பன்மைத்துவ இந்தியாவா? ‘பார்ப்பன’ பாரதமா?

-ச.அருணாசலம்

காந்தி, நேரு, அம்பேத்கரால் கட்டமைக்கப்பட்ட நவீன இந்தியாவை சிதைத்து சின்னாபின்னமாக்கி, பண்டைய சாதி ஏற்றத் தாழ்வுகளை சாத்தியப்படுத்தும் சனாதன இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியே பாரதம் என்ற பெயர் மாற்றம். ஆனால், இந்தப் பெயர் மாற்றமும், அரசியல் சட்ட திருத்தமும் மிகப் பெரும் செலவைக் கொண்டதாகும்…!

எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று அலையும் வானரம் போல் மோடி அரசு ஜி 20 மாநாட்டு அழைப்பிதழில் இந்தியக் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரதக் குடியரசு தலைவர் (President of India என்பதற்கு பதிலாக President of Bharat) என ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இந்தக் கோணல் புத்திக்காரர்களுக்கு ‘இந்தியா’ என்ற சொல்லாடல் மீது ஏன் இந்த திடீர் வெறுப்பு.? எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (Indian National Developmental Inclusive Alliance – I.N.D.I.A) கூட்டணியின் வளர்ச்சி கண்டு ஆடிப் போயிருக்கும் மோடி கும்பல், இந்தியா என்பது பிரிட்டிஷார் நமது நாட்டிற்கு அளித்த பெயர், பாரதம் என்பதே நமது தொன்மையான பெயர், எனவே இனிமேல் இந்தியா பாரதம் என்றே அழைக்கப்படும் என்று  தமக்கே உரித்தான அரைவேக்காட்டு வியாக்கியானங்களை பரப்பி வருகின்றனர்.

இந்த பெயர் மாற்றத்தை சட்டபூர்வமாக்கவே நாடாளுமன்றத்தின் விசேஷ கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று கதையளக்கின்றனர். உண்மையில் இந்தியா என்ற பெயரை சங்கிகளால் நீக்க முடியுமா? அரசியல் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது பிரிவு , ”இந்தியா அதாவது பாரதம்  என்பது மாநிலங்களின் ஒன்றியம்” ஆகும் எனக்கூறுகிறது. அதே போன்று பிரிவு 52 இந்திய நாட்டின் குடியரசு தலைவர் பற்றியும் பேசுகிறது.  There shall be a President of India என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் அனைத்து ஆவணங்களிலும் President of India என்றே இருக்க வேண்டும் என அறுதியிட்டு கூறியுள்ளது. இந்தி மொழியில் பாரத் கா ராஷ்டிரபதி  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரத் கா ஏக் ராஷ்டிரபதி ஹோகா என்று இந்தி மொழி அரசியல் சாசனம் கூறுகிறது.

ஆங்கில மொழியில் வெளிவரும் ஆவணங்கள் அனைத்திலும் பிரசிடென்ட் ஆப் இந்தியா என்றே குறிப்பிடப்பட வேண்டும் , இந்தி மொழியில் வெளிவரும் ஆவணங்களில் அச்சொற்றொடர் பாரத் கா ராஷ்டிரபதி என குறிப்பிடப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. ஆனால் இந்த அழைப்பிதழ் ஆங்கிலத்தில்  பிரசிடென்ட் ஆப் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இது ஒரு மோசடியான, அதிகார மீறல் என முன்னாள் குடியரசு தலைவரின் செயலர் எஸ்.என். சாகு குறிப்பிடுகிறார்.

இந்தியா என்றும் பாரத் (பாரதம்) என்றும் இரு பெயர்கள் ஏன் வந்தது?

இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1949ம் வருடம், செப்டம்பர் 17ல், ஒன்றியத்தின் பெயரும் அதன் பரப்பும் (Name and territory of the Union) பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்தியா என்றோ இந்துஸ்தான் என்றோ பெயரிடுவதற்கு வட நாட்டிலுள்ள தலைவர்கள், குறிப்பாக ஹர் கோவிந் பந்த், ஹரி விஷ்ணு காமத், சேத் கோவிந்த தாஸ் போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரத் என்றே இருக்க வேண்டும் என வாதிட்டனர். இந்தியா என அழைப்பது ஒரு அவமானம் என்று இந்த தலைவர்கள் வாதிட்டனர் .

ஆனால், இறுதியில் ஒரு சமரச ஏற்பாடகவே இந்தியா, அதாவது பாரதம் என்ற சொற்றொடர் ஏற்படுத்தப்பட்டது. ஆக, இந்தியா பிறந்த பொழுதே அதன் தன்மை பற்றி இருவேறு கண்ணோட்டங்கள் இருந்தன என்பதை நாம் மறக்கலாகாது.

உண்மையில் பாரத் அல்லது பாரத்வர்ஷா எனும் பொழுது எந்தப்பகுதி குறிப்பிடப்படுகிறது. புராண இதிகாசங்களில் குறிப்பாக மகாபாரதத்தில் பாரதம் என்ற நிலப்பகுதி அல்லது “நாடு” வடக்கே பனிசூழ் மலைப் பகுதியையும் தெற்கே கடல் எல்லையையும் கொண்டதாக வருணிக்கப்படுகிறது. ஆனால், சிந்து வெளிப் பகுதியில் குடியேறிய ஆரியர்கள் அங்கிருந்த பழங்குடிகளின் வாழ்பகுதியான சிந்து சமவெளியை ஆக்கிரமித்து, தங்களை சப்த சிந்துக்கள் என்று கூறிக்கொண்டனர் . இவர்களது வாழ்விடம் சிந்து மற்றும் சிந்து (Sindhu and Sindhu)  என அறியப்பட்டது என்பதை சாவர்க்கர் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த எல்லைகள் பின்னாளில் வடக்கே சிந்து நதியும், தெற்கே இந்திய சமுத்திரமும் கொண்டதாக விரிவுபடுத்தி எழுதப்பட்டன.

இந்திய நாகரீகம் பற்றிய பாஜகவின் பார்வை பார்ப்பனியத் தன்மை கொண்டது. இது இந்து மதத்தின் சனாதன மரபுகளை நிலை நிறுத்த விரும்புகிறது. கிரேக்கர்கள் மற்றும் ஹுன்களுடனான இந்த மண்ணின் தொடர்பு புறக்கணிக்கப்படுகிறது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் வருகை சனாதனத்தின் மீதான படையெடுப்பாக பார்க்கப்படுகிறது. மகாத்மா காந்தி,  ஜவஹர்லால் நேரு ஆகியோர் கட்டமைத்த நவீன இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும் நோக்கமே பாரதம் எனும் பெயர் மாற்றமாகும்.

சனாதனக் சட்டங்கள் ஆட்சி செய்த கடந்த காலத்தை மீட்டெடுக்க துடிக்கிறார்கள்!  இந்துத்துவர்களின் பார்வையில், சார்வாகர், புத்தர், மகாவீர்,  பக்தி-சூஃபி ஆகியோரால் பங்களிப்பு செய்யப்பட்ட சிறந்த இந்திய பண்பாட்டு விழுமியங்களுக்கு கூட இடமில்லை. இந்திய நாகரிகத்தின் உண்மையான பன்முகத்தன்மை இல்லாதொழிக்கவே பாரத் பெயர் மாற்றம்.

ஆனால் இந்த “சிந்து நதி” பிராகிருத மொழியிலும், பாரசீக மொழியிலும் இந்து நதி என்றே அறியப்பட்டது. கி.மு. 1700 வாக்கில் சிந்து சமவெளியில் அலைஅலையாய் வந்த ஆரிய வரவு கங்கை நதி சமவெளியை அடைய மேலும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. அந்த காலகட்டத்தில் இன்று அறியப்படும் இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பகுதியில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர் .

இவ்வாறு வேதவழி வந்து தங்களது ஆஷாட பூசைகளாலும், சடங்குகளாலும் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வந்த திராவிடக் குடிகளை அழித்து நால்வர்ண கோட்பாட்டை முன்னெடுத்து தங்களது கலாச்சார ஆதிக்கத்தை நிலை நாட்டினர் .

இதை எதிர்த்து தான் கி.மு. 600 வாக்கில் கௌதம புத்தர் புரட்சிக் கொடி ஏற்றினார். வைதீக மதங்களின் போலித் தனத்தையும், அறிவு மோசடியையும் அம்பலப்படுத்தினார். புத்தமதமும் சர்வ கலாசாலைகளும் பெரிதும் செழித்து நாடெங்கும் வளர்ந்தன.

புத்தர் புகழ் பரப்பிய அசோக சக்கரவர்த்தி

இந்தியாவில் மௌரியர்களின் பேரரசும், தெற்கே ஆந்திர அரசும் தென்கோடியில் பல்லவர்களின் ஆட்சியும் நடந்தது. இந்தியா முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து மாமன்னன் அசோகன் காலத்தில் (கி.மு. 268-226) பாடலிபுத்திரம் அசோக சாம்ராஜ்ய இயத்தின் தலைநகராக திகழ்ந்தது. தோத்திரங்கள் சொல்லுவதும், மந்திரங்களை உச்சரிப்பதும் பூஜைகள் சடங்குகள் செய்வதும் தருமம் அல்லவென்றும், நற்செயல்கள் புரிந்து சமுதாயத்தை உயர்நிலைக்கு கொண்டுசெல்வதே தரும்ம் என்று அசோகர் கருதியதால் நாடெங்கிலும் சாலைகளும், சோலைகளும்,குளங்களும் வைத்திய கூடங்களும், பள்ளிகளும், நிறுவப்பட்டன. பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தனிப்பள்ளிகள் உருவாயின. உலகத் தரம் வாய்ந்த நான்கு கலாசாலைகள் (தட்சசீலம், வட மதுரை, உஜ்ஐயினி மற்றும் நாளந்தா) நிறுவப்பட்டு
அறிவொளி படர வழிவகை செய்தனர்.

வரலாற்றின் வழி நெடுகிலும், இந்திய உபகண்டம் பல்வேறு சாம்ராஜ்ஜியங்களை கண்டும் கடந்தும் வந்துள்ளது. வடக்கே அசோகரை தொடர்ந்து குஷாணர்களும்,பிறகு குப்தர்களும், பிறகு ஹூனர்களும் தெற்கில் ஆந்திர பேர்ரசும், அதற்கும் கீழ் பல்லவப் பேரரசும், அதன்பின் சோழ பேரரசும் பாண்டிய மன்னர்களும் கடல்கடந்து பரவி தங்கள் மேலான வணிகத்தை மட்டுமின்றி, கலாச்சார விதைகளையும் மேற்கிலும் கீழை நாடுகளிலும் தூவினர் .

ஆனால், பல்வேறு பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் வளர்த்தெடுத்து பிறநாடுகளிலும் பரவ வழி செய்த இவ்வரசுகள் இந்தியத் திருநாடு முழுவதிற்கும் தாமே மூலம் என்றும், தமது வைதீக கோட்பாடுகளே நிலைத்தவை என்று பெருமை பேசியதில்லை.

பல்வேறு அரசுகளாக இருந்த இந்த தேசத்தில், அரசர்களின் துணையுடன்  வைதீக சடங்குகள் வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் அடிப்படையில் ஆட்சி முறையையும், சமூக ஒழுங்கமைப்பையும் நிலைநாட்ட பிராமணர்கள் வெகுவாக முயன்றனர்.

இன்று பாரதம், நாளை அகண்ட பாரதம்.

சாதிக் கொடுமை,  அர்த்தமற்ற சடங்குகள் மற்றும் பூசைகளுக்கெதிராக தோன்றிய புத்தமதம் குப்தர்கள் காலத்தில் பிராமணீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு உருத்தெரியாமல் இந்தியாவில் கரைந்தது. புத்தரும், போதி சத்துவர்களும் இந்து கடவுள் அவதாரங்களாக சுருக்கப்பட்டனர். விகாரங்கள் கோவில்களாயின , விக்கிரங்கள் வடிவில் புத்தர் சிலையானார்.

முகலாயர் காலத்தில் இந்தியா ஒரே குடையின் கீழ் வந்த போதும் , அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் பல்வேறு கலைகளும், கலாச்சாரங்களும் கலந்து செழித்த பிரதேசமாக இந்தியா மாறிய போதும் நான்கு வர்ண பாகுபாடு இந்தியர்களின் சமூகத்தில் ஆழமாக கோலோச்சி வந்த நிலை மறுப்பதற்கில்லை.

ஆங்கிலேயர்கள் , முகமதியர்கள் கிறித்தவர்கள், பார்சி மற்றும் சீக்கியர் அல்லாதோர் அனைவரையும் ” இந்துக்கள்” என்று வகைப் படுத்தியது இந்து மதத்தவர்களின் எண்ணிக்கையை கூட்ட உதவினாலும் , சண்மதங்களின் சங்கமித்திலும் வேதவழி வந்த சனாதனமே அக்கூட்டத்திற்கு தலையாகவும், மூளையாகவும் செயல்பட்டது, செயல்படுகிறது. இவர்களின் மூல அரசன் பரத வமிசத்தை சேர்ந்தவன், பரதவமிசம் இன்று அழிந்து விட்டாலும், வேதவழியில் வரணாசிரம முறையில் வாழ்வு முறைகளை நடத்துவதே பரதவர்ஷத்தின் அடிப்படைக் கோட்பாடு.

முகலாயர் காலத்திலும் அதற்குப்பின் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் இந்துஸ்தான் என்று அறியப்பட்ட இந்த நாடு அடிமைத் தளைகளையும், பிற்போக்கு கோட்பாடுகளையும் ஒதுக்கிவிட்டு, ஓர் புதிய ஜனநாயக நாடாக அனைத்து மக்களுக்கும் சாதி மத வேறுபாடின்றி சமமான வாய்ப்புகளை கொடுக்கும் நாடாக உதிக்கும் பொழுது, அந்நாட்டிற்கு பெயர் பாரத் – பரத முனியையும்,பரத வமிசத்தையும் நால்வர்ணத்தை நிலைநாட்டும் வேத வழிவந்த பரத நாடாக – இருக்க வேண்டும் என்று வாதிட்டவர்களுடன் சமரசம் செய்து கொண்டே இந்தியா என்ற பாரதம் என்று நாமகரணம் சூட்டப்பட்டது.

பாரத் என்று குறிப்பிடுவதால் பரந்து விரிந்த இந்த நாட்டில் வேதங்களை தவிர்த்து, மற்ற மறை நூல்களையும், பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் தூக்கிப் பிடிக்க தயங்கினரா அல்லது அவையெல்லாம் வேதங்களுக்கு கீழான படிநிலை கொண்டவை என எண்ணினார்களா ?

புதிதாக பிறக்கும் நாட்டிற்கு நாமகரணம் சூட்டுவதில் உள்ள இரு கண்ணோட்டங்களில் இந்தியா என்பதே அனைத்து பகுதியினரையும் அனைத்து பிரதேசங்களையும் (பகுதிகளையும்) பரந்துபட்ட வேறுபாடு நிறைந்த பண்பாட்டு கலாச்சாரங்களை பிரதிநிதிப்படுத்தும் சொல் என்பதில் ஐயமில்லை. மாறாக பாரத் என்பது வட இந்தியாவின் ஒரு பகுதியை, ஒரு இனத்தவரை, நால் வர்ணத்தை தூக்கிப்பிடிக்கும் வேத வாழ்வு முறையை பெருமைப்படுத்தும் சொல்.

பாரத் என்று அழைத்து புளகாங்கிதம் அடைபவர்களும் சனாதன தர்மத்தின் மகிமை பற்றி வாய்கிழிய பேசுபவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூக கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களே. பன்மைத்துவ இந்தியாவின் பகைவர்களே!

Tags: