நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?

ராஜன் குறை

சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன; ஊடகங்களில் கவனம் பெற்றன. ஒரு நிகழ்வு அகில இந்திய ஊடகங்களில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு இந்தியர்களால் கொண்டாடப்பட்டது; மற்றொரு நிகழ்வு தமிழ்நாட்டு ஊடகங்களில் பகிரப்பட்டது, முற்போக்கு சிந்தனை கொண்டவர்களால் பாராட்டப்பட்டது, அரசியல் நோக்கர்களால் கொண்டாடப்பட்டது.

முதல் நிகழ்வு சந்திரயான் 3 என்று அழைக்கப்பட்டு நிலவுப் பரப்பை நோக்கி செலுத்தப்பட்ட விண்கலத்திலிருந்து, நிலவுப் பரப்பில் ஆய்வு செய்யும் தானியங்கிக் கலம் நிலவின் பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வு ஆகும்; இரண்டாவது நிகழ்வு, தமிழ்நாட்டின் 37,000 அரசுப் பள்ளிகளிலும் பதினேழு லட்சம் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலமெங்கும் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வு. இரண்டு நிகழ்வுகளுமே வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள்தாம் என்பதில் ஐயமில்லை. இரண்டுமே பாராட்டுக்கும், பெருமிதத்துக்கும் உரியவைதான்.

குறிப்பாக சந்திரயான் எனப்படும் வரிசையில் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக விண்கலங்களை அனுப்பும் திட்டங்களை எல்லாம் தலைமை தாங்கி நடத்துபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், எளிய பின்னணியிலிருந்து கல்வியின் மூலம் இந்தப் பதவிகளை அடைந்தவர்களாகவும் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமிதத்தை வழங்கியுள்ளதையும் காணலாம்.

ஆனால், இந்த இரண்டு நிகழ்வுகளையும், நிலவுப் பரப்பு ஆராய்ச்சி, காலை உணவுத் திட்டம் ஆகிய இரண்டையும் நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம், எதற்காகக் கொண்டாடுகிறோம், எத்தகைய வார்த்தைகளால் கொண்டாடுகிறோம் என்பதெல்லாம் முக்கியமானவை. அதைக் குறித்துச் சிந்தித்தால்தான் எது வரலாறு, எது நம்முடைய முக்கியமான சாதனை என்பதைக் குறித்தெல்லாம் தெளிவு பெற இயலும்.

ஒரு வேளை மகாத்மா காந்தி போன்ற ஒரு தலைவர் பிரதமராக இருந்திருந்தால் நலிவுற்ற பிரிவினரின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க காலை உணவு கொடுப்பதை வரலாற்றின் மிகப்பெரிய சாதனை என்று முதன்மைப்படுத்தி கொண்டாடி இருக்கலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் நேராகச் சென்னைக்கு வந்து அரசுப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் காலை உணவு உண்டிருக்கலாம். பின்னர் பெங்களூரு சென்று இஸ்ரோ அறிவியலாளர்களைச் சந்தித்திருக்கலாம்.

நிலவுப் பரப்பு ஆராய்ச்சி

நிலவுப் பரப்பு ஆராய்ச்சி என்பது கடந்த அறுபதாண்டுக் காலமாக பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வரக்கூடியது. இப்போது நாம் கணினி சார்ந்து தரவுகளையும், காணொலிகளையும், ஒளிப்பதிவுகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சுலபமாக அனுப்ப இயல்வதால், தானியங்கி விண்கலங்கள் மூலம் விண்வெளி ஆராய்ச்சி கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியா இத்தகைய தானியங்கி செயற்கைக் கோள்களை அல்லது பயணிகளை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பும் திட்டங்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதற்கு முன்னம் இருந்தே செயற்கைக் கோள்களை பூமியைச் சுற்றிய பாதையில் ஏவுகணைகள் மூலம் நிலைநிறுத்துவதில் கணிசமான திறன் பெற்று, குறைந்த செலவில் அதைச் செய்வதால் பல்வேறு நாடுகளுடனும் வணிக ரீதியான ஒப்பந்தங்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த இடத்தில் நாம் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் உள்ள மெல்லிய  இடைவெளியையும் கணக்கில் கொள்ள வேண்டும். அறிவியல் என்பது இயற்கையின் பல்வேறு அம்சங்களைக் குறித்த கோட்பாட்டு அறிவினை உருவாக்குவது. தொடர்ந்த ஆய்வுகள் மூலம் பல்வேறு புதிய கூறுகளை, சாத்தியங்களைக் கண்டறிவது. தொழில்நுட்பம் என்பது கருவிகளை உருவாக்கி இயக்குவது. கருவிகளின் வடிவமைப்பிலும், செயல்திறனிலும் தொடர்ந்து முன்னேற்றம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இவை தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதாகவே கருதப்படும்.

சந்திரயான் 3 வெற்றி பெற்றதை நாம் பாராட்டுகிறோம், கொண்டாடுகிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் உயர் தொழில்நுட்பத்தை, நுண் தொழில்நுட்பத்தைத் திறம்பட கையாள்வதில் நம் திறனை நிரூபித்துள்ளோம் என்பதாகும். நிலவில் தானியங்கியை தரையிறக்கிய நாலாவது நாடு நாம் என்பது நமக்கு உற்சாகமளிக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் நாமும் இந்த சாதனையை செய்துள்ளோம் என்பதால் மகிழ்கிறோம்.

மூட நம்பிக்கையும், தேசிய பெருமிதங்களும்

ஆனால், சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் அன்று ஊடகங்களில் பரவிய காட்சிகள் பலவும் அதிர்ச்சியளித்தன. நாட்டின் பல பகுதிகளிலும், ஏன் அமெரிக்காவில் கூட, இந்தியர்கள் இந்த முயற்சியின் வெற்றிக்காக யாகங்கள் செய்தார்கள். பூஜைகள் செய்தார்கள், பிரார்த்தனைகள் செய்தார்கள். ஒரு அறிவியல் தொழில்நுட்பச் செயல்பாடு வெற்றி பெற இதுபோன்ற மூட நம்பிக்கை செயல்பாடுகளில் மக்கள் ஈடுபடுவது அறிவியலையே கேலிக் கூத்தாக்குகிறது.

அறிவியல் என்பது இறை நம்பிக்கையை மறுக்க வேண்டியதில்லை. அண்டவெளியின் புதிர்கள் எல்லையற்று நீளும்போது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் இயற்கை சக்தி இருக்கிறது, அதுவே மனிதர்களையும் இயக்குகிறது என அறிவியலாளர்களும் நினைக்கலாம். பல அறிவியலாளர்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதில் தவறில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது போல ஒரு மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியை எண்ணுவதிலும், அதை ஏதோ ஒரு வடிவத்தில் வழிபடுவதும் கூட இயல்பானதுதான்.

ஆனால், தேர்வில் வெற்றி பெற தேங்காய் உடைப்பதாலும், யாகங்கள் செய்து வேண்டுவதாலும் அந்தச் சக்தி நம் செயல்களில் வெற்றி தேடித்தரும் என்று நினைப்பது அப்பட்டமான மூட நம்பிக்கை. இறை நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு. அறிவியல் மனோபாவம் என்பது நமது கட்புலனுக்கு உட்பட்ட இயற்கையை ஆராய்வது. அதற்கும் வெற்றிக்காக தேங்காய் உடைக்கும், யாகம் செய்யும் மனோபாவத்துக்கும் தொடர்பு கிடையாது. வெற்றி பெற்ற பின் நன்றியுணர்வில் காணிக்கை செலுத்துவது கூட இறைவழிபாடு என நினைக்கலாம். ஆனால், என் செயல்களில் வெற்றி கொடு என நெருப்பிலே நெய்யை ஊற்றி யாகம் வளர்ப்பது பண்படாத, முதிர்ச்சியற்ற மானுட செயலாகும். பெரியாரையும், அண்ணாவையும் புரிந்துகொண்டவர்கள் இந்த மூடநம்பிக்கை செயல்களைச் செய்ய மாட்டார்கள். அதுதான் பகுத்தறிவு.

இரண்டாவது கட்டுக்கடங்காத தேசிய பெருமிதம். இந்தியா நிலவை வெற்றிகொண்டு விட்டது, அமெரிக்கா வாயைப் பிளக்கிறது, ரஷ்யா தோற்றோடியது, சீனா பிரமிக்கிறது என்றெல்லாம் கற்பனையை ஓடவிட்டு புளங்காகிதம் அடைவது. எப்படி யாகம் செய்வதால் கடவுள் சந்திரயானை செய்து தரவில்லையோ, அதேபோலத்தான் இந்த ஒட்டுமொத்த தேசிய பெருமிதத்துக்கும் அறிவியல் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் தொடர்பு கிடையாது.

ஒன்றிய அரசு நிதி ஒதுக்கித் தருவதுடன் அரசின் பணி முடிந்துவிட்டது. இந்த இஸ்ரோவை உருவாக்கியது, ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வளர்த்தது, கணினி தொழில்நுட்பத்தை கால்கொள்ள செய்தது, சந்திரயான், மங்கள்யான் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது என இந்திய அரசு தொடர்ந்து இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாகத்தான் உள்ளது. அப்படித்தான் இருக்க வேண்டும். அது எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தவிர்க்கவியலாதது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மன்மோகன் சிங் ஆட்சியில் இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறும்போது இந்த தேசியப் பெருமிதம் எல்லை மீறிய பிதற்றலாக, கூச்சலாக மாறியதில்லை. இப்போது பாஜக ஆட்சியில் எது நடந்தாலும் அதை தேசபக்தி கூச்சலாக மாற்ற அக்கட்சி ஊடகங்களையும், தங்கள் சமூக வலைதள அணிகளையும் தூண்டுகிறது. பிரதமரின் தனிப்பட்ட சாதனையாக இதைக் காட்டவும் தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. அவரும் மூட நம்பிக்கையாளர்களுக்கு அனுசரணையாக நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிடுகிறார்.

காலை உணவுத் திட்டம் என்ற புதிய வரலாற்று சகாப்தம்

மாநிலமெங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவை வழங்குவது என்பது அரசு ஏதோ நிதி ஒதுக்கும் சங்கதியல்ல. இது போன்ற ஒரு திட்ட த்தை செயல்படுத்த மிகப்பெரிய அரசியல் விருப்புறுதி (Political will) தேவை. ஏனென்றால், இது ஒருமுறை நிகழும் காரியமல்ல. இந்தத் திட்டத்தை துவங்கிவிட்டால் அதை நாள்தோறும் தொடர்ந்து நடத்திக் காண்பிக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கானோரின் ஈடுபாடும், உழைப்பும் தேவை.

இந்தத் திட்டத்துக்கும் ஒரு முன் வரலாறு உண்டு. அதை அரசே முன்வந்து சுட்டிக்காட்டுகிறது. நீதிக்கட்சி ஆட்சியிலே சென்னையில் தொடங்கிய மதிய உணவு, கல்விக் கண் தந்த காமராஜர் காலத்தில் செயல்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலே விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம் ஒரு திருப்புமுனை. ஏனெனில் இது அனைத்து அரசுப் பள்ளிகளையும் உள்ளடக்கி, அந்தந்த பள்ளிகளிலேயே சத்துணவு கூடங்களை அமைத்து, பணியாளர்களை நியமித்து உணவு வழங்கியது. அதைத் தொடர்ந்து திராவிட நவயுக சிற்பி கலைஞர் சத்துணவை மேம்படுத்தினார்.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சிதான் என்றாலும் முற்றிலும் புதியதொரு சகாப்தம் காலை உணவுத் திட்டம். தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் செயல்படுத்த முயன்ற காலை உணவுத் திட்டத்தை அரசே முன்வந்து அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வழங்குவது ஒரு துணிகர முன்னெடுப்பு என்றால் மிகையாகாது. முதல்வர் ஸ்டாலினின் அரசியல் விருப்புறுதி இந்தத் திட்டத்தின் அச்சாரமாக விளங்கியுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி. திராவிட மாடல் தொடர்ந்து இந்தியாவுக்கு வழிகாட்டும் என்பதற்கான சான்று.

மனித வளமே மானுட முன்னேற்றம்!  

காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர் வருகை கூடியுள்ளது. இடைநிற்றல் என்பது குறையும். கல்வியில் ஆர்வமும், மேம்பாடும் நிகழும். எளிய மக்களுக்குக் கல்வி சென்று சேரும்போதுதான் ஒட்டுமொத்த சமூகத்தின் அறிதல் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவை மேம்படும். அதுதான் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும்.

நிலவின் பரப்பில் நாம் காணக்கூடிய எந்த ஒரு கனிமமோ, பயனுள்ள பொருளோ காலப்போக்கில் மானுடர் வாழ்வை மேம்படுத்த உதவலாம். அது நீண்டகால சாத்தியம். ஆனால் ஏற்கனவே மானுடம் உருவாக்கியுள்ள வளங்கள் இன்னும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்னும்போது மேலும், மேலும் வளர்ச்சியடைவது என்பதன் பொருள் என்ன?

இங்கேதான் வரலாறு என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. வரலாறு என்பது யாரோ சிலர் செம்மாந்து வாழ, பலர் தங்கள் உழைப்பையும், வாழ்வையும் செலவிடுவது அல்ல. அது பண்டைய கால அடிமைச் சமூகம். கையிலும் காலிலும் ஆயிரக்கணக்கானோர் விலங்கிடப்பட்டு, உழைத்து ஓய்ந்து மாய வேண்டும், அந்த உழைப்பின் பலன்களை சீமான்கள் சிலர் அனுபவிக்க வேண்டும் என்பது மானுடத்தின் முதிரா பருவம்.

அதிலிருந்து விடுதலை பெற்று, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புதிய கோட்பாடுகளை உருவாக்கி, மக்களாட்சி என்பது மக்களே தங்களை ஆண்டுகொள்வது என்று சிந்திக்கும் நிலைக்கு வந்ததைத்தான் நாம் வரலாறு என்கிறோம். அந்த வரலாற்றின் லட்சியம்  மானுடத்தின் ஒட்டு மொத்த வளங்களும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு, வளர்ச்சி என்பது அனைவரது வளர்ச்சியாகவும் மாறுவதுதான்.

இமயத்தில் ஏறி விட்டோம், ஆழ்கடல் பரப்பை அளந்துவிட்டோம், விண்ணிலே பயணம் செய்கிறோம், நிலவுப் பரப்பில் கால்பதித்துவிட்டோம் என்பதெல்லாம் மானுடரின் திறனுக்கு அடையாளமாகலாம். ஆனால், மானுடரின் பண்பாட்டு வளர்ச்சி என்பது அனைத்து மானுடரின் மேம்பாடு என்பதேயாகும். ‘வெள்ளிப் பனி மலையின் மீது உலாவுவோம்’ என்று பாடிய கவிஞன்தான் ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்றும், ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!’ என்றும் பாடினான். ஒன்றுக்காக மற்றொன்று காத்திருக்க வேண்டும் என்பதில்லை. ஏழ்மை முற்றிலும் நீங்கிய பின்புதான் விண்வெளிக்குப் பயணிக்க வேண்டும் என்று கூறவில்லை.

ஆனால் நாம் வரலாற்றின் முன்னகர்வு, தேசிய வாழ்வின் முன்னகர்வு, முன்னேற்றம் என்று எதனைக் கொண்டாடுகிறோம், எதனால் சிலிர்ப்படைகிறோம், எதனால் பெருமிதம் கொள்கிறோம் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். நம்முடைய மானுட உணர்வு எத்தகையது என்பதை நாமே புரிந்துகொள்ளும் தருணம் அதுதான்.

அந்த வகையில் நான் பெருமிதம் கொண்ட காட்சி நமது முதல்வர் மாணவர்களோடு அமர்ந்து காலை உணவை உண்டு அந்த மகத்தான திட்ட த்தை தொடங்கி வைத்த காட்சிதான். அதுதான் என் கண்களில் நீர்த்திரையிட காரணமானது. அதுதான் நான் தமிழன், இந்தியன் என்று பெருமிதம் கொள்ளச் செய்தது.மானுடனாக மனம் விம்மச் செய்தது.

நிலவின் பரப்பில் விண்கலம் இறங்கியதில் நான் மகிழ்ந்தேன். அதற்காக நம் அறிவியலாளர்களை மனமார பாராட்டுவேன். ஆனால், இஸ்ரோ அறிவியலாளர், சந்திரயான் 3 திட்ட இயக்குநர், வீரமுத்துவேல் போல ஆயிரம் எதிர்கால சாதனையாளர்கள் இன்று காலை உணவை உண்பதைக் காண்கிறேன். அதுவே வரலாற்றின் மகத்தான அசைவாக என் கண்களுக்குத் தெரிகிறது.

வெல்க காலை உணவுத் திட்டம்! வெல்க முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசியல் விருப்புறுதி! மக்கி மண்ணாகட்டும் மூட நம்பிக்கை கூடாரங்கள்! வளரட்டும் உண்மை அறிவியல் கண்ணோட்டம்!  முன்னேறட்டும் திராவிடம் கழகம் காட்டும் நற்பாதையில்!  

Tags: