முற்றுகிறது முதலாளித்துவ நோய்

–  க.ஆனந்தன்

பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான “பர்மிங்ஹாம்” மாநகராட்சி (Birmingham council) தான் திவாலானதாக அறிவித்துள்ளது. மிக முக்கிய தவிர்க்க முடியாத செலவுகள் தவிர இதர அனைத்துப் பணிகளையும் நிறுத்துமாறு அந்த நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பத்திரிகைகளில் மிகச்சிறிய அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் உலகப் பத்திரிகைகள் அனைத்தும், சீனாவின் பொருளாதாரம் அவ்வளவுதான், முடிந்தேவிட்டது என்ற பாணியில் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் அனைத்து முன்னணி அச்சு ஊடகங்களும் சீனப் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக செய்தியை பிரதானப்படுத்தி போடுகின்றன. ஆனால், பர்மிங்ஹாம் திவாலானது பற்றி மூச்சு காட்டுவதில்லை. 

பர்மிங்ஹாம் பிரச்சனை என்ன? 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மாநகராட்சியில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, போனஸ் மற்றும் இதர ஊதியங்களை அதே வேலையில் உள்ள ஆண் தொழிலாளர்களைவிட குறைவாக அளித்துள்ளது. சமவேலைக்கு சம  ஊதியம் வழங்கப்படாத பாரபட்சத்தை எதிர்த்து தொழிலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அந்த மாநகராட்சி 760 மில்லியன் பவுண்ட் (954 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பணத்தை பட்டுவாடா செய்வதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் கால தாமதத்திற்கும் மேலும் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கும். ஒரே வேலையைப் பார்க்கும் ஆண்களை விட பெண்களுக்கு ஊதியத்தை குறைத்தே வழங்கியுள்ளது, உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த ஒரு நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.

மேற்கத்திய நாகரீகம், தொழில் முன்னேற்றமடைந்த சமூகம், பெண்கள் சமத்துவம் பேணப்படும் நாடுகளில் முன்னணி நாடு என தங்களைப் பற்றி சதா ஒரு பிம்பத்தைப் படைக்கும் நாட்டில்தான் இவ்வளவு கீழ்த்தரமான ஏமாற்று வேலை நடந்துள்ளது. ஏமாற்றிய தொகையும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய ரூபாயில் 8000 கோடிக்கு சமம்). ஊதியம் பெற்ற போதே, பெண்கள் தங்களின் ஊதியம் குறைவாக உள்ளது பற்றி கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த பர்மிங்ஹாம் மாநகராட்சி ஆண்கள் பார்ப்பது வேறு வேலை, பெண்கள் பார்ப்பது அதற்கிணையான வேலை இல்லை என்று கூறி மறுத்து வந்துள்ளது. நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்த போது, பர்மிங்ஹாம் மாநகர உள்ளாட்சி அமைப்பு தனது பெண் ஊழியர்களை ஏமாற்றியுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. 

திவாலானது ஏன்?

பர்மிங்ஹாம் மாநகராட்சி, தனது சொந்த ஊழியர்களை ஏமாற்றினார்கள் என்பது ஒரு புறம்; மறுபுறத்தில், அந்த ஒரு இழப்பீடு கொடுப்பதால் மாநகராட்சி நிர்வாகமே திவாலாகி விடுமா என்ற கேள்வி எழுகிறது! அங்குதான் நவீன தாராளமயம், மற்றும் ஜி-7 நாடுகளின் திவால் பொருளாதாரம் ஆகியவற்றின் சித்து விளையாட்டு வருகிறது. இங்கிலாந்து மக்களின் பொருளாதாரத்தை சீரழித்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, மார்க்கரெட் தட்சர், இரண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது ஆகிய இரண்டு காரணங்களே!  நவீன தாராளமயமே  முதல் காரணம் தாட்சர் பிரதமராக இருந்த போதுதான் நவீன தாராளமயம் என்று அனைத்தையும் தனியார் மயம், தாராளமயம் (அதாவது பொது சொத்துக்களை தனியார் முதலாளிகள் தாராளமாக கொள்ளையடிக்க விடுவது), உலகமயம் போன்றவை அமுலாக்கப்பட்டன. நகராட்சிகளுக்கு அரசின் வரிவருவாயிலிருந்து நிதி வழங்கி தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு பதிலாக, அனைத்து சேவைகளையும் தனியார்மயமாக்கி, அதனை பெரும் கோர்ப்பரேட் தொழிலாக்கினார் தட்சர்.  தொடர்ந்து வந்த கன்சர்வேடிவ் கட்சி (பழமைவாதக் கட்சி) பிரதமர்கள், தற்போது ரிஷி சுனக் வரையிலும், அதே நடவடிக்கையைப் பின்பற்றுவதால், நகராட்சி நிர்வாகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. அனைத்து சேவைகளையும் தனியார்மயமாக்கியதால் செலவுகளை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஊழியர்களின் ஊதியத்தை வெட்டி, பெண் ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியுள்ளனர். 

இரண்டாவது காரணம், பிரிக்ஸ்

ஐரோப்பிய யூனியனில் இருந்து சில காரணங்களுக்காக பிரிட்டன் வெளியேறியது. இதனால் மிகப்பெரிய ஐரோப்பிய சந்தையை விட்டுவிட்டது. ‘பிரெக்ஸிட்’ (BREXIT) என்று கூறப்பட்ட, ‘ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய சம்பவம் காரணமாக வரும் பத்தாண்டுகளில் பிரிட்டனின் பொருளாதாரம் பல டிரில்லியன் டொலர்கள் அளவிற்கு சரிவை சந்திக்கும் என்றனர் பொருளாதார நிபுணர்கள்! அதுவும் இந்த திவாலுக்கு ஒரு காரணம் என்கின்றனர்.  அமெரிக்காவின் நலன்களை முன்னுரிமையாக ஏற்றுக்கொண்டதற்கு விலை  தற்போது அமெரிக்கா மற்றும் இதர ஜி-7 நாடுகளில், சர்வதேச வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு முரட்டுத்தனமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய (மேற்கு)  பொருளாதாரங்கள் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக ஜான் ராஸ் என்ற பொருளாதார அறிஞர் குறிப்பிடுகிறார். அவர், ஐரோப்பாவில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படும் இத்தாலி பொருளாதாரமே கடந்த நான்கு ஆண்டுகளில் 1.5 சத வீதம் அளவிற்குத்தான் வளர்ந்துள்ளது; அமெரிக்காவில் சிலிக்கான் வலி வங்கி (silicon valley bank) உட்பட 3 பெரிய வங்கிகள் திவாலாகியுள்ளன. இந்த நாடுகள் அமுல்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளன எனத் தெரிவிக்கிறார். பர்மிங்ஹாம் நகரம் திவாலாகியிருப்பது, ‘முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி’ எனும் நோய் முற்றியிருப்பதற்கான அறிகுறி என்கிறார்.  

ஜெர்மன் பொருளாதாரம் மந்த  நிலைக்கு சென்றுவிட்டதாக, சென்ற காலாண்டிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த காலாண்டிலும் வளர்ச்சி ஒரு  பெரும் முட்டைதான். அதாவது ஜெர்மன்  பொருளாதாரத்தின் வளர்ச்சி சுழி சதவீதம் (zero percentage).  அமெரிக்காவிற்கு அடுத்து மிகப்பெரிய தொழில் வளர்ச்சியடைந்த நாடான ஜெர்மனியின் பொருளாதாரம் ஏன் வீழ்ச்சியடைந்தது என்று கட்டுரைகள் எழுதுவதில்லை நம் நாட்டு செய்தி ஏடுகள். இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் இதே கொள்கை அமல்படுத்தப்படுகிறது. ஆகவே, தொடர்ந்து பல ஐரோப்பிய நகரங்களில் இத்தகைய ‘திவால்கள்’ ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: