சிலியின் சிங்கம் சால்வடோர் அலெண்டே!

-க.ஆனந்தன்

1973 செப்டம்பர் 11ந் திகதி சிலியின் ஜனாதிபதி சால்வடோர் அலெண்டே (Salvador Guillermo Allende Gossens) படுகொலை செய்யப்பட்ட நாள். அவர் கொல்லப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. அலெண்டே கொலையில், சிலியின் பழைய ஆளும் வர்க்கங்கள், இராணுவ சர்வாதிகாரி பினோசெட் (Pinochet) ஆகியோரைத் தவிர மிக முக்கிய  பங்கு அமெரிக்க அரசுக்கு, குறிப்பாக அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் அதிபர் நிக்சன் ஆகியோருக்கும், சி.ஐ.ஏவுக்கும் உண்டு.  இந்த படுகொலையைப் புரிந்து கொள்வதென்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழமாக்கும்.

1970க்கு முன் சிலி சமூகம்

சிலி சமூகம் பெரும்பாலும், நிலக்கிழார்கள் மற்றும் மதகுருமார்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏழ்மை மிக அதிகமான நாடுகளில் ஒரு நாடு. நாட்டின் அரசியலிலும் இந்த உயர்  வர்க்கத்தினர் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.  அவர்களை எதிர்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக 1930களில் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இருப்பினும் 1940களுக்குப் பின் மீண்டும் பழமைவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். 1960களில் சிலி நாட்டின் பொருளாதாரம் வேகமிழந்து பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. தொழிலாளர்கள், ஏழை மக்கள் ஆகியோர் பங்குபெற்ற பெரும் போராட்டங்கள் வெடித்தன. 1958 இல் தோல்வியை சந்தித்த அலெண்டே, 1970 செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 

அலெண்டேவை பதவியேற்க விடாமல் தடுக்க நிக்சன் முயற்சி

தேர்தலில் வெற்றி பெற்றாலும், சிலி சட்டப்படி அவரது வெற்றியை சிலி நாடாளுமன்றம் உறுதி செய்யவேண்டும். அலெண்டேவை பதவியேற்க விடக்கூடாது என்று வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் நிக்சன் சிலி தூதருக்கு தனது பத்திரிக்கை செயலர் வாரன் சீகர் மூலம் தெரிவித்த டேப்கள் பின்னர் வெளியாகின.  முதலில் அவரைக் கடத்த முயன்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஆயுதப் பிரயோகத்தில், சிலி இராணுவத்தின் கமாண்டர் இன் சீப் (Commander in Chief) ஆக  இருந்த ஜெனரல் ரீனி ஸ்நைடர் கொல்லப்பட்டார். பீட்டர்கார்ன்புல் எழுதிய ‘‘பினோசெட் பைல்’’ சிலி ஜனநாயகத்தை வீழ்த்தியதில் அமெரிக்கா ஆற்றிய பங்கை பல கோணங் களில் ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதில், அலெண்டே மானிடா அரண்மனையில் கால் வைப்பதற்கு முன்பே, நிக்சன் சி.ஐ.ஏக்கு  போட்ட உத்தரவில், ‘‘உங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு சிலியின் பொருளாதாரத்தை கதறவிடுங்கள்’’ என்று கூறியது பதிவாகியுள்ளது.

அலண்டே ஆட்சியின் சாதனைகள்

சால்வடோர் அலெண்டேவின் இடதுசாரி ஆட்சியின் முதல் ஆண்டு முதலே ஏராளமான புரட்சிகரமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. 1968 ஆம் ஆண்டு இருந்த ஊதியத்தோடு ஒப்பிடும் போது சுரங்கத் தொழிலாளர்களுக்கு 50% வரை ஊதியம் உயர்ந்தது. உற்பத்தித் துறை ஊழியர்களின் ஊதியம் 25%  உயர்ந்தது. நிலச்சீர்திருத்தம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு நிலக்குவியல்கள் உடை க்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  முதல் ஆண்டிலேயே 150 நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. வேலையின்மை விகிதம் சிலி வரலாற்றில் இல்லாத அளவான 3.5% என்றளவிற்கு குறைந்தது. ஒவ்வொரு தொழிலகத்திலும் மேல்நிலை நிர்வாகிகளுக்கும், கீழ்மட்ட தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள ஊதியம் வேறுபாடு குறைக்கப்பட்டது. இவை தவிர மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்றவற்றில் அரசின் முதலீடுகள் அதிகரித்ததால், மக்களின் செலவு குறைந்ததால் மக்களின் உண்மை ஊதியம் அதிகரித்தது. இவற்றின் காரணமாக அதுவரை மிக அதிகமாக இருந்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

ஒரு நாட்டின் வளத்தின் சமனின்மை, வருவாயில் சமனின்மை, செலவழிப்பதில் சமனின்மை போன்றவற்றை சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தின் சமனின்மையை குறிக்கும் ‘கினி குறியீடு’ (Gini coefficient) என்ற ஒன்று உண்டு.  அது ஒன்றாக இருந்தால் அதிகபட்ச சமனின்மை. 0 இருந்தால் அனைத்தும் சமமாக  உள்ளது என்று அர்த்தம். அதில் 0.1 அளவுக்கு குறைவதற்கே பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலெண்டே ஆட்சியின் தொடக்கத்தில் 0.56 இருந்த கினி குறியீடு 1972 இல் இரண்டு ஆண்டுகளில் 0.48 என்ற அளவிற்கு வீழ்ந்தது. அந்தளவிற்கு சாமானிய மனிதர்களின் கைகளில் வளம் சேர்ந்தது. (தகவல்: ஜேக்கோபின் ஏடு) அலெண்டே அரசின் மற்றொரு சாதனை வீட்டு வசதி. சிலியில் கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் வீடற்றவர்களாக இருந்தனர். மிக பிரம்மாண்ட அளவில் அரசு மக்களுக்கு வீடு கட்டும் திட்டங்களை அலெண்டே தொடங்கினார்.  1972 இல் 250 நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றில் உலகின் மிகப்பெரிய திறந்த வெளி தாமிரச் சுரங்கங்கள் அடக்கம். அவை அமெரிக்க நிர்வாகங்களான கென்ன கெட் மற்றும் அனக்கோண்டா ஆகிய நிறு வனங்களுக்கு சொந்தமானவை. இவையே அமெரிக்காவின் ஆத்திரத்தை தூண்டிய செயல் என்று சிலர் சொல்கின்றனர். 

சிலி ஜனாதிபதி சால்வடோர் அலெண்டே, இராணுவ அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளார்

அமெரிக்க வல்லூறுகளின் வேட்டை

சிலியில் அலெண்டே ஆட்சியை அகற்றி சர்வாதிகாரி பினோசெட்டின் பாசிச ஆட்சியை நிறுவியதற்கு முதல் குற்றவாளி ஹென்றி கிஸ்ஸிங்கர். அடுத்து நிக்சன். இவர்கள் இருவரும்தான். அதைத்தவிர சில அமெரிக்க பகாசுர கம்பெனிகளும் இதில் பங்காற்றியுள்ளன. அமெரிக்காவின் ஐடிடி (ITT) டெலிபோன் கம்பெனி. இந்த கம்பெனி சி.ஐ.ஏ-வுடன் 40  இரகசிய கூட்டங்களை நடத்தியுள்ள விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. மேலும்,  அலண்டேக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட பணம் இந்த  கம்பெனியின் மூலமே பட்டுவாடா ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உள் கடிதப் போக்கு வரத்தே ‘பினோசெட் பைல்’ நூலின் முக்கிய ஆவணங்களாக மாறியுள்ளன.  பினோசெட் பதவியை கைப்பற்றி, அலண்டே கொல்லப்பட்டதும், நிக்சன் தனது  பாதுகாப்பு ஆலோசகரிடம் கேட்ட கேள்வி ‘‘நமது கை வெளியில் தெரிகிறதா’’ என்பது தான்.  தாமிர சுரங்கங்களை தேசியமயமாக்கிய பிறகு அமெரிக்கா சர்வதேச தாமிர விலையை இறக்கியது. இதனால், அலெண்டே அரசு தான் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பணம் இன்றி திண்டாடியது. நோட்டு அச்சடித்ததால் மீண்டும் பணவீக்கம் அதிகரித்தது. நாடு முழுவதும், அமெரிக்க பணத்தில் அலெண்டே மற்றும் சோசலிசவாதிகளுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்யாவில் குழந்தைகளை வெட்டி சாப்பிடுவது போல் இங்கும் ஆரம்பித்துவிடுவர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவர், எதிர்க்கருத்து கொண்டவர்கள் கொல்லப்படுவர் என்பது போன்ற திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்கள் மேற்கத்திய பத்திரிகைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. பலவீனமான அனைத்து பிற்போக்கு சக்திகளும் ஒன்றிணைக்கப்பட்டன. பணவீக்கம் அதிகமானதால் தொழிலாளர்களின் செலவு அதிகமானது, அவர்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்தது. 

பினோசெட்டின்  கொலைவெறித் தாண்டவம்

அதிகாரத்திற்கு வந்த இராணுவ ஜெனரல் பினோசெட், நாடெங்கும் கொலைக் கும்பல்களை ஏவியதால், சிலியின் தெருக்களில் பிணங்கள் குவியத் தொடங்கின. மக்களின் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. நவீன தாராளமயத்தின் அடையாளமாக பினோசெட் உருவகப்படுத்தப்பட்டார். சிலி நகர வீதிகளில் 10,000 இற்கும் அதிகமான பிணங்கள் கிடப்பதாக அதே மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது குறித்து விசாரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிஸ்ஸிங்கரிடம் என்ன சொல்வது என்று கேட்ட  போது, ‘‘சிலியில் பழைய ஆட்சியைவிட புதிய இராணுவ ஆட்சி நமது நலன்களுக்கானது’’ என்று சொல்லச் சொன்னார். 

அலெண்டே முயன்றதென்ன?

அலெண்டே அகிம்சை வழியில் புரட்சி நடத்தலாம் என முயன்றவர். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையவில்லை. தான் உருவாக்கிய சோசலிச கட்சியிலேயே இருந்த சோசலிஸ்ட். அவர் வாக்குச்சீட்டுகளின் மூலம் புரட்சியை நடத்தலாம் என நினைத்தவர். அவர் மக்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் சமத்துவம் நிலைத்திட வேண்டும் என்றும் நினைத்தவர். அவர் சாண்டியாகோ நகரில் 1973 இல் நடைபெற்ற  ஐநாவின் பொருளாதார வளர்ச்சி மாநாட்டில் (UNCTAD) புதிய பொருளாதாரத் கொள்கையாக புதிய சர்வதேச பொருளாதார ஒருங்கமைப்பு (New International Economic Order- NIEO) என்பதை அறிமுகப்படுத்தினார். ஆனால், ஏகாதிபத்தியம் தனக்கு எதிரான சிறு சவால்களைக் கூட இரத்த வெள்ளத்திலேயே மூழ்கடித்துள்ளது. அப்படி ஒரு இரத்த சாட்சிதான் அலெண்டே. 

Tags: