அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல, அரசியல் மட்டுமே!
-ராஜன் குறை
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோயில் ஒன்று கட்டப்பட்டு, முடிந்தும் முடியாத நிலையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படப் போகிறது. இந்தக் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி நாலரை அடி உயரமுள்ள குழந்தை ராமர் சிலை “பிராண பிரதிஷ்டை” செய்து நிறுவப்படப் போகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று உறுதியாகத் தெரிகிறது. தெய்வச் சிலையை நிறுவுவதிலோ, கோயில் குடமுழுக்கு போன்ற மதம் சார்ந்த சடங்குகளிலோ முக்கியமான இந்து மத துறவிகளோ, ஆச்சாரியார்களோ முன்னிறுத்தப்படுவதாகத் தெரியவில்லை. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட இந்து மதப்பிரிவின் சம்பிரதாயங்களின்படி இந்தக் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் நடக்கின்றன என்பது தெளிவாக இல்லை.
பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பின் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிசயமான ஒரு தீர்ப்பை வழங்கியது. அது குழந்தை ராமருக்கு சொந்தம் என்று ஒரு சாராரின் நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கி, அதுவரை அந்த நிலத்தின் உரிமையாளர்களாக இருந்த இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிர்வாகத்தினரிடமிருந்து கையகப்படுத்தி மத்திய அரசிடம் அளித்தது. அங்கே ராமர் கோயில் கட்ட ஒரு டிரஸ்ட்டை உருவாக்கி, அங்கே கோயில் கட்ட வகை செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
இது டைட்டில் டீட் எனப்படும் நிலம் யாருடைய சொத்து என்ற வழக்கில் வழங்கப்பட்ட விநோதமான தீர்ப்பு எனலாம். நில உடைமை சார்ந்த ஆதாரங்களைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு சாராரின் நம்பிக்கை என்பதற்கு அதிக மதிப்பளித்து, பிரச்சினையைத் தீர்க்க வேறு வழியில்லை என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு இது.
அதன்படி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா என்ற பெயரில் ஒரு டிரஸ்ட் 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் ராமருக்காக வழக்காடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.பராசரன் அதன் இடைக்காலத் தலைவராக்கப்பட்டார். பின்னர் அயோத்தியிலுள்ள வேறொரு ராமர் கோயில் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அதன் தலைவராக்கப்பட்டார். அந்த டிரஸ்ட் இப்போது கோயிலை ஓரளவு கட்டிமுடித்து ஜனவரி 22 ஆம் திகதி அங்கே ராமரை பிரதிஷ்டை செய்யப் போகிறது. அதற்கு ஏறக்குறைய 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களில் பக்தர்கள் யாரும் நிகழ்ச்சியன்று அங்கே வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
பூரி சங்கராச்சாரியாரின் எதிர்ப்பு!
ராமர் கோயில் கும்பாபிஷேகம் சாத்திரங்களின்படி நடக்கவில்லை என்பதற்கான முதல் கண்டனம் பூரி சங்கராச்சாரியாரிடமிருந்து எழுந்துள்ளது. அவர் அந்த நிகழ்வுக்குச் செல்லப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். நரேந்திர மோடி மதச்சார்பற்றவராக இல்லாமல், துணிந்து கோயில் திறப்பு விழாவை நட த்துவதை பாராட்டும் அவர், அதே சமயம் பிரதமரே ராமர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தால் நான் அதைப் பார்த்து கைதட்ட வேண்டுமா என்றும் கேட்டுள்ளார்.
அவரைப் போன்று ஆச்சாரியார்கள் பலரும் வரும் காலங்களில் எதிர்ப்பைக் கூறலாம் அல்லது அவரும் கூட சமாதானப்படுத்தப்படலாம். ஆனால், அவருடைய எதிர்ப்பிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அவரைப்போன்ற ஆச்சாரியார்களிடம் சடங்குகளை எப்படிச் செய்வது, யார் செய்வது என்பது போன்ற அம்சங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை.
இந்து கோயில்களில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்வது என்பது மிக முக்கியமான சடங்காகும். அனைவராலும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க மடாதிபதி ஒருவரே அதைச் செய்யும் தகுதி படைத்தவர் என்பதுடன் எந்த மதப்பிரிவின் சடங்குகள் பின்பற்றப்படப் போகின்றன என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும்.
ஆனால் எதிர்வரும் நிகழ்வில் இதுபோன்ற அம்சங்களில் தெளிவில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் முக்கிய பங்கெடுக்கும் அரசியல் நிகழ்ச்சியாக உள்ளதே தவிர, ஒரு சனாதன மதம் சார்ந்த நிகழ்வாக அது இல்லை. நாட்டின் பிரதமரே ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்வித்தால் நாட்டின் மதச்சார்பின்மை என்னவாகும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய சங்க பரிவார் அமைப்புகளின் வெற்றி விழா கொண்டாட்டம் என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று அவர்கள் சதி செய்து இரவோடு இரவாக மசூதி வளாகத்தினுள் கொண்டு போய் வைத்த ராமர் சிலை, அதையொட்டி செய்த பிரச்சாரங்கள், புரளிகள், மதக்கலவரங்கள், சட்டத்தை மீறி வரலாற்று சின்னமான பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது ஆகிய அனைத்துச் செயல்களும் இறுதியில் இந்தக் கோயில் திறப்பு விழாவில் பூர்த்தி அடைவதை கொண்டாடுகிறார்கள்.
இந்தியா கூட்டணியின் தடுமாற்றம்!
அப்பட்டமான இந்த அரசியல் நிகழ்ச்சியில் தெளிவாக பங்கு கொள்ள மறுத்திருப்பது சீதாராம் எச்சூரியும், சி.பி.ஐ (எம்) கட்சியும் மட்டும்தான். இது மிகவும் பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சி முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. பீஹாரிலும், கர்நாடகாவிலும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்குள் தெளிவான கருத்தொப்புமை இல்லை. இவர்களது இத்தகைய பலவீனமே பா.ஜ.க இந்த அளவு வளர்வதற்குக் காரணம். கொள்கைப் பிடிப்பு இல்லாமல் அரசியல் செய்தால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது.
பீஹாரில் லாலு யாதவ் கட்சியினர் ராமர் கோயில் திறப்பு விழாவைப் பாராட்டுவது பகுத்தறிவற்ற அடிமை மனோநிலை என்று விமர்சித்துள்ளது. ஆனால் நிதிஷ் தலைமையிலான கட்சியினர் ராமர் கோயிலை இழித்துப் பேசுவது சரியல்ல என்று கண்டிக்கின்றனர். கர்நாடகாவில் ஓர் அமைச்சர் ராமர் கோயில் திறப்பு புல்வாமா போல ஒரு ஸ்டண்ட் என்று சொன்னவுடன், முதலமைச்சர் சீதாராமையா அதை சரிகட்ட முயற்சி செய்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு இந்து மதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அதனால் எங்கே ராமர் கோயில் திறப்புக்குச் செல்லாவிட்டால் இந்துக்கள் ஓட்டளிக்க மாட்டார்களோ என்று பயப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஓர் அரசியல் நிகழ்ச்சி; ஆன்மிக நிகழ்ச்சியல்ல என்று அவர்களால் துணிச்சலாகச் சொல்ல முடிவதில்லை. கமல் நாத் போன்றவர்கள் நாங்கள்தான் பாபர் மசூதி வளாகத்தை வழிபாட்டுக்கு 1984 ஆம் ஆண்டு திறந்துவிட்டோம் என்று பெருமை பேசும் அளவுக்கு அந்தக் கட்சியில் கருத்தியல் தெளிவின்மை கோலோச்சுகிறது.
எல்லா கட்சிகளுமே இந்து மத அடையாளவாதத்தைக் கண்டு அஞ்சுகின்றன. ராவண காவியம் படைத்த தமிழ் நாட்டில்கூட ராமர் கோயில் அரசியல் மயமாக்கப்பட்டு இந்துத்துவ கொண்டாட்டமாக நடைபெறுவதைக் கண்டிக்க தயக்கம் காட்டப்படுகிறது. பெரும்பான்மைவாதத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. தைரியமாக எதிர்த்து நின்றால்தான் அது பெரும்பான்மையே கிடையாது என்பது வெளிப்படும். பெரும்பான்மை என்பது ஓர் உளவியல் கட்டமைப்புதான் என்பதை உணர வேண்டும்.
ஒரே நாடு, ஒரே கடவுள் என்பது சாத்தியமா?
இந்து மதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அது பல தெய்வ வழிபாடு கொண்ட து என்பதை மறுக்கவே முடியாது. உதாரணமாக இந்துக்களின் புனித நூல் எதுவென்று கேட்டால் வேதங்கள் என்று சொல்வார்கள். வேதங்களில் ராமர் என்ற கடவுளே கிடையாது. வேதங்களில் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களே மிகவும் குறைவாகத்தான் உச்சரிக்கப்படுகிறார்கள்.
பிற்காலத்தில் முக்கியம் அற்றவர்களாகிப் போன இந்திரன், வருணன், அக்னி போன்ற தேவர்களே வேதங்களில் பாடப்படும் முக்கிய கடவுளர்கள். ராமர், கிருஷ்ணர் எல்லாம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் வேத காலத்தில் தோன்றியிருக்கவேயில்லை.
அது மட்டுமல்ல. நாட்டில் 80% மக்கள் அவரவர்கள் கிராமத்து தெய்வங்களைத்தான் வழிபடுகிறார்கள். இந்தியா முழுவதும் ஐயனார், கருப்பு போன்ற எண்ணற்ற கிராம தெய்வங்கள் உள்ளன. மக்கள் தங்கள் வாழ்வினை பராமரிப்பதாகக் கருதுவது இந்த தெய்வங்களையே. அது மட்டுமன்றி சக்தி, துர்கை, அம்மன் என்பது போன்ற பெண் தெய்வ வழிபாடே பெருவாரியான மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேகமாக சில கடவுள்கள் முக்கியமாக மக்களின் சிந்தனையில் இடம்பெற்றிருப்பார்கள். தமிழ்நாட்டில் முருகன் என்ற கடவுள் போல, மும்பையில் கணபதி போல ஆங்காங்கே பல கடவுள்கள் செல்வாக்கு பெற்றிருப்பார்கள். ஐயப்பன், ஷீர்டி சாய்பாபா, சந்தோஷி மாதா என்று மிகுந்த வெகுமக்கள் ஈர்ப்புள்ள தெய்வங்கள் பல.
ராமர் என்ற கடவுள் பார்ப்பனர்கள் போன்ற உயர்ஜாதி மக்களின் கடவுளே தவிர, வெகுமக்களின் கடவுள் கிடையாது. அவர்களிலும் கூட பலர் அவர்களுடைய தனிப்பட்ட இஷ்ட தெய்வங்களைத்தான் கும்பிடுவார்கள். ஒரு சிலர் ஹயக்ரீவர் என்ற தெய்வத்தை மட்டுமே கும்பிடுவார்கள்.
கடவுள் பக்தியல்ல காரணம்!
ராமரை முக்கிய கடவுளாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உருவாக்கக் காரணம் மத அடையாளவாதம்தானே தவிர பக்தியல்ல. சாவர்க்கர் ராமர்தான் இந்தியா முழுவதையும் வென்று ஒரே நாடாக அதை உருவாக்கினார் என்று எழுதியுள்ளார். அதாவது ராமர் இந்திய தேசத்தை ஒருங்கிணைத்த மன்னர் என்பது அவரது கணிப்பு. அப்படியெல்லாம் எதுவும் நடந்ததற்கு வரலாற்று ஆதாரங்கள் கிடையாது என்றாலும், ஓர் ஒற்றை இந்துத்துவ அடையாளத்தை கட்டமைக்க ராமர் அவசியமாகப்படுகிறார்.
பா.ஜ.கவுக்கோ, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கோ மக்கள் பக்தியுடன் ராமரை வழிபட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அயோத்தியை ஒரு இந்துத்துவ அடையாளத்திற்கான நகரமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். ராமரை வழிபடத்தான் பல கோயில்கள் நாட்டில் இருக்கின்றனவே. ஆனால், அவர்கள் நோக்கம் மசூதியை இடித்த இடத்திலேயே கோயிலை கட்டி காண்பிக்க வேண்டும் என்பதுதான்.
பிரதமர் நரேந்திர மோடியே 2013 ஆம் ஆண்டு, பிரதமராவதற்கு முன், முதலில் கழிவறைகளைக் கட்ட வேண்டும், பிறகு கோயில் கட்ட வேண்டும் என்று கூறியவர்தான். அப்போது அவர் வளர்ச்சியை முன்னிறுத்தும் பிரதமர் வேட்பாளராக வடிவெடுத்து இருந்தார். இப்போது ராமர் கோயிலை திறந்து வைப்பவராக விளங்குகிறார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் செல்வதற்குக் கோயிலா இல்லை?
தாங்கள் இந்து மத விரோதிகள் என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் நினைத்தால் அவர்கள் செல்வதற்குக் கோயிலா இல்லை? நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தெய்வங்களும், கோயில்களும் நிறைந்துள்ளனவே?
ராகுல் காந்தி சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தன்னை சிவபக்தன் என்றுதானே கூறிக்கொண்டார்? அப்போது அவர் ஜனவரி 22 அன்று காசி விசுவநாதர் கோயிலுக்கோ, ராமேஸ்வரத்திற்கோ செல்லலாமே அல்லது அவர் வயநாடு தொகுதிக்கு அருகிலுள்ள குருவாயூரப்பன் கோயிலுக்குச் செல்லலாமே?
பூரி சங்கராச்சாரியாரே மத சம்பிரதாயங்கள்படி திறக்கப்படாத கோயிலுக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லும்போது, இந்த பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அரசியல் கோயிலுக்கு இந்தியா கூட்டணியினர் செல்லாவிட்டால்தான் என்ன? அதைப் புறக்கணித்தால்தான் என்ன? மதச்சார்பின்மையைக் கூட பேச வேண்டாம். இந்து மதம் ஒரு போதும் ஒற்றை கோயிலையோ, கடவுளையோ அடையாளமாகக் கொண்டதில்லையே? பிறகு ஏன் இவர்கள் அஞ்ச வேண்டும்?
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கட்டிய கோயிலுக்குப் போகாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது என தைரியமாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே எழுபத்தைந்து ஆண்டு இந்துத்துவ வேலைத் திட்டத்துக்கான கண்டனமாக இருக்கும்.