மக்கள் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன உறுதிமொழியை ஒரு காசோலையாக அடையாளப்படுத்தி, அந்தக் காசோலையைப் பணமாக்குவதன் பொருட்டே, நாம் தலைநகர் நோக்கிப் படையெடுத்திருக்கிறோம். நமக்கு நீதி வழங்க வேண்டிய வங்கி, அந்தக் காசோலையை ஏற்க மறுக்கிறது” என்று மார்ட்டின் லூதர் மிக எளிமையாக, நெருக்கமாகத் தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைப்பது சிறப்பாக உள்ளது.

நீதியின் வெளிச்சம் பரவ… கறுப்பின மக்களையும் வெள்ளை இனத்தவரையும் சகோதர சகோதரிகளாகவே அவர் கருதுகிறார். ஒன்றாகக் கைகோத்து வாழ வேண்டும் என்றே வலியுறுத்துகிறார். கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான அந்தக் கூட்டத்தில், அறுபதாயிரம் வெள்ளையர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது முக்கியமானது.

“பிரிவினைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வரும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் இந்தத் தேசம் உயர்ந்து எழும்” என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னது, அந்தக் கனவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையாலேதான். இது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியதே.

மாற்றத்துக்கான கனவு மட்டுமில்லை. அந்தக் கனவை எடுத்துச்சொல்லும் சிறந்த தலைவர்களும் தேவைப்படுகிறார்கள். இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியும் பெற்றிருக்கும் உரிமைகளும், இதுபோன்று கனவை முன்னெடுத்த மனிதர்களால் உருவானவையே. அநீதியின் இருள் நம்மைச் சுற்றிச் சூழ்ந்து வருகிறது. அதற்கு எதிராக நீதியின் வெளிச்சத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். நீதியின் வெளிச்சத்தைப் படரவிடுகிறது என்பதாலே இன்றும் மார்ட்டின் லூதர் கிங்கின் உரை முக்கியமானதாகிறது.

நான் ஒரு கனவு காண்கிறேன்

மருதன்

ன்னிடம் இருப்பதிலேயே விலை மதிப்பற்றது எது? உன்னிடமிருந்து எதை எடுத்துவிட்டால் நீ வெறுமையாக மாறுவாய் என்று என்னிடம் யாராவது கேட்டால் தயங்காமல் சொல்வேன், என் கனவு. ஒரே ஒரு கனவு. நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை அதோடு சேர்ந்துதான் நானும் வளர்ந்து வருகிறேன். அதுதான் என்னை நிறைவு செய்கிறது. என் கனவுதான் நான். அல்லது, நாங்கள். ஏனெனில், என் இதயத்துக்குள் பொத்தி வைத்து நான் சுமந்துகொண்டிருப்பது மார்டின் லூதர் கிங் என்னும் தனிப்பட்ட மனிதனின் கனவல்ல. ஒட்டுமொத்தக் கறுப்பின மக்களின் நூற்றாண்டு காலப் பெருங்கனவு.

சொல்கிறேன், கேளுங்கள். அது ஒரு பெரிய நகரம். ஒரு மாலை நேரம். வீட்டிலிருந்து கிளம்புகிறேன். எனக்குப் பிடித்த பாடல் ஒன்றை மனதில் அசைபோட்டபடி நடந்து ஒரு பெரிய பூங்காவுக்குள் நுழைகிறேன். வேலைப்பாடுகள் செய்த இரும்பு இருக்கையில் முதுகைச் சாய்த்து அமர்ந்துகொண்டு, கையோடு எடுத்துச் சென்ற புத்தகத்தை நிதானமாக வாசிக்கிறேன். வானில் நட்சத்திரங்கள் தோன்றும்வரை, பறவைகள் கூடு வந்து சேரும்வரை, முதல் மழைத் துளி என்மீது விழும்வரை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.

மனம் லேசானதுபோல் இருக்கிறது. பூங்காவைவிட்டு வெளியில் வருகிறேன். அந்தப் பக்கமாகச் செல்லும் பேருந்து என்னைக் கண்டதும் வேகம் குறைந்து, என் அருகில் வந்து என்னை ஏற்றிக்கொள்கிறது. அடுத்து, எங்கே போகலாம்? நீண்ட நாட்களாகின்றன. ஒரு படம் பார்க்கலாமா? எனக்குப் பிடித்த திரையரங்குக்கு அருகில் இறங்கிக்கொள்கிறேன். புன்னகையோடு சீட்டு கிழித்து என் கையில் கொடுக்கிறார்கள். நல்ல இருக்கை ஒன்றில் அமர்கிறேன். நிதானமாக முழுப் படத்தையும் ரசிக்கிறேன்.

வெளியில் வருகிறேன். ஒரு நல்ல சட்டை எடுத்தால் என்ன? அருகிலுள்ள ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்துக்குள் நுழைகிறேன். கண்ணாடிக் கதவை மெதுவாகத் திறந்து என்னை அனுமதிக்கிறார் சீருடை அணிந்த பணியாளர் ஒருவர். கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு, துணிக்கடைக்குப் போய், எனக்குப் பிடித்த ஒரு சட்டையை எடுத்து, அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்து பார்த்து வாங்கிக்கொள்கிறேன். நன்றி, மீண்டும் வருக என்று கடைக்காரர் நட்போடு புன்னகை செய்கிறார்.

பாடலை முணுமுணுத்தபடி உற்சாகத்தோடு வெளியில் வந்து, ஓர் உணவகத்துக்குள் நுழைகிறேன். எனக்கொரு கோப்பை சுடச்சுட தேநீர் கிடைக்குமா? ஓ, இங்கே அமருங்கள் இதோ கொண்டுவருகிறேன் என்று பணியாளர் விரைகிறார். மீண்டும் புத்தகத்தை எடுத்துச் சில பக்கங்கள் படிக்கிறேன். தேநீர் வருகிறது. மெதுவாக அருந்துகிறேன். மனம் முழுக்க இனம் புரியாத மகிழ்ச்சி.

கோப்பையைக் கீழே வைக்கும்போது ஒரு குழந்தை என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்கிறது. நான் என் கையை நீட்டுகிறேன், குழந்தை நெருங்கி வந்து என் விரல்களைப் பற்றிக்கொள்கிறது. மிருதுவான அதன் வெள்ளை விரல்களை வருடிக் கொடுக்கிறேன். கனவு நிறைவடைகிறது.

ஆனால், இது மிகவும் சாதாரண ஒரு கனவல்லவா? நடப்பதும் அமர்வதும் படிப்பதும் தேநீர் குடிப்பதும் படம் பார்ப்பதும் இயல்பான நிகழ்வுகள் அல்லவா என்று நீங்கள் திகைக்கலாம். இதில் எதுவொன்றும் எனக்கும் என் மக்களுக்கும் இயல்பானவை அல்ல. ஒவ்வொன்றும் அதிசயம். ஒவ்வொன்றும் ஏக்கம். ஒவ்வொன்றும் நிறைவேறாத ஆசை.

எனக்கு விருப்பப்பட்ட ஓரிடத்தில் வீடு எடுத்துத் தங்க முடியாது. பூங்காவுக்குள் நடந்து செல்ல முடியாது. இது உன் இடமல்ல என்று பிடித்துத் தள்ளுவார்கள். பேருந்தில் என் விருப்பத்துக்கு ஏற முடியாது. உன் வண்டியில் ஏறிக்கொள் என்பார்கள். எனக்குப் பிடித்த திரைப்படத்தை எனக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து பார்க்க முடியாது. உன் இடத்துக்குப் போ என்பார்கள். என் இடம் என்பது முக்கியத்துவமற்ற இடமாக இருக்கும்.

கண்ணாடிக் கதவைத் திறந்து ஒருவரும் என்னை அனுமதிக்க மாட்டார்கள். இங்கே உனக்கென்ன வேலை என்று சீறுவார்கள். நீயாகப் போகிறாயா அல்லது பாதுகாப்பு அதிகாரியிடம் பேசட்டுமா என்று விழிகளை உருட்டுவார்கள். அப்படியே பிரிக்காமல் உடையை எடுப்பதானால் எடு. அணிந்து பார்க்க அனுமதியில்லை என்று கையிலிருந்து பிடுங்குவார்கள். தேநீர் இருக்கிறது, உனக்குக் கிடையாது என்று கைவிரிப்பார்கள்.

எனவே, நான் கனவு காண்கிறேன். அந்தக் கனவில் எனக்கான வீதி, எனக்கான இசை, எனக்கான புத்தகம், எனக்கான கவிதை, எனக்கான தேநீர், எனக்கான பறவை, எனக்கான வானம், எனக்கான நட்சத்திரம் என்று எது ஒன்றும் எனக்காகத் தனியே ஒதுக்கப்பட்டிருக்காது. காகிதம் போல் ஒருவரும் என்னைக் கசக்கி மூலையில் வீச மாட்டார்கள்.

என் கனவில் என்னால் இயல்பாக இருக்க முடியும். இயல்பாகச் சிரிக்க முடியும். இயல்பாகப் படிக்க முடியும். இயல்பாக உறங்க முடியும். ஓர் அமெரிக்கனாக, ஒரு கிறிஸ்தவனாக, ஒரு கறுப்பு மனிதனாக, ஒரு மனிதனாக, ஓர் இயல்பான உயிராக என்னால் என் கனவில் வாழ முடியும்.

எனவே, நான் கனவு காண்கிறேன். என் கனவில் வெள்ளை அமெரிக்கா கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன் நூற்றாண்டு காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும். கறுப்பு அமெரிக்கா கீழே குனிந்து வெள்ளை அமெரிக்காவின் தோளைத் தொட்டு உயர்த்தி, வா இங்கே என்று நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு வெள்ளை மனிதர் எழுந்து நின்று கறுப்புப் பெண்ணுக்குத் தன் பேருந்து இருக்கையை விட்டுக் கொடுப்பார். என் கனவில் ஒரு கறுப்பர் வெள்ளையருடன் அமர்ந்து பூங்காவில் மெல்லிய குரலில் சிரித்து உரையாடுவார். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் தேவாலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருக்கிறார்.

என் அமெரிக்கா வெள்ளையும் கறுப்புமாகப் பிரிந்திருக்காது. அது அமெரிக்காவாக மட்டும் இருக்கும். அதில் வசிப்பவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாக மட்டும் இருப்பார்கள்.

எதுவொன்றைச் செயல்படுத்த முடியுமோ அதை மட்டுமே நான் கனவு என்று அழைப்பேன். இது என் கனவு. எங்கள் கனவு. இதுவே உங்கள் கனவாகவும் மாற வேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு எங்கள் கனவைப் பகிர்ந்துகொள்ள முன் வருவீர்களா?

ஓகஸ்ட் 28: ‘நான் ஒரு கனவு காண்கிறேன்’ உரையின் 60 ஆண்டுகள் நிறைவு

Tags: