மனிதம் மரத்து விட்டதோ? கண்டனம் முழங்குவோம்!

லஸ்தீன மக்கள் மீது மிகக் கொடூரமான படுகொலையை அரங்கேற்றி வருகிற இஸ்ரேல், சற்றும் ஈவிரக்கமின்றி, காசாவில் நோயாளிகள் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் ஆயிரம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வித போர் நடைமுறைகளையும் பின்பற்றாமல் வெறிபிடித்து  ஒட்டு மொத்த காசா மக்களையும் கொன்று குவிக்கத் துணிந்திருக்கிறது இஸ்ரேல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. 

காசா மக்கள் தொகையில் 50 சதவிகிதமானோர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள். தற்போதைய இஸ்ரேல் தாக்குதலில் அதிகளவில் குழந்தைகளும்,பெண்களும் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். காசாவின் கட்டமைப்புகள் அனைத்தும் திட்டமிட்டு தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன. அகதிகள் முகாம் மீது குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசுவதாக ஐ.நா நிவாரண முகமை தெரிவிக்கிறது. 

குடிநீர், உணவு, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமின்றி 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட காசா மக்கள் ஐ.நா.பாதுகாப்பு முகாமில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.  இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தற்போது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் காசா மருத்துவமனை மீது கடந்த சனியன்று (ஒக்ரோபர் 14 ) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். தற்போதைய தாக்குதலில்  சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது இஸ்ரேலின் திட்டமிட்ட சதியாகும். இது அப்பட்டமான போர்க்குற்றமாகும். 

இந்த கொடூரச் செயலை புரியும் இஸ்ரேலுக்கு ஆதரவாக புதனன்று டெல் அவிவ் வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்திருப்பது, அமெரிக்காவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துகிறது. இஸ்ரேலுக்கு ஒன்றிய மோடி அரசும் துணை நிற்கிறது. இந்தியா இதுவரை பாலஸ்தீனம்- இஸ்ரேல் விவகாரத்தில், பலஸ்தீன விடுதலைக்கே  தனது ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்து வந்திருக்கிறது. ஆனால் பாசிசத்தன்மை கொண்ட மோடி அரசு, மனிதத் தன்மையற்ற இஸ்ரேல் அரசிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உலக அரங்கில் தலைகுனிவையே ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இஸ்ரேலின் கொடூர தாக்குதலையும், அதற்குத் துணை நிற்கும்  மோடி அரசைக் கண்டித்தும் கண்டனம் முழங்க அறைகூவல் விடுத்துள்ளன. இதற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளித்திட வேண்டும்.

-தீக்கதிர்
2023.10.19

Tags: