இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துக!

காசா மீதான இஸ்ரேலின் இனப்படு கொலைப் போர் இடைவிடாமல் தொடர்ந்து நான்காவது வாரமாக  நடந்து வரும் நிலையில், ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பலஸ்தீனர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் நடத்தினர்.  

ஏதென்சில் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கான போராட்ட முன்னணியின் (All Workers Militant Front – PAME) சார்பில்  கிரீஸ் நாட்டின் தொழிற்சங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரைக் கண்டித்தும் ஏதென்ஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 8,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவிலான பலஸ்தீனர்கள் காசாவில் கொல்லப்பட்டு வரும் போது, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை காசாவில் கொல்லப்படும்போது யாரும் அமைதியாக இருக்க முடியாது. கொலைகார நாடான இஸ்ரேல் காசாவைச் சுற்றி வளைத்து நடத்தி வரும் முற்றுகைத் தாக்குதலால் காசாவில் படுகாயமடைந்துள்ள 15,000க்கும் மேற்பட்டோர் தேவையான சிகிச்சை கிடைக்கப்பெறாமல் உள்ள நிலையில் யாரும் அமைதியாக இருக்க முடியாது” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.  

இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பையும் கிரீஸ் அரசு நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் (PAME) வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா, நேட்டோ மற்றும் இஸ்ரேலுக்கு கிரீஸ் நாட்டில் இராணுவ தளங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதையும் நிறுத்த வேண்டுமென அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். மேலும் 1967 இல் இருந்ததை போல கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட  பலஸ்தீன அரசை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆயுதங்களை ஏற்கமாட்டோம்!

இதேபோல, ஒக்ரோபர் 31 அன்று பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போருக்கு  இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ மாட்டோம் என பெல்ஜியத்தில் உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள் (Belgian Union of Transport Workers – BTB) உட்பட, தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மேலாளர்கள் சங்கம் (BBTK), ஏ.சி.வி ட்ரான்ஸ்காம் (ACV-Transcom) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானம் இயற்றி ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெல்ஜியத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டதை குறிப்பிட்டதோடு “இந்த ஆயுதங்களை ஏற்றவோ இறக்கவோ செய்வது அப்பாவி மக்களைக் கொல்லும் ஆட்சிகளை ஆதரிப்பதாகும்; எனவே அந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபடப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தில் முற்றுகை இதேபோல் ஒக்ரோபர் 31 அன்று இங்கிலாந்தில், பலஸ்தீன ஆதரவு மக்கள் குழு  பிரிஸ்டலில் உள்ள, இஸ்ரேலுக்கு ட்ரோன்கள் மற்றும் விமானி இல்லாத விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனமான  எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) தலைமையகத்திற்குச் செல்லும் சாலையை முற்றுகையிட்டனர்.

டென்மார்க் ஆயுதக் கம்பெனி முன்பு ஆர்ப்பாட்டம்

ஒக்ரோபர் 30 அன்று, டென்மார்க்கில், டென்மார்க்கின் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் அமைப்பு (Communist Youth of Denmark – DKU) உட்பட பல்வேறு போர்- எதிர்ப்பு குழுக்களின் செயல்பாட்டாளர்கள், இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்து வரும் டென்மார்க் ஆயுத நிறுவனமான டெர்மாவின் சோபோர்க் (Søborg) ஆலைக்கு முன்பு  ஆயுத விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  அனைத்து நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு போராடினர். காசாவில் உள்ள குழந்தைகள் மற்றும் அப்பாவி பலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் குண்டுவீச பயன் பயன்படுத்திய எஃப்-16 (F16) மற்றும் எஃப்-35 (F35) ஆகிய போர் விமானங்களுக்கான உபகரணங்களை வழங்கியதும்,  யேமன் போருக்கு ஆயுதங்களை அனுப்பியதும் டெர்மா (Terma) நிறுவனம் தான் என  ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெர்மாவில் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது, டெர்மாவின் வணிகத்தால் பலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள  இரத்த ஆறுகளை  அடையாளப்படுத்துவதற்காக போராட்டக்காரர்கள் இரத்தக் கறை படிந்த குழந்தைகளின் ஆடைகளைத் தொங்க விட்டிருந்தனர். மேலும் அவர்கள் டெர்மாவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் டென்மார்க் மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளும் வகையில் அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்றும்,  அவர்கள் இஸ்ரேல்  இராணுவம் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய பயன்படுத்தும் F35 விமானத்திற்கான ஆயுத மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பினர்.

மூலம்: Workers’ movements across Europe protest supply of arms to Israel

Tags: