மலர்வதற்கு முன் கொய்யப்படும் பலஸ்தீன மலர்கள்
-இந்து குணசேகர்
நவம்பர் 20, உலகம் முழுவதும் சர்வதேசக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உரிமைகள் குறித்து உலகத் தலைவர்கள் அந்நாளில் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.
அதே நாளில், காசா பகுதியில் இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளைக் கையில் தாங்கியபடி பலஸ்தீன மக்கள் மரண ஒலிமிட்டுக் கொண்டிருந்தனர்.
காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மொழியில் பாடல்களைப் பயிற்றுவித்த ஹலா (14), கால்பந்தில் தீவிர ஆர்வம் கொண்ட முஸ்தபா (14), உலகைச் சுற்றிப் பார்ப்பதைக் கனவாக கொண்ட எலைன் (8), நாய்க்குட்டிகளிடம் தீரா அன்பு கொண்ட கினா (6), எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் வார்ட் (3) என ஏராளமான குழந்தைகள் இஸ்ரேல் நடத்திய படுகொலையில் உயிரிழந்திருக்கிறார்கள்.
கொல்லப்படும் குழந்தைகள்
காசா குழந்தைகளின் மயான பூமியாக மாறி இருக்கிறது என சில நாள்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டர்ஸ் கூறியிருந்தார். சொல்லப்போனால் கடந்த 10 வருடங்களாக குழந்தைகளுக்கான நரகமாகவே காசா இருந்துவருகிறது.
காசாவின் மக்கள்தொகையில் சரிபாதி குழந்தைகள் (10 இலட்சம்). ஒக்ரோபர் 7, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் தாக்குதல் தொடங்கியதிலிருந்து காசாவில் இதுவரை 5,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 1,800 குழந்தைகள் இன்னமும் மீட்கப்பட முடியாத நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். 9,000க்கும் அதிகமான குழந்தைகள் தீவிரக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்னும் பலர் போரினால் மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டு இயல்பற்ற மெளனத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.
“எங்கள் நிலத்தின் அமைதிக்காக பிராத்திக்கிறோம். அமைதி இல்லையேல் மரணத்தையாவது கொடுங்கள், இரவின் உறக்கத்தில் எங்கள் குழந்தைகளின் மார்பில் கை வைத்து படுத்திருக்கும்போது மரணம் ஏற்படட்டுமே…” என காசா பெண்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு வன்முறைகளால் காசா சூழப்பட்டிருக்கிறது.
போரில் பிறந்த குழந்தைகள்
காசாவின், கான் யூனிஸ் பகுதியில் உள்ள முகாமில் சில நாள்களுக்கு முன்னர்தான் லினா இரட்டையர்களை பெற்றெடுத்தார். குழந்தைகள் பிறந்த அடுத்த நாள் முதல் காசாவில் இஸ்ரேல் குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. உயிர் பயத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய லினாவின் குடும்பத்தினர் பணம், துணி, நகை என எதையும் கொண்டுவரவில்லை. வான்வழித் தாக்குதலில் லினாவின் அழகான வீட்டுடன் அவரது கனவுகளும் தரைமட்டமாகிக் கிடக்கின்றன.
குழந்தைகளே தனது இறுதி நம்பிக்கை எனக் கூறும் லினா, அச்சத்துடனே ஒவ்வொரு நாளையும் முகாமில் கழித்துக் கொண்டிருக்கிறார்.
போர் நடைபெறும் காசாவில் 50,000 கர்ப்பிணிகள் உள்ளனர். தினமும் 150க்கும் அதிகமான பெண்களுக்குப் பிரசவங்கள் நடைபெறுகின்றன. போரினால் போதுமான அளவு சுகாதாரப் பாதுகாப்பும், போதிய உணவும் இல்லாத சூழ்நிலையே அங்கு நீடிக்கிறது.
கெனான்னுக்கு ஒரு கனவிருந்தது: காசாவில் நடக்கும் தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளன. அங்கு ஒவ்வொரு நாளும் உணவுக்காக நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கிறார்கள். அவ்வாறு ரொட்டித் துண்டையும், தண்ணீர் புட்டியையும் பெறக் காத்திருக்கும் சிறுவர்களில் கெனானும் ஒருவன். குடும்பத்தின் பசியைப் போக்க 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் கெனானின் வயது 10.
பிற குழந்தைகளைப் போலவே தினமும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இயல்பான வாழ்க்கையே கெனானுக்கும் இருந்தது. ஆனால், இந்த யுத்தம் கெனானின் வாழ்க்கையை முற்றிலும் கலைத்துப் போட்டு விட்டது. “எங்களின் கனவுகளைக் கொல்லும் இப்போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முகாம் எனக்கு வேண்டாம். மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நண்பர்களுடன் விளையாட வேண்டும். அவர்களைப் பார்த்துப் பேச வேண்டும்” என்பதே கெனானின் எளிய விருப்பம்.
புத்தகங்களுக்குப் பதிலாக தண்ணீர் புட்டிகள்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் பலஸ்தீனச் சிறார்களின் கல்வியைப் பெரிதும் பாதித்திருக்கிறது. காசாவில் பள்ளிக்கூடக் கட்டிடங்கள் பலவும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிறுவர், சிறுமியரின் கல்வி இப்போரினால் கேள்விக்குறியாகியுள்ளது.
பெரியவளானால் செவிலியராக வேண்டும் என்கிற கனவில் காசா வகுப்பறையில் அமர்ந்திருந்த சல்வா (8) போரினால் ரஃபா நகரில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்திருக்கிறார். அங்கு தனது அன்பிற் குரியவர்களுக்கு பிளாஸ்டிக் புட்டிகளில் தண்ணீர் பிடித்து வந்து பாதுகாப்பது சல்வாவின் அன்றாடமாக மாறியிருக்கிறது.
தன்ணீரைச் சேகரிக்கும் பணிகளுக்கு இடையே, “நான் இந்த உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளையும் நேசிக்கிறேன். அவர்கள் யாரும் எங்களைப் போல் மரணித்துவிடக் கூடாது” எனும் சல்வாவின் வார்த்தைகளுக்குப் பின்னால் காசாவின் மொத்த வலியும் புலப்பட்டுவிடுகிறது.
குறிவைக்கப்பட்ட முகாம்கள்
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்குக் காசாவின் பாதுகாப்பு முகாம்களும் தப்பிக்கவில்லை. காசாவில் உள்ள அல் நுசிராத் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-ஷிமி அக்ரம் சைதம் என்கிற இளம் பெண் குடும்பத்தினருடன் கொல்லப்பட்டர். சைதம் இந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதலிடம் பெற்றவர். திருமணத்தை மட்டும் கனவாகக் கொண்ட தனது சக தோழிகளுக்கு மத்தியில் முன்னுதாரணமாகக் கொண்டாடப்பட்டவர்.
நாட்டுக்காகப் பணியாற்றுவேன் எனச் சில மாதங்களுக்கு முன்னர் கையில் பூங்கொத்தை ஏந்தியபடி ஊடகங்களிடம் பேட்டி அளித்த சைதம் இன்று இந்த உலகில் இல்லை.
சைதாமைப்போல் ஏராளமான இளம்பெண்களின் கனவு தினம் தினம் கொல்லப்பட்டு வருகிறது. போரினால் கட்டாயத் திருமணங்களாலும் பாலியல் சுரண்டல்களாலும் பெண்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மலரும் நம்பிக்கை
ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வரும் போரில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் 4 நாள் ( நவ. 24 முதல் நவ. 27 வரை) போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் – ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. இருதரப்பும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும், பலஸ்தீனப் பெண் சிறைக் கைதிகளை இஸ்ரேல் இராணுவமும் விடுவிக்கின்றன.
தற்காலிகப் போர் நிறுத்தத்தினால் அடிப்படை மனிதாபிமான உதவிகள் பலஸ்தீன மக்களைச் சென்றடைவதற்கான வழி ஏற்பட்டுள்ளது. உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து ஆகியவை முகாம்களில் உள்ள பலஸ்தீனர்களைப் போதிய அளவு சென்றடைவதற்கான பணியில் ஐ.நா.வும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் இறங்கியுள்ளன.
இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் குண்டு சத்தங்களை மட்டுமே கேட்டுப் பழகிய காதுகளுக்குச் சிறு அமைதியையும், மனதிற்குச் சிறு ஆசுவாசத்தையும் அளித்திருக்கிறது. எனினும் நிரந்தரப் போர் நிறுத்தத்தையே பலஸ்தீனச் சிறாரும் பெண்களும் எதிர்நோக்கியுள்ளனர்.