ராகுலின் நியாய யாத்திரை நிகழ்த்தியுள்ள சாதனை
-யோகேந்திர யாதவ்
ராகுல் காந்தி முதலில் நிகழ்த்திய ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (Bharat Jodo Yatra) யை விட இரண்டாவதாக நடத்திய ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ (Bharat Jodo Nyay Yatra) அதிகம் சாதித்துவிட்டதா என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன். முதலில் நடந்த ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடர்பாக ‘ரோட் வாக்கர்: எ ஃப்யூ மைல்ஸ் ஆன் த பாரத் ஜோடோ யாத்ரா’ (Road Walker: A Few Miles on the Bharat Jodo Yatra) எனும் அருமையான பயணக் கட்டுரை நூலை எழுதிய திலீப் டிசௌசா (Dilip D’Souza) இப்பயணத்தில் என்னுடன் வந்தார்.
இந்தக் கேள்வி எதிர் உள்ளுணர்வானது. இரண்டாவது யாத்திரைக்கு மந்தமான வரவேற்புதான் என்றே சொல்ல வேண்டும். ஆனால், பெரிதும் வரவேற்பைப் பெற்ற முதல் யாத்திரையின் பல அம்சங்கள் இதிலும் இடம்பெற்றன. பயணத் தொலைவு 6,700 கிலோ மீட்டர் முழுக்க காங்கிரஸின் உள்ளூர், மாநில, தேசியத் தலைவர்கள் உடன் வர நடந்தார் ராகுல். ஆங்காங்கே எழுச்சியூட்டக்கூடிய பொதுக்கூட்டங்கள் நடந்தன. மும்பை சிவாஜி பூங்காவில் இம்மாதம் 17ஆம் நாள், ‘நியாய் மன்சில்’ (Nyay Manzil) என்ற பெரும் பொதுக்கூட்டத்துடன் யாத்திரை நிறைவுபெற்றது.
என்ன ஆனது யாத்திரை?
களிப்பூட்டும் தருணங்கள் இந்த நியாய யாத்திரையிலும் இருந்தன. மணிப்பூரில் குகி சமூகப் பெண்களின் முகங்களில் தெரிந்த நம்பிக்கையை மறக்கவே முடியாது. மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் பட்டியல் இனப் பெண்களுக்கு, காலணிகளை வழங்கினார் ராகுல். அவர்களுடைய கிராமங்களில் செருப்பில்லாமல்தான் நடக்க வேண்டும் என்று ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.
பல இடங்களில் மக்களுடைய வரவேற்பு பிரமிக்கத்தக்கதாக அமைந்தது. உள்ளூர் மக்களுடன் ராகுல் காந்தியால் நிறையப் பேச முடிந்தது. இவ்வளவு இருந்தும் நாட்டின் பெரிய நாளிதழ்களும் பருவ இதழ்களும் இதைத் தீவிரமாகக் கருதவில்லை. மாற்று ஊடகங்கள்கூட இதில் ஆர்வம் காட்டவில்லை. இதெல்லாம் ஆட்சியாளர்களின் சதி என்றெல்லாம் கருதத் தேவையில்லை. எப்போதுமே, செய்து முடித்த ஒரு சாதனையை மீண்டும் நிகழ்த்தும்போது முதலில் ஏற்பட்ட களிப்பும் ஆர்வமும் குறைந்துவிடும்.
முதல் யாத்திரை மிக அதிகமான, பெரிதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டது. இந்த முறை மக்களவை பொதுத் தேர்தலுக்குத் தேதி அறிவிக்கப்போகிறார்கள் என்ற நிலையில் யாத்திரை தொடங்கியதும் சுவாரசியக் குறைவுக்கு இன்னொரு காரணம். அதைவிட முக்கியம், ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் தெலங்கானாவைத் தவிர மூன்று முக்கிய மாநிலங்களில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது மற்றொரு காரணம்.
‘இந்தியா’ என்ற எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் மட்டும் யாத்திரையைத் தொடங்கியது, பல தோழமைக் கட்சிகளால் விரும்பப்படவில்லை. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தது. ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து சில கட்சிகள் விலகி, தங்களுடைய மாநிலங்களில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்ததும் நிகழ்ந்தது. இவையெல்லாம் யாத்திரைக்கு நல்ல விளம்பரம் இல்லை. இந்த யாத்திரை, கங்கையைத் தீப்பிடிக்க வைக்கவில்லை என்றாலும் வேறு சில சாதனைகளைப் புரிந்திருக்கிறது.
முதல் யாத்திரையின் சாதனை
முதல் யாத்திரை எதைச் சாதித்தது என்று டிசௌசாவைக் கேட்டேன். அவர் மூன்று விஷயங்களைக் கூறினார். முதலாவது, இந்த நாட்டைப் பிளவுபடுத்துவோரை எதிர்த்து நின்றது. இரண்டாவது, கல்வி, சுகாதாரம், மகளிர் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களுடைய குறைகள் என்ன என்று முழுதாகவும் அக்கறையுடனும் கேட்டது. மூன்றாவது, மக்களுடைய இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்சி அளவில் காங்கிரஸ் தயாரிக்கும் சொந்த திட்டங்கள், நாட்டின் எதிர்காலம் தொடர்பாக காங்கிரஸின் தொலைநோக்குப் பார்வை ஆகியவை. முதல் இரண்டையும் யாத்திரையின்போதே காங்கிரஸ் நன்கு நிகழ்த்திவிட்டது. மூன்றாவதுதான், மேலும் வலிமையாகவும் செறிவாகவும் கட்சித் தலைமையால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பதற்குப் போராட்டத்தைப் புதுப்பிக்க மக்கள் தயாராக இருப்பதையே முதல் கட்ட யாத்திரை உணர்த்தியிருக்கிறது என்றார் டிசௌசா.
நாட்டைப் பொருத்தவரையில் அது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அன்பைப் பரிமாறும் புதிய மொழி ஏற்பட்டிருக்கிறது. அரசிடம் சலுகைபெற்றுக் கொழுக்கும் முதலாளியர்களைப் பெயர் சொல்லி அடையாளப்படுத்தும் துணிவை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய வேலையையும் வேலையைச் செய்வதற்கான தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு தங்களுடைய தலைவர்கள் மீது நம்பிக்கை வளர்ந்திருக்கிறது என்பதை நானும் என் கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறேன். ஏதும் அறியாத குழந்தை என்று ஏளனம் செய்ததால் ராகுலைப் பற்றி ஏற்பட்ட பிம்பம் மாறி, அவர் அக்கறையுள்ள – விவரம் தெரிந்த அரசியல் தலைவர்தான் என்று இந்த யாத்திரை உணர்த்தியிருக்கிறது. இந்த வகையில் அவர் மரபுரிமையாகப் பெற்ற தலைமைக்கேற்ற, தகுதியானவர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
முதல் யாத்திரையுடன் இதை ஒப்பிடவும் பலனை ஊகிக்கவும் தோன்றுவது இயற்கை. அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலில் இது எந்த அளவுக்கு உதவும் என்றுகூட கேட்கத் தோன்றும். யாத்திரை என்பது இவற்றுக்கானது அல்ல. டெல்லியில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே தலைவர்களையும் தொண்டர்களையும் சந்தித்துப் பேசும்போது கிடைக்காத அனுபவம், யாத்திரையில் கிடைக்கிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் கிடைத்த ஆதரவுக்குப் பொருத்தமற்ற வகையில்கூட, அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிக் கூட்டமாகத் திரண்டவர்கள் அனைவருமே ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று அவசரப்பட்டு முடிவுகட்டிவிடக் கூடாது.
இந்தியாவைக் கண்டறிந்த நேருவின் பாணியில், ராகுலின் யாத்திரைகள் அமைந்துவிட்டன. மக்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் அறிய அவருக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. மக்களுடன் தொடர்புகொள்ளும் வழியை அவராகவே உருவாக்கிக்கொண்டு, அவர்களுடன் நன்கு உரையாடினார். மோடியைப் போல நாவன்மையுடன் பேசாமல், சாதாரணர்களைப் போலவே பேசிப் பழகினார். அரசியல் பார்வையாளர்களோ இவற்றில்தான் அக்கறை காட்டுவார்கள். பழைய அளவுகோல்களில் இந்த யாத்திரையை மதிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பிஜேஒய் 2.0 (BJY 2.0) உண்மையான வெற்றி
பாரத் ஜோடோ நியாய் யாத்திரை (Bharat Jodo Nyay Yatra) தொடங்கியபோதே எழுதினேன், இது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் சித்தாந்த ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கானது என்று. “ஆளுங்கட்சி கட்டமைக்கும் சிந்தனைகளின் ஆதிக்கத்திலிருந்து மக்களை மீட்க, எதிர்க்கட்சிகள் தங்களுடைய சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். புதிய தலைமுறைக்காக புதிய மொழியில் பேச வேண்டும். தேசியவாத பாரம்பரியத்தை எதிர்க்கட்சிகள் மீட்க வேண்டும், இந்த நாட்டின் நாகரிகப் பழம்பெருமைக்கு நாமும்தான் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட வேண்டும். நம்முடைய குடியரசை மீட்க விரும்பினால், நமது சித்தாந்தங்களுக்குப் புதிய வடிவமும் விளக்கமும் தர வேண்டும்.” இதைக் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. அரசியல் களத்தில் அதிசயங்கள் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. யாராவது ஒருவர் இதை உடனடியாகத் தொடங்கியாக வேண்டும். ஆளும் தரப்பு முன்வைக்கும் சித்தாந்தங்களுக்கு மாற்றான கருத்துகளை மக்கள் முன்வைக்க முடிந்ததுதான் இந்த யாத்திரையின் வெற்றி.
முதலாவதாக, பாரதிய ஜனதாவின் பேரினவாதக் கொள்கையைப் பின்தொடர்ந்தே சில எதிர்க்கட்சிகளும் சென்ற நிலையை மாற்ற, மதத்திலிருந்து அரசியல் விலகி நிற்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட இலட்சியத்தை உறுதியாகப் பின்பற்றியது இந்த யாத்திரை. அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடந்த நேரத்தில் இந்த யாத்திரை இப்படி உறுதி காட்டியது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற நிலையை விட்டுத்தர முடியாது என்று உறுதியான நிலையை எடுத்தார் ராகுல் காந்தி.
இரண்டாவதாக, மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நியாயமாக ஏற்றுத் தீர்வு காண, அன்பே வழிமுறையாக இருக்கும் என்ற பொதுச் செய்தியைத் தெரிவித்தது யாத்திரை. வெறுப்புணர்வு அரசியல், அநீதியைத்தான் வழங்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அரசின் அநீதியான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய துயரங்களில் பங்கு கொண்டு அவர்களுடன் இணைந்து நிற்போம் என்ற செய்தி கொண்டு செல்லப்பட்டது. அரசின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சாதிரீதியாக அநீதிக்கு ஆளானவர்கள், பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், பிராந்தியரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு உள்ளானவர்கள், இன்னும் பல விதங்களில் துயரங்களை அனுபவிப்பவர்கள் ஆகியோரின் வலிகளைப் புரிந்துகொண்ட யாத்திரை, அவர்களிடம் பரிவாகப் பேசியது. முதல் யாத்திரையின்போது பெருமுதலாளிகளுக்கு அரசு செய்த சலுகைகள் சுட்டிக்காட்டப்பட்டன; இந்த யாத்திரையில் சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஏழைகள் நலிவுற்ற நிலையில் இருக்கும்போது, பெருந்தொழிலதிபர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள், அவர்கள் குவிக்கும் செல்வ வளம் குறித்தும் பேசப்பட்டது.
மூன்றாவதாக, நீதி வேண்டும் என்று அலங்காரமாக மேடைகளில் பேசுவதோடு நிற்காமல் அப்படி நீதி வழங்க சமுதாயத்தின் ஐந்து பிரிவுகளை அடையாளம் கண்டதுடன் அவர்களுக்கு எந்த வகையில் நியாயம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், விளிம்புநிலை சமுதாயங்கள் என்பதே அந்த ஐந்து பிரிவினர். அவர்கள் அனைவருக்கும் உத்தரவாதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து வேளாண் பொருள்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதிப்படுத்த சட்டம் இயற்றப்படும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற படித்து முடித்ததும் உபகாரச் சம்பளத்துடன் கட்டாயம் ஓராண்டு தொழிற்பயிற்சி அளிக்க சட்டம் இயற்றப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் 50% மகளிருக்கு ஒதுக்கப்படும், சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்கப்படும், நகர்ப்புறங்களில் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை மேலும் விரிவுபடுத்தப்பட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெறும். இதனால் இவற்றில் சிலவற்றைத் தங்களுடைய அறிக்கையிலும் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஆளுங்கட்சியால் எளிதில் இனி புறந்தள்ளிவிட முடியாது.
ஆட்டம் ஆரம்பம்!
இறுதியாக, இந்த யாத்திரை இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியை (காங்கிரஸ்) அதற்கே உரித்தான சமூக அடித்தளத்திடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. இது முதல் படிதான். சமூக – பொருளாதார அடுக்கில் கடைநிலையில் இருப்பவர்கள் அனைவரையும் மீட்டு தங்கள் பக்கம் கொண்டுவருவது காங்கிரஸுக்கு அவ்வளவு எளிதாக இருந்துவிடாது.
அதற்குக் கட்சியின் நிர்வாக அமைப்பையும் தலைமையையும் அடி முதல் நுனி வரையில் மாற்ற வேண்டும். இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. கட்சிக்குள்ளேயே இதுநாள் வரை சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்த மேல்தட்டு மக்கள் அவ்வளவு சுலபமாகத் தங்களுடைய ஆதிக்கத்தை விட்டுத்தர மாட்டார்கள். எனவே, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை முதலில், கட்சிக்குள்ளேயே நிகழ்த்தியாக வேண்டும்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது தனது உண்மையான அரசியல் பயணத்தை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
மூலம்: Bharat Jodo Nyay Yatra quietly achieved something that the original didn’t
தமிழில்: வ.ரங்காசாரி