உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும், பகுதி 1

அப்துல்

பகடைக்காயாகிய உக்ரைன்

“உக்ரைன் எல்லையில் ரசியா ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படைகளைக் குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரமும் தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளது. அந்தத் தாக்குதல் இன்றே நடந்து விடும், புதன்கிழமை அதிகாலை (பெப்ரவரி 16-ம் தேதி) 3.00 மணிக்கு நடந்து விடும், சில மணி நேரத்திற்குள் தாக்குதல் நடந்து விடும்”

“ரசியா உக்ரைன் மீது படையெடுத்தால், அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும். ரசியா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான நார்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் திட்டத்தை ரத்து செய்து விடுவோம்”

அமெரிக்காவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும் மேலே சொன்ன எச்சரிக்கைகளையும் மிரட்டல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். மேற்கத்திய ஊடகங்களில் தினம் தினம் இந்த எச்சரிக்கைகளும் போர் பீதியும் ஆக்கிரமித்து வருகின்றன. மறுபக்கத்தில் ரசியா.

“உக்ரைன் மீது படையெடுக்கப் போகிறோம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்காவின் கற்பனை. நாங்கள் இராணுவப் பயிற்சிக்காக உக்ரைன் எல்லையில் படைகளை அனுப்பியுள்ளோம். பயிற்சிகள் முடிந்தவுடன் படைகள் முகாம்களுக்கு திரும்பி விடும்.”

“ஆனால், எங்களுக்கு பாதுகாப்பு கவலைகள் இருக்கின்றன. உக்ரைன் நேட்டோ கூட்டணியில் சேர்க்கப்படாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும். உக்ரைன் அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். நேட்டோவை ரசியாவின் எல்லையில் உள்ள நாடுகள் வரை விரிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது”

“உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் சுதந்திர குடியரசுகளான டோனட்ஸ்க் மக்கள் குடியரசு, லுகான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை உக்ரைன் அரசு தாக்க முயற்சிக்கிறது. இவ்வாறாக, உக்ரைன் அரசுதான் மேற்கத்திய ஆயுதங்களை பயன்படுத்தி போருக்கு தயாரித்து வருகிறது”. இப்படி ரசியா தனது தரப்பை விளக்கி வருகிறது.

ரசியாவும் பெலாருசும் பிப்ரவரி 10-ம் தேதி கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடங்கின. உக்ரைனின் வடக்கு எல்லையில் உள்ள பெலாருசில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள ரசியா 30,000 பேர் கொண்ட படைகளை அனுப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே, இத்தகைய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. உலக நிகழ்வுகளை கவனித்து வருபவர்களை போர் மூண்டு விடும் என்ற பதற்றத்தில் வைத்திருக்கின்றன. போர் மூண்டால் கச்சா எண்ணெய் வழங்கல் பாதிக்கப்படும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $96 என்று உயர்ந்துள்ளது.

இந்தப் பதற்றம் நிதிச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் மூண்டால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற பீதியில் நியூயார்க், லண்டன், மும்பை, சிட்னி என உலகெங்கிலும் உள்ள முக்கியமான பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் வீழ்ச்சியடைகின்றன.

இதற்கிடையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்-ல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு ரசிய அதிபர் விளாடிமிர் புடின் பெய்ஜிங் சென்றார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ சந்தித்து பேசினார். சந்திப்பின் இறுதியில் ரசிய தரப்பும் சீனத் தரப்பும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், ரசியாவின் பாதுகாப்புக் கவலைகளை அங்கீகரிப்பதாகவும், நேட்டோவின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ரசியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்துள்ளது.

நேட்டோ என்பது 1949-ல் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் போட்டுக் கொண்ட “வடக்கு அட்லான்டிக் ஒப்பந்தக் கூட்டணி”. அதாவது அட்லான்டிக் பெருங்கடலின் மறுபக்கம் உள்ள அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடன் சேர்ந்து சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்யூனிசத்துக்கு எதிராகவும் ஏற்படுத்திக் கொண்ட ஏகாதிபத்திய இராணுவக் கூட்டணி நேட்டோ.

1991-ல் சோவியத் யூனியன் உடைந்து ரசியா, உக்ரைன், பெலோருஸ், மால்டாவியா (ஐரோப்பிய குடியரசுகள்), ஜார்ஜியா, உஸ்பெக், கசக், அஜர்பைஜான், கிர்கிஸ், தஜிக், ஆர்மீனியா, டர்க்மென், (மத்திய ஆசிய குடியரசுகள்) லித்துவேனியா, லத்வியா, எஸ்டோனியா (பால்டிக் குடியரசுகள்) ஆகிய 15 சோசலிச குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பால்டிக் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சோவியத் குடியரசுகளையும் படிப்படியாக நேட்டோ கூட்டணியில் இணைத்தது, அமெரிக்கா. இப்போது நேட்டோவில் 27 ஐரோப்பிய நாடுகள், துருக்கி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் உள்ளன.

நேட்டோவை மேலும் விரிவுபடுத்தி, உக்ரைனையும் நேட்டோ கூட்டணியில் இணைப்பதை தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பார்க்கிறது, ரசியா. “உக்ரைன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு. அது நேட்டோ கூட்டணியில் சேர முன் வந்தால், அதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால் அதை சேர்த்துக் கொள்வோம். இருந்தாலும், இப்போதைக்கு உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இல்லை. ஆனால், ரசியா கேட்பது போல எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோவிற்குள் உறுப்பு நாடாக அனுமதிக்கவே மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியாது” என்று அமெரிக்கா கூறுகிறது.

இதை ரசியா ஏற்றுக் கொள்ளவில்லை. “நிலைமை எந்த நேரத்திலும் படு மோசமாக ஆகி விடலாம். எனவே, அமெரிக்கக் குடிமக்கள் எல்லோரும் உக்ரைனை விட்டு வெளியேறி விடுங்கள்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி 11-ம் தேதி எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரக அதிகாரிகளை உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ விட்டு வெளியேறி விடும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. உக்ரைன் இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்கப் படைகளும் உக்ரைனிலிருந்து திரும்பப் பெறப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 1,000 பேர் கொண்ட அமெரிக்கப் படையினரை ஜெர்மனியில் இருந்து ருமேனியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 2,000 பேர் கொண்ட அமெரிக்கப் படைகளை போலந்துக்கும் ஜெர்மனிக்கும் அனுப்பியுள்ளார்.

பெப்ரவரி 16-ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கும் என்று மேற்கத்திய ஊடகங்கள் அறிவித்தன. உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தில், நேரலை காமரக்களை அமைத்து, போரை நேரடி ஒளிபரப்பு செய்யத் தயாராக இருந்தது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். தம் நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், “பீதி”யை கிளப்ப வேண்டாம் என்று உக்ரைன் அதிபர் விளாடிமைர் செலன்ஸ்கி அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் அவற்றின் ஆட்சியாளர்களான ரசிய அதிபர் விளாடிமீர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின் பிங் – இவர்கள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக அளவிலான போர்க் காட்சியின் முக்கிய நாயகர்கள். உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகளாவிய நிதிச் சந்தைகளில் எல்லை தாண்டி பாயும் சர்வதேச நிதி மூலதனம், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், சீனாவின் பொருளாதார எழுச்சி ஆகியவை இந்தப் போரின் பின்னணிகள்.

உக்ரைனை மையமாகக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் இந்த போர் நாடகத்தின் வசனங்களை மேலே பார்த்தோம். அதன் கதை, திரைக்கதை என்ன? இந்த நாடகம் யாரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது? இதில் வேறு யார் முக்கியமான பாத்திரங்கள்?

கடந்த 100 ஆண்டுகளில் இருப்பதைப் போலவே மிகச் சமீபத்திய இந்தப் போர்க் களத்தின் பின்னணியிலும் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரம் உள்ளது; அமெரிக்காவின் உலகளாவிய அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடு இதில் வெளிப்படுகிறது. அந்த முரண்பாடு அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலிக்கிறது; இந்த முரண்பாடு வெளிப்படும் பதற்றமான உலக நாடுகளில் ஒன்றாக உக்ரைன் உள்ளது. உக்ரைனை மையமாகக் கொண்ட போர்க்களம் தற்போது சூடு பிடித்துள்ளதற்கான காரணத்தை உக்ரைனின் அரசியல் பொருளாதாரத்திலும், ரசியாவுடனான அதன் உறவிலும் தேட வேண்டும். ரசியாவும், உக்ரைனும் 1991-ல் சோவியத் யூனியன் உடைந்த பிறகு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகளாக ஆன பிறகு கடந்து வந்த பாதையின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சமீபத்திய அரசியல் தொடர்புகளை பார்க்கலாம். அமெரிக்காவின் இப்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்-ஐ தோற்கடித்து அதிபராக பதவியேற்றார். ஜோ பைடன் இதற்கு முன்னதாக, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது துணை அதிபராக பணிபுரிந்தார்.

அதற்கு முன்னதாக, 1973 முதல் 2009 வரை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் டெலாவேர் மாநிலத்தின் பிரதிநிதியாக ஜோ பைடன் பணி புரிந்தார். அதாவது, ஜோ பைடனின் அரசியல் வாழ்வும், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சிக் காலமும் பொருந்திப் போகின்றன.

2014-ம் ஆண்டில் உக்ரைனில் ரசிய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச் அரசு கவிழ்க்கப்பட்டது; அமெரிக்க ஆதரவு இடைக்கால அரசு பதவியேற்றது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் என்ற வகையில் அதிகாரபூர்வ பயணமாக ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றார். “இயற்கை எரிவாயுக்கு ரசியாவை சார்ந்து உக்ரைன் இருக்க வேண்டாம். உள்நாட்டிலேயே இயற்கை எரிவாயு வளங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்” என்று அறிவித்தார்.

ஜோ பைடன் உக்ரைனுக்கு போவதற்கு 3 நாட்களுக்கு முன்னர்தான், அவரது மகன் ஹன்டர் பைடன், உக்ரைனில் செயல்படும் புரிஸ்மா ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைந்தார். புரிஸ்மா ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் சைப்ரஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டு உக்ரைனில் செயல்படும் நிறுவனம். 2016-ம் ஆண்டில் புரிஸ்மா உக்ரைனில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருந்தது.

புரிஸ்மா ஹோல்டிங்ஸ் உக்ரைனின் முதலாளித்துவ சிறு கும்பலைச் (Oligarch) சேர்ந்த மிகோலா ஜ்லோசெவ்ஸ்கி என்பவருக்கு சொந்தமானது. (சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரசியா, உக்ரைன் முதலான முதலாளித்துவ குடியரசுகளில் முதலாளிகளின் சிறு கும்பல்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றின. அவை நாட்டின் பொதுச்சொத்துக்களை தனியார்மயப்படுத்தி பெரும் செல்வத்தைக் குவித்தன. தொடர்ந்து அரசியலிலும் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.) தனது மகனின் வணிக நடவடிக்கைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஜோ பைடன் விளக்கம் அளித்திருந்தார்.

2014-ம் ஆண்டில் உக்ரைனிய முதலாளித்துவ சிறுகும்பலைச் சேர்ந்த பெட்ரோ போரொஷெங்கோ அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் உக்ரைனின் கிழக்கு எல்லையில் ரசியாவுடனான மோதலை தீவிரப்படுத்தினார். உள்நாட்டில் உக்ரைனிய இனவாதத்தை முன்னெடுத்தார். 2018-ம் ஆண்டில் உக்ரைன் பழமைவாத திருச்சபையை ரசிய பழமைவாத திருச்சபையில் இருந்து பிரிப்பதாக அறிவித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இராணுவம், மொழி, மதநம்பிக்கை என்ற முழக்கங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

ஜூலை 2017-ல் பெட்ரோ பொரொஷெங்கோ அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், உக்ரைனில் பொருளாதார நெருக்கடி தீவிரமானது.

ஏப்ரல் 2019-ல் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் மேற்பத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ தோற்கடிக்கப்பட்டார். நகைச்சுவை நடிகரான விளாடிமைர் செலன்ஸ்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ரசியாவுடன் மோதலை முடித்து அமைதி ஏற்படுத்தப் போவதாகவும், உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் வாக்களித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அதிபராக ஆகியிருந்தார். அவரது ஆட்சியில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்தார். அமெரிக்கா வெளிநாடுகளில் தலையிடுவதை குறைக்க வேண்டும், அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், சீனாவின் பொருளாதார எழுச்சியை முறியடிக்க வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த சர்வதேச அரசியல் கொள்கைகளை டொனால்ட் டிரம்ப் கைவிட ஆரம்பித்தார்.

ரசியாவின் விளாடிமீர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருமாறு உக்ரைன் பிரதமர் விளாடிமைர் செலன்ஸ்கியிடம் கூறினார். உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்த அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்தி வைத்தார்.

2019 செப்டம்பரில், புரிஸ்மா ஹோல்டிங் மீதும் ஹன்டர் பைடன் மீதும் ஊழல் விசாரணை நடத்தும்படி விளாடிமைர் செலன்ஸ்கிக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். புரிஸ்மா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரித்து வந்த உக்ரைனிய அரசின் தலைமை வழக்கறிஞர் விக்டர் ஷோகினை ஜோ பைடன் பதவி விலக வைத்தார் என்று டொனால்ட் டிரம்பும் அவரது குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டின.

அமெரிக்க வெளிநாட்டு கொள்கையை தனது சொந்த அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தினார் என்று டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டியது, ஜனநாயகக் கட்சி. அமெரிக்க நாடாளுமன்றத்தில், டொனால்ட் டிரம்ப் மீது பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தது. பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் மேலவையில் தோற்கடிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ தோற்கடித்து 2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (அதாவது 6 மாதங்களுக்கு முன்னர்), உக்ரைன் அதிபர் விளாடிமைர் செலன்ஸ்கி ஜோ பைடனை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தித்தார். “ரசிய ஆதிக்கத்துக்கு எதிராக உக்ரைனின் இறையாண்மையையும், எல்லைகளையும் பாதுகாப்பதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது” என்று ஜோ பைடன் அறிவித்தார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்குள் ஐரோப்பாவில் போர் நெருக்கடி தோன்றியுள்ளது. ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையில், உக்ரைன் அதிபரை சந்தித்து பேசிய 6 மாதங்களுக்குள் உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

எனவே, உக்ரைன் பிரச்சினை என்பது ரசியாவுடனான அதன் எல்லைப் பிரச்சினை என்பதைத் தாண்டியது. அமெரிக்காவின் உலகளாவிய அரசியல் பொருளாதார முரண்பாடுடன் தொடர்புடையது.

தொடரும்…

Tags: