பலஸ்தீனம் – இஸ்ரேல் எதனால் இந்த யுத்தம்?

-ச.அருணாசலம்

வந்தேறி இஸ்ரேல் யூதர்கள் இன்று பலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டு, மண்ணின் மக்களை மிக மோசமாக  நடத்துகின்றனர்! இதனால், பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் திருப்பி அடித்துள்ளனர்! அதிபயங்கரமான அழிவுகளை, ‘பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம்’ என்பதாக இஸ்ரேல் செய்கிறது…!

டந்த சனிக்கிழமை ( ஒக்ரோபர்-7) அதிகாலை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ்  தொடங்கிய யுத்தம்.  இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. தரை கடல் மற்றும் வான் வழியாக தங்களது தாக்குதலை நடத்திய ஹமாஸ் தலமையிலான பலஸ்தீன விடுதலை வீரர்கள் பெரிய தாதாவாக தன்னை உலகிற்கு காட்டி வலம் வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினரை – ஒரு ஜெனரல் உட்பட- சிறைபிடித்துள்ளனர். காசா மலைக்குன்று பகுதியையே தங்கள் கட்டுப்பட்டிற்கு கொண்டு வந்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை ஏவியுள்ளது.

பாதுகாப்பில் அதி நவீன முன்னேற்றத்தையும், உளவு வேலையில் உலகிற்கே பாடம் எடுக்கும் வல்லமையும், அடக்கு முறையில் மோசமான ஹிட்லரையும் மிஞ்சிய இஸ்ரேல் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை! அணுகுண்டுகளை கையில் வைத்துள்ள இஸ்ரேல் இத்தாக்குதல் எப்படி ஏற்பட்டது என அறியும் முன்னரே பலஸ்தீன போராளிகள் 17 இற்கும் மேற்பட்ட குடியேற்றங்களை – குடியேற்றங்கள் என்பது, ஒரு பகுதியில் வசித்துவரும் பலஸ்தீனர்களை விரட்டியடித்து விட்டு மற்ற நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வந்துள்ள யூதர்களை அந்த இடங்களில் இஸ்ரேல் இராணுவ உதவியுன் குடியேற்றிய யூதக் குடியிருப்புகள் ஆகும் –  கைவசப்படுத்தி உள்ளனர்.

ஏராளமான இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டு, ஒரு  இராணுவ ஜெனரல் உட்பட 50 இற்கும் அதிகமான இராணுவ வீரர்களை சிறை பிடித்துள்ளனர் பலஸ்தீன விடுதலை வீரர்கள். மோட்டார் சைக்கிள்களையும், பாராகிளைடர்களையும், படகுகளையும் உபயோகித்து மூன்று வெளிகளிலும் தாக்குதலை தொடுத்து  மத்திய கிழக்கு பகுதியின் “தாதா”வான இஸ்ரேலை திக்குமுக்காடச் செய்திருப்பது உலகின் மூலை முடுக்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் இராணுவ டாங்கியை கைப்பற்றிய ஹமாஸ் போராளிகள்!

கடந்த 48 மணி நேர மோதலில் 800 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை இராணுவ வீரர்களை உள்ளடக்கியதாகும். கடந்த நாற்பது ஆண்டுகளில் இது போன்ற அவமானகரமான இழப்பை இஸ்ரேல் சந்தித்ததில்லை. பலஸ்தீனர்களின் பக்கமும் இழப்புக்கள் – இஸ்ரேல் அரசின் கண்மூடிதனமான குண்டுவீச்சால் அதிகம். இவ்விழப்புகளில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். பாலஸ்தீன அப்பாவி மக்களை மேன்மேலும் அகதிகளாக்கி வருகிறது இஸ்ரேல்.

காசாவில் வங்கிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. மேலும், ஹமாஸ் குழுவினரின் ஆயுதக் கிடங்கு என்பதாக பல குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் குண்டு மழை பொழிகிறது. ”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, மக்கள் நெருக்கியடித்து குடியிருக்கும் காசா நகரின் யதார்த்தமான முகத்தை மாற்றுவோம்” என இஸ்ரேல் அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துள்ள காசா பகுதியில் 2008 முதல் 1,50,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மட்டுமே 45,000 பேர்கள்.

1946 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் அமெரிக்காவிடமிருந்து அதிக இராணுவ உதவிகள் பெற்ற ஒரே நாடு இஸ்ரேல் ஆகும் . எண்ணற்ற அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற  நாடுகளை மிரட்டும் இஸ்ரேல், அண்டை நாடுகளான சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈரான் போன்ற நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்கும்  இஸ்ரேல், பலம்பொருந்திய மொசாத் அமைப்பின் மூலம் தனது “எதிரிகளை” கொலை செய்யும் இஸ்ரேல் நாட்டை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இராணுவ அமைப்போ, நாடோ இல்லாத பலஸ்தீன வீர்ர்கள் ஹமாஸ் தலைமையில் இன்று (இஸ்ரேலுக்கு ) கொடுத்துள்ள அடி முக்கியமானதாகும்.

எழுபது வருடங்களாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டு, இடம்பெயரும் உரிமை மறுக்கப்பட்டு விரட்டப்பட்ட பலஸ்தீன மக்கள் எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து அகதிகளாக வாழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் காசா (Gaza)  என்ற குறுகிய கடலையொட்டிய நிலப்பரப்பில் இஸ்ரேல் இராணுவத்தால் அடைக்கப்பட்டுள்ளனர்.

காசா பகுதியில் (Gaza strip) நெருக்கியடித்து வாழும் பலஸ்தீனர்கள் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், மணமுடிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் , விவாகரத்து பெறுவதற்கும் வீடு கட்டுதற்கும், இடிபாடுகளை எடுத்து கட்டுவதற்கும், இஸ்ரேல் அரசின் அனுமதி வேண்டும்.

கடற்கரையில் நடப்பதற்கும், பலஸ்தீனர்களுக்கு தடை உண்டு, மீன்பிடிப்பதற்கும் கூட ஒரு நாளைக்கு மூன்று படகுகளுக்கே மட்டுமே அரசு அனுமதி உண்டு. மீறியவர்கள் குழந்தைகளானாலும் இராணுவத்தால் சுடப்படுவர். இப்படி இறந்த குழந்தைகள் ஏராளம். பலூன்  பறக்கவிட்டு வேடிக்கை பார்த்த குழந்தைகளை கொன்று குவித்த பெருமை இஸ்ரேல் இராணுவத்திற்கு உண்டு.

இப்படி தினம் தினம் செத்துமடியும் வாழ்க்கையை நடத்தும் காசா பகுதி மக்களின் நலன்களை பாதுகாக்கும் அமைப்பே ஹமாஸ் அமைப்பாகும். இவர்களை – சொந்த நாட்டினரை வந்தேறிகளான யூதர்கள், வாழப் போராடும் மண்ணின் மக்களை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடுவது வேடிக்கையும், வேதனையுமாகும்.

மேலை நாடுகளால் பலஸ்தீனத்தில் 1946ல்,  பல்வேறு நாட்டை சார்ந்த யூதர்களுக்கு ஒரு சிறு பகுதி கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து அன்றுமுதல் தங்கள் நாட்டை மீட்டெடுக்க பலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர். போர் குற்றங்கள் மற்றும் இன ஒழிப்பும் தொடர்ந்து இஸ்ரேல் நடத்துகிறது.

அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும்  (வெள்ளை அரசுகள்) கொடுக்கின்ற தைரியத்தினால் சர்வதேச கண்டனங்களையும், ஐ.நா சபை தீர்மானங்கள் பலவற்றையும் காலில் போட்டு மிதிக்கும் இஸ்ரேல் அரசு, தன்னை மத்திய கிழக்கின் ”சண்டியனாக” காட்டிக் கொள்கிறது.

இந்நிலையில், “பலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பலஸ்தீனியர்களுக்கு உண்டு” என்று பலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கூறியுள்ளது கவனத்திற்கு உரியது.

விடுதலைக்காக போராடுபவர்களை, பயங்கரவாதிகள் என்று பழித்து, அரசு பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஏராளமான பெண்கள், குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலை நேர்மையான அரசு என ஆதரிக்கும் மேலை நாடுகளுக்கோ ஒரு உள்நோக்கம் உண்டு. அந்த நோக்கம் மத்திய கிழக்கில், ஆசியக்கண்டமும், ஆப்பிரிக்க கண்டமும் இணைகின்ற பகுதியில் தங்களது அவுட் போஸ்டாக (Out Post) இஸ்ரேல் நாட்டை நிலைநிறுத்துவதே அந்த நோக்கமாகும் . மேலை நாட்டு ஊடகங்கள் ஹமாஸ் அமைப்பை, பலஸ்தீனர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது ஒரு இனச் சார்பை காட்டுகிறது என்றால், இந்திய ஊடகங்கள் எதன் அடிப்படையில் பலஸ்தீனர்களை பயங்கரவாதிகள் என்று கூறுகின்றனர். ஒன்று இவர்கள் வரலாறு தெரியாத அடி முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது மேலை நாடுகளின் அடிவருடிகளாக இருக்க வேண்டும்.

சங்கிகள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு ஏதாவது காரணம் உண்டா? என்றால், இஸ்ரேல் படைகள் அழித்தொழிப்பது இஸ்லாமியர்கள் என்பதாலும், இஸ்ரேலை ஆள்பவர்கள் ஆதிக்கக் குறியீட்டின் அடையாளம் என்பதையும் தவிர வேறெதுவும் இல்லை.

அண்டை நாடுகளில் அத்துமீறி புகுந்து கொலைகள் செய்வதும், அந்நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதும் இஸ்ரேல் தங்களது தேச பாதுகாப்பு என சொல்வதை அனைத்து நாடுகளும் ஏனோ பெரிதாக எதிர்க்கவில்லை.  இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் பல்வேறு காரணிகளால் இஸ்ரேலை முற்றிலுமாக எதிர்க்க துணியவில்லை. இதைப் போன்றே அரபு நாடுகளும் ஏன் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளும் “ஆப்ரஹாம் ஒப்பந்தங்களால்” தங்களது நிலையை மாற்றிக் கொண்டு இஸ்ரேலுடன் சக வாழ்வு வாழத் தலைப்பட்டனர்.

முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்ட பலஸ்தீன மக்கள் மனந் தளரவில்லை என்றாலும், பல்வேறு பலஸ்தீன விடுதலை இயக்கங்களான பி.எல்ஓ. ( பி.எல்.ஏ., பி.எஃப்.எல்.பி. போன்ற அமைப்புகள்) யாசர் அராபத் மறைவிற்குப்பின் மக்கள் ஆதரவை இழந்தன. உலக சூழல்களும் சோவியத் யூனியனது வீழ்ச்சிக்குப் பின், அணி சேரா நாடுகள் பலம் குன்றிய பின் அமெரிக்க மேலாதிக்கம் வளர்ந்ததால் மாற்றமடைந்தன.

‘யாம் கிப்பூர்’ (வெற்றி) தாக்குதல் நடந்து சரியாக 50 ஆண்டுகளும் ஒரு நாளும் கடந்த பின்னர் ஒக்ரோபர் 7 ஆம் திகதி  தொடங்கிய இந்த யுத்தம் மத்திய கிழக்கின் அரசியல் சூழலையே புரட்டி போட்டுள்ளது.

தீவிர வலதுசாரி மற்றும் ஜியோனிச தலைவனான பிரதமர் நெத்தன்யாகு பல்வேறு ஊழலில் சிக்கிய பின்னரும் இன்று கூட்டணி ஆட்சி நடத்துகிறார் . இஸ்ரேல் நாட்டு ஜனநாயகத்தில் (யூதர்களுக்கான ஜனநாயகம்) நீதித்துறை சுதந்திரத்தை நெத்தன்யாகு ஆட்சி அழித்து, அவர்களை அரசின் ரப்பர் ஸடாம்புகளாக மாற்றியுள்ள நிலையில், இஸ்ரேலின் அரசியல் சமூக ஒற்றுமை இன்று மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

பலஸ்தீனர்கள்  நாட்டையும், உடமைகளையும இழந்த பின்னர் தாங்கள் அன்றாடம் அனுபவித்து வரும் இன்னல்களில் இருந்து விடுதலை கிட்டாதா என்ற வேட்கை நீறு பூத்த நெருப்பாக இரண்டு தலைமுறைகளாக நீடித்து வரந்துள்ளது. இன்றைய சூழலில்  அமைதி பேச்சுவார்த்தையோ, இரண்டு நாடு ஒப்பந்தமோ நமக்கு உதவாது , ஹமாசின் தலைமையில் திரண்டு, இரண்டில் ஒன்று பார்த்துவிட துணிந்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

Tags: