மோடியின் மதவெறி பிரச்சாரம்: தேர்தல் விதி மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக!
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இது, ராமர் கோவிலை ஒரு தேர்தல் பிரச்சனையாக மாற்றி, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கோவிலுக்கும் ராமருக்கும் எதிரானவை என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இது, தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். இவர்களில் சிலருடைய உரைகள் குறிப்பிட்ட சில மதத்தினரை இழிவுபடுத்தும் விதத்தில் வெறுப்பைக் கக்குவதன் காரணமாகவும், மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்திலும் அமைந்திருப்பதால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஷரத்துக்கள் சிலவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. இதில் பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் பிரதமர் நரேந்திர மோடியே. அவருடைய தேர்தல் பிரச்சார உரைகள் சிலவற்றை ஆராய்ந்தோமானால் எந்த அளவிற்கு அவர் மதவெறி நஞ்சை கக்கிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காண முடியும்.
மத உணர்வைத் தூண்டும் பேச்சு
ஏப்ரல் 7 அன்று பீகார் மாநிலத்தில் நவாடா என்னுமிடத்தில், மோடி உரை நிகழ்த்துகையில், “அயோத்தியில் பெரிய அளவில் கோவில் கட்டுவதைத் தடுத்திட காங்கிரஸ் கட்சியும் ஆர்.ஜே.டி (Rashtriya Janata Dal) கட்சியும் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டன” என்று குற்றம் சுமத்தியிருக்கிறார். அவர்கள் ராமர் கோவில் கும்பாபிசேகத்தை பகிஷ்கரித்தனர் என்றும், இவ்வாறு “ராமபிரான் மீது அவர்களுக்கு ஏன் குரோதம்” என்றும் வினா எழுப்பியுள்ளார். பின்னர் கூட்டத்தினரிடம் “ராம நவமி நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறிவிட்டு, “யார் பாவம் செய்தார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேசுவது மக்களின் மத உணர்வைத் தூண்டுவதைத் தவிர வேறென்ன? இப்படி அவர் எதிர்க்கட்சிகளு க்கு எதிராகப் பொய்ப் புகார்களை அள்ளி வீசியிருக்கிறார். இவ்வாறு பேசுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்மட்டுமல்ல, இவ்வாறு வெறுப்பை விதைத்திருப்பதன் காரணமாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்கும் உரியவையாகும்.
பொய்க் குற்றம்சாட்டி இழிவுபடுத்திய மோடி
முன்னதாக ஏப்ரல் 6 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் மோடி பேசும்போது, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிசேகத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சிக்காரர்களை காங்கிரஸ் கட்சி வெளியேற்றியிருப்பதாகப் பொய்யாக குற்றம்சாட்டி இழிவுபடுத்தி இருக்கிறார். மேலும் அவர் ராமர் கோவில் கும்பாபிசேகத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேர்தல் நடை பெறவுள்ள ஏப்ரல் 19க்கு இரு நாட்களுக்கு முன் வரவிருக்கும் ராம நவமி கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும் அரசியல் எதிர்க்கட்சியினருக்கு எதிராக மதவெறி உணர்வுகளை அப்பட்டமாகத் தூண்டும் வேலையேயாகும். இந்தப் பேச்சுக்களைத் தொடர்ந்து மோடி, ஏப்ரல் 9 அன்று, உத்தரப்பிரதேசம் மாநிலம் பிலிபிட் என்னுமிடத்தில், பேசும்போது, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்காததற்காக காங்கிரஸ் கட்சியையும், சமாஜ்வாதி கட்சியையும் கடுமையாகத் தாக்கினார். இது ராமனுக்கு ஏற்படுத்திய அவமானம் என்று அறிவித்தார். மேலும் அவர், இவர்கள் (இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள்) ராமர் கோவில் கட்டுவதற்கு எதிராக வெறுப்பை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அவர், இவ்விரு கட்சிகளையும் ராமரை இழிவுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, மத வெறித்தீயை விசிறி விட்டிருக்கிறார். இவ்வாறு இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் “ராமர் கோவிலுக்கு எதி ராக வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார். இவை மோடி ஆற்றிய உரைகளில் ஒரு சில உதாரணங்களேயாகும்.
பிரச்சாரத்தின் மையப் பொருளான கோவில்
பொதுத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பா.ஜ.க-விற்கு ஆதரவைத் திரட்டுவதற்காக ராமரையும், ராமர் கோவிலையும் இவர்கள் இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, காசியாபாத்தில், ஏப்ரல் 6 அன்று “நமக்கு ராமரைக் கொண்டு வந்தவர்களை நாம் ஆட்சியில் அமர்த்திடுவோம்” என்று பாடலுடன் நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில், மோடி பங்கேற்றார். இதேபோன்றே “ஜெய் ஸ்ரீராம்” எனும் மதரீதியான கோஷம் பா.ஜ.க-வின் அரசியல் கோஷமாகவே மாறிவிட்டது. இதே தொனியில் அமித் ஷா மற்றும் ஆதித்யநாத் போன்ற இதர பா.ஜ.க தலைவர்களும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதி இது தொடர்பாகக் கூறுவது என்ன? “எவரொருவரும் மத உணர்வுகளைக் தூண்டிவிட்டு வாக்குகளைக் கோரக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்திற்காக மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது கும்பிடுவதற்கான இதர இடங்களைப் பயன்படுத்தக் கூடாது.”
தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் புகார்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி, கும்பாபிசேகம் செய்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து தேர்தல் உரைகளை மோடி நிகழ்த்தி வருகிறார். மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவிலை ஓர் அமைப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல, ராமர் கோவிலே பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக மாற்றியிருக்கிறது. மோடியின் இந்தத் தேர்தல் பிரச்சார உரைகளில் சிலவற்றிற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறையீடு தாக்கல் செய்திருக்கிறது.
நெருக்கடி கொடுத்ததால் தேர்தல் ஆணையர் ராஜினாமா
இதேபோன்று 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆற்றிய சில உரைகளுக்கு எதிராக அப்போதைய தேர்தல் ஆணையத்திடமும் நாம் புகார் அளித்திருந்தோம் என்பது நினைவு கூரத்தக்கது. அவற்றின்மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் இதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததற்காக, தேர்தல் ஆணையர்களில் ஒருவர் அபிப்ராயபேதம் (dissent) கொண்டிருந்தார் என்பது வெளிப்படுத்தப்பட்டது. பின்னர் அசோக் லவாசா (Ashok Lavasa) என்னும் அந்த ஆணையரின் மனைவி மற்றும் மகனுக்கு எதிராக வருமான வரித்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு, துன்புறுத்தியதைத் தொடர்ந்து, அசோக் லவாசா தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஆணையம் தனது சுதந்திரத்தை மெய்ப்பிக்க வேண்டும்
இதேபோன்றே இந்தத் தடவையும் தேர்தல் ஆணையத்திற்கு ஓர் ஆய்வு வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் பிரச்சனைகள் நிரம்பிய புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்தத் தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சுதந்திரமான ஒன்றுதானா, ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சாயாமல் இருக்கிறதா என்பதை இது மெய்ப்பித்தாக வேண்டியிருக்கிறது. பிரதமரும், ஆளும் கட்சியினரும் தங்களுடைய இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்கள். இவர்களின் இத்தகைய மதவெறி நிகழ்ச்சிநிரல் அடிப்படையிலான பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அடிபணியக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி இவ்வாறு நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தை முறியடித்திடக்கூடிய விதத்தில் அது உறுதியாகத் தலையிட வேண்டும். அதன்மூலமாக தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறக்கூடிய சூழலை அது உருவாக்கிட வேண்டும்.
மூலம்: Stop Modi’s Communal Electioneering
தமிழில்: ச.வீரமணி
ஏப்ரல் 10, 2024