இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்கள்; வலுக்கும் எதிர்ப்புகள்!

-சாவித்திரி கண்ணன்

பா.ஜ.க அரசால் மாற்றப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் எளிய மக்களை, ஒடுக்கப்பட்டவர்களை கடுமையாக பாதிக்கும். இந்திய அரசியல் சட்டம் உத்திரவாதப்படுத்திய சமூக சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் இரண்டையும் இது பறிக்கும். காவல்துறையின் அத்துமீறல்களுக்கு வலு சேர்க்கும்.

நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்திய தண்டனைச் சட்டம், 1860, இந்திய சாட்சியச் சட்டம், 1872 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று புதிய மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. சமஸ்கிருத சொல்லாடலைக் கொண்ட பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, ( பி.என்.எஸ்-ஐபிசி), பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் மசோதா, (BSA-IEA)  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா (BNSS-CrPC) ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மூன்று மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  டிசம்பர் 12 ஆம் திகதி அறிமுகம் செய்தார்.  இதற்கிடையில் இந்த விவாதங்களை தொடர் இயலாமல் அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் மஞ்சள் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த மசோதா ஆளுங்கட்சியின் எண்ணிக்கை பலத்தால்  குரல் வாக்கெடுப்பு மூலம், டிசம்பர் 21 இல் எதிர்கட்சி உறுப்பினர்களற்ற நிலையில், நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்றைய தினம் டிசம்பர் 25 ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், 140-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சூழல் எதிர்ப்புகளின்றி இந்த மசோதா நிறைவேறுவதை எளிதாக்கிவிட்டது.

முன்னதாக இந்த மூன்று குற்றவியல் மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிசம்பர் 20ந் திகதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”கொடூரமான மூன்று குற்றவியல் மசோதாக்களை எந்த முன் அறிவிப்பும் இன்றி உள்துறை அமைச்சர் மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறார். இந்த மசோதாக்கள் குறித்து சட்ட ஞானம் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களைத் தெரிவிக்க இடம் அளிக்காமல் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் டிசம்பர் 21 நிறைவேற்றப்பட உள்ளது. இரு அவைகளில் இருந்தும் 144 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி இப்போது உங்களுக்குத் தெரியும்” என குறிப்பிட்டு இருந்தார்.

“இந்த மூன்று குற்றவியல் மசோதாக்கள் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன” என்று காங்கிரஸ் எம்பி, மணீஷ் திவாரி தெரிவித்து இருந்ததும் குறிப்பிடதக்கதாகும்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டிசம்பர் 20 இல் கூட்டிய ‘இண்டியா’ கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின! திருத்தப்பட்ட குற்றவியல் மசோதக்களை எதிர்க்கும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள், ‘அதில் உள்ள சில சரத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக காவல்துறையின் ஆட்சிக்கு வழிவகுக்கும்’ என எச்சரித்ததாக செய்திகள் வெளிவந்தன! மேலும், புதிய குற்றவியல் மசோதாக்களை எதிர்த்து வழக்கு தொடுக்க’இண்டியா’ கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவலும் வெளியானது!

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்ட நிபுணருமான ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில், மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியைக் அறிகிறோம். இந்தப் புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் கொடூரமானது. ஏழைகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக இந்தச் சட்டம் அடக்குமுறைக் கருவியாக மாறும். பெரும்பாலான கைதிகள் (விசாரணையின் கீழ் உள்ளவர்கள் உட்பட) ஏழைகள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அரசியலமைப்புக்கு முரணான மற்றும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் பல விதிகள் இருக்கின்றன. புதிய தண்டனைச் சட்டம் மற்றும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பாதிப்பை ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் அதிகம் சுமக்க நேரிடும். புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சரியான சட்ட செயல்முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, சுதந்திரம் (freedom) மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் (personal liberty) ஆகியவற்றைக் கடுமையாகக் பாதிக்கும் பல விதிகள் இருக்கின்றன. காவல்துறை ஒரு சிறைக் கைதிக்கு 60 முதல் 90 நாட்கள் வரை காவலை நீட்டிக்க முடியும் என்ற புதிய விதி, காவல்துறையின் அத்துமீறலுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே, 2024-ம் ஆண்டில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முதலில் இந்தச் சட்டங்களை மறு ஆய்வு செய்து, இந்த கடுமையான விதிகளை அகற்ற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த புதிய தண்டனைச் சட்டங்கள் குறித்து ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டமையாவது;

நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரங்களை பறிக்கவும், ஜனநாயகத்தை அழிக்கவும் இவை வழிவகை செய்கின்றன! முன்னரே இதற்கு கடுமையான ஆட்சேபனைகள் எதிர்கட்சிகளிடம், சமூகத் தளத்திலும் வெளிப்பட்ட நிலையிலும் கூட நமது அரசியலின்  தோற்றத்தை ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாற்றும் தன்மையுள்ள 12 சட்ட மாற்றங்கள் செய்துள்ளனர். மாற்றுக் கருத்தை முடக்கவும், எதிர்ப்பை மூர்க்கமாக அழிக்கவும், மற்றும் பொது உரையாடலை சாத்தியமற்றதாக ஆக்கவும் இவை வழி வகை செய்கின்றன!  இதன் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்க மறுக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்குத் தொடுப்பது, சிறையில் அடைப்பது ஆகியவற்றை எளிமைபடுத்தி உள்ளனர்.

Tags: