ஹமாஸ் தாக்குதலின் நோக்கமென்ன?

பாஸ்கர் செல்வராஜ்

டந்த ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால்தான் இந்தப் பலஸ்தீன – இஸ்ரேலியப் போர் வெடித்துக் கிளம்பியிருப்பதாகவே பெரும்பாலோர் பார்க்கின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் யூதர்கள் குடியேறியது முதலே இந்த மோதல் நடந்து வருகிறது என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. குடியேறியது முதல் இஸ்ரேலிய இராணுவமும் யூதக் குடியேறிகளும் அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்தியும் ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் விரட்டியடித்துவிட்டு தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்வதும் அதற்கு எதிராக இவர்கள் போராடுவதும் என இடைவிடாமல் சிறியதும் பெரியதுமாக மோதல் நடந்துகொண்டேதான் இருந்தது. இந்த அவலத்தைக் கண்டும் காணாமல் உலகம் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டதாலேயே அங்கே அமைதி நிலவியதாகாது. அந்த வகையில் இது முடியாத போரின் தொடர்ச்சி.

இனம் பார்த்துத் துடிக்கும் இதயங்கள்

இதுவரையிலும் இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் குழந்தைகளும் உயரிழந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது மட்டும் ‘ஐயகோ… வன்முறை, தீவிரவாதம், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு’ என்று மேற்குலகினர் ஏன் அலறினார்கள்? ஏனெனில் அவையெல்லாம் முன்பு நாஜிக்களால் வதை முகாமில் வைத்து வதைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் இரும்பு வேலியிட்டு பலஸ்தீனியர்களுக்காக உருவாக்கிய அந்த திறந்தவெளி வதை முகாமுக்குள் நடந்தது. செத்து மடிந்தது பெரும்பாலும் அங்கே இஸ்ரேலியர்களால் வதைக்கப்படும் பலஸ்தீன மக்களாக இருந்தார்கள். அதற்கு மாறாக இம்முறை இஸ்ரேலியர்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடந்ததும் உயிரிழப்பு இருபுறமும் அதிகமாக ஏற்பட்டதும்தான் இவர்களின் குமுறலுக்குக் காரணம் என்பதை ‘தி இந்து’வில் வெளியான புள்ளி விவரப்படம் விளக்குகிறது:

இதுவரையிலும் அமெரிக்கர்களின் துணையுடன் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்கி மக்களைக் கொன்றும் படுகாயங்களை ஏற்படுத்தியும் வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிரான பலஸ்தீனியர்களின் போராட்டம் கற்களை எறிவதாகவும், கோபத்தில் தாக்கிவிட்டு ஓடுவதாகவும், உச்சமாக விரக்தியில் பழைய எளிமையான ஆயுதங்களைக் கொண்டு எதிரிகள் ஓரிருவரைக் கொன்றுவிட்டு உயிரை விடுவதாகவுமே இருந்து வந்தது. ஆனால் இம்முறை ஹமாஸின் தாக்குதல் இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பக் கைப்பற்றுவதாகவும் எதிரிகளைப் பெருமளவில் உயிரைவிட்டு அதிர்ச்சி ஓலமிட்டு ஓடவைப்பதாகவும் இருந்தது.

இஸ்ரேலிய தடுப்பும் பலஸ்தீன உடைப்பும்

நாற்புறமும் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு இடைவிடாத கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த காஸா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு எப்படி இவ்வளவு ஆயுதங்கள், நுட்பங்கள், பயன்படுத்துவதற்கான பயிற்சி என்பது பலருக்கும் புரியாத புதிர். வியட்நாமியர்கள் எலி வளைகளைப் போல கிலோமீட்டர் கணக்கில் சுரங்கங்கள் அமைத்து அமெரிக்கர்களுக்கு எதிராகப் போராடியதுபோல பலஸ்தீனியர்களும் சுரங்கங்கள் அமைத்து தங்களுக்குத் தேவையான பொருட்களையும், ஆயுதங்களையும், பயிற்சியையும் பெற்று வந்தனர்.

அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நேரடி மோதலுக்குப் பதிலாக எட்டியிருந்து வான்வழியாக எதிரிகளைத் தாக்கி தமது உயிரைக் காத்துக் கொள்வதில் ஏவுகணைகளின் பங்கு முக்கியமானது. அதில் ஏவுகணை பாய்ந்து செல்ல வேண்டிய தூரமும் தாங்கிச்செல்லும் வெடிமருந்தின் வீரியமும் தீர்மானகரமானது. எதிரிக்கு மிக நெருக்கமாக வாழும் பாலஸ்தீனியர்கள் குறைவான தூரமே பாய்ந்து தாக்கும் சிறிய ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவது சுலபம். அப்படியான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் துல்லியமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான இரும்புக் கவிகையை (Iron dome) உருவாக்கி அவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது என்று இருமாந்திருந்தனர் இஸ்ரேலியர்கள். அதனால் பெற்ற பாதுகாப்பு உணர்வில் பலஸ்தீனியர்களை அது பந்தாடுவதை இரவில் கேளிக்கை நிகழ்ச்சியைப்போல பார்த்து மகிழ்ந்தனர் இஸ்ரேலியக் குடியேறிகள்.

இம்முறை சாதாரண இரும்புக் குழாய்களை எறிகணைகளாக மாற்றிய பலஸ்தீனியர்கள் ஐந்தாயிரம் மலிவான எறிகணைகளை இருபது நிமிடங்களில் ஏவி அந்த விலைமதிப்புமிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஈக்களைப்போல பறந்து வரும் இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செய்து செயலற்றதாக்கினர். அதி உயர் தொழில்நுட்பத்தைத் தமது மதிநுட்பத்தால் வென்றனர். இதனோடு சந்தையில் மலிவாகக் கிடைக்கும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு எல்லையில் இஸ்ரேலியர்கள் ஏற்படுத்தி இருந்த கண்காணிப்பு படப்பிடிப்புக் கருவிகளை மின்னல் வேகத்தில் செயலிழக்கச் செய்து அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி இரும்புத் தடுப்புகளைத் தகர்த்து உள்ளே புகுந்தனர்.

எதிர்பார்க்காத முப்புற தாக்குதல்

பெரிய வாகனங்களில் ஒன்றாக நுழைந்தால் எளிதாக ஒற்றைத் தாக்குதலில் மொத்தமாக முடித்து விடுவார்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் எல்லா பக்கமும் சிதறிச்சென்று அவர்களின் இராணுவ நிலைகளைத் தாக்கினர். ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு செயலிழக்கும் வரை காத்திருந்த மற்றொரு அணி சிறிய விசைப்பொறி பொருத்தப்பட்ட வான்குடை மிதவையில் (Parachute) தன்னுடலையே ஏவுகணையாக்கி எதிரியின் இராணுவ நிலைகளுக்குப் பின்புறம் இறங்கி இஸ்ரேலிய இராணுவத்தின் மீது பாய்ந்தனர். படகுகளில் தயாராக நின்ற மற்றோர் அணி கடல்வழியாகத் தாக்குதலைத் தொடுத்து இஸ்ரேலிய இராணுவத்தைச் ஒருங்கிணைய விடாமல் சிதறடித்தது. எதிர்ப்படும் வலுவான நவீன மெர்கவா பீரங்கிகளை சொந்தமாக வடிவமைத்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களைக் கொண்டு வெடித்துச் சிதற வைத்தனர்.

இவற்றை எல்லாம் உலகின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுவந்து எதிரி கட்டமைத்திருந்த பெரியண்ணன் மாயையை உடைத்து அவர்களை உளவியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். இருதரப்புக்கும் இடையிலான போரில் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்பைத் திட்டமிட்ட படுகொலையாகத் திரிக்க முனைந்த எதிரியின் திரிபுத்தகவல் தாக்குதலைத் தெளிவாக எதிர்கொண்டதோடு அப்படிப் பரப்பும் தளங்களையும் தாக்கி முடக்கி தங்களின் தகவல் தொழில்நுட்ப வலிமையையும்  காட்டினார்கள். நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டவர்கள் இவ்வளவு ஆயுதங்களுடன் கச்சிதமாகத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து தரை, கடல், வான்வழி என முப்புறங்களின் வழியாகவும் தொழிற்முறை இராணுவத்துக்கு ஒப்பான கட்டுப்பாட்டுடன் நடத்திய இந்தத் தாக்குதல் அனைவரின் புருவங்களையும் உயரச் செய்வதாக இருந்தது.

பலகீனத்தைக் கச்சிதமாகக் கணித்த ஹமாஸ்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்பாராத விதமாக தாக்கிய யோம் கிப்புர் போர் தொடங்கிய அதே நாளில் ஹமாஸ் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததை ஊடகங்கள் குறிப்பிட்டு பேசின. ஆனால் அரசியல் ஆர்வலர்கள் அதைவிட முக்கியமான சில காரணங்களை அடுக்குகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரதமர் நெதன்யாகு சிறை செல்வதைத் தவிர்க்க தீவிர மதவாதிகளுடன் இணைந்து கூட்டணி அரசை ஏற்படுத்தினார். இந்தக் கூட்டணி “இஸ்ரேலை எப்போதும் யூதர்களுக்கான நாடக்கவும்” யூதர்கள் என்பவர்கள் “யூத மூதாதையர்களைக் கொண்டவர்களாக மட்டுமல்ல; யூத மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும்” என்பதாக அரசியல் சட்டத்தைத் திருத்த முற்பட்டது. கூடவே உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கூட்டவும் திருத்தத்தை கொண்டு வந்தது. இது மேற்குலகத்துடன் முரணைக் கொண்டு வந்ததோடு அங்குள்ள அதிகார வர்க்கத்தையும் பிளவுபடுத்தி ராணுவ வீரர்கள் தமது பணிக்குத் திரும்ப மறுத்து போராட்டம் நடத்தினர்.

உக்ரைன் போரை நீட்டித்து ரஷ்யாவை பலகீனப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்தது அமெரிக்கா. அதில் உற்பத்தி வலிமை கொண்ட ரஷ்யா தாக்குப் பிடித்தது. உற்பத்தியை ஆசியாவுக்கு மாற்றிவிட்ட மேற்கால் ஈடுகொடுக்க முடியாமல் அவர்களின் ஆயுத இருப்பு தரையைத் தட்டியது. அதைச் சமாளிக்க ஆசிய அணிகளான இஸ்ரேல், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த ஆயுதங்களை உக்ரைனுக்குக் கொடுத்து வந்தது அமெரிக்கா. சமீபத்தில் பெருமளவில் ஆயுதங்களைச் சேகரித்து உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்க மேற்கொண்ட தாக்குதலும் பெரும் உயிரிழப்புடன் தோல்வியில் முடிந்தது. தோல்வி முடிவாகிவிட்ட அந்தப் போருக்கான நிதியை வெட்டினால்தான் அமெரிக்க அரசின் கடன் அளவை உயர்த்த ஒப்புக்கொள்வோம் என்று குடியரசுக் கட்சியினர் அடம்பிடித்தனர். இறுதியில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவைத்தலைவருடன் கொல்லைப்புறமாக இரகசிய ஒப்பந்தம் செய்தார் அதிபர் பைடன். கடுப்பான குடியரசுக் கட்சியினர் அவைத் தலைவரான கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்கம் செய்தனர். அமெரிக்க அவை அலுவல்கள் முடங்கின. இஸ்ரேலும் அதன் இணையான அமெரிக்காவும் அரசியல் நெருக்கடியிலும் ஆயுத பற்றாக்குறையிலும் சிக்கி கூச்சல் குழப்பத்துக்கு ஆட்பட்ட சமயத்தைச் சரியாக கணித்து ஹமாஸ் வெற்றிகரமாக இந்தத் தாக்குதலை  நடத்தி முடித்தது.

தொடரும்…

Tags: