“லட்சுமியே இறுதியாக இருக்கட்டும், மீண்டும் ஒரு யானை வேண்டாம்!”

ஜெ.முருகன்

புதுச்சேரியில் (பாண்டிச்சேரி) பிரெஞ்சுக்காரர்களின் வருகைக்கு முன்பே,  அதாவது 1666-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுத்தலமாக இருந்துவரும் மணக்குள விநாயகர் கோயில், சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்துவருகிறது. இந்தக் கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் யானை லட்சுமி. 1997-ம் ஆண்டு தன் ஆறு வயதில் இந்தக் கோயிலுக்கு வந்த லட்சுமிக்கு, அக்டோபர் 2013-ல் புதுவை நகராட்சியால் உரிமம் கொடுக்கப்பட்டது. செப்புப் பதக்கத்தால் செய்யப்பட்ட அந்த உரிமம் லட்சுமியின் கழுத்தில் ஆபரணமாக தொங்கிக்கொண்டிருந்தது. யானை லட்சுமி கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தனர் சமூக ஆர்வலர்கள். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய மிருக சிகிச்சை நெறிமுறைகள் குழுமத்தின் புகாரின் அடிப்படையில், மத்திய வன விலங்கு பாதுகாப்பு வாரியம், மணக்குள விநாயகர் கோயிலில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

அதில் லட்சுமி தொடர்ந்து கொன்கிரீட் தளத்தில் சங்கிலியால் கட்டப்பட்டதால், மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஓரிடத்தில் நிற்க முடியாமல் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து அசைந்து வாய் பேச முடியாத அந்த ஜீவன் தன் மன, உடல் உளைச்சலை வெளிப்படுத்திக்கொண்டிருந்ததும் அப்போது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தது மத்திய வன விலங்கு பாதுகாப்பு வாரியம்.

அதன் தொடர்ச்சியாக மிருக வதை தடுப்புச் சட்டம் (1960), இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் (1972) மூலம் யானை லட்சுமியை கோயிலிலிருந்து மீட்டு சரணாலயத்தில் ஒப்படைக்கும்படி புதுச்சேரி வனத்துறைக்கு அப்போது நோட்டீஸ் அனுப்பியது மத்திய வன விலங்கு பாதுகாப்பு வாரியம். ஆனால் அந்த உத்தரவை ஏற்க மறுத்த புதுச்சேரி அரசு, ஈஸ்வரன் கோயிலில் வைத்து யானைக்கு சிகிச்சையளித்துவந்தது. ஆனால், “காட்டில் மரம், செடி, கொடிகளை உண்டு வாழும் யானைக்கு பழங்களையும், தயிர் சாதத்தையும் கொடுக்கிறார்கள்” என்று விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்திவந்தனர். நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த யானை லட்சுமி, 15 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியது வனத்துறை. அதனடிப்படையில் யானை லட்சுமி தங்கியிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயத்திலேயே அதை ஓய்வெடுக்கவைத்தது கோயில் நிர்வாகம்.

அதனால் கடந்த ஒரு மாதமாக யானை லட்சுமி கோயிலுக்கு வருவதில்லை. பக்தர்கள் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பார்ப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. லட்சுமியின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் களி, தென்னை மட்டை, பனை, அரசமர இலை போன்றவற்றுடன், மருந்துகளும் வழங்கப்பட்டுவந்தன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி லட்சுமி நடைப்பயிற்சிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வந்தது. அதன்படி யானைப் பாகனுடன் நேற்று (30.11.2022) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த லட்சுமி, திடீரென மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தது. வனத்துறை மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக லட்சுமி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மணக்குள விநாயகர் கோயிலின் நடை சாத்தப்பட்டு, லட்சுமியின் உடல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் பின்தொடர லாரியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள ஜே.வி.எஸ் நகரில் காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கடுத்த சில நிமிடங்களில் மணக்குள விநாயகர் கோயிலுக்குத் தனது சொந்தச் செலவில் குட்டி யானை வாங்கித் தருவதாக தெரிவித்திருக்கிறார் காமராஜர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பக்தர்களும் பொதுமக்களும், “தாயிடமிருந்து இனி எந்த யானையையும் பிரிக்கக் கூடாது. மணக்குள விநாயகர் கோயிலில் மீண்டும் ஒரு யானையை வளர்க்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்” என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துவருகின்றனர். ராமலிங்கம் வரதராஜலு என்கிற பக்தர், “நமது மணக்குளவிநாயகர் கோயில் யானை இறப்புக்கு இயற்கை ஆர்வலர்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேசமயத்தில் யானை ஒன்றைப் புதிதாகக் கொண்டுவருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். யானையை இயற்கைச் சூழலைவிட்டு அகற்றுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. நமது சமயச் சடங்குகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. சூழல் சரியில்லாத நிலைமை, தகுந்த பராமரிப்புக்கு ஏற்ற நிபுணர்கள் இல்லாதது, வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு புதிய யானை கொண்டுவருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இறை நம்பிக்கை உள்ளவன் என்ற முறையில் வேண்டுகிறேன். ஒரு பிள்ளை துன்பப்பட்டு, இன்னொரு பிள்ளை சந்தோஷமாக இருப்பதை கடவுள் விரும்ப மாட்டார்” என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல இறைவி குழுமத்தின் தலைவியும், செயற்பாட்டாளருமான திருமதி காயத்ரி ஸ்ரீகாந்த், “தாயிடமிருந்து இனி எந்த யானையையும் பிரிக்கக் கூடாது. மணக்குள விநாயகர் கோயிலில் மீண்டும் ஒரு யானையை வளர்க்கும் எண்ணம் கைவிடப்பட வேண்டும். மனிதர்களைப்போலவே அதீத உணர்வுகளைகொண்ட யானைகள் அவற்றின் வாழ்விடத்திலேயே இருத்தல் நலம். இறந்த லட்சுமி யானையின் நினைவாக ஒரு சிலை அமைத்து வழிபாட்டைத் தொடங்குங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். இப்படிப் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் குவிந்துவருகின்றன.

அதேபோல விகடன் இணையத்தளத்தில் வெளியான,

 “துறவுக்கு உட்படுத்தப்பட்ட

கோயில் யானையின்

கண்களில்

அவ்வப்போது கசிகிறது

வனப்பிரிவின் வேதனை

காமத்தின் ஏக்கம்

உறவுகளின் நினைவு

கூடவே

காலில் கனக்கும் சங்கிலி

தரும் வலி.

தலை மீது

துதிக்கை வைக்கப்

பயிற்சியளிக்கப்பட்ட

அதன் முன் நிற்க

முண்டியடிக்கிறவர்களின்

கவனத்திற்கு

நீங்கள் பெறுவது

ஆசி என்பது உங்கள்

நம்பிக்கையாக இருக்கலாம்.

ஆனால் அது மனிதர்கள்மீதான

வெறுப்பில் அந்த யானை

தரும் சாபமாகவும் இருக்கலாம்!

என்ற வீ.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதைவரிகளை புதுச்சேரிவாசிகளும், விலங்கு நல ஆர்வலர்களும் தங்களது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் ஸ்டேட்டஸாக வைத்து, புதிய யானை வரவுக்குத் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்துவருகின்றனர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், “யானை லட்சுமி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டு, அங்கு லட்சுமியின் கற்சிலை ஒன்றும் அமைக்கப்படும். புதிய யானை வாங்குவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றவரிடம், பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் குட்டி யானை வாங்கித் தருகிறேன் என்று கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “யானை வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு லைசென்ஸ் வாங்குவதுதான் பெரிய விஷயம். காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதனால் அதற்கு அனுமதி வாங்குவது சாதாரண விஷயமல்ல. லட்சுமியிடமிருந்து எடுக்கப்பட்ட தந்தம் வனத்துறையிடம் இருக்கிறது. கேரளா குருவாயூர் கோயிலில் கேசவன் யானையின் தந்தத்தை அழகுப்படுத்தி வைத்திருப்பது போல, லட்சுமியின் தந்ததமும் மணக்குள விநாயகர் கோயிலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: