காங்கிரஸ் வீழவில்லை; மோடி வென்றிருக்கிறார்

2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய முக்கியமான தேர்தல் என்பதால், பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படும், 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ். அதன் எழுத்து வடிவத்தைச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

நீங்கள் இந்தத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களில் பயணம் செய்தீர்கள். இந்தி மாநிலங்கள் மூன்றிலும் பா.ஜ.க வென்றிருக்கிறது. இந்த முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.கவுக்கு இது பெரும் வெற்றி. அதேசமயம், காங்கிரஸுக்கு மோசமான தோல்வி என்று சொல்ல மாட்டேன். 

இந்த மூன்று மாநிலங்களுமே பா.ஜ.கவின் கோட்டைகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2018 சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்றது; அடுத்து ஆறு மாதங்களில் வந்த மக்களவைத் தேர்தலில், மூன்று மாநிலங்களிலும் உள்ள 65 தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க வென்றது; இதைக் காட்டிலும் முக்கியமான விஷயம், 2019 மக்களவைத் தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பா.ஜ.க பெற்ற மாநிலங்கள் இவை.

முந்தைய 2018 சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட காங்கிரஸின் ஓட்டு விகிதம் எந்த மாநிலத்திலும்  சரியவில்லை; பா.ஜ.க தன் கணக்கைக் கூட்டியிருக்கிறது. 

நாம் மூன்று இந்தி மாநிலங்களிலும்கூட முடிவுகளைத் தனித்தனியே அணுக வேண்டும் என்று சொல்வேன்.

சரி, ராஜஸ்தான் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ராஜஸ்தானில் இரு கட்சிகளும் சம பலம் கொண்டவை என்றாலும், பா.ஜ.கவின் செல்வாக்கு அதிகம்.  

ராஜஸ்தான் சட்டமன்றம் 200 இடங்களைக் கொண்டது. ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க வெல்லும்போதெல்லாம் 120 (2003 தேர்தல்), 163 (2008 தேர்தல்) என்று நல்ல பெரும்பான்மைப் பலத்துடன் வெல்வதும், காங்கிரஸ் வெல்லும்போதெல்லாம் 96 (2008 தேர்தல்), 100 (2018 தேர்தல்) என்று பெரும்பான்மைக்கு சுயேச்சைகளை நாட வேண்டியிருப்பதுமே நடந்திருக்கிறது. 

கால் நூற்றாண்டாகவே ஒரு முறை காங்கிரஸ், அடுத்த முறை பா.ஜ.க என்று மாற்றி மாற்றி அரசுகளைத் தேர்ந்தெடுப்பதை ராஜஸ்தானியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இது பா.ஜ.கவின் முறை. ஆனால், பா.ஜ.க பதற்றத்துடனேயே இந்தத் தேர்தலை அணுகியது. காரணம், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு நல்லாட்சியை அங்கே தந்திருந்தது. தேசிய அளவில் பல முன்னோடி திட்டங்களை அசோக் கெலாட் செயல்படுத்தியிருந்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி சண்டைகள், பிளவுகள் இருந்தபோதிலும் முதல்வர் மீதான மதிப்பு காங்கிரஸுக்குப் பெரிய பலமாக இருந்தது. 

இன்னொரு விஷயம், குறைந்தது 30 தொகுதிகளில் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் வல்லமை மிக்க குஜ்ஜர் சமூகம் பெருமளவில் காங்கிரஸை நிராகரித்துவிட்டது. காங்கிரஸில் அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்படும் சச்சின் பைலட் சார்ந்த சமூகம் இது. முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்காததால் ஏற்பட்ட அதிருப்தியை இப்படி வெளிக்காட்டியுள்ளனர். கடந்த முறை காங்கிரஸுக்குப் பின்னால் இவர்கள் அணிவகுத்திருந்தனர். 

இந்தப் புறக்கணிப்பைத் தாண்டியும் காங்கிரஸ் 39% வாக்குகளையும் 70 தொகுதிகளையும் வென்றிருக்கிறது; எதிர்க்கட்சியாக கடந்த 20 ஆண்டுகளில் இவ்வளவு இடங்களைக் காங்கிரஸ் பெற்றதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடந்திருப்பது என்னவென்றால், முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்த முறை 4% வாக்குகளை பா.ஜ.க கூட்டியிருக்கிறது. 2018 தேர்தலில் அது 38% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 41.6% ஆக பா.ஜ.கவின் வாக்கு வங்கி உயர்த்தியிருக்கிறது. ஆகையால், காங்கிரஸின் கோஷ்டி மோதல் பா.ஜ.கவுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதைத் தாண்டி மோடியின் செல்வாக்கும், மாநிலத் தலைவர்கள் பலரை முதல்வர் பதவிக்கான போட்டியில் தேசிய தலைமை இறக்கிவிட்டதும் பா.ஜ.கவுக்கு உதவியிருக்கிறது. 

மத்திய பிரதேச தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது உண்மையாகவே எனக்கு ஆச்சரியம்.

குஜராத்தைப் போல மபியும் பா.ஜ.கவுக்கு வலுவான கோட்டை; மோடியைப் போல சிவராஜ் சௌகானும் ஒரு செல்வாக்கான தலைவர் என்றாலும், இந்த முடிவு யாருமே கணிக்காதது. மக்களிடம் அதிருப்தியையும் மாற்றத்துக்கான தேட்டத்தையும் பார்க்க முடிந்தது. அதனால்தான், சிவராஜ் சௌகானை முதல்வர் முகமாக முன்னிறுத்துவதை பா.ஜ.கவே தவிர்த்தது. ஆனால், கடைசி வாரங்களில் பா.ஜ.க வெளிப்படுத்திய கடின உழைப்பும் காங்கிரஸின் உத்திகளில் ஏற்பட்ட அதிருப்தியும் மக்களை இப்படி ஒரு முடிவை நோக்கி தள்ளியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் இந்த மாநிலத்தில் இன்னொரு பா.ஜ.கவாகத்தான் செயல்பட்டது. ‘நானே முழு சனாதனி’ என்றார் கமல்நாத். தன்னுடைய தொகுதியில் அனுமார் கோயில் கட்டினார். ராமர் கோயிலைப் பற்றி பா.ஜ.க பேசினால், ‘பாபர் மசூதியை ராமர் வழிபாட்டுக்காகத் திறந்துவிட்டவர் ராஜீவ் காந்தி’ என்றது காங்கிரஸ்.

பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களை ஆகப் பெரும்பான்மையினாராகக் கொண்ட மாநிலம் இது. முன்பு காங்கிரஸ் முகமாக இங்கு செயல்பட்ட திக் விஜயா சிங் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜபுத்திரர். ‘ராஜா’ என்றே கட்சியில் அவரை அழைத்தார்கள். அன்றைய காங்கிரஸின் மாநில நிர்வாகிகளில் 55% பேர் முற்பட்ட சாதியினராக இருந்தார்கள். இதை உடைக்கும் விதமாகத்தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த உமா பாரதி, சிவராஜ் சௌகான் உள்ளிட்டோரை பாஜக முன்னிறுத்தியது. ஆனால், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவத்தையும் பேசும் காங்கிரஸ் இந்தத் தேர்தல் பிராமணர் கமல்நாத்தைத் தன் முகமாக முன்னிறுத்தியது. 

இதையெல்லாம் ஒப்பிட்ட வாக்களர்கள் நீர்த்த கந்தக அமிலத்தைவிட அடர் கந்தக அமிலமே மேல் எனும் முடிவை எடுத்தார்களோ, என்னவோ? தெரியவில்லை! 

பா.ஜ.க இந்தத் தேர்தலில் பெற்றிருக்கும் 163 தொகுதிகள்; 48.55% வாக்குகள் கடந்த இருபதாண்டுகளில் அது பெற்றிருக்கும் பெரிய எண்ணிக்கைகளில் ஒன்று. எனவே, இதுகுறித்து விரிவான கள ஆய்வுகள் வந்தால்தான் நாம் மத்திய பிரதேச முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும். 

சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

புபேஷ் பெகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு அங்கு ஒரு நல்லாட்சியைத்தான் தந்திருந்தது. தவிர, புபேஷ் பெகல் அங்கு மாற்று அரசியலையும் பேசிவந்தார். பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அதிகாரப் பகிர்வையும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதன் அவசியத்தையும்கூட பேசிவந்தார். 

முன்னதாக, இந்த மாநிலத்தில் பா.ஜ.கவின் முதல்வராக செயல்பட்ட ரமண் சிங் நல்ல நிர்வாகி, வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தியவர் என்று கருதப்பட்டாலும், மாநிலத்தில் எண்ணிக்கையில் குறைந்த, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; ராஜபுத்திரர். 

மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப, அங்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை மாற்றியது. கடந்த தேர்தலில்  பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரான பெகலைத் தன்னுடைய முகமாக காங்கிரஸ் முன்னிறுத்தியது. இந்த முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பற்றி இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் உரக்கப் பேசிய மாநிலமும் இதுதான். ஆனால், இங்கே உள்ள 42% பிற்படுத்தப்பட்டவர்களில் 35% பேர் இரு சாதிகளுக்குள் அடங்கிவிடுவார்கள்; ஒன்று குர்மிகள், மற்றொன்று சாஹுக்கள். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் பெகல். பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க காங்கிரஸுக்கு இது உதவியது.

பா.ஜ.க என்ன செய்தது என்றால், இந்த முறை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் சாஹு சமூகத்தைச் சார்ந்த அருண் சாஹுவைத் தன்னுடைய மாநிலத் தலைவராகப் பதவியில் அமர்த்தியது. சென்ற முறை பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் பெருமளவில் காங்கிரஸை நோக்கிச் சென்றது என்றால், இந்த முறை அது இரண்டாகப் பிரிந்தது. குர்மிகளைவிட சாஹுக்கள் எண்ணிக்கை அதிகம். பாஜகவின் இந்த வியூகம் தேர்தலில் பிரதிபலிப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அடுத்த விஷயம், தேர்தலின் ஆரம்பக் கட்டத்தில் ஏரளமான இடங்களில் வெல்வோம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருந்தாலும், கடைசி கட்டத்தில் பா.ஜ.க செய்த ஒரு பிரச்சாரம் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளியதை உணர முடிந்தது. முதல்வருடன் தொடர்புபடுத்தி ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை  எழுப்பியதுடன் அது தொடர்பான காணொளியையும் வாக்காளர்களிடம் பரப்பியது பா.ஜ.க. அதுவரை பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத தலைவரான பெகல் பிம்பத்தை இது சிதைத்திருப்பதையும் நாம் உணர முடிகிறது.

தெலங்கானா தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

அங்கு கே.சந்திரசேகர ராவ், ‘தெலங்கானா மாதிரி’ என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு பொருளாதார முன்னேற்றத்தைப் பத்தாண்டுகளில் உருவாக்கினார். அவருடைய ஆட்சி சிறப்பாக இருந்ததால்தான், முதல் முறையைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள், தொகுதிகளைத் தந்து, இரண்டாவது முறை அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இரண்டாவது ஆட்சிக் காலகட்டத்திலும் வளர்ச்சியில் பெரிய குறைகள் சொல்ல முடியாது என்றாலும், நிர்வாகத்தில் மூர்க்கத்தனம் அவரிடம் வந்திருந்தது. அடக்குமுறைத்தன்மை அரசிடம் வந்திருப்பதைப் பலரும் சுட்டினார்கள். ஊடகங்கள் அழுத்தப்பட்டன. கட்சியிலும் ஆட்சியிலும் குடும்பத்தினரின் ஆதிக்கமும், ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் பெயரும் பேசப்பட்டது. தவிர, பா.ஜ.கவுடனான அவருடைய உறவும் மக்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. 

எல்லாவற்றுக்கும் மேல் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியின் எழுச்சியே தெலங்கானா எனும் அந்த மாநிலத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது.  அடுத்தடுத்த வெற்றிகள் சந்திரசேகர ராவின் கண்ணை மறைத்ததாலோ என்னவோ தன்னுடைய உயரத்தை அவர் அதீதமாக கற்பனை செய்தார். விளைவாக, ‘தெலங்கானா ராஷ்ட்ர சமிதி’ எனும் கட்சியின் பெயரையே ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என்று மாற்றினார். இதையெல்லாம் தாண்டியும், தெற்கில் ஒரு முதல்வர் பத்தாண்டுகள் கடந்து மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆக, இவையெல்லாமும்  தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றன.

காங்கிரஸைப் பொறுத்த அளவில், 2014 இல் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை  காங்கிரஸின் வலுவான கோட்டைகளுல் ஒன்றாக ஆந்திரம் இருந்தது. 2009 தேர்தலில் 35%க்கு மேல் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்தது. பிரிவினைக்குப் பின்பு தன்னுடைய பலத்தை இரு மாநிலங்களிலும் இழந்த காங்கிரஸ், இன்று தெலங்கானாவில் மீண்டும் தன்னுடைய பழைய பலத்தைப் பெற்றிருக்கிறது.

காங்கிரஸின் வெற்றி முக்கியமானது என்றாலும், கர்நாடகத்தைப் போல இங்கு அது மாற்று மாதிரியை உருவாக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், இந்த வெற்றியின் முகமாக அறியப்படும் ரேவந்த் ரெட்டி பா.ஜ.கவின் கிளை அமைப்பான ஏபிவிபி பின்னணி கொண்டவர்; சில ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரஸில் இணைந்தார் என்பதோடு அவருடைய பல பேச்சுகள் பெரிய நம்பிக்கை அளிப்பதாக இல்லை. காலம் மாற்றங்களைக் கொண்டுவந்தால் நல்லது. எப்படியும், இந்த வெற்றி காங்கிரஸுக்குக் கூடுதல் பலம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

தேர்தல் முடிவுகள் மொத்தமாக தரும் செய்திகள் என்ன?

பா.ஜ.கவுக்கு நல்ல போட்டியை காங்கிரஸால் தர முடிந்திருக்கிறது. அதேசமயம், தன்னுடைய பலவீனங்களிலிருந்து விடுபட அது கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலிருந்து ராகுல் விலகியதும், கார்கே பதவியேற்றதும், மாநிலத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தந்ததும் பெருமளவில் நல்ல விளைவுகளைத் தந்திருக்கின்றன. சில விஷயங்களில் நீண்ட கால அளவில்தான் பலன்களை எதிர்பார்க்க முடியும்.

பா.ஜ.கவைப் பொறுத்த அளவில் இது அவர்களுக்குப் பெரிய முன்னகர்வு. மாநிலங்களவையிலும் இதற்கான பலன்களை அது அறுவடை செய்யும். மோடி மீண்டும் தன் செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்; ஒருவகையில் இந்த முடிவுகள் மோடிக்கு இரட்டை வெற்றி என்று சொல்லலாம். 

பா.ஜ.கவில் பிரதமர் மோடிக்கு இது இரட்டை வெற்றி என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்தி மாநிலங்கள் மூன்றிலும் அவருடைய முகமே முன்னிறுத்தப்பட்டது.

மூன்று இந்தி மாநிலங்களிலும் செல்வாக்கு மிக்க தலைவர்களான சிவராஜ் சிங் சௌகான், வசுந்தரா ராஜே, ரமண் சிங் ஆகிய மூவரும் இம்முறை  ஓரங்கட்டப்பட்டனர். இவர்களெல்லாம்,  பல முறை முதல்வர்களாக இருந்தவர்கள். இந்த மாநிலங்களில் கடந்த கால் நூற்றாண்டு பா.ஜ.க நிர்வாகிகள் உருவாக்கத்தில் இவர்களுக்குப் பங்கு உண்டு. பெரிய ஆதரவாளர் செல்வாக்கைக் கொண்டவர்கள்.

அப்படி இருந்தும் இவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு மோடியின் முகத்தை முன்வைத்தது பா.ஜ.க; புதிய தலைமுறையினரைக் கொண்டுவர இது அவசியம் என்று அது நம்புகிறது. இதுவொரு பெரிய சூதாட்டம்தான். ஏனென்றால், தோல்வி அடைந்திருந்தால் நிச்சயமாக மோடியின் பெயர் அடிபட்டிருக்கும். காங்கிரஸ் அப்படியல்ல; மாநிலத் தலைவர்களை முன்னிறுத்தியது. மோடி வென்றிருக்கிறார். காங்கிரஸோடு, பா.ஜ.கவுக்குள்ளும் அவர் பெற்றுள்ள வெற்றி என இதைச் சொல்லலாம். மக்களவைத் தேர்தலை பா.ஜ.க அவருடைய தலைமையில் சந்திப்பது இதன் மூலம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மாறியுள்ளது.

என்னுடைய முதன்மை அக்கறை எப்போதும், மக்களிடத்தில் ஒரு தேர்தல் உருவாக்கும் தாக்கம் என்னவாக இருக்கிறது என்பதுதான். அந்த வகையில் அசோக் கெலாட் தோல்வியை வருத்தமான செய்தியாகப் பார்க்கிறேன். பின்தங்கிய மாநிலமான ராஜஸ்தான் முகத்தை மாற்றியதோடு, நாட்டிலேயே பல முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தியவர் அவர். இந்தத் தோல்வி ராஜஸ்தானின் பயணத்தை முடக்கும். அசோக் கெலாட் – வசுந்தரா ராஜே இருவரும் ராஜஸ்தானில் எல்லாச் சமூகத்தினராலும் பொதுவான தலைவர்களாகப் பார்க்கப்பட்டவர்கள் என்பதோடு, அங்கு சாதியத்தின் தாக்கத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியும் வைத்திருந்தவர்கள். அநேகமாக இந்தத் தேர்தலோடு அவர்கள் இருவரின் ஆட்டமும் அங்கு முடிந்தது. சாதியரசியல் மூர்க்கமாக இது வழிவகுக்கும் என்ற அச்சம் எனக்கு அங்கு இருக்கிறது. மத்திய பிரதேசத்தைப் பொறுத்த அளவில் கமல்நாத்துடைய தோல்வி காங்கிரஸை மென் இந்துத்துவப் பாதையில் செலுத்தும் போக்குக்கு முடிவு கட்டும். அது நல்லது.

ஒட்டுமொத்தமாக, மோசமான விஷயம் என்றால், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவத்தைப் பேசும் சமூகநீதி அரசியலுக்கு இந்த முடிவுகள் முட்டுக்கட்டை போடும்.

தலித்துகளைப் போன்று அரசியல்மயப்படாமல், வெறும் சாதிகளாக மட்டும் சிந்தித்துச் செயல்படும் வரை  ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் சமூகக் குழுவின் ஓர்மையை  வெறும் இடஒதுக்கீடுகளாலும் பிரதிநிதித்துவத்தாலும் மட்டுமே வெளியிலிருந்து யாராலும் உருவாக்கிட முடியாது; அரசியல் தளத்தில் மட்டும் அல்லாது சமூகத்தளத்தில் இதற்கான வேலைகள் நடக்க வேண்டும். முக்கியமாக சாதிகளாகச் சிந்திப்பதையும், ஒருபுறம் சாதிப்பெருமை பேசிக்கொண்டே மறுபுறம் பாதிக்கப்பட்ட சுமையையும் பேசித் திரியும் இரட்டைத்தனத்தையும் பிற்படுத்தப்பட்டோர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அது நடக்காத வரை பிளவு அரசியலே ஜெயிக்கும் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.

நல்ல விஷயம் என்றால், பா.ஜ.கவின் தேசிய தலைமை ‘ரேவடி அரசியல்’ என்று மக்கள் நலத் திட்டங்களைப் பழித்தாலும், இன்று மூன்று மாநிலங்களிலும் மக்கள் நலத் திட்டங்களை வாக்குறுதிகளாக முன்வைத்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது; அதேபோல், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கும் அதன் வாக்குறுதிகள் ஒரு காரணம். இது பரவும். ஆகையால், மக்கள் நலத் திட்டங்களுடைய செல்வாக்கு நாட்டில் இனி அதிகரிக்கும் என்று எண்ணுகிறேன்!

Tags: