போர் துயர் பகிரும் சின்னஞ்சிறு மனிதர்கள்!

கலிலுல்லா

“காசாவில் ஜனித்து ஜீவிப்பது அவ்வளவு எளிதல்ல! ஒருநாளில் உங்களின் உடல் பாகங்கள் சிதையாமல் உயிரை பற்றியிருந்தால் அதுவே பாக்கியம். வானுயர் கட்டிடங்கள் துயரங்களின் சாட்சியங்கள். அவை ஏதோ ஒருநாள் மண்துகள்களாகலாம்; உங்களின் இருப்பிடம் இல்லாமல் போகலாம்; உறவுகளும் கூட!”

– இவ்வாறாக, நிலமெல்லாம் இரத்தம் படிந்த காசாவாசிகளாக வாழ்வதன் பெருந்துயரத்தை பேசுகிறது ‘BORN IN GAZA’ ஆவணப்படம். நெட்ஃப்ளிக்ஸ் ஓரிரி (Netflix OTT) தளத்தில் காணக் கிடைக்கிறது. 2004 ஆம் ஆண்டு காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குலின் கோர வடிவத்தை போரால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன சிறுவர்களை சாட்சியங்களாகக் கொண்டு பேசுகிறது இந்த ஆவணப்படம். 2004 ஜூலை 8 தொடங்கி ஓகஸ்ட் 26 வரை நடந்த இந்தப் போரில் 2,251 காசா வாசிகள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 1000 குழந்தைகள் நிரந்தரமாக மாற்றுத் திறனாளிகள் ஆகினர்.

நமக்கெல்லாம் வாய்ந்திருக்கும் இந்த வாழ்வு பெரும் பேருடையது என்பதை இந்த ஆவணப்படம் அடித்துச் சொல்கிறது. அங்கே குவிந்து கிடக்கும் கட்டிட குவியல்களை வெறித்து நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு இங்கே நிகழ்ந்தது குறித்து ஒன்றும் புரியவில்லை. நேற்று வரை தன்னுடன் இருந்த அண்ணன் முஹம்மது இழந்ததை நேரில் பார்த்த உதாய் என்ற சிறுவனின் கண்களிலிருந்து கண்ணீர் அறியாமல் வழிகிறது.

அவர் பேசும்போது, “என் அப்பா குளிர்பான கொம்பெனியை நடத்தி வந்தார். அது எங்கள் வீடாகவும் இருந்தது. ஆனால், திடீரென ஒருநாள் அதிலிருந்து எங்களை உடனடியாக வெளியேற சொன்னார்கள். கண்ணிமைக்கும் நொடியில் கட்டிடம் வெடித்து சிதறியது. 22 வயதான என் அண்ணன் மஹம்மது கண்முன்னே உயிழந்தார்” என்று அவர் பேசி முடிக்கும்போது அமைதி தொற்றிக்கொள்கிறது.

மஹம்முதின் குடும்பத்துக்கு 75 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. 2011-2014 இடைப்பட்ட காலக்கட்டங்களில் 11 முறை அந்த விவசாய நிலத்தின் மீது தாக்குதல் அரங்கேறியிருக்கிறது. பல்வேறு இழப்புகளை சந்தித்த போதிலும், மஹம்முதுவுக்கு தங்குவதற்கு வீடு இல்லை, குடிநீர் இல்லை. உணவு இல்லை. ஆனால் குடும்பத்தில் எல்லோரும் ‘இப்போதைக்கு’ இருக்கிறார்கள் என்பதை அச்சிறுவனுக்கு பெரும் ஆறுதல்.

வெடிகுண்டுகளால் பாதிக்கப்பட்ட சிறுமி கேட்கும் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை. “நான் சிறுமி. என் மீது அவர்கள் அப்படி நடந்துகொள்ளக் கூடாது. என்னிடம் ஏவுகணைகள் இல்லை. பீரங்கிகள் இல்லை. நான் ஒரு ராணுவ பெண்ணும் இல்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் ஏன் என்னை தாக்கினார்கள்?” என கேமராவை பார்த்து கேட்கிறார்.

ரஜாஃப்பின் அப்பா ஓர் ஆம்புலன்ஸ் டிரைவர். “என் அப்பா உண்மையில் ஹீரோ. அவர் எல்லோருடைய உயிர்களையும் காப்பாற்றினார். இறப்புகள் தவிர்க்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால், போரில் அவர் சிதறிக் கிடந்தார். அவரது இறுதிச் சடங்கில் 3 பேர் மட்டுமே இருந்தனர். விரைவாக அடக்கம் முடிந்தது. என் அப்பா ஹீரோக்களுக்குள் இருந்த ஹீரோ” என வடியும் சோகத்தை துடைத்துக்கொண்டு பேசுகிறார்.

பள்ளி மாணவி மலக். ஏவுகணைத் தாக்குதலில் தம்பியை பறிகொடுத்தவர். “நாங்கள் பள்ளியில் இருந்தோம். இத்தனைக்கும் எங்கள் பள்ளியில் ஐநாவின் கொடி இருந்தது. இருந்தபோதிலும் அது தாக்கப்பட்டது. பள்ளியில் 22 பேர் இறந்துவிட்டனர். 80 பேருக்கு காயம். இங்க சகஜமான வாழ்வை வாழ முடியவில்லை. எனக்கு புற்றுநோய் இருக்கிறது. உயர் சிகிச்சைக்காக இங்கிருந்து வெளியேற கூட முடியவில்லை” என்கிறார்.

காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ‘Trauma’ எனப்படும் பேரதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் சிக்கித் தவிப்பதாக ஆவணப்படம் கூறுகிறது. அப்படி பிசான் என்ற 5 வயது சிறுமி தன்னுடன் இருந்த உறவினரின் மரணத்தை நேரில் பார்த்த பேரதிர்ச்சியில் அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பதாக அவரது நண்பர் ஹையா முஹம்மது கூறுகிறார். “அதைப்பற்றி பேசினாலே அவள் பேதலித்துவிடுவாள்” என்கிறார்.

இப்படியாக நாள்தோறும் குண்டுவெடிப்பின் ஒலியின் அவர்களின் நினைவு ரேகைகளில் படர்ந்து அச்சுறுத்தி மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. உடல் ரீதியாக பாதிப்புகளும், இழப்புகளும் ஒருபுறம் இருந்தாலும், மனரீதியான சிகிச்சைகளுக்கான வசதிகளும் இல்லை என்கின்றனர். அந்தக் குழந்தைகளின் இறுதிப்பேரவா ஒன்று தான். “நாங்களும் மற்ற நாட்டு குழந்தைகளைப்போல எந்த பயமும் இல்லாமல் வாழவேண்டும். அப்படியான வாழ்க்கை வேண்டும்” என்பதுதான்.

இந்தப் போரில் 70 சதவீதம் 12 வயதுக்கு குறைவானவர்கள் உயிரிழந்திருப்பதாக ஆவணப்படம் குறிப்பிடுகிறது. மேலும், 4 இலட்சம் குழந்தைகளுக்கு மனரீதியான சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்கான மேல் சிகிச்சைக்கு வெளியில் செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என் அண்ணன் இங்கேதான் தூங்குவான். அவன் பக்கத்தில் நான் தூங்குவேன்” என சிறுவன் ஒருவன் காட்டும் இடத்தில் சிதைந்த கற்கள் குவியலாக்கப்பட்டுள்ளது. “இது இங்கே தான் எங்கள் சமையலறை இருந்தது” என அவன் காட்டும் இடத்தில் அதன் தடங்கள் கூட இல்லாமல் சிதிலமடைந்திருக்கிறது. “நாங்கள் பள்ளிச் செல்ல விரும்புகிறோம்” என்கின்றனர் அந்தக் குழந்தைகள். வாழ்வதே போராட்டமாகிவிட்ட சூழலில் கல்வி என்பது எட்டாக்கனியாக இருப்பது பெருந்துயர்.

இறுதியில் முஹம்மது. அந்தச் சிறுவனுக்கு 10 வயது இருக்கும். மொத்தக் குடும்ப பாரத்தையும் தான் சுமப்பதாக கூறுகிறான். இருள் சூழ்ந்த வீட்டுக்குள் செல்லும் முஹம்மது கையில் ஒரு ரோர்ச் லைட்டை (Torch light) மட்டும் வைத்திருக்கிறான். அவரது தாயார் தேநீர் தயார் செய்துகொண்டிருக்கிறார். “என் தாய்க்கு கல்லீரல் பிரச்சினையும், சர்க்கரை நோயும், தைராய்டும் இருக்கிறது. எனக்கு இரண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி தங்கைகள். வீட்டின் பொருளாதாரத் தேவையை ஈட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நான் படிப்பை நிறுத்திவிட்டேன். என் அப்பாவாலும் வேலைக்கு செல்ல முடியாது” என்கிறார். குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அதனை விற்று வரும் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடக்கிறது.

“கையுறை வாங்க காசு இல்லாததால் குப்பைகளிலிருந்து வெறும் கையால் பொருட்களை பிரித்தெடுக்கும்போது அது என் உடல்நலனை பாதிக்கும் என தெரியும்” என்று கூறிக்கொண்டே சேகரித்த பிளாஸ்டிக் பொருட்களை குதிரை வண்டி ஒன்றில் போட்டு இழுத்துச் செல்கிறார். “எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை. என் வீட்டின் பொருளாதார தேவைக்கு நான் இதை செய்ய வேண்டும்” என்கிறார்.

போரின் தாக்கத்தால் காசாவில் வேலைவாய்ப்பின்மை கடுமையாக பாதித்துள்ளதாக ஆவணப்படம் தெரிவிக்கிறது. அமைதியாயிருந்து ஆர்ப்பரிக்கும் கடலலையில் தொடங்கும் ஆவணப்படம் இறுதியில் கடலருகே முடிகிறது. சிறுவர்களின் வ(லி)ழியே போரின் துயரக்காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படத்தை பார்த்து முடிக்கும்போது உங்களுக்குள் ஓர் பேரமைதி சூழ்ந்து கொண்டு இந்த வாழ்வின் மீதான நம்பிக்கையை கூட்டியிருக்கும்.

இதோ, இப்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் இரு தரப்பிலும் இதுவரை பலியான ஆயிரக்கணக்கானவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் குழந்தைகள். இரு தரப்புமே சர்வதேச மனிதநேய சட்டங்களின் அடிப்படை விதிகளைப் பின்பற்றவில்லை என்பது மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. எந்தக் காரணமாக இருந்தாலும் ஒரு யுத்தத்தின் கோரப்பிடியில் விவரிக்க முடியாத துயரத்துக்கு ஆளாவதில் சின்னஞ்சிறு மனிதர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதையே ‘BORN IN GAZA’ ஆவணப்படம் மீண்டும் மீண்டும் நினைவூட்டும்.

Tags: