நவம்பர் 7 : புரட்சி தினம்

மானுட வரலாறு எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது. வரலாற்றை அடியோடு புரட்டிப்  போட்ட பல சமூகப் புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எந்த வர லாற்று மாற்றமும் 1917 நவம்பர் 7அன்று நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்கு ஈடாகாது. ஆண்டாண்டுக் காலமாக அடிமைத் தனத்திற்கும், ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளாகி வந்த அடித்தட்டு உழைக்கும் வர்க்கங்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிற உயர்ந்த நிலைக்கு, நிமிர்ந்து நின்ற ஒரு காட்சியை உலகம் கண்டது.

ஆளும் வர்க்கங்களாக ஆட்சி பீடத்திலிருந்த நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் வீழ்த்தி, தொழிலாளி – விவசாயி வர்க்கங்கள் கூட்டணி அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய சாதனைச் சரித்திரம்தான் ரஷ்யப் புரட்சி.

குறுகிய காலம் நீடித்த பாரீஸ் கம்யூன் எனும் தொழிலாளி வர்க்க அரசினைத் தவிர, நிலப்பிரபுத்துவ, ஆளும் வர்க்கங்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் முதலாளித்துவ சக்திகளின் கைக்கு மாறிய காட்சியைத்தான் வரலாறு அதுவரை கண்டிருந்தது. அதாவது, ஒடுக்குமுறை நிகழ்த்தும் வர்க்கங்களுக்குள் ஆட்சி அதிகாரம் கைமாறியதே தவிர, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடம் அதிகாரம் வந்ததில்லை. முதன்முறையாக ரஷ்யப் புரட்சியில்தான் அது நிகழ்ந்தது.

வாய்ச்சவடால் வாக்குறுதிகள் அல்ல

“நிலம், உணவு, சமாதானம்” என்ற முழக்கத்தை மக்களிடம் வாக்குறுதிகளாக முன்வைத்தார் தோழர் லெனின். ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு அமைந்த லெனின் அரசு, அவற்றை நடைமுறையில் சாதித்து வெற்றி கண்டது.

நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் உழன்று, பாடுபட்டு வந்த விவசாயிக்கு நிலம் சொந்தமானது. உணவுப் பஞ்சம் ஒழிக்கப்பட்டு விரைவாகவே உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடாக சோவியத் ஒன்றியம் மலர்ந்தது.

புரட்சி வெற்றி பெற்றவுடன் முதலாம் உலகப் போர்  முடிவுக்கு வந்தது. இதனால் காப்பாற்றப்பட்டது ரஷ்ய  மக்கள் மட்டுமல்ல; உலகில் பேரழிவை ஏற்படுத்தி  வந்த உலகப் போரால் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் நிகழ்வதை ரஷ்யப் புரட்சி  தடுத்து நிறுத்தியது.

கம்யூனிஸம் வன்முறைத் தத்துவம் என்ற வதந்தி இன்றும் நீடிக்கிறது. முதல் உலகப்போரை நிறுத்தியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை அழிவிலிருந்து பாதுகாத்த கம்யூனிஸ்டுகளா வன்முறையாளர்கள்? இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்தி, உலகையே பாதுகாத்த கம்யூனிஸமா வன்முறைத் தத்துவம்?

முடிவிற்கு வந்த ஒடுக்குமுறைகள்

வர்க்கம், இனம், பாலினம், மொழி அனைத்திலும் நிலவிய ஒடுக்குமுறைகளை லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது. 

முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சொத்துக்கள் சமூகக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதனால், வர்க்க ஒடுக்குமுறை ஒழிந்தது. கம்யூனிச இயக்கம் ரஷ்யாவில் தோன்றிய காலத்திலேயே பாலின  சமத்துவம், பிரிக்க முடியாத குறிக்கோளாக இருந்தது. 

1903 ஆம் ஆண்டிலேயே போல்ஷிவிக் கட்சியின் திட்டத்தில் “ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு  சமத்துவம்,” என்கிற குறிக்கோள் சேர்க்கப்பட்டிருந் தது. உலக நாடுகளில், அமைப்பு ரீதியான இயக்கங்கள் எதிலும் கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே இவ்வளவு தெளிவான கோரிக்கை முன்வைக்கப்பட வில்லை.

லெனின் அரசு அமைந்தவுடன் பெண்களுக்கு சம ஊதியம், எட்டு மணி நேர வேலை,பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை எனப் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.பெண்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஏராளமான அரசு குழந்தைக் காப்பகங்கள் என அடுக்கடுக்காக பல, பாலின சமத்துவ நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டது.

தேசிய இன  ஒடுக்குமுறை முடிவுக்கு வந்தது. அனைத்து தேசிய இனங்களின் பண்பாடு, மொழி வளர்ச்சிக்கு உரிய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முழுமையான மொழி சமத்துவம், தாய்மொழிவழிக்  கல்வி உறுதிப் படுத்தப்பட்டது.

இதுபோன்று ரஷ்யப் புரட்சி சாதித்த பலவற்றை  முதலாளித்துவ அரசுகள்  இன்றுவரை சாதிக்கவில்லை. சோசலிசம்தான் மாற்று என்பதை இன்றளவும் ரஷ்யப் புரட்சியும், சோவியத் அனுபவமும் எடுத்துரைக்கிறது.

கம்யூனிச எதிரிகளும் வரலாற்று அறிவியலும் !

ரஷ்யாவில் புரட்சிகர மாற்றம் சுலபமாக நிகழ்ந்து விடவில்லை; முந்தைய புரட்சிகள் போன்று  திட்டமிடாமல் ரஷ்யப் புரட்சி நடந்து விடவில்லை. ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய அயராத பணி,  மார்க்சியத் தத்துவ வழித்தடத்தில் லெனின் உருவாக்கிய செயல் வியூகங்கள், வழிகாட்டுதல்கள் அத்தனையும் சேர்ந்து புரட்சியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன. இவற்றை, உண்மையான மார்க்சியப் புரட்சியாளர்கள் இன்றைக்கும் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.

ரஷ்யப்  புரட்சி வெற்றி பெற்று உருவான சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தைக் கட்டுகிற மகத்தான பணியை சோவியத் மக்கள் மேற்கொண்டனர். முதலாளித்துவத்தால் மனித சமூகம் எதிர்கொண்ட வறுமை, ஏற்றத்தாழ்வு, பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, தேக்கமுற்ற மனித வளர்ச்சி என அனைத்தையும் தகர்த்து, மாபெரும் வளர்ச்சியை சோவியத் ஒன்றியம் சாதித்தது. 

ஆனால், 70 ஆண்டுகள் மட்டுமே சோவியத் சோசலிசம் இருந்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றி யம் வீழ்ந்தது. சோசலிச முன்னேற்றத்திற்கு சோவியத் வீழ்ச்சி ஒரு பின்னடைவுதான். இதனை கம்யூனிச எதிரிகள் நிரந்தர தோல்வியாக முன்னிறுத்துகின்றனர். இது ஒரு  வரலாற்று அறியாமையும் கூட.

எல்லையில்லா அதிகாரங்கள், தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட அனைத்து உற்பத்திகள் மீதான  கட்டுப்பாடு, இராணுவ வலிமை, ஊடகங்கள் மீது  ஆதிக்கம்  என எல்லா வகையிலும் பலம் பொருந்தியது ஏகாதிபத்தியம். அதற்கு  எதிரான சோஷலிச சக்திகளின் புரட்சிகரப் போராட்டம் நீண்ட நெடியது. இந்த நீண்ட யுத்தத்தில் முன்னேற்றமும் பின்னடைவும் ஏற்படுவது இயல்பு. தோல்வியடையும் புரட்சிகள் மீண்டும் வீறு கொண்டு எழும். இது வரலாற்று அறிவியல்.

புரட்சியாளர்களுக்கான பாடங்கள்

“சோவியத்தின் 70  ஆண்டு கால அனுபவமும், ரஷ்யப் புரட்சி அனுபவங்களும் ரஷ்யாவிற்குத்தான் பொருந்தும்; எங்கள் மண்ணுக்கு அது பொருந்தாது” என்று பேசுகிறவர்கள் மார்க்சிய இயக்கவியலை அறியாதவர்கள். ஏராளமான பொதுவான படிப்பினைகளை வழங்குவது லெனினியம். அது எதிர்காலப் புரட்சிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. அத்துடன், படைப்பாற்றல் மிக்க புதிய செயல் வியூகங்களை உருவாக்கவும் அந்தப்படிப்பினைகள் உதவுகின்றன. 

“உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” நூலினை எழுதிய ஜான் ரீடு புரட்சியின்போது தான் நேரில் கண்ட பல காட்சிகளை விவரிக்கிறார். தொழிலாளர் கூட்டங்களும் விவசாயிகள் கூட்டங்களும் ஏராளமாக நடந்து கொண்டிருந்ததை அவர் பதிவு செய்கிறார்:

“நாடக அரங்குகள், சர்க்கஸ் கூடாரங்கள், பள்ளி  அறைகள், ராணுவ முகாம்கள், கிராமப்புற மையங்கள், தொழிற்சாலைகள் என பல இடங்களில் இடைவிடாத கருத்துரைகள், விவாதங்கள், பேச்சுக்கள் என  ஏராளமான கூட்டங்கள்… 

புட்டிலாவ் எனும் தொழிற்சாலையில் 40 ஆயிரம்  பேர் கூடிய கூட்டத்தில் அன்றைய ரஷ்ய தலைவர்கள் ஆற்றிய உரைகள், உரைகள் முடியும் வரை  பேச்சை தொழிலாளர்கள் செவிமடுத்தனர். அதனை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது…” என்று ஜான் ரீடு எழுதுகிறார். அனைத்துக் கூட்டங்களிலும் பேசப்பட்ட ஒரே பொருள்: “புரட்சியின் வழியாக  ஒரு சோவியத் குடியரசை அமைக்க வேண்டுமென்பது தான்”.

இந்த ரஷ்ய அனுபவம் எடுத்துரைப்பது என்ன? உண்மையான மார்க்சிஸ்ட்டாக  இருப்போர் புரட்சி இலட்சியம் பற்றிய விவாதங்கள், பரப்புரைகளில் சலிக்காமல் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாட்டில் மார்க்சியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள், புரட்சி எனும் கருத்தாக்கத்தை தமிழக அறிவுத்தள விவாதத்திற்கு வலுவாகக் கொண்டு செல்ல வேண்டும்.

-மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்), ஆசிரியர், ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழ்

Tags: