அமெரிக்காவின் இரட்டை வேடம்
காஸாவில் போரை நிறுத்த முன்வராமல், அதனை நீட்டிக்க மட்டுமே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முயல்கிறார் என்று ஈரான் நாட்டின் வெளியறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் குற்றம் சாட்டியுள்ளார்.
போரின் முடிவு என்பதற்கு நேதன்யாகுவின் அழிவு என்பதுதான் பொருள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அந்நாட்டு பிரதிநிதிகளுடனும் பலஸ்தீன ஆதரவு குழுக்களுடனும் போர் குறித்து ஈரான் அமைச்சர் நீண்ட விவாதம் நடத்தினார். பின்னர் அந்நாட்டு பிரதிநிதி அப்துல்லாஹ் பௌ ஹபிப்புடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போர் எந்த தீர்வையும் தராது என இரு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும், அதேவேளையில் நேதன்யாகுவின் அழிவில் தான் போரின் முடிவு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான், இராக்கில் உள்ள ஈரான் தொடர்புடைய பலஸ்தீன ஆதரவுக் குழுக்கள், செங்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ஆக்கிரமிப்பு படைகள் மீது, தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், லெபனான் சென்று போர் குறித்து ஈரான் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
“லெபனான் மீது தாக்குதலை தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. அந்நாட்டின் மீதான எந்தவொரு பெரிய தாக்குதலுக்கும் நேதன்யாகு மற்றும் அவரது தீவிரவாத அமைச்சரவையின் முடிவுகளே காரணமாக இருக்கும்’ என ஈரான் அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியிலும் அழுத்திலும் அமெரிக்காவை இதற்கு கேடயமாக வைத்திருக்க முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ஒரு பரந்த அளவிலான போரை நடத்த இஸ்ரேல் அமெரிக்காவையும் இழுத்து வருகிறது என்பதையும் தெரிவித்தார்.
“அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே மறுபுறம் அரசியல் தீர்வு பற்றி பேசுகிற’ அவர்கள் உண்மையிலேயே அமைதியை நாடினால் போரை நிறுத்த வேண்டும்” என்று அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையும் ஈரான் அமைச்சர் கடுமையாக விமர்சித்தார். லெபனான் பயணத்தை முடித்த பிறகு அவர் சிரியாவிற்கும் செல்கிறார். அங்கும் போர் சூழல் குறித்து அவர் விவாதிக்க உள்ளார்.