எதை நோக்கிச் செல்கிறது இஸ்ரேலிய-பலஸ்தீனப் போர்?
–பாஸ்கர் செல்வராஜ்
உக்ரைன் போரினை அடுத்து, அமெரிக்க மைய ஒற்றைத்துருவ உடைப்பு மேகமெடுத்து ரஷ்ய-சீன நாடுகளை மையப்படுத்திய பல்துருவ உலகம் உருவானது. மேற்காசிய நாடுகள் இவர்களின் பக்கம் சாயத்தொடங்கின. இதனைத் தடுக்க சவுதி, துருக்கி ஆகிய இஸ்லாமிய நாடுகளை இஸ்ரேலுடன் பொருளாதார ரீதியாக இணைத்து அதன் இருப்பை உறுதிசெய்து எதிரணியுடனான இணைவை உடைக்கும் நகர்வைச் செய்தது அமெரிக்கா.
இந்நிலையில் நடந்த ஹமாஸின் தாக்குதல் இஸ்ரேலின் வலிமையான பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கி இப்பிராந்தியத்தில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனிமைப்படுத்திய அதேவேளை மேற்காசிய நாடுகளை ஒன்றாக ஒருங்கிணைத்திருக்கிறது.
தனிநாடா? இனச்சுத்திகரிப்பா?
இந்தப் பிராந்தியத்திற்கு வெளியில் பலஸ்தீனர்களின் தனிநாட்டு உரிமையை உலக அரசியல் அரங்கின்முன் கொண்டுவந்த சீன-ரஷ்ய-ஈரானிய அணி நேட்டோவின் அரசியல் ஒற்றுமையை உடைக்கும் அரசியலைச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் உதவியுடன் ஐரோப்பியர்களின் அரசியல் ஆதரவை உறுதிசெய்து கொண்ட இஸ்ரேல் ஹமாஸை முற்றிலுமாகக் கொன்றொழித்துத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அதேவேளை பலஸ்தீன மக்களைக் காஸாவில் இருந்து அகதிகளாக விரட்டி தனிநாடு கேட்க ஆளில்லாமல் அந்த இனத்தையே அந்தப் பகுதியில் இருந்து துடைத்தெறியும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இது இந்தப்போர் இனச்சுத்திகரிப்பில் முடியுமா? இல்லை பலஸ்தீனர்களுக்கான தனிநாடு உருவாகுமா? என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் எது நடக்கும் என்று ஆருடம் சொல்லமுடியாது என்றாலும் நடப்பு இராணுவ, பொருளாதார அரசியல் சூழலை பகுத்தாய்ந்து இந்தப்போர் எந்த திசையில் செல்கிறது என அறிந்துகொள்ள முயலலாம்.
பலஸ்தீனர்களுக்கான தனிநாடு அவர்களின் பிறப்புரிமை. இஸ்ரேலிய யூதர்கள் அவர்களின் இடத்தை அநீதியாக ஆக்கிரமித்ததோடு நில்லாமல், அவர்களை இனச்சுத்திகரிப்பும் செய்ய முயல்வது போர்க்குற்றம். இந்த அநீதியான ஆக்கிரமிப்புக்கு அரசியல் அரணாக நிற்பதோடு வளமான மேற்காசியாவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கு ஆயுதங்களும் கொடுத்து ஆதரித்து நிற்கிறது அமெரிக்க நேட்டோ அணி.
முற்றுமுழுதாக அறம் சார்ந்து நிற்கவில்லை என்றாலும் அவரவர் நலன் சார்ந்தேனும் மற்ற உலக நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு அரசியல் ஆதரவு அளிப்பது ஆறுதல். அப்படியே அறம் சார்ந்து ஆதரித்தாலும் அதனால் அரசியல் தீர்மானிக்கப்பட இது புராதன பொதுவுடைமை காலமோ இங்கே வாழ்வது சோசலிச சமூகங்களோ அல்லவே! இது ஆயுதங்களால் அரசியலைத் தீர்மானிக்கும் வர்க்கச் சமூகங்களாலான முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டம் அல்லவா.
வியட்நாமும் ஸ்டாலின்கிராட்டும் கலந்த காஸா
தற்கால ஆயுதங்களின் வலிமையில் அரசியலைத் தீர்மானிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை அளிக்கும் நிலையில் பலஸ்தீனர்களுக்கு அரசியல் ஆதரவு அளிக்கும் எவரும் (ஈரானின் அடிப்படையான ஆயுதங்கள் தவிர) ஆயுத உதவி அளிக்கவில்லை. அமெரிக்காவின் நவீன ஆயுதங்களோடு மூன்றரை இலட்சம் படைவீரர்களைத் திரட்டி இருக்கும் இஸ்ரேலை வெறும் துப்பாக்கிகளையும் எறிகணைகளையும் முப்பது முதல் நாற்பது ஆயிரம் போராளிகளையும் கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம் வழமையான முறையில் எதிர்த்துப் போரிடுவது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று.
எனவே அவர்கள் இயல்பாகவே கொரில்லா போர்முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். மறைந்திருந்து தாக்குவதற்கு இங்கே காடு, மலைகள் இல்லை. மக்கள் நெருக்கமும் கட்டிடங்களும் நிறைந்திருக்கும் இந்தச் சிறிய பகுதியில் மண்ணுக்கு அடியில் 400 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகச் சுரங்கங்களைத் தோண்டி (படத்தில் கிறுக்கப்பட்ட பகுதி) உள்ளே நுழையும் இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்கொள்கிறது ஹமாஸ்.
இந்தக் கட்டிடங்களும் சுரங்கங்களும் கலந்த நகர்புறப் போரின் தன்மைக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவின் வியட்நாம், ஜெர்மனியின் ஸ்டாலின்கிராட் ஆகிய இரண்டு போர்களும் கலந்த கலவை எனலாம். சுரங்கங்களில் பதுங்கியிருந்து தாக்கிய வியட்நாமியர்களிடம் அமெரிக்கா வீழந்ததையும் நகரின் ஒவ்வொரு கட்டிடத்திலும் பதுங்கியிருக்கும் எதிரியை வீழ்த்துவது எவ்வளவு சிக்கலானது என்பதை அன்றைய ஸ்டாலின்கிராட் முதல் இன்றைய சிரியாவின் அலெப்போ மற்றும் உக்ரைனின் பக்முத்தில் கண்டோம். இவ்வளவு சிக்கலான போரில் இறங்குவதற்கு முன்பாக போரிட ஆட்களைத் திரட்டுவதோடு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏராளமான தயாரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்.
இருவரின் நோக்கம் என்ன?
இந்தத் தயாரிப்பு வெறும் ஆட்கள், ஆயுதங்கள் தொடர்பானது மட்டுமல்ல; அரசியலும் சார்ந்தது. ஏனெனில் போர் என்பது துப்பாக்கி முனையில் செய்யப்படும் அரசியல். அந்த அரசியல் சமூகத்தின் பொருளாதார நலனை முதன்மையாகக் கொண்டது. தற்போதைய முதலாளித்துவ வர்க்க சமூகத்தில் உடைமையாளர்களின் நலனை முன்னிறுத்தி செய்யப்படும் போர் மக்களிடம் இருந்து செல்வத்தைப் பிடுங்கி இவர்களிடம் குவிப்பதாகவும் உழைப்பவர்களை முன்னிறுத்தி செய்யப்படும் போர் உடைமையாளர்களிடம் இருந்து செல்வத்தைப் பிடுங்கி மக்கள் பகிர்ந்து கொள்வதாகவே இருக்கும்.
இந்தப் பலஸ்தீன-இஸ்ரேலிய போர் வெளிப்பார்வைக்கு யூத-அராபிய இனச்சமூகங்களுக்கு இடையிலான போராகத் தெரிந்தாலும், இது அடிப்படையில் அந்தப் பகுதியில் குவிந்திருக்கும் எண்ணெய் எரிவாயு வளங்களைக் கைப்பற்றவும் அதனை ஐரோப்பிய சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான வழியாக மாற்றி கிடைக்கும் செல்வத்தைக் குவிக்கும் நோக்கமும் கொண்டது.
இந்த வகையில் இஸ்ரேலின் போர் ஆளும்வர்க்கத்திடம் செல்வத்தைக் குவிக்கும் ஆதிக்கத்துக்கானது. ஹமாஸின் போராட்டம் அதனைத் தடுத்து தனிநாடு பெற்று அதன் பலனைத் தனக்கும் தன் மக்களுக்குமானதாக மாற்றும் நோக்கம் கொண்டது. இந்த இருவருக்கும் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் அமெரிக்க நேட்டோ அணிக்கும் ஈரான்-கட்டார்-ரஷ்ய-சீன அணிக்கும் இந்த செல்வத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலனைப் பகிர்ந்து கொள்வதே அடிப்படை நோக்கம்.
இந்த வளத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் இஸ்ரேல் வெற்றிபெற இந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றி ஆயுதம் தாங்கி தடுத்துக் கொண்டிருக்கும் ஹமாஸை அழித்தொழிக்க வேண்டும். ஹமாஸின் வெற்றி இஸ்ரேல் தனது நோக்கத்தில் தோல்வியடைந்து பின்வாங்குவதும் தனிநாடு அமையும் அரசியல் சூழலை ஏற்படுத்துவதுமாகவே இருக்கும்.
வரம்பிட்டுக் கொண்ட அமெரிக்காவும் ஈரானும்
ஹமாஸின் தாக்குதல் இஸ்ரேல்-துருக்கி-சவுதி எரிபொருள் பொருளாதார ஒப்பந்தங்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் முதல்கட்ட வெற்றியைப் பதிவு செய்தது. நீர், உணவு, எரிபொருள், மருந்துகளை உள்ளே நுழைய மறுத்து கட்டிடங்களைக் குண்டு வீசி தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் நோக்கம் மக்களை அகதிகளாக எகிப்தின் எல்லைக்கு விரட்டுவது, கட்டிடங்களில் பதுங்கியிருந்து தாக்கும் வாய்ப்புகளைக் குறைப்பது ஆகியன. காஸா நகர மக்கள் வெளியேற மறுத்ததோடு எகிப்தும் வலுக்கட்டாயமான இடப்பெயற்சியைப் போர்ப்பிரகடனமாகக் கருதும் என அறிவித்து இஸ்ரேலின் முயற்சியைத் தோல்வியடைய வைத்தன. அடுத்து இஸ்ரேல் தனது குறிக்கோள்களை எட்ட காஸாவுக்குள் நுழையும் நடவடிக்கைகளை எடுத்தது.
காஸாவுக்குள் நுழைந்தால் போரின் எல்லையை மற்ற பகுதிகளுக்கும் எதிர்ப்பியக்கம் விரிவுபடுத்தும் என ஈரான் மிரட்டியது. அதையும் மீறி இஸ்ரேல் உள்ளே நுழைந்ததும் லெபனான், ஈராக் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய அமெரிக்க நிலைகளின் மீதான தாக்குதல் தொடங்கியது. பதிலுக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களைக் கொண்டுவந்து நிறுத்தி மிரட்டியது. இறுதியில் ஈரானும், அமெரிக்காவும் நேரடியாக இந்தப்போரில் பங்கேற்பதில்லை; போரின் வரம்பை இந்தப் பிராந்தியம் முழுவதுக்கும் நீட்டிப்பதில்லை என பின்வாசல் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இஸ்ரேல்-லெபனான் எல்லையிலும் காஸாவுக்குள்ளும் போர் தொடர்ந்தது.
போர்நிறுத்த அரசியல் வெற்றி யாருக்கு?
பெரும்பகுதி இராணுவத்தைக் கொண்டு முக்கிய நகர்ப்புற பகுதியான வடக்கை சுற்றிவளைத்த இஸ்ரேல் அங்கிருந்த மக்களைத் தெற்கு நோக்கி விரட்டியடிப்பதில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் உள்ளே மேலும் நுழைந்து தாக்கும்போது பிணையக்கைதிகளும் கொல்லப்படலாம் என்ற சூழல்; ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரியின் வேகமான இராணுவ முன்னேற்றத்தைத் தடுத்து தனது அரசியல் ஆதரவைப் பலஸ்தீனத்துக்கு உள்ளும் வெளியிலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை. இந்த இரண்டும் சேர்ந்து இடைக்கால போர்நிறுத்தத்தையும் அரசியல் கைதிகளையும் பிணையக்கைதிகளையும் விடுவிக்கும் ஒப்பந்தத்தைச் சாத்தியமாக்கியது .
நல்லமுறையில் நடத்தப்பட்டு விடுதலையான இஸ்ரேலிய பிணையக்கைதிகள் ஹமாஸ் குழந்தைகளை களனில் வைத்து வருத்தியது; பெண்களை வன்புணர்ந்தது போன்ற இஸ்ரேலால் பரப்பப்பட்ட பொய்களை அம்பலமாக்கி உலக அரங்கில் அதற்கான ஆதரவைக் கூட்டியது. ஈடாக சட்டவிரோதமாக இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்ட மேற்குகரை (west bank) பலஸ்தீனக் கைதிகளின் விடுதலையைக் கோரிப் பெற்றது அந்தப் பகுதியில் ஹமாஸுக்கு அரசியல் ஆதரவைக் கூட்டியது. அதேசமயம் மருத்துவமனைக்கு கீழே ஹமாஸின் இராணுவ ஒருங்கிணைப்பு மையம் இயங்குவதாகக் கூறி அதன்மீது தாக்குதல் நடத்தி இறுதியில் அதற்கான பொய்யான ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல் உலக அரங்கில் அம்பலப்பட்டு கண்டனத்துக்குள்ளானது.
இரண்டாம் கட்ட வெற்றியில் ஹமாஸ்
பின்னர் போர்நிறுத்தத்தைத் தொடர உலக நாடுகள் விடுத்த வேண்டுகோளைப் புறம்தள்ளி தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேலிய இராணுவம் அதிக அளவில் பீரங்கிகளையும் ஆட்களை எதிரிச்செல்லும் வண்டிகளையும் உயரிழப்பையும் எதிர்கொண்டது. இதுவரை 400 டாங்கிகளை செயலிழக்கச் செய்திருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. இஸ்ரேல் 444 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 2000 வீரர்கள் உடல் உறுப்புகளை இழந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறது.
உண்மையான இழப்பு இதனைப்போல சிலமடங்கு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இழப்புகளும் உலக நாடுகளின் அழுத்தமும் இஸ்ரேல் தனது இலக்கை வேகமாக எட்டவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கவே அங்கிருந்து எழுபது விழுக்காடு படையை விலக்கிக் கொண்டு சுரங்கங்கள் குறைவாக இருக்கும் தெற்குப் பகுதியில் இருக்கும் கான் யூனிசின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இதன்மூலம் ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கத்தை இரண்டாம் பட்சமாக்கி அது பலகீனமாக இருக்கும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களை அகதிகளாக வெளியேற்றும் நோக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படிக் காஸாவின் எல்லா பகுதிகளையும் குண்டுவீசி தரைமட்டமாக்கி வரும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க இடமில்லாமல் செய்து போரை எல்லா பகுதிகளுக்கும் விரிவாக்கி இருப்பதால் போக்கிடமற்ற பொதுமக்கள் பதினெட்டாயிரத்துக்கும் அதிகமாக இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்; ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இஸ்ரேல் தரப்பில் ஒக்ரோபர் ஏழன்று ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர வேறு உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
காஸாவுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்து ஐம்பது நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், அதன் அறிவிக்கப்பட்ட நோக்கமான ஹமாஸைக் கொன்றொழிப்பது; அறிவிக்கப்படாத நோக்கமான மக்களை அங்கிருந்து அகதிகளாக வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்வது ஆகிய இரண்டிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதுவரை ஐந்தாயிரம் ஹமாஸ் போராளிகளைக் கொன்றிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
அது உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், இன்னும் 25,000-35,000 போராளிகள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான கொரில்லாப் போர்முறையில் எதிரியை தனது நோக்கத்தை எளிதில் அடையாவிடாமல் செய்து போரை நீட்டித்திருப்பதன் மூலம் ஹமாஸ் தனது இரண்டாம் கட்ட வெற்றியைப் பெற்று வருகிறது. ஆனால் அடுத்து போர்நிறுத்தம், படைவிலக்கம், தனிநாடு பேச்சுவார்த்தை என பல கட்டங்களை ஹமாஸ் தாண்டவேண்டும்.
அப்படி எதுவும் நடக்காமல் கடுமையான போர் நீடிப்பது, இருதரப்புக்கும் உயிரிழப்பை அதிகரிக்கச் செய்வதோடு பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தும். அது உள்ளூர் உலக மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தி அரசியல் அழுத்தமாக மாறும்போது இருவரில் ஒருவர் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
இருதரப்பினரில் யாருக்கு மக்களின் அரசியல் ஆதரவு வலுவாக இருக்கிறது? யார் அதிக பொருளாதார இழப்புகளைச் சந்திக்கிறார்கள்? எதிர்ப்பியக்கம் எப்படி அதனை அதிகப்படுத்தி வருகிறது? அதனால் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பகுதி 1: ஹமாஸ் தாக்குதலின் நோக்கமென்ன?
பகுதி 2: ஹமாஸ் தாக்குதல் – அதிர்ச்சி ஓலத்தில் குமைந்த ஆதிக்கவாதிகள்
பகுதி 3: இஸ்ரேல் – ஹமாஸ் : தாக்குதல் நோக்கமும் அரசியல் வியூகமும்!