பலஸ்தீனத்தைக் காப்பது அனைத்து மக்களினதும் சர்வதேசக் கடமை

சுமார் 23 இலட்சம் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் உண்ண உணவின்றி உடுக்க உடை இன்றி, தங்குவதற்கு இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உயிர் காக்கும் மருந்துகள் இன்றி, எரிபொருள் இன்றி, மின்சாரம் இன்றி, மனிதாபிமானமற்ற முறையில் சாவை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உயிர் காக்கும் பொருட்கள்/ உணவு உட்பட ஐக்கிய நாடுகள் சபையினுடைய அமைப்புகள் மூலமும், சகோதர நாடுகளின் ஆதரவு மூலமும் திரட்டப்பட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் காசாவின் மேற்கு எல்லையில் உள்ளே அனுமதிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன. அவற்றை காசாவின் உள்ளே அனுப்ப இஸ்ரேல் இராணுவம் மறுத்து வருகிறது. 

உருத்தெரியாமல் அழிக்கும்

“இது ஒரு நீண்ட நெடிய போராக இருக்கப் போகிறது; மத்திய கிழக்குப் பகுதியின் வரைபடமும் / தன்மையும் இன்றுடன் உருத்தெரியாமல் மாறப் போகிறது” என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இந்த முறை காசாவை கைப்பற்றினால் காசாவில் இருக்கிற அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதி முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு, ஆக்கிரமிப்புக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் எத்தனித்து வருகிறது. இஸ்ரேலின் இராணுவ அமைச்சரும், இராணுவ ஜெனரலும்,  பலஸ்தீனர்களுக்கு அனைத்து தேவைகளும் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. ‘அவர்கள் நரகத்தை கோரினார்கள்; நாங்கள் அதையே அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம்’ 

அறிவித்து இருக்கிறார்கள். குழந்தைகளும் பெண்களும் ஆதரவற்ற முறையில், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 1400 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறி, அதற்குப் பழி வாங்குவதற்காக என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இந்தப் போரில் இன்று வரை சுமார் 9500 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் முடமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும், மருத்துவ சேவையும், உதவியும் இன்று வரை கிடைக்கவில்லை. 

‘இஸ்ரேலுக்கு தன்னுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது; உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்’ என்று கூறுகிறார் ஜோ பைடன்.  ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஒரு சேர ஆதரவை அறிவித்திருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளும், மக்கள் சீனம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ‘உடனடியான போர் நிறுத்தம் தேவை; பதற்றத்தை தணியுங்கள்; பேச்சுவார்த்தைகளை தொடரலாம்’  என்று தங்களுடைய குரலை எழுப்பி இருக்கின்றன.

சர்வதேச அளவில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. 2023 ஒக்ரோபர் 14ஆம் திகதி இலண்டன் மாநகரில் ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்ட பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐரோப்பாவின் வலதுசாரி அரசுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன; அந்தந்த நாடுகளில் உள்ள உழைக்கும் வர்க்கம் தெருவில் இறங்கி பலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 

வெறி பிடித்த நெதன்யாகு

2022 டிசம்பர் மாதத்தில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வந்தது முதல் இந்த நடவடிக்கை தீவிரமடைந்திருக்கிறது. அவர் ஒரு கடைந்தெடுத்த வலதுசாரி. பிற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல்வாதி. அவர் கடந்த 20 ஆண்டுகளில் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். தற்போது கூட ஒரு சிறுபான்மை கூட்டணி அரசாங்கத்துக்கு தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் அவருடைய வருகையை அமெரிக்கா உட்பட நாடுகள் கோலாகலமாக வரவேற்று அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

2022 இல் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 2023 ஜனவரி மாதத்தில் அவர்களுடைய அல் அக்சா மசூதியில் அவர்களை தொழுகை நடத்த விடாமல் அதனுடைய பல பகுதிகளை இடித்து தள்ளியது இஸ்ரேல். 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 226 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அன்றாடம் அவர்களின் குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணைகள் தாக்குதல், குண்டுகள் வீசி தாக்குதல் அவர்களுடைய பள்ளிக்கூடங்கள்,  மருத்துவமனைகள், சாலைகள் உட்பட அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் ஹமாஸ் தாக்குதல் நடந்து, நிலைமையைத் தீவிரப்படுத்திவிட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதல்

ஹமாஸ் தாக்குதல் என்பது ஒரு வெற்றிடத்தில் நடைபெறவில்லை; அது ஒரு பின்புலத்தோடு தான் நடைபெற்றது எனக் கூறக்கூடிய அளவுக்கு இஸ்ரேலின் போர் ஒரு நியாயமற்ற போர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை கூறி இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா இந்தப் போரை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் யுத்தம் என்பது தனது பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா கூறி இருக்கிறது. தன்னுடைய யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் என்ற ஆயுதம் தாங்கிய கப்பலை மத்திய தரைக் கடல் பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. பலவிதமான நவீன ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், விமானங்களையும் இஸ்ரேலுக்கு கொடுத்து இந்தப் போரை தீவிரப்படுத்தும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் பலஸ்தீனத்தில் நடை பெற்று வரக்கூடிய இந்த யுத்தங்கள் அமெரிக்க பாதுகாப்புக்கு மிக அத்தியாவசியமானவை என்று பைடன் தெரிவிக்கிறார். இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு வளர்ந்து வந்து கொண்டிருக்கும்போது, ஓங்கி ஒலிக்கும் போது, இந்த போரை தீவிரப்படுத்தும் பணியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. 

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடனடியாக இஸ்ரேல் வந்து தன்னுடைய பிரிட்டிஷ் கேஸ் நிறுவனம் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கடலுக்கடியில் எண்ணெய் எடுக்கக்கூடிய தளங்களை பாதுகாப்பதற்கும் தங்களுடைய இலாபங்களை பாதுகாப்பதற்குமான நடவடிக்கை குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சென்றிருக்கிறார்.

பலஸ்தீனம் ஒடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அவர்களுடைய நோக்கம் அல்ல. அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளுக்கு எதிரான, ஏகாதிபத்தியத்தின் முகாம் அலுவலகமாக இஸ்ரேல் அங்கு செயல்பட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ‘பலஸ்தீன போர்’ அவர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைய வேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கருதுகிறது.

இந்தியாவிலும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பாவி பலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை அன்றாடம் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்க்கின்ற இந்திய மக்கள் கொதித்து எழுந்து இந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் போராட்டம் உடனடியாக ஓயப் போவதில்லை; எப்படி ஒரு நீண்ட நெடிய யுத்தம் என  இஸ்ரேல் கூறுகிறதோ அது போலவே ஏகாதிபத்தியத்தின் போர்வெறிக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் நீண்ட நெடிய போராட்டங்களாக இருக்கப் போகின்றன. 

அமைதியை விரும்பக்கூடிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு எண்ணம் கொண்ட, ஜனநாயகத்திலும் பன்முகத் தன்மையிலும் மக்களுடைய நல் வாழ்க்கையிலும் நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் ஒன்று திரண்டு இந்தப் போர் நிறுத்தத்துக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். பலஸ்தீனத்துக்கான தங்களுடைய அனைத்து வகை ஆதரவையும் தெரிவிப்பது என்பது தான்  இப்போது மிகப்பெரிய சர்வதேசக் கடமையாக அமைந்திருக்கிறது.

Tags: