சனாதன ஒழிப்பு ஒரு கலாச்சாரப்புரட்சி!

பாஸ்கர் செல்வராஜ்

பெரியார் காலம் தொட்டுத் தமிழகத் திராவிடர்களின் சுயமரியாதை-பகுத்தறிவு-சமூகநீதிக்கொள்கைகளை வடக்கில் வாழும் சூத்திர-பஞ்சமர்கள் என்று இந்துமதம் அழைக்கும் திராவிட சகோத(ரி)ரர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய வரலாற்றுப் பணி செய்யப்படாமல் கிடந்தது.

அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சைத் திரித்து இந்தியா கூட்டணியில் உரசலை ஏற்படுத்தி வடக்கின் வாக்குகளைத் தன்னிடம் செறிவாக்கிக்கொள்ள அதனைக் கையில் எடுத்து பாஜக நமது வரலாற்றுப்பணியைச் செய்ய வற்புறுத்தி இருக்கிறது.தானே முன்வந்து துவக்கியும் வைத்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஓரடிகூட பின்வாங்காமல் அவர்களைக் (bring it on) கூப்பிட்டு அழைத்து அடித்த உதயநிதிக்கும் ஆதரித்துக் கருத்தியல் களமாடியவர்களுக்கும் இந்தத் திருநாளுக்கான பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமுஎசக தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

சனாதன தர்மம் என்றால் என்ன?

சனாதனம் என்றால் மாறாதது, நிலையானது என்று இந்தச் சொல்லை அரசியல் வெளிக்குள் கொண்டுவந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் சொல்கிறார். அதோடு தர்மா என்றால் உலகும் வாழ்வும் நிலைத்திருப்பதற்கான மதிப்பீடுகள், நம்பிக்கைகள், நிறுவனங்கள், அமைப்புகள். இரண்டையும் இணைத்தால்“எக்காலத்திலும் மாறாத உலக ஒழுங்கு” (eternal universal order) என்று தி ஒயரில் எழுதுகிறார் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம்பெற்ற சியாம் குமார்.

உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கிறது இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்த மாறாத சனாதனக் கருத்தியல் அந்த இயங்கியலுக்குப் புறம்பானது என்கிறார் திருமாவளவன். இதன்படி சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இங்கே வாழும் சனாதனத்துக்கும் ஒரு இயங்கியல் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

சனாதன தர்மம்தான் நால்வர்ண தர்மம்

சியாம் சொல்லும், மாறாத ஒழுங்கு என்பதற்கான பொருளை பூஜை செய்பவரும் விவசாயம் செய்பவரும் அவரவர் தொழிலைச் செய்யவேண்டும் என ஒரு நேர்காணலில் சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலையின் வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.அதாவது பார்ப்பனர்-பூஜை, சத்திரியர்-போர், வைசியர்-வணிகம், சூத்திரர்-சமூகத்தின் கீழான வேலைகள் (menial) என அவரவர்  பிறப்புக்குரிய குலத்தொழிலைச் செய்யவேண்டும் என்கிறார்.

இந்த நால்வர்ண குலத்தொழில் இந்துமத விளக்கம் எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பனாராஸ் பல்கலையில் கூடிய பார்ப்பனர்கள் கூறியது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மாறாத உண்மை எனும் பொருளில் புத்தர் கூறியிருக்கிறார் என்கிறார் மின்னம்பலக் காணொலியில் மருத்துவர் ஷாலினி.

ஆனால் இது புத்தருக்கும் முன்னாள் வாழ்ந்த இந்தோ-ஆரியர்கள் நான்கு வர்ணமாக ஒருவரின்கீழ் அடுக்கப்பட்டு ஒருவரையொருவர் சார்ந்து வாழும்படி ஏற்படுத்தப்பட்ட சட்ட நெறிமுறைகளையும் தண்டனைகளையும் (legalandpenal) கொண்ட சமூக ஒருங்கமைப்பு (social organization)என்கிறார் அம்பேத்கர் (Vol. 7 who were shudras; preface).

அதென்ன சனாதன தர்ம சமூக ஒருங்கமைப்பு?

இதன்படி சிந்து சமவெளிப் பகுதியில் கால்நடைவளர்ப்பை முதன்மையாகச் செய்த இந்தோ-ஆரியர்கள் தங்களுக்குள் இன்னின்ன நபர்கள் இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என விதிகளை அமைத்துக் கொண்டு இந்த உற்பத்தி தடையின்றி நடப்பதை உறுதிசெய்து கொண்டு பலர் உழைக்க மற்ற சிலர் அதில் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

அது ஏன் நான்காவது சூத்திர வர்ணம் மட்டும் கடுமையான கீழான வேலைகளைச் செய்யவேண்டும் என்பதற்கு முதல் மூவர்ணத்தவர்கள் பூணூல் அணியும்போது மறுபடியும் பிறக்கிறார்கள்; எனவே அவர்கள் இருபிறப்பாளர்கள் (dvijas) (vol. 7 page 36, 43); அப்படி இவ்வர்ணங்களில் பிறப்பது முற்பிறப்பில் செய்த வினை: இப்பிறப்பில் ஒரு பிறப்பு சூத்திரனாகப் பிறந்த நீ அதற்குரிய வேலைகளைச் செய்யவேண்டும் என்று விளக்குகிறார்கள்.

எப்போது இதிலிருந்து நான் விடுபட முடியும் என்று கேட்டால் ஆன்மா பல பிறவி எடுக்கிறது; இப்பிறவியில் நீ சூத்திரக் கடமையைச் செய்தால் அடுத்த பிறவியில் நீ மூவர்ணத்தில் பிறந்து மோட்சம் பெறுவாய் என்கிறார்கள்.

நடைமுறையில் வர்ணங்களுக்கு இடையில் திருமணத்தைத் தடை செய்துவிட்டு நைச்சியமாக இம்மாதிரி“ஆன்மா-குருமா”என்று கதைகட்டி சூத்திரர்கள் எப்போதும் மாறாமல் இவர்களுக்கு பணிவிடை செய்வதை உறுதி செய்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இது சிந்துவெளி இந்தோ-ஆரிய சூத்திரர்களுக்கானது; அது எப்படி மற்ற பகுதிகளுக்குப் பொருந்தும் என்று கேட்கலாம்.

சனாதன தர்ம சமூக ஒழுங்கை உடைத்த புத்தர்

அதைத்தான் சிந்துவெளிப் பகுதிக்குக் கிழக்கில் வாழ்ந்த புத்தர் கேட்டார். ஆன்மா பல பிறவியெடுக்கும் என்றால் ஒவ்வொரு பிறவியிலும் அது பெறும் அனுபவம் என்னாகிறது என்று கேட்டு ஆன்மா நிலையானது என்பதை மறுத்து அது மாறக்கூடியது; அற்புதங்கள் அதிசயங்கள் என்பதாக நாம் காண்பதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடு; நமது வினைகளினால் ஏற்படும் துன்பங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்தால் இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம் என்று மாறாத பார்ப்பனிய கருத்தியலை மறுத்தது மட்டுமல்ல வர்ணபேதமின்றி எல்லோரும் துறவு மேற்கொள்ளலாம் என்று பார்ப்பனிய மேலாண்மையையும் புத்தர் உடைத்ததாக ஒரு காணொலியில் விளக்குகிறார் வரலாற்றுப் பேராசிரியர் கருணானந்தன்.

பொ.ஆ.மு 516 இல் பாரசீகர்களும் பின்பு பொ.ஆ.மு 326 இல்  கிரேக்கர்களும் சிந்துவெளிப் பகுதிகளின்மீது படையெடுத்ததால் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்தோ-ஆரியர்களின் கால்நடை உற்பத்தி பாதிக்கப்பட்டு அங்கே கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஒழுங்கு உடைப்பைச் சந்தித்திருக்க வேண்டும்.

அப்படி உடைபட்ட ஆதிக்கமும், மகாவீரர், புத்தர் போன்றோரின் மாற்றுக் கருத்தியல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அந்நிய படையெடுப்புகளால் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் இணைந்து சிந்துவெளிக்கு கிழக்கே கங்கைச் சமவெளிப் பகுதியில்மௌரியப் பேரரசு தோற்றதிற்கு காரணமாகிறது.

அது திராவிடக் குடிகளைச் சமமாக நடத்தும் சமூக ஒழுங்கை (social order) நடைமுறைபடுத்தி தமிழகம் தவிர்த்த இந்தியப் பகுதிகள் அனைத்தும் இணைந்த ஒரு கூட்டரசை (confederacy) உருவாக்குகிறது. பிறகு எப்படி இந்த சாதியச் சமூக ஒழுங்கு என்ற கேள்வி இங்கே எழுவது இயல்பானது.

பௌத்த-சமண சமத்துவ ஒழுங்கின் உடைப்பு

பார்ப்பனப் படைத்தளபதி புஷ்யமிங்கன் மௌரிய மன்னன் பிரகதிருத்தனைக் கொலைசெய்து ஆட்சியைப் பிடித்ததோடு இந்தச் சமத்துவ ஒழுங்கு உடைந்து நொறுங்குகிறது. அதன்பிறகு பார்ப்பனிய மனுநீதி சட்ட நெறிமுறைகள் இந்தியாவெங்கும் நடைமுறைக்கு வருகிறது. அது சூத்திரர்களுக்கு என்ன விதமான அநீதியான சட்டங்களை வகுத்தது என்பதை“சூத்திரர்கள் யார்” எனும் நூலில் அம்பேத்கர் பட்டியலிடுகிறார் (Vol. 7 chapter III). (ஆண்டசாதிப் பெருமை பேசுபவர்கள் தவறாமல் படிக்கவேண்டும்)

கீழ்சாதி அடிமைச் சூத்திர எடுபிடிகளாகக் கருதப்பட்டவர்கள் எப்படி மற்றவர்கள் உண்ட உடுத்த எச்சத்தைக் கொண்டு வாழவேண்டும், இதனை மறுத்தால், கற்றால், சாதிமாறி மணந்தால், புணர்ந்தால் உறுப்பை வெட்டுவது, கொலை செய்வது போன்ற கொடுந்தண்டனைகள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதைவிடக் கொடுமையாக இதனை ஏற்காதவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஊரைவிட்டு ஒதுக்குவது நடந்து சூத்திரர்களில் இருந்து ஐந்தாவதாக ஒரு வர்ணம் உருவாக்கப்படுகிறது.

அம்பேத்கரின் அந்த நீண்ட சாதிக்கொரு (அ)நீதிப் பட்டியலில் முக்கியமானது சூத்திரர்கள் சொத்து வைத்துக்கொள்ள கூடாது என்பது. அது வெறுக்கத்தக்கது மட்டுமல்ல அப்படிப் பார்ப்பனர் பார்க்க சூத்திரர்கள் சொத்து வைத்திருப்பதே பார்ப்பனர்களைக் காயப்படுத்துவதாம். பார்ப்பனர்களின் உடைமையான சூத்திரர்களின் உடைமைகளை எந்த மனச்சலனமுமின்றி பார்ப்பனர்கள் எடுத்துக் கொள்ளலாமாம். (page 50)

சாதிய சமூக ஒழுங்காக மாறிய சனாதன ஒழுங்கு

இதன்படியும் சூத்திர பஞ்சம சாதிகள் சொத்தற்றவர்களாக வாழ்ந்த எதார்த்த உண்மையையும் இணைத்துப் பார்க்கும்போது திராவிட மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடிங்கிஅவர்கள் தங்களிடம் குவித்துக்கொண்டது புலனாகிறது. அவர்களின் கருணையின்றி உண்டு வாழவேமுடியாது என்ற சூழலும் கொடுந்தண்டனைகளும் மக்களை இந்தஅநீதியை ஏற்றுக்கொண்டு அடிபணிய வைத்திருக்கிறது.

பார்ப்பனர்கள் நிலத்தை நேரடியாகப் பிடுங்க முடியாத இடங்களில் யாகம் செய்து சூத்திரனான சிவாஜியை சத்திரியனாக மாற்றியதைப்போல திராவிட மக்களில் இருந்து சிலரைச் சத்திரியனாக மாற்றி இருக்கிறார்கள்.அவர்களிடம்இருந்து நிலத்தையும் பொருளையும் உழைப்பாளர்களையும்  தானமாகப் பெற்றிருக்கிறார்கள்.

இப்படி நிலத்தைக் கைப்பற்றியவர்கள் உயர்வான இடத்திலும் அந்த விவசாய உற்பத்தி வர்த்தகத்துக்கான கருவிகள் செய்யும் தச்சர், கொல்லர், நெசவாளர்கள் அடுத்த இடத்திலும் மற்றஉழைப்பைச் செலுத்துபவர்கள் அதன்கீழும் என உற்பத்தியில் இவர்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து ஏற்றத்தாழ்வாக அடுக்குகிறார்கள். சரி-தவறு சார்ந்த அறமதிப்பீடுகளுக்குப் பதிலாக உயர்வு-தாழ்வு சார்ந்த சாதியச்சமூக மதிப்பீடுகளைக் கட்டமைக்கிறார்கள்.

சொத்துள்ளவர்கள், மற்றவரைவிட மேலான தொழிலைச் செய்பவர்கள் என மாறிய சமூகத்தில் இவற்றைத் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமான சொத்தாக மாற்ற இவர்களுக்குள் மட்டும் திருமணம் செய்யும் அகமணமுறை உருவாகிறது.

அது சமூகத்தை ஒன்றுடன் ஒன்று கலக்காத ஏற்றத்தாழ்வான பல சாதிய இனக்குழுக்களாக உடைக்கிறது. இது சிறிய சிந்துவெளி பகுதியில் நான்குவர்ண சனாதன சமூக ஒழுங்காக இருந்ததை இந்தியா முழுக்க 4,147 (1936 census)சாதிகளைக் கொண்ட சமூக ஒழுங்காக மாற்றுகிறது.

ஆங்கிலேயர்களால் அளவாக உடைந்த சாதியச் சமூக ஒழுங்குதொடரும்.

Tags: