தோழர்களின் சந்திப்பு

காதிபத்தியத்தின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உலக அரங்கின் இரண்டு முக்கிய நாடுகளது தலைவர்கள் ரஷ்யாவில் சந்தித்திருக்கிறார்கள். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) – கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் (Kim Jong Un) ஆகியோரது இந்த சந்திப்பு புவி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிரதேசமான ஆமுரில் (Amur) உள்ள வோஸ்டாச்னி விண்வெளி (Vostochny Spaceport) ஏவுதளத்தில் நடந்த இந்த சந்திப்புக்காக வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் (Pyongyang) கிம் ஜோங் உன் ரயில் ஏறிய தருணம் முதல் கடந்த மூன்று நாட்களாக மேற்கத்திய ஊடகங்கள் புட்டினையும், கிம்மையும் உலகின் எதிரிகளாகவும், பெரும் அழிவை தரக்கூடிய பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்டன என்றால் மிகையல்ல.

இரண்டு நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளால் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை எதிர்கொண்டிருக்கிற நாடுகள். இத்தடைகள் காரணமாகவே, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது. தற்போது, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட உக்ரைன் போரை காரணம் காட்டி உலகின் மிகப்பெரிய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புட்டினும் எந்த நாட்டிற்கும் செல்லமுடியாது என்ற தடையை ஏகாதிபத்திய அரசுகள் விதித்துள்ளன. அதனால் தான் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கும் இந்தியாவில் நடை பெற்ற ஜி-20 மாநாட்டிற்கும் புட்டின் வர இயலவில்லை.

இந்த பின்னணியில், தடைகளுக்கு உள்ளான இரண்டு நாடுகளின் தலைவர்கள் தங்களது எல்லையில் சந்தித்திருப்பது, அந்தத் தடைகளை உடைப்போம் என்ற செய்தியை ஏகாதித்திய சக்திகளுக்கு அளித்துள்ளது. 

அதே வேளையில், இந்த இருவரின் சந்திப்பும் மேற்கத்திய ஊடகங்கள் கூறியது போல உலகை அச்சுறுத்துவதற்காக அல்ல; இருதரப்பு அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காகவே என்று, ஐந்து மணி நேர சந்திப்புக்கு பிறகு கடந்த புதன்கிழமை (13.09.2023) அன்று செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். 

-தீக்கதிர்
2023.09.14

Tags: