காந்தியத்தின் கடைசி எச்சமாக வாழ்ந்த கம்யூனிஸ்ட்!

-சாவித்திரி கண்ணன்

சுதந்திரப் போராளி! எட்டாண்டு சிறை வாழ்க்கை, மூன்றாண்டு தலைமறைவு வாழ்க்கை, எண்ணற்ற போராட்ட வடுக்கள்.. என வாழ்ந்த சங்கரய்யா, காந்தியத்தின் அரிய பண்புகளை இயல்பாக கொண்டிருந்தார்! பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் இருந்து விலகி, எளிமையாக வாழ்ந்த அவரது வியக்க வைக்கும் குணங்களை பற்றிய ஒரு பார்வை!

‘தி மேன் ஆப் பிரின்சிபள்’ (The Man of Principle) என்பார்களே, அதற்கு வாழும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா! தலைமைக்கான ஆளுமைப் பண்பு அவரிடம் சுடர்விட்டு பிரகாசித்தது! பதவிகளை பொருட்படுத்தாது ஏற்றுக் கொண்ட கடமைகளில் முழுமூச்சாக இயங்கியதால் அவரைத் தேடி வந்த வாய்ப்புகளை மட்டுமே ஏற்றவர்! ‘எளியோரை ஏற்றம் கொள்ள வைப்பது’ ஒன்றே அவரது வாழ்க்கையின் உன்னத இலட்சியமாக இருந்தது! ‘தீண்டாமை ஒழிப்பு’ என்பதில், தீவிர செயல்பாட்டாளராக இருந்தார்! 1942 இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அழைத்துச் செல்லும் வைத்தியநாத ஐயரின் போராட்டத்திற்கு மாணவர்களை திரட்டி பாதுகாப்பு தந்தார்! தானும் சாதிமறுப்பு கலப்பு மணம் செய்து கொண்டு, தன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய வைத்தார்!

இளமையான சங்கரையாவும், மதுரை அமெரிக்கன் கல்லூரியும்

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், அசைவிலும் அவரது கொள்கை உறுதிப்பாடும், நேர்மையும் பிரதியட்சமாக வெளிப்பட்டது! பொது வாழ்க்கை வேறு, தனி வாழ்க்கை என பிருத்து பார்க்காத பொது வாழ்வு வாழ்ந்தவர்! ஒளிவு, மறைவு என்பதே அவரிடம் கிடையாது! எதிலும் வெளிப்படைத் தன்மை கொண்டவர்! காறாரான ஒழுங்குமுறையை அவரது நடவடிக்கைகளில் காணலாம்! அவரே தன் துணிமணிகளைத் துவைப்பார். தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைப்பார்! தன் சொந்த தேவைகளுக்கு மற்றவர்களை வேலை ஏவமாட்டார்! இத்தனைக்கும் அவர் கட்டளைகளை சிரமேற்று செய்யவும், அவருக்கு பணிவிடை செய்யவும் தொண்டர்கள் பலர் காத்திருந்தனர்.

நேரம் தவறாமை, கடமை தவறாமை, வாக்கு சுத்தம், பணம், காசு விவகாரத்தில் துல்லியமாக கணக்கு வைப்பது, நேர்படப் பேசுதல், புறம் பேசலை ஊக்குவிக்காத மனநிலை  என்பதில் அவரிடம் கடுகளவும் சமரசத்தை எதிர்பார்க்க முடியாது. நெருப்பு என்பார்களே அப்படி ஒரு குணம்! தன்னைப் பற்றி ஒரு போதும் பேசமாட்டார். எழுதியதும் இல்லை. அவரது சிறை வாழ்க்கை, தியாகங்கள் பற்றி மற்றவர்கள் தான் தகவல்கள் சேகரித்து எழுதியுள்ளனர். நேர்காணல்களில் கூட நாம் வலிந்தும், நிர்பந்தித்தும் கேட்டால் ஒழிய, தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளமாட்டார்!

விவசாய சங்கத்தை கட்டி எழுப்பி, விவசாய கூலி தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அவர்களை அரசியல் பூர்வமாக ஒருமுகப்படுத்துவது என்பது தான் இருப்பதிலேயே சவாலான பணியாகும். இந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் அவர் கால்படாத சிற்றூர்களோ, கிராமங்களோ இல்லை எனலாம்! செல்லும் இடங்களில் விவசாயக் கூலிகள் தரும் கஞ்சியை வாங்கி, அவர்களோடு இணைந்து சாப்பிட்டுக் கொள்வார்! எந்த அனாவசிய செலவுகளையும் தானும் செய்யமாட்டார். மற்றவர்களையும் செய்யவிடமாட்டார்! எல்லா இடங்களுக்கும் பொதுப் போக்குவரத்து தான்! போக்குவரத்து செலவு 29 ரூபாய் ஐம்பது காசு என்றால், அதை அப்படியே துல்லியமாக கணக்கு வைப்பாரே ஒழிய, 30 ரூபாய் என்று கூட எழுதமாட்டார்! நயா பைசா கூட பிசகாமல் பொதுப் பணத்தை கையாண்டவர்! இது போன்ற அரிய பண்புகள் கொண்ட மனிதர்களை இன்று பார்ப்பது அரிதினும் அரிதாகும்!

அவர் நீண்ட நெடுங்காலம் விவசாயிகளிடையே தான் வேலை பார்த்தார். 1995 இல் – தன்னுடைய 75 ஆவது வயதில் தான் மிகக் காலதாமதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை பொறுப்புக்கு வந்தார்! இத்தனைக்கும் 1942 இலேயே ஒருகிணைந்த மதுரை மாவட்டத்தின் கட்சி செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது!

அவர் மாநிலச் செயலாளராக காலகட்டங்களில் அவரது பத்திரிகையாளர் சந்திப்பு எல்லாமே தீப்பொறி பறக்கும். அவரது பேச்சுக்களை தொடர்ந்து கேட்ட மாத்திரத்தில், ‘நம் வேலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அவரது தலைமையின் கீழ் தொண்டு செய்யப் போய்விடலாமே’ என்ற உந்துதல் எனக்கு ஒரு முறை ஏற்பட்டது. எனினும், எந்த நிறுவனத்திற்குமோ, கட்சிக்குமோ கட்டுப்படக் கூடிய இயல்பு எனக்கு இல்லாததால், நான் அந்த எண்ணத்தை தவிர்த்துவிட்டேன்.

மறைந்த தோழர் டபிள்யூ.ஆர். வரதராஜனிடம் பேரன்பு கொண்டிருந்தவர் சங்கரய்யா! அவரும் இவர் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார்! அதே சமயம் தன் அன்பிற்கே பாத்திரமாயிருந்தாலும் கூட ஒருவர் தவறு செய்தால் பொது இடம் என்று கூட பார்க்காமல் மிக கடுமையாக நடந்து கொள்வார் சங்கரய்யா! இதை பலரும் அனுபவித்து இருக்கலாம்.

ஒரு சம்பவத்தை சொல்வதென்றால், சென்னை டி.பி.சத்திரத்தில் ஒரு பொதுக் கூட்டம் இரவு ஏழு மணி நிகழ்வு! அவர் இறுதியில் பேசுபவர் என்ற வகையில் ஒன்பது மணிக்கு கூட வரலாம். ஆனால், மிகச் சரியாக ஏழு மணிக்கே வந்துவிட்டார் சங்கரய்யா! ஆனால், அப்போது மாவட்டத் தலைவராக இருந்த டபிள்யூ ஆர்.வரதராஜன் எட்டே முக்கால் மணிக்கு தான் வந்தார். வந்தவர் நேராக மேடையில் வந்து அமர்ந்ததும், சங்கரய்யா ஒரு முறை முறைத்தபடி, ‘’எந்த நேரத்திற்கான கூட்டம், அதுக்கு எப்ப வர்ரது.. ம், முதலில் கீழே இறங்கு…’’என கர்ஜித்தார்! அவ்வளவு தான் அமைதியாக டபிள்யூ ஆர் வரதராஜன் கீழே இறங்கிவிட்டார். அவர் கட்டளையிட்டால், அதை யாராலும் கட்சியில் மீற முடியாது. அப்படிப்பட்ட ஆளுமைப் பண்பு கொண்டவர்!

ஒழுக்கம், நேர்மை தவறாமை, சோர்வில்லா உழைப்பு, தவறிழைத்தால் அழைத்து கண்டித்தல், திருந்தாவிட்டால் தண்டித்தல் போன்றவற்றில் கறாராக இருப்பார்! குற்றமிழைத்த யாரும் அவர் முன்பு தைரியமாக தலை நிமிர்ந்து நிற்க முடியாது! அநீதிகளை செய்வோர் யாராக இருந்தாலும் அதை தட்டிக் கேட்காமல் விடமாட்டார்! தனக்கென்று ஆதரவாளர்கள், விசுவாசிகள் வைத்துக் கொள்ளாதவர். எல்லோருக்கும் பொதுவாக இருப்பதையே விரும்புவார். அவரிடம் வெகு சில  நேர்காணல்களே செய்துள்ளேன். அவரது பொதுக் கூட்டங்களை  பத்திரிகையாளன் என்ற வகையில் கவரேஜ் செய்துள்ளேன். அவரோடு நெருங்கி பழகியதில்லை. ஆனால், அவர் மீதான ஈர்ப்பால் அவரை ஆழமாக உள்வாங்கி கொண்டேன்!

தோழர் நல்லகண்ணுவிற்கும் தோழர் சங்கரய்யாவிற்கும் பொது வாழ்க்கை பண்பு நலன்களில் சுயநலம் துறப்பு, சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை, தியாகம் போன்றவற்றில் நிறைய ஒற்றுமைகள் உள்ளதைப் போலவே, சில அடிப்படை வித்தியாசங்களையும் பார்க்கலாம். நல்லகண்ணு பசு போல மென்மையானவர், சமரசவாதி! தன்னைச் சுற்றி என்ன அநீதிகள் நடந்தாலும் நல்லக்கண்ணு கண்டும் காணாமல் – யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது – என்ற நோக்கில் அமைதியாகக் கடந்துவிடுவார்! ஆனால், சங்கரய்யா அறச் சீற்றத்தில் சிங்கம் போன்றவர், சமரசமற்றவர்!

ஒரு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தால், அதைக் கட்சிக்குள் மட்டுமே விவாதிப்பார். தன் கருத்து புறக்கணிக்கப்பட்டு, கட்சியில் பெரும்பான்மையோர் ஒரு எதிர்முடிவுக்கு வரும்பட்சத்தில் உடனே ஜனநாயகப் பூர்வமான முடிவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விடுவார்! அதன் பிறகு, அவரது கருத்தை ஒரு போதும் பேசமாட்டார். கட்சிக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஒரு இராணுவ வீரருக்கு உரிய மிடுக்குடன், எந்த பிசிறுமின்றி, அர்ப்பணிப்புடன் செயல்படுவார்!

மனைவி நவமணி அம்மையாருடன் சங்கரய்யா!

எளிமையே இலக்கணமாக கொண்டு வாழ்ந்த அவரது வீட்டின் சிறிய முற்றத்தில் இருந்த சிமெண்ட் தரை பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்தது. அதனால், அவரது மனைவி நவமணி அம்மையார் மிகுந்த சிரமப்பட்டார். சங்கரய்யா அதை சீர் செய்ய காலதாமதப்படுத்திக் கொண்டே வந்தார். அம்மையார் மகனிடம் சொல்ல, மகனோ தன் சம்பாத்தியத்தில் அழகிய டைல்ஸ் கல்லை பதித்துவிட்டார்! அது ஒன்றும் பெரிய செலவுமில்லை. ஆடம்பரம் என கொள்வதற்கும் இல்லை! ஆனால், எளிமை என்பதில் பிடிவாதமாக இருந்ததால், தோழர் அதற்கு உடன்படமாட்டார். அதனால் அப்பா, இருந்தால், இதெல்லாம் கூடாது என அனுமதிக்கமாட்டார் என்பதால் அவர் வெளியூர் மீட்டிங் சென்ற நேரத்தில் இதை செய்துவிட்டனர் வீட்டார்.

வெளியூர் பயணம் முடிந்து ஆட்டோவில் வந்து இறங்கிய சங்கரய்யாவின் கண்ணில் இதுபட்ட நொடிப் பொழுதில், ‘’என்ன இது?’’ என குரலை உயர்த்தி கேட்டார். வீட்டார் பதில் விளக்கம் சொல்வதற்கு முன்பே, அதை கேட்க மறுத்தவாய் மீண்டும் வந்த ஆட்டோவிலேயே ஏறி, கட்சி ஆபீசுக்கு கிளம்பி போய்விட்டார்! அதன் பிறகு அவருக்கு பலவாறாய் சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு வரச் செய்ய வீட்டார் பட்டபாடு கொஞ்ச, நஞ்சமல்ல!

சங்கரய்யா அவர்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவது என்பது வேள்வித் தீயின் நடுவே நடப்பதைப் போன்றது. இப்படிப்பட்ட கறார் மனிதரோடு குடும்பம் நடத்திய அந்த புண்ணியவதி வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தை கண்டிருக்க முடியுமோ! அதனால், நவமணி அம்மாளின் தியாகமும் சங்கரய்யாவிற்கு இணையானது என்றால், அது மிகையில்லை! அதே போல அப்பாவின் பெயருக்கு களங்கம் வரக் கூடாது என கட்சியில்  ஈடுபாட்டுடன் செயல்பட்ட போதும் பதவிகளுக்காக தங்களை முன் நிறுத்திக் கொள்ளாதவாறும், அப்பாவின் இலட்சியமான கலப்பு திருமணங்களை குடும்பத்தில் நிகழ்த்திக் காட்டிய அவரது பிள்ளைகளின் குணநலன்களும் போற்றத்தக்கன!

Tags: