இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை மத்திய அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image result for இலங்கை அகதிகளின் குடியுரிமை 16 வாரத்தில்

‘திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 65 பேர் இந்திய குடியுரிமை கோரி கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் மீது மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த உலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட 65 பேர் தாக்கல் செய்த மனுஆங்கிலேயேர் ஆட்சியின்போது எங்கள் மூதாதையர் பிழைப்புக்காக இலங்கை சென்றனர். அங்கு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தனர். இலங்கையில் 1983ல் இனக்கலவரம் ஏற்பட்டதால், தாயகமான தமிழகம் வந்தோம். இந்திய குடியுரிமை கோரி பலமுறை மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை. எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

தமிழக அரசுத் தரப்பில்,’மனுதாரர்கள் உட்பட பலர் 1983 முதல் 1985 வரையிலான காலக்கட்டத்தில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தனர். கொட்டப்பட்டு, மதுரை, பெரம்பலூர், கரூர், மண்டபம் அகதிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் பொருட்கள், தங்கும் இடம், ஆடைகள், இலவச கல்வி வழங்கப்படுகிறது. இவர்களை அகதிகளாகவே அங்கீகரித்துள்ளோம். குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் கொள்கை முடிவு. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் அல்ல. மனுதாரர்களிடம் விசா இல்லை. சட்டபூர்வ பாஸ்போர்ட் மூலம் இந்தியா வரவில்லை. இவர்கள் குடியுரிமை கோர முடியாது,’ என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில்,’1983 க்கு பின் இலங்கையில் இருந்து சட்டப்பூர்வமான பயண ஆவணங்களுடன் இந்தியா வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிவர்களாக கருதப்படுவர். மனுதாரர்கள் குடியுரிமை கோரி அனுப்பிய விண்ணப்பம் மத்திய அரசுக்கு வரவில்லை. குடியுரிமை வழங்குவது அல்லது மறுப்பது என்பது மத்திய அரசின் விருப்பத்தைப் பொருத்தது,’ என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ‘உத்தரவுமனுதாரர்களின் மூதாதையர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அகதிகளாக, தஞ்சமடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை. மனுதாரர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்புகின்றனர். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்ப மாட்டோம் என அரசுத் தரப்பு கூறுகிறது.

அகதிகள் முகாமை பார்த்தால் நரகம்போல் உள்ளது. ஒருவருக்கு கல்லைப் போன்ற மனது இருந்தாலும், அவர் அகதிகள் முகாமை பார்த்ததும், மனது கரைந்துவிடும். மண்டபம் அகதிகள் முகாமிற்கு ஐ.பி.எஸ்.,அதிகாரிகளை மாற்றுவது என்பது தண்டனைக்குரிய இடமாறுதலாக கருதப்படுகிறது. அகதிகளின் நிலை முடிவற்ற துயரமாக தொடர்கிறது. அவர்களை 35 ஆண்டுகளாக தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவர்களின் பிரச்னையை மனிதாபிமான முறையில் அனுக வேண்டும். உயிருக்கு பயந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்துள்ளனர்.

அகதிகளின் நிலையை பார்க்கையில் எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது. இருப்பினும் நீதித்துறையின் லட்சுமண ரேகை வரம்பைத் தாண்ட முடியாது. குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கோரி புதிதாக சம்பந்தப்பட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தாமதம் இன்றி விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவற்றின் மீது மத்திய அரசு 16 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்

Tags: