பாரதீய ஜனதா கட்சி அரசியலும், பாரத் ஜோடோ யாத்திரையும்!

ராஜன் குறை

ந்தியாவின் அரசியல் முரண் தீவிரமாகக் கூர்மைப்பட்டுவருகிறது. ஒருபுறம் தேசபக்தி என்று பேசிக்கொண்டே நாட்டில் பிளவுகளை, முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல். மற்றொருபுறம் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து தேசத்தை ஒன்றுபடுத்த முயலும் காங்கிரஸ் கட்சியின், அதன் மூல பலமான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை.

ராகுல் காந்தியுடன் கரம் கோர்க்க தயாராக உள்ளன பல்வேறு மாநிலக் கட்சிகள். உதாரணமாக அந்த யாத்திரையைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போன்ற தேச நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட, நெடுநாள் அரசியல் முதிர்ச்சியின் வாரிசான தலைவர்கள் உள்ளார்கள்.

அதே நேரம், பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரஸுக்கும் நாங்களே மாற்று என்று தங்களை முன் நிறுத்திக்கொள்ள விழையும் சில மாநிலக் கட்சித் தலைவர்கள் உள்ளார்கள். சந்திரசேகர ராவ், அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள். யார், யாருடைய B டீம் என்று யாருக்குமே விளங்குவதில்லை. அந்த அளவு ஓட்டுக்களைப் பிரிக்கவென்றே பலர் களம் இறக்கப்படுகின்றனர்.

இந்த நிலை ஏதோ வழக்கமான ஓர் அரசியல் போட்டி என்று நினைக்க முடியாத அளவு பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்பதுதான் நாட்டின் நலனில் அக்கறை கொண்டோரின் கவலை. அப்படியென்ன அரசியலை பாரதீய ஜனதா கட்சி முன்னெடுக்கிறது? ஏன் கவலை கொள்ள வேண்டும்? ஒவ்வொரு பிரச்சினையாக பரிசீலிப்போம்.

பொருளாதார பின்னடைவு

பாரதீய ஜனதா கட்சி எந்தெந்த பொருளாதார பிரச்சினைகளைப் பேசி ஆட்சிக்கு வந்ததோ அந்த பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் பொதுவான விலைவாசி உயர்வு அடித்தட்டு மக்களை பாதிக்கிறது. மக்களுக்கு உதவ வரிக்குறைப்பு செய்யாமல், பெரு முதலீட்டாளர்களுக்கு, கார்ப்பரேட்களுக்கு வரி சலுகை தருகிறது பாரதீய ஜனதா கட்சி.

அது கூறும் காரணம் தொழில்முனைவோருக்கு அதிக லாபம் கிடைத்தால், அவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் வளர்ச்சியை அதிகமாக்கி, மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்பதுதான். ஆனால், இன்றைய இயந்திரமயமான சூழலில் அப்படி தொழில் முதலீடுகள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை.

மாறாக மக்களிடம் வாங்கும் சக்தி குறைவதால் பொருட்களுக்கான தேவை குறையும்போது உற்பத்தி தேங்குவதுதான் நடக்கும். பாரதீய ஜனதாவின் பொருளாதார அணுகுமுறையால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இது பொருளாதார அளவில் நாட்டை பிளவுபடுத்துகிறது.

அப்படி பெருமுதலீட்டாளர்களின் வளர்ச்சி என்பதும் சிலரைப் பொறுத்தவரை வீக்கமாக இருக்கிறது. உலக அளவில் இரண்டாவது பெரிய பணக்காரர் அல்லது மூன்றாவது பெரிய பணக்காரர் என்று கூறப்படும் கெளதம் அதானியின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் செயற்கையாக ஊதி பெரிதாக்கப்பட்டுள்ள அவர் நிறுவனங்களின் பங்கு மதிப்புதான் என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் அவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், செல்வாக்கு மிக்கவர் என்று நினைப்பதுதான் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் அவர் பங்குகளை அதிக விலையில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வங்கிக் கடன்களும் அதானிக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றன. கெளதம் அதானி-மோடி-அமித் ஷா கூட்டணி போல பெருமுதலீட்டிய, அரசியலதிகார கூட்டணி அப்பட்டமாக, அதிரடியாக இந்திய அரசியல் வரலாற்றில் செயல்பட்டதில்லை என்றே கூற வேண்டும்.

அதே போல ரஃபேல் விமான பேரத்தை அனில் அம்பானிக்காக தடாலடியாக மாற்றி அமைத்தார் மோடி. “செளகிதார் சோர் ஹை!”, “காவலாளியே களவாடுகிறார்” என்று முழங்கினார் ராகுல் காந்தி. ஆனால் ஊடகங்களெல்லாம் பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் இயங்குவதால், இது போன்ற குற்றச்சாட்டுகள் எடுபடுவதில்லை. என்.ராம் போன்ற பத்திரிகையாளர்கள் கடுமையாக எழுதியும் மக்களிடையே சென்று சேரவில்லை.

கர்நாடக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் ஊழல், மத்தியப்பிரதேச வியாபம் ஊழலையெல்லாம் தோற்கடிக்கும் அளவு கடுமையாக இருக்கிறது. அரசு ஒப்பந்ததாரர்கள் தங்களால் தாங்க முடியாத அளவு அரசியல்வாதிகள் தங்களைச் சுரண்டுவதாக பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை.

ஆளுநர்களின் விபரீத போக்கு

இந்தியாவின் கூட்டாட்சி என்பது மலர்களைத் தொடுப்பது போல மென்மையாக எந்த மலரும்  நசுங்காமல், கசங்காமல் செய்ய வேண்டுவது. அந்த மலர்களைக் கட்டும் மெல்லிய நார் போல இருக்க வேண்டியவர்கள்தான் ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர்கள். அவர்கள் இருப்பதே தெரியக்கூடாது. அதுதான் மாலைக்கு அழகு.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி, ஆளுநர்களை மலர்த்தோட்டத்தில் புகுந்த மத யானை போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் குறுக்கிட வைக்கிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசின் கட்டுக்குள் கொண்டுவந்து, அதன் சுயாட்சி உரிமைகளை மட்டுப்படுத்த ஆளுநர்களைப் பயன்படுத்துகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிடுவது, கருத்தியல் ரீதியாகப் பிற்போக்கு சிந்தனைகளைப் பரப்புவது என ஆளுநர்களின் புதிய அரசியல் அவதாரம் காலனியாதிக்க காலத்தை நினைவூட்டுவதாக அமைகிறது.

தமிழக ஆளுநர் ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்ட த்தில் இடம்பெற்றுள்ள மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே மறுக்கும் விதமாக ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்துதான் இயங்க முடியும் என்று பொருள்படும்படி கூறியுள்ளது உச்சகட்ட விதிமீறல் என்றால் மிகையாகாது. இதையெல்லாம் பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டே செய்கிறது.

ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரிக்கிறது. இது மக்களைப் பிளவுபடுத்தும் விபரீத முயற்சி என்றால் மிகையாகாது. புதிய கல்விக்கொள்கை, இந்தி மொழி திணிப்பு என்று பலவகையில் பல்வேறு மாநில மக்களை ஒரு கொதிநிலை நோக்கி கொண்டு செல்ல விரும்புகிறது பாரதீய ஜனதா கட்சி.

இந்து மத அடையாளவாதம் என்னும் அரசியல் நோய்

பாரதீய ஜனதா கட்சிக்கும் சரி, அதன் மூல அமைப்பான ராஷ்டிரீய சுயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் சரி, பக்தி என்பதோ, கடவுள் நம்பிக்கை என்பதோ சிறிதும் பொருட்டல்ல. அவர்களுக்கு இந்துத்துவ சித்தாந்தத்தை வழங்கிய சாவர்க்கரே கடவுள் நம்பிக்கையற்றவர்தான். அவர்களைப் பொறுத்தவரை இந்து மத அடையாளம் என்பது ஓர் அரசியல் அடையாளம்; அவ்வளவுதான்.

சரி, அப்படியே இந்து மக்களையெல்லாம் அணிதிரட்ட விரும்பினால் அவர்களிடையே உள்ள ஜாதி வேறுபாடுகளைக் களைவார்களா என்றால் அதுதான் கிடையாது. பாரதீய ஜனதா கட்சியைப் போல ஜாதிகளை அரசியல் ரீதியாக அணிதிரட்ட முயலும் கட்சி வேறு எதுவும் கிடையாது. மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் அலட்சியத்தால் எல்லா கட்சிகளும் ஜாதி பார்க்கின்றன தானே என்று முடித்துக்கொள்வார்கள். உண்மை அதுவல்ல.

தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். தேவேந்திரர் மாநாட்டுக்கு அமித் ஷாவே நேரில் வந்தார். அந்த ஜாதியின் உட்பிரிவினரை எல்லாம் இணைத்து அனைவருக்கும் தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுச் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து மோடி “என் பெயர் நரேந்திரா; உங்கள் பெயர் தேவேந்திரா” என்று சொந்தம் கொண்டாடினார்.

ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து, முக்குலத்தோரிடையே ஒரு தொகுதியை உருவாக்க முயற்சி செய்கிறது. அதற்கு துணைபோக ஏகப்பட்ட பேர் போட்டியிடுகிறார்கள்.

கொங்கு வேளாளர்களை அணிதிரட்ட அண்ணாமலை, அருந்ததியர்களை அணிதிரட்ட மத்திய இணை அமைச்சர் முருகன் எனப் பலரையும் களத்தில் முன்னிறுத்துவார்கள்.

இப்படியெல்லாம் செய்யும்போது அந்த ஜாதி சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க முயற்சி செய்வார்களா என்றால் அதுதான் கிடையாது. ஒரு போதும் ஏற்றத்தாழ்வு குறித்தோ, தீண்டாமை குறித்தோ பேசவும் மாட்டார்கள், அது போன்ற மோதல்கள் நிகழ்ந்தால் தலையிடவும் மாட்டார்கள். மக்களைப் பிரித்து வைத்து தங்கள் பிடிக்குள் கொண்டுவருவதுதான் அவர்கள் செயல்முறை. உத்தரப்பிரதேசத்தில் வெற்றிகரமாக இந்த முறையைக் கையாண்டுதான் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்படி அவர்கள் பிரித்து, பிளவுபடுத்தி தங்கள் கூடைக்குள் போடும் மக்களை இந்துவாக்க அவர்களிடம் உள்ள ஒரே மூலதனம் முஸ்லிம் வெறுப்புதான். அதனால் தொடர்ந்து முஸ்லிம்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது, வெறுப்பரசியலை முன்னெடுப்பது, பாகிஸ்தானுடன் சேர்த்து முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டுவது, உணவு, உடை போன்றவற்றில் முஸ்லிம்களின் தனித்துவங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்குவது, இந்துக்களை பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டுவது, இந்துமதத்தின் பார்ப்பனீயக் கூறுகளை விமர்சிப்பவர்களை இந்து மத விரோதியாகக் காட்டுவது என்பன போன்ற பல்வேறு நடவடிக்கைகளே பாஜக அரசியலின் மையச்சரடு.

சனாதன தர்மம் என்ற மாய்மாலம்  

சனாதான தர்மம் என்பதுதான் இந்து மதத்தின் பெயர் என்பார்கள். சரி, அது என்ன தர்மம், அதன் அடிப்படைகள் என்ன என்று கேட்டால் ஏதேதோ தொடர்பில்லாமல் ஆளுக்கு ஆள் ஒன்றைச் சொல்வார்கள். மனு ஸ்மிருதி என்பவை போன்ற தர்ம சாஸ்திரங்கள் சனாதன தர்மமா என்று கேட்டால் இல்லை என்பார்கள். அப்படியானால் மனிதர்களுக்கிடையே பிறப்பிலேயே பேதம் காணும், பிளவுபடுத்தும் மனுஸ்மிருதியைக் கண்டிக்கலாம் என்று கூப்பிட்டால் வர மாட்டார்கள்.

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மனுஸ்மிருதியில் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட நான்காம் வர்ணத்து உழைக்கும் மக்கள், பெண்கள் ஆகியோரை எப்படி இழித்துக் கூறப்பட்டுள்ளது, அவர்களை அடிமை நிலையில் வைத்துள்ளது என்பதையெல்லாம் தொகுத்து லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு நட த்த விரும்பும் ஆர்.எஸ்.எஸ் இந்த மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டியதுதானே? அவர்கள் கூறும் சனாதன தர்மம் இது இல்லையென்றால், அதை மறுப்பது இந்து மதத்தை காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்க அவசியம் இல்லையா?

ஓருங்கிணைப்பா, பிளவுபடுத்தலா?

காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், படேல், ராஜாஜி என எண்ணற்ற தலைவர்கள் காங்கிரஸில் ஒருங்கிணைந்து நின்று நாட்டை ஒருங்கிணைக்கும் மகத்தான அரசியலை முன்னெடுத்தார்கள். அவர்களுக்குள் பல கருத்தியல் போக்குகள் இருந்தாலும், அந்த அரசியல் மாறுபாடுகளையே ஒருங்கிணைப்பின் அடித்தளமாகக் கொண்டார்கள்.

அதனால்தான் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து இயங்கிய பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தமிழகத்தின் மாபெரும் அரசியல் தலைவர்கள், இந்திய ஒன்றியத்தில், சோஷலிஸ கூட்டாட்சி குடியரசின் அங்கமாக விளங்கி மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்த முன்வந்தார்கள்.

அதாவது “ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் மோதட்டும்” என்று மாசேதுங் கூறியதுபோல, மக்களாட்சி தோட்டத்து மலர்களையெல்லாம் சட்டத்தின் ஆட்சி என்ற நாரினால் கட்டி மாலையாக்க முன்வந்தார்கள்.  

இதற்கு நேர் எதிராக பாரதீய ஜனதா கட்சி கருத்துகளின், மக்கள் தொகுதிகளின் முரண்பட்ட நலன்களின் மோதல் என்ற மக்களாட்சி பன்மையை ஒடுக்கும் அதே நேரத்தில் மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலையே முன்னெடுக்கிறது.

சுருங்கச்சொன்னால் கருத்தில் முரண், பன்மை, சமூக அரசியல் வாழ்வில் ஒருங்கிணைப்பு என்றது காங்கிரஸ். நாட்டின் பிற மக்களாட்சி வழி நிற்கும் கட்சிகளும் அதையே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டன, இன்றும் செயல்படுகின்றன. எப்படி ஆடுகளத்தில் மோதும் விளையாட்டு வீரர்கள், அதற்கு வெளியே நட்பில் இணைகிறார்களோ அது போல.

பாரதீய ஜனதா கட்சியோ கருத்தில் ஒற்றைப் பார்வையை வலியுறுத்தி சமூக அரசியல் வாழ்வில் மக்களை ஓயாமல் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி தன் பார்வையை அனைவர் மீதும் திணிக்கிறது. இது அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவித்து, மக்களை அதன் நுகத்தடியில் பூட்டி இழுத்துவிடலாம் என்று நினைக்கும் பாசிச போக்கு என்பதே அரசியல் சிந்தனைகளை பயில்பவர்கள் கூறக்கூடியது.

இதையெல்லாம் மனதில் கொள்ளும்போதுதான் பாரத் ஜாடோ யாத்திரையின் காட்சிகளின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். இந்த நடைப்பயணத்தை வைத்து தேர்தலில் வெல்ல முடியுமா என்று மீண்டும், மீண்டும் கேட்கிறார்கள்.

காந்தியோ, பெரியாரோ தேர்தலில் வெல்வதற்காக அரசியல் செய்யவில்லை. அவர்கள் மக்கள் தொகுதிகளை ஒருங்கிணைத்தார்கள்; அவர்கள் தார்மீகத்தை வடிவமைத்தார்கள். நாளை வரலாறு இந்தியாவை மத சார்பற்ற சோஷலிஸ கூட்டாட்சி குடியரசாக ஒருங்கிணைக்கட்டும்!

Tags: