ஜனவரி 21: மாமேதை லெனின் நூற்றாண்டு தினம்

-சீத்தாராம் யெச்சூரி

புரட்சியின்  துருவ நட்சத்திரம் தோழர் லெனின் 

மாமேதை விளாடிமிர் இலியிச் லெனின், உலகளாவிய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னேற்றத்திற்காக, ஓர் அழிக்க முடியாத முத்திரையை, குறுகிய 54 ஆண்டு காலத்திற்குள் விட்டுச் சென்றுள்ளார். அவர் மார்க்சியம் என்னும் ஆக்கப்பூர்வ அறிவியலின் சாராம்சத்தை நன்கு விளங்கிக்கொண்டவர் மட்டுமல்ல, அதனை தன்னுடைய காலத்திற்கு மேம்படுத்தி, ரஷ்யப் புரட்சியை நடத்தி, சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) என்னும் உலகில் முதல் சோசலிச நாட்டை நிறுவுவதற்கும் இட்டுச் சென்றார்.

அவர் அனைத்துவிதமான திரிபுகளையும் (deviations) முறியடித்து மார்க்சியத்தை வளப்படுத்தியதோடு, புரட்சிகர இயக்கத்தைத் தடம் புரளாமல் பாதுகாத்தார். புரட்சிகர இயக்கத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப சரியான மற்றும் பொருத்தமான நடைமுறை உத்திகளை வகுத்து, பயன்படுத்திடும் மிகச்சிறந்த நடைமுறை உத்தி மாமேதையாகவும் (master tactician) விளங்கினார். அவர் ஒரு மார்க்சியக் கோட்பாட்டாளராகவும் (Marxist theoretician), போர்த்தந்திரவாதி (strategist)யாகவும் எல்லாவற்றிலும் மேம்பட்டு ஒரு நடைமுறை உத்தி மாமேதையாகவும் (tactician par excellence) செயல்பட்டார். அவருடைய பங்களிப்புகள் உலக அளவில் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ச்சியான ஆய்வுக்குத் தகுதிபடைத்தவையாகும்.

மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொள்வோம்

உலகின் மாபெரும் ஒக்ரோபர் புரட்சியான, ரஷ்யப் புரட்சியை வெற்றிபெறச் செய்ததன் மூலம், “தத்துவஞானிகள் அடிக்கடி உலகை பல வழிகளில் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள், எனினும் முக்கிய பிரச்சனை என்னவெனில் அதனை மாற்றுவதேயாகும்,” (“Philosophers have often interpreted the world in various ways; the point, however, is to change it”) என்று கூறிய மார்க்சின் புகழ்பெற்ற அறிவுரையை மாமேதை லெனின் நடைமுறைப்படுத்திக் காட்டினார். தோழர் லெனின், இவ்வாறு மார்க்சியத்தை, அதன் அறிவியல் விதிமுறைகளை, படைப்புத் திறனை மற்றும் அதன் உலகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிக்  கொண்டதன் மூலம் உலகை மாற்றியமைப்பதற்கான பாதையைக் காட்டியிருக்கிறார். மார்க்சியத் தத்துவத்திற்கு அவர் அளித்துள்ள பங்களிப்புகள் தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தோழர் லெனினுடைய முக்கியமான ஆய்வுகளாக விளங்கும் ‘அரசும் புரட்சியும்’ (‘State and Revolution’) அல்லது, ‘சமூக ஜனநாயகத்தின் இரு உத்திகள்’ (‘Two Tactics of Social Democracy’), அல்லது, ‘என்ன செய்ய வேண்டும்?’ (‘What is to be done’), அல்லது, ‘ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ (‘Imperialism, the Highest Stage of Capitalism’) முதலானவற்றை பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். இது மிகவும் முக்கியமானதுதான். இவருடைய இந்தப் புத்தகங்கள் அனைத்துமே முறையாகப் படித்து, புரிந்துகொள்ளப்பட வேண்டியவைகளாகும். அதன் சாராம்சத்தை, இன்றைய உலகின் நிலைமைகளில் மனிதகுலத்தை முற்றிலுமாக விடுவித்திடுவதற்காக நடைபெறும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒவ்வொரு புரட்சியாளனும் நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் அதே சமயத்தில் லெனின் ரஷ்யப் புரட்சியின்போதும், உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் பல்வேறு நெளிவு சுழிவுகள் நடந்துவந்த காலத்திலும் இவற்றை ஏன் எழுதினார் என்பதையும் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியமாகும்.

இரு சூத்திரங்கள்

மார்க்சியம் சம்பந்தமாக லெனின் வகுத்துத்தந்துள்ள இரு சூத்திரங்களை முதலில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்திடுவோம். இது, மார்க்சியம் என்கிற ஆக்கப்பூர்வமான அறிவியலை புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

முதலாவதாக, ‘மக்களின் நண்பர்கள் யார்…’ என்னும் புத்தகத்தில் அவர் கூறியிருந்ததாவது: “பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் மார்க்சியத்திற்குக் கவரப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அது ஒன்றுதான் இரு முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்திடும், அதாவது அது ஒன்றுதான் ஒருவரை புரட்சியாளராகவும் (revolutionary), உச்சபட்ச விஞ்ஞானப்பூர்வமானவனாகவும் (supremely scientific) ஒருங்கே உருவாக்கிடும் ஒரே தத்துவமாகும். மார்க்சியத்தை நிறுவிய மாமேதைகள் இவ்விரு அம்சங்களையும் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஒருங்கிணைத்தார்கள். மார்க்சியம் அவர்களை உள்ளார்ந்த முறையிலும் ஒருங்கிணைத்தது. இரண்டாவதாக, “மார்க்சியத்தில் மிகவும் முக்கியமான அம்சம், மார்க்சியத்தின் உயிர்நாடி என்பது துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்வது”, (“The most essential thing in Marxism, the living soul of Marxism, is the concrete analysis of concrete conditions”) என்று லெனின் அடிக்கோடிட்டிருந்தார்.   

இவ்வாறு மார்க்சியத்தின் இவ்விரு அம்சங்களையும் இணைப்பதன் மூலமாகத்தான்-புரட்சியாளனாகவும், உச்சபட்ச விஞ்ஞானப்பூர்வமானவனாகவும் இருப்பதன் மூலமாகத்தான்-மனித குல விடுதலை என்னும் புரட்சிகரமான குறிக்கோளை எதார்த்தமானதாக்கிட முடியும். இதில் ஏதேனும் ஒன்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்தாலோ அல்லது குறைந்த அழுத்தம் கொடுத்தாலோ அது மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு (deviations) இட்டுச் செல்லும். புரட்சிகர ஆற்றலைப் புறக்கணித்துவிட்டு, நிலைமையைக் குறித்து அறிவியல் ஆய்வினை மட்டும் மேற்கொண்டால் அது சீர்திருத்தவாதத்திற்கு இட்டுச் செல்லும். மாறாக, நிலைமையின் அறிவியல் ஆய்வினைப் புறக்கணித்துவிட்டு, புரட்சிகரமான முழக்கங்களை மட்டுமே எழுப்பினோமானால் அது இடது அதிதீவிரவாதத்திற்கு (Left adventurist deviation) இட்டுச் செல்லும். இவ்விருவிதமான விலகல்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் இவை இரண்டையும் சரியான விகிதத்தில் இணைப்பது அவசியமாகும்.

துல்லிய நிலைமை துல்லிய ஆய்வு

துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வுக்கு துல்லியமான நிலைமைகள் குறித்து ஒரு புறநிலை மதிப்பீடு (objective assessment) தேவை. அதன் அடிப்படையில் சரியான புரட்சிகரப் பகுப்பாய்வை வரைய வேண்டும். அகநிலைக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் துல்லியமான நிலைமைகள் குறித்து தவறான மதிப்பீட்டிற்கு வந்தோமானால், அது தவறான அரசியல் பகுப்பாய்வுக்கு இட்டுச்சென்று, புரட்சிகர இயக்கத்தைத் தடம்புரளச் செய்துவிடும். எனவே, ஒரு புரட்சியாளனின் திறமை என்பது துல்லியமான நிலைமைகளை புறநிலைக் காரணிகளின் (objectively assess) அடிப்படையில் மதிப்பிடுவதில்தான் இருக்கிறது. இவ்வாறு மார்க்சியத்தின் இரு அம்சங்களையும் சரியாகப் பகுப்பாய்வு செய்திட வேண்டும். அப்போதுதான் புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகர இயக்கம், சரியான அரசியல் நடைமுறை உத்திகளை முறையாகப் பகுப்பாய்வு செய்திருந்தாலும், அதனைச் செயல்படுத்தக்கூடிய அளவிற்கு கட்சி ஸ்தாபனம் வலுவானதாக இருந்திட வேண்டும். தோழர் லெனினின் அடிச்சுவட்டையொட்டி, தோழர் ஸ்டாலின் ஒருசமயம் கூறியதைப் போன்று, அரசியல் நிலைப்பாடு நூற்றுக்கு நூறு சரியாகவே இருந்தபோதிலும், அதனை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கட்சி ஸ்தாபனம் இல்லையேல் அதனால் பெரிய விளைவை ஏற்படுத்திட முடியாது. எனவே, லெனின் கூறுவதுபோல, புரட்சியின் ‘அகநிலைக் காரணியாக’ புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாக, இவ்வாறு, ஒரு வல்லமை மிக்க கட்சி ஸ்தாபனம் இருக்கிறது.

இவ்வாறு அனைத்து அம்சங்கள் குறித்தும், சீர்திருத்தவாதம் (reformism)  மற்றும் இடது அதிதீவிரவாதம் (Left adventurism) (இதனை ‘இளம்பருவக் கோளாறு’ என்று லெனின் அழைக்கிறார்.) ஆகிய இருவிதமான விலகல்களுக்கும் எதிராகத் தோழர் லெனின் தொடர்ந்து போராடினார். புரட்சி இயக்கத்தின் முக்கியமான தருணங்களில் இவ்வாறான தவறான விலகல் நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சமயத்திலும், அதனைத் தகர்த்து, தொழிலாளி வர்க்கம் சரியான திசைவழியில் செல்வதற்காக எண்ணற்ற படைப்புகளை அவர் படைத்திருக்கிறார். அவர் காலத்தில் செயல்பட்ட தலைவர்கள் பலருடன் அவர் இது தொடர்பாக சித்தாந்தரீதியாக போராடவும் செய்திருக்கிறார்.

மார்க்சியத்தை மேம்படுத்திட…  ரஷ்யப் புரட்சியை வெற்றிபெறச் செய்திட…

மார்க்சையும், மார்க்சியத்தையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ரஷ்யப் புரட்சி உட்பட எந்தவொரு புரட்சியும் உள்நாட்டு நிலைமைகள் மற்றும் அதன் முரண்பாடுகளை சரியாக பகுப்பாய்வு செய்வதுடன் உலக அளவிலான வளர்ச்சிப்போக்குகளையும் முரண்பாடுகளையும் முறையாகப் பகுப்பாய்வு செய்யாமல் போனால் வெற்றிபெற முடியாது என்று லெனின் உணர்ந்தார். மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில், முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து, மூலதனம் மையமாக்கப்படும்போது, குணாதிசய மாற்றத்தை (qualitative change) ஏற்படுத்தும் என்று லெனின் கூறினார். மார்க்சும், தன் இறுதிக்காலத்தில், ஏகபோக மூலதனத்தின் போக்குகள் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். இதனை மார்க்ஸ் இறந்தபின்னர், ஏங்கெல்ஸ் வெளியிட்ட மூலதனம் தொகுதி 3இல் இணைத்திருக்கிறார்.   20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சி, மூலதனத்தால் உலகம் அடிமையாக்கப்படக்கூடிய நிலைக்குச் சென்றிடும், ஏகாதிபத்தியத்தின் உச்சகட்டத்திற்குச் சென்றிடும் என்று லெனின் குறிப்பிட்டார். லெனின் இதனை, ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்று வகைப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஏகாதிபத்தியம் உருவாக்கிடும் முரண்பாடுகளை லெனின் முறையாகப் பகுப்பாய்வு செய்துள்ளார். 

ஏகாதிபத்தியக் கட்டத்தில் முதலாளித்துவம் உலகை பல சங்கிலிகளால் பின்னிப்பிணைத்திருந்தது. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, பலவீனமாக இருந்த ஏகாதிபத்திய சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். மனிதகுல வரலாற்றில் அந்த சமயத்தில் பலவீனமாக இருந்த ஏகாதிபத்திய நாடாக ரஷ்யா இருந்தது. எனவே லெனின், நடைபெற்றுக்கொண்டிருந்த முதல் உலகப் போரான ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான போரை, உள்நாட்டு யுத்தமாக மாற்ற அறைகூவல் விடுத்தார். உள்நாட்டு யுத்தத்தின் போர் முழக்கமாக ரஷ்ய மக்களுக்கு சமாதானம் (peace), உணவு (bread) மற்றும் நிலம் (land) என முழக்கங்களை உருவாக்கி அளித்தார். இவ்வாறு துல்லியமான நிலைமைகளை மிகத் துல்லியமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், தோழர் லெனின், ரஷ்யப் புரட்சி இயக்கத்தை 1917 ஒக்ரோபரில் மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்றார்.  

லெனினது ஏகாதிபத்தியம் குறித்த புரிதல், அது குறித்த பகுப்பாய்வு மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருப்பது அனைத்தும் இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன் உறுதியான முறையில் நிரூபிக்கப்பட்டது. இந்த முரண்பாடுகள் ஜெர்மனியின் தலைமையில் ஒரு புதிய உலகளாவிய மறுசீரமைப்புக்கான தேடலுக்கு வழி வகுத்தன. ஏகாதிபத்திய முரண்பாடுகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல விடுதலை பெற்றன. மேலும் பல முதலாளித்துவ நாடுகளும் கூட தங்கள் நாட்டு மக்களுக்காக பல்வேறு நலம் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

இன்றைய தினம், நம் கட்சியானது ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி என்று நாம் கூறுவதன் மூலம், நாம் மிகவும் உணர்வுப்பூர்வமாக,  மார்க்சிசம் குறித்து லெனின் வகுத்துத்தந்த அம்சங்கள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, சீர்திருத்தவாதம் (reformist), இடது அதிதீவிரவாதம் (Left adventurist) ஆகிய இருவித திரிபுகளுக்கும் (deviations) எதிராகப் போராடிக் கொண்டு, தொழிலாளி-விவசாயி கூட்டணியுடன் சுரண்டப்படும் வர்க்கங்கள் அனைத்தையும் அணிதிரட்டத் தேவையான  உத்திகளைக் கடைப்பிடித்து வருகிறோம்; புரட்சி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பொருத்தமான உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டு, மனித குல விடுதலையை நோக்கி வரலாற்றை வடிவமைப்பதற்காக துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப துல்லியமான ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்து அம்சங்களிலும் தலையிடக்கூடிய தொழிலாளர் வர்க்கக் கட்சியை கட்டி எழுப்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். “ஏகாதிபத்திய காலத்தின் மார்க்சிசம்” (“Marxism in the era of imperialism”) என்று லெனினிசத்தை தோழர் ஸ்டாலின் வரையறுத்திருக்கிறார்.  

உலக அளவிலான ஏகாதிபத்திய  எதிர்ப்புப் போராட்டம்

தோழர் லெனின் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவராக இருந்தார். ரஷ்யாவில் சோசலிசம் வெற்றி பெற்றிருப்பதும், சோவியத் சோசலிசக் குடியரசு ஒன்றியம் (USSR) அமைந்திருப்பதும் உலக அளவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்துசக்தியாக இருந்திடும் என்று உணர்ந்தார். இந்தப் புரிதலுடன் அவர், கம்யூனிஸ்ட் இண்டர்நேஷனல் (Communist International) என்னும் கம்யூனிஸ்ட் அகிலமானது, உலகின் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைக்கப்படுவதற்கும், குறிப்பாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக அளவில் நடைபெறும் போராட்டத்துடன் அவர்கள் நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை, மிக முக்கியமாக, இணைப்பதற்கும் உதவியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகளாவியமுறையில் நடைபெறும் போராட்டத்துடன் அனைத்துக் காலனியாதிக்க நாடுகளிலும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான அஸ்திவாரங்களை, தோழர் லெனின் தன்னுடைய “தேசிய மற்றும் காலனிய நாடுகளின் பிரச்சனைகள்” (`National and Colonial Question’ ) என்னும் நூலில் அளித்துள்ளார்.  

ஹோ சி மின் முழக்கம்

இந்த புத்தகமானது உலகெங்கிலும் உள்ள தேசிய விடுதலை மற்றும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சிகர இயக்கங்கள் வரலாற்றை மாற்றக்கூடிய அளவிற்கு முன்னேறிச் செல்ல இது வழிவகுத்தது. வியட்நாமின் தந்தை என போற்றப்படும் ஹோ சி மின்னிடம் இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரான்சில் வாழ்ந்துகொண்டிருந்த அவர், வியட்நாமை அடிமைப்படுத்தியிருந்த பிரெஞ்சு காலனித்துவவாதிகள் மேற்கொண்டுவந்த குற்றங்களைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பாக தோழர் ஹோசிமின் கூறுவதாவது: “அந்த சமயத்தில், நான் ஒக்ரோபர் புரட்சியை ஆதரித்தேன் என்றபோதிலும் உண்மையில் அதன் வரலாற்று முக்கியத்துவம் அனைத்தையும் நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என்று சொல்ல முடியாது. நான் லெனினை நேசித்தேன், போற்றினேன். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தன்னுடைய சக தோழர்களை விடுவித்தார். அதுவரை அவர் எழுதிய புத்தகங்கள் எதையும் நான் படித்ததில்லை.

அப்போது ஒரு தோழர் லெனின் எழுதிய “தேசிய மற்றும் காலனிய நாடுகளின் பிரச்சனைகள்” என்னும் ஆய்வு நூலை என்னிடம் கொடுத்தார். அந்த ஆய்வு நூலில் இருந்த அரசியல் சொற்கள் பலவற்றிற்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. திரும்பத் திரும்ப படித்தேன். கடைசியாக அதன் சாராம்சத்தை நான் உள்வாங்கிக் கொண்டேன். என்னவிதமான உணர்ச்சியை, உற்சாகத்தை, தெளிவான பார்வையை, தன்னம்பிக்கையை அது என்னிடம் விதைத்தது என்று என்னால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. சந்தோஷமிகுதியால் கண்ணீர் விட்டு மகிழ்ந்தேன். நான் என் அறையில் தனியே அமர்ந்திருந்தபோதிலும், மாபெரும் கூட்டத்தின்முன்னே நிற்பதைப்போன்று, “அன்பான தியாகிகளே, தோழர்களே, இதுதான் நமக்குத் தேவை. இதுவே நமது விடுதலைக்கான பாதை!” என்று சத்தத்துடன் முழங்கினேன்”.

[‘The Path Which Led Me to Leninism’, 1960, Selected Works of Ho Chi Minh, Vol. IV.]

தோழர் லெனின் கீழை நாட்டு உழைக்கும் மக்களுக்காக பல்கலைக் கழகத்தை நிறுவினார். உலகம் முழுதுமிருந்து புரட்சியாளர்கள் அங்கே வந்து கல்வி பயின்று, சிந்தனையிலும் செயல்பாட்டிலும் (in theory and practice) தங்களை உருக்குபோன்று மாற்றிக்கொண்டு, தங்கள் சொந்த நாடுகளில் புரட்சி இயக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் திரும்பிச் சென்றுள்ளனர். எனவே,  “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் பிணைத்திருக்கும் அடிமைச் சங்கிலியை இழப்பதைத் தவிர நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை” என்ற முழக்கத்துடன் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்தை, தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் தோழர் லெனின் முன்னோடியாக இருந்தார். ‘அகக் காரணி’ முதலாளித்துவம் எப்போதும் தானாக வீழ்ச்சியடையாது. அது தூக்கி எறியப்பட வேண்டும். இது, மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக,  தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதை சார்ந்திருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை என்னும் ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடுவோம்.  இது மிகவும் முக்கியமாகும். மக்களுக்கான நெருக்கடிகள் என்னும் புறக் காரணிகள் இருந்தபோதிலும், ‘அகக்காரணி’யை வலுப்படுத்திடாமல் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிகரத் தாக்குதலை நடத்திட முடியாது.

புரட்சிகர நடைமுறை உத்திகள்

நம் நாட்டில் எத்தகைய உத்திகள் நமக்குத் தேவை என்பதற்கு லெனினின் போதனைகளும் செயல்பாடுகளுமே நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. மறைந்த தோழர் எம். பசவபுன்னையா, லெனின் பிறந்தநாள் நூற்றாண்டின்போது, பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் ‘அரசியல் அதிகாரத்திற்கான மற்றும் அதனை ஒருமுகப்படுத்துவதற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் சிறந்த நடைமுறை உத்தியைப் பின்பற்றிய மாஸ்டர்’ (`Master tactician of the working class in its Struggle for political power and its consolidation’.) என்று தலைப்பிட்டு, ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். உலக அளவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக அளவிலான புரட்சி இயக்கங்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டிய நடைமுறை உத்திகள் குறித்தும் அவர் வழிகாட்டியிருக்கிறார்.

தோழர் ஸ்டாலின், ‘லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள்’ (Foundations of Leninism) என்னும் நூலில் லெனின் அளித்துள்ள நடைமுறை உத்திகளை சுருக்கமாகக் கூறியிருக்கிறார்.  இதில் மூன்று முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவதாக, தேசிய அளவில் உள்ள பிரத்யேக நிலைமைகளை ஆய்வு செய்திட வேண்டும். இரண்டாவதாக, தொழிலாளர் வர்க்கம் தன் புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிட, ஊசலாடும் வர்க்கங்களாக இருந்தாலும், அவை தற்காலிகமானதாக இருந்தாலும் இதர வர்க்கங்களையும் அணி சேர்த்துக்கொள்ளத் தயங்கக் கூடாது என்பதாகும். மூன்றாவதாக, மக்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கு அவர்களுக்கு நடைமுறை அரசியல் அனுபவத்தை அளிப்பதற்கு வெறும் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரம் மட்டும் போதுமானதல்ல என்ற உண்மையையும் நன்கு உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதாகும்.

இன்றைய நிலைமை

இந்தத் திசைவழியில், நாம் முன்னேறுவதற்கு, நம்முன் உள்ள உடனடிக் கடமை என்பது, பா.ஜ.க-வைத் தனிமைப்படுத்தி, முறியடித்திட வேண்டும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அழித்திடவும், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்.எஸ்.எஸ்-இன் இலட்சியமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற, பாசிஸ்ட், இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்காக, பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்திலிருந்து அதனை அகற்றிட வேண்டும். இதனை அடைவதற்கு, லெனினிசத்தின் புரட்சிகரமான நடைமுறை உத்திகளின் அடிப்படையில், பொருத்தமான நடைமுறை உத்திகளை, பின்பற்றிட வேண்டும்.

தோழர் லெனின் நீடூழி வாழ்க!

Tags: