தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நொறுங்கிய கட்டடங்கள்.

தெற்கு காஸாவில் தாக்குதலை நீடித்து வரும் இஸ்ரேல், கான் யூனிஸ் நகரிலும், அதைச் சுற்றியும் உள்ள மேலும் சில பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2023) உத்தரவிட்டது.

தெற்கு காஸாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1967 ஆம் ஆண்டு பலஸ்தீனத்துக்குச் சொந்தமான காஸா முனை, மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 2005 ஆம் ஆண்டு காஸா முனையில் இருந்து இஸ்ரேல் வெளியேறிய பின்னா், காஸாவில் ஆட்சியமைத்த ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஒக்ரோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி, சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் போா் தொடுத்தது.

காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் மேற்கொண்டு வந்த நிலையில், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளையும் இஸ்ரேலிடம் உள்ள பலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க வசதியாக, ஒருவார காலம் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் போா் நிறுத்தத்தின்போது ஹமாஸிடம் இருந்த 105 பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் இருந்த 240 பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

கடந்த வெள்ளிக்கிழமை (01.12.2023) போா் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் மீண்டும் கடுமையாகத் தாக்கி வருகிறது. வடக்கு காஸாவில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், தற்போது தெற்கு காஸாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

இதையொட்டி தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரிலும், அதைச் சுற்றியும் உள்ள மேலும் சில பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

தங்களை தெற்கு நோக்கி ரஃபா நகருக்கு அல்லது தென்மேற்கு கடலோரப் பகுதிக்குச் செல்லுமாறு விமானங்களில் இருந்து இஸ்ரேல் இராணுவம் துண்டு காகிதங்களை வீசியதாக கான் யூனிஸ் நகர மக்கள் தெரிவித்தனா்.

காஸாவை சுற்றிவருவதைத் தவிர வேறு வழியில்லை: காஸாவின் மக்கள்தொகை 23 இலட்சம். வடக்கு காஸா மீது தாக்குதல் தொடங்கியபோது, அங்கிருந்தவா்களை தெற்கு காஸாவுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. இதையடுத்து 23 இலட்சம் பேரில் பெரும் பகுதி மக்கள், தற்போது தெற்கு காஸாவில் நிரம்பியுள்ளனா்.

இந்நிலையில், தெற்கு காஸாவில் ஹமாஸ் தலைவா்கள் பலா் பதுங்கியுள்ளதாகக் கூறி, அங்கு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், அங்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து உடனான எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க காஸாவுக்குள்ளேயே சுற்றிவருவதைத் தவிர, அங்குள்ள மக்களுக்கு வேறு வழியில்லை.

இதனிடையே இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் சேதமடைந்து 3 போ் உயிரிழந்தனா். 10 இற்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். ஷிஜயா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 300 இற்கும் மேற்பட்டோா் கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனா்.

ஹமாஸ் படையைச் சோ்ந்த ஐவா் உயிரிழப்பு: இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘ஒரே இரவில் காஸா முனையில் உள்ள ஹமாஸ் படையினரின் சுரங்க வழிகள், கட்டளை மையங்கள், படைக்கலன் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்டவை மீது இஸ்ரேல் போா் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் ஹமாஸ் படையைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்’ என்று தெரிவித்தது.

‘இடைவிடாது குண்டுகள் வெடிக்கின்றன’: இந்தத் தாக்குதல் தொடா்பாக காஸா முனையில் உள்ள ஜபலியா அகதிகள் முகாமில் தங்கியுள்ள அமல் ரத்வான் என்ற பெண் கூறுகையில், ‘அனைத்து இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எங்களைச் சுற்றி குண்டுகள் வெடிக்கும் ஓசை இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

காஸாவில் உள்ள ஷேக் ரத்வான் பகுதியில் வசிக்கும் முகமது அபு அபேத் என்பவா் கூறுகையில், ‘தற்போது நிலவும் சூழல் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவா் உயிரிழக்க வாய்ப்புள்ளது. இடைவெளியின்றி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துகிறது’ என்று தெரிவித்தாா்.

கமலா ஹரிஸ் கவலை

துபையில் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க துணை அதிபா் கமலா ஹரிஸ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பல அப்பாவி பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். காஸாவில் பொதுமக்களின் துயரமும், அங்கிருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளும் நிலைகுலைய வைக்கின்றன என்று தெரிவித்தாா்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு உதவ எகிப்து முன்வந்துள்ள நிலையில், ‘காஸா அல்லது மேற்குக் கரையில் இருந்து பலஸ்தீனா்களை கட்டாயமாக இடமாற்றம் செய்வதையோ, காஸா முற்றுகையிடப்படுவதையோ அல்லது அதன் எல்லைகள் மறுவரையறை செய்யப்படுவதையோ எந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்கா அனுமதிக்காது’ என்று எகிப்து அதிபா் எல்-சிசியிடம் கமலா ஹரிஸ் கூறியதாக அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: