பலஸ்தீன அழிப்பும், வெறும் பார்வையாளராக உலகும்!

-ச.பாலமுருகன்

ஹமாஸின் ஒரு நாள் தாக்குதலுக்கு பதிலடியாக பல நாட்களாக காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளது! குடியிருப்பு பகுதிகள், அகதி முகாம்கள், மருத்துவமனைகள்… எல்லாம் தாக்கப்படுகின்றன. காஸாவில் இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்றி யூதக் குடியேற்றம் திட்டமிடப்படுகின்றது!

ஒக்ரோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்ததில் சுமார் 1,200 பேர் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது போரை அறிவித்தது. உலகில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் ஒரு குறுகிய பகுதியே காஸா!. அந்த பகுதியில் முதல் இரண்டு நாளில் மட்டும் சுமார் 6,000 இற்கும் மேல் வான்வழி குண்டு வீச்சுகள் நிகழ்ந்தன. தற்போதும் நிகழ்ந்து கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் ஒரு சராசரி போர் என்பதைக் காட்டிலும், ஒரு இனத்தின் மீதான வன்மமாக இருக்கின்றது. ஹமாஸ் என்ற காஸா மக்கள் போராளிக் குழுவை உலகம் முழுதும் கண்டித்தனர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு தனது மக்களை பாதுகாக்க உரிமை உள்ளது என காஸா நொறுக்கப்படுவதை நியாயப்படுத்தினர். ஆனால் இஸ்ரேலுக்கு உள்ள அதே உரிமை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன பிரதிநிதிகளுக்கும் உண்டு என்பதை பேச தவறினர். நடுநிலை என்பது போல இஸ்ரேலின் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் போக்கின் வெளிப்பாடு இது.

மத்தியத் தரைக் கடலுக்கும், ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் உள்ள இஸ்ரேல் பலஸ்தீனத்தின்  பெரும் நிலப்பகுதியை ஆக்கிரமித்து உருவானதாகும். பலஸ்தீனத்தின் மூன்று துண்டான நிலப்பகுதிகள் காஸா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலசம் என பலஸ்தீன மக்கள் பகுதியாக உள்ளது. ஆனால், சிறு நிலப்பகுதிக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை ஒருதிறந்த வெளிச்சிறையில் வாழ்வதாக உள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து திட்டமிட்டு பலஸ்தீன மக்களின் நிலங்களையும் , சுதந்திர வாழ்வையும் பறித்தது மட்டுமல்ல. அந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக ஏறக்குறைய அடிமைகள் போலவும் நிறவெறி கண்ணோட்டத்துடன் நடத்தி வருகின்றது. பலஸ்தீன மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. சிறு எதிர்ப்புக்கு கூட, இஸ்ரேல் இராணுவம், பலஸ்தீன குழந்தைகள் உட்பட அனைவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்துவது வாடிக்கை.

கடந்த 75 ஆண்டுகால பலஸ்தீன போராட்டம் 1948 இல்பலஸ்தீனம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பலஸ்தீனம் மற்றொரு பகுதி இஸ்ரேல் என பிரிக்கப்பட்டதிலிருந்து துவங்குகின்றது. அந்நாளில் இஸ்ரேல் இராணுவம்  531 பலஸ்தீன கிராமங்களிலிருந்து அம் மக்களை கொன்றொழித்து விரட்டியது. சுமார் 1,50,000 பலஸ்தீன மக்கள் உயிர் பிழைக்க ஓடினர். அவர்கள் காஸா மற்றும் மேற்குக் கரை பகுதியில் நெருக்கமாக சேர அந்த வன்முறை காரணமாக இருந்தது. வீடுகளை விட்டு சென்றவர்கள் தங்கள் வீடுகளின் சாவிகளை மீண்டும் சொந்த வீடுகளுக்கு திரும்புவோம் என நம்பிக்கையோடு தங்கள் வசம் வைத்திருந்தனர்.  1952 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தின் படி பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு திரும்ப வரலாம், அல்லது இழப்பீடு இஸ்ரேல் அரசாங்கத்திடம் பெறலாம் என்றது. ஆனால், இந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்கவில்லை.  ஆனாலும், இஸ்ரேல் என்ற நிலப் பகுதிக்குள் பலஸ்தீன மக்கள் சிலரும் வாழ்ந்து வந்தனர்.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் நிகழ்த்திய ஆக்கிரமிப்பு போரில், பலஸ்தீனத்தின் நிலப்பரப்பு மேலும் சுருக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பிலிருந்து இஸ்ரேல் வெளியேறவில்லை. மாறாக, அப் பகுதியிலிருந்து பலஸ்தீனர்களை திட்டமிட்டு வெளியேற்றியது. பலஸ்தீன மக்களின் நிலங்களை அரசாங்க சொத்து என அபகரித்தது. அவர்களின் வீடுகளை அனுமதியற்ற கட்டிடங்கள் என புல்டோசர்களைக் கொண்டு அகற்றியது. வீடுகள் இடிக்கப்படுவதை கண்டு பதறும் மக்களை வன்முறையாளர்கள் என அமெரிக்க, மேற்கத்திய ஊடகங்கள் காட்சிப்படுத்தின. குழந்தைகளை தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பயங்கரவாத சட்டத்தில் அவர்களை சிறை பிடித்தனர். இது பரவலாக, திட்டமிட்டு கடந்த 54 ஆண்டுகளாக இஸ்ரேல் இதனை தொடர்ந்து செய்து வந்தது.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய புதிய யூத குடியேற்றங்களை உருவாக்குகின்றது. இந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பு தருகின்றது. இப் பகுதிகளில் இராணுவச் சட்டங்கள் இருக்கும். இவ்வாறு இஸ்ரேல் சுமார் 900 புதிய குடியிருப்பு பகுதிகளை சர்வதேச சட்டங்களுக்கு எதிராக உருவாக்கி உள்ளது.

இஸ்ரேலின் நிறவெறி பாகுபாடு

ஓர் ஒடுக்கப்பட்ட அதிகாரமற்ற இனத்தை அதிகாரம் உள்ள இனமானது தங்கள் மேலாண்மையை நிறுவ மனித தன்மையற்று நடத்துவது மனித குலத்திற்கு எதிரான நிறவெறிக் குற்றம் என 1973 ஆம் ஆண்டு ஐ.நா நிறவெறி குற்றத்திற்கு எதிரான மாநாடு வரையறுக்கின்றது. இதே பொருளில் சர்வதேச குற்ற நீதிமன்றமும்  நிறவெறியை குற்றமாக வரையறுக்கின்றது. மக்கள் மீது வன்முறை ஏவுவது நிறவெறி குற்றம் என்கின்றது. இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்தீன மக்களின் மீதான வெறுப்பு மற்றும் இன ஒதுக்கலை நிறுவனமயமாக்கி,  அம் மக்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொன்றழித்து வருகின்றது.

இஸ்ரேல் ஏதோ ஒரு வகையில் பலஸ்தீன மக்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாக கொண்ட செயல்முறைகளை வகுத்துள்ளது. இஸ்ரேலில் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியில் பலஸ்தீனர்கள் சுயமரியாதை, சம குடிமக்களாக உணரவே முடியாத அடக்குமுறைகள் இஸ்ரேல் வகுத்துள்ளது. இந்த அடக்குமுறை பலஸ்தீனியர்கள்  அம் மண்ணிலிருந்து வெளியேற ஒரு கருவியாக இருக்கும் என இஸ்ரேல் கருதுகின்றது. கடந்த 2018 ஜூலை 19  ஆம் திகதி கென்செட் என்ற இஸ்ரேல் பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தில் இஸ்ரேல் யூத நாடு என்றும் யூத மக்களுக்கு மட்டுமே  சுய நிர்ணய உரிமை உண்டு என்றும், ஹீப்புரு மொழி மட்டுமே அரசு மொழி என்றும், அரசு புதிதாக உருவாக்கிய குடியிருப்புகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சட்டம் இயற்றியது.

கடந்த 70 ஆண்டுகளாக ஹீப்புரு உடன் அரசு மொழியாக இருந்த அரபி அந்த தகுதியை இழந்தது. இஸ்ரேலில் உள்ள 90 இலட்சம் அரபு மொழி பேசும் மக்களின் எதிர்காலத்தை இது சிதைத்து விட்டது. ஒரு புறம் இஸ்ரேல் பலஸ்தீன மக்களிடம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை சட்டப் பூர்வமான, அமைதி தீர்வுக்கு நகர்த்த முடியும் என்ற நம்பிக்கையை சிதைத்தது. மேலும் சட்டவிரோத குடியேற்றங்களை தேசிய சொத்து எனக் கூறி அம் மண்ணின் மீதான நம்பிக்கைகளையும் சிதைத்தது. இவை அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் நிறைவெறியை எதிர்த்தும் இலண்டன் மக்கள் போராட்டம்!

அரபி இஸ்ரேலியர்கள் என பல்வேறு சட்ட தகுதிகளில் 3,50,000 பலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலம் பகுதியிலும், 25,00,000 மக்கள் மேற்கு கரை வெஸ்ட்பேங் பகுதியிலும் 19,00,000 மக்கள் காஸா பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது நாடற்றவர்களே. இவர்களில் கிழக்கு ஜெருசலம் பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இஸ்ரேல் பாஸ்போர்ட் பெற முடியாது. மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் மட்டுமே வாழ முடியும். இஸ்ரேலில் பலஸ்தீனியர் என்பவர் யூதரைப் போல ஒரு மனிதராக கருதப்படுவதில்லை. அவர் மனிதருக்கும் கீழானவர். இதில் அடிமை நிலையில் ஒப்பீட்டளவில் கிழக்கு ஜெருசலம் பலஸ்தீனியர், மேற்குக்கரை பலஸ்தீனியரை விட கொஞ்சம் சுமாராக வாழ வழி உள்ளது. மேற்கு கரை பகுதி பலஸ்தீனர், காஸா பகுதியை விட, கொஞ்சம் மூச்சு விட முடியும். ஆனால், காஸாவாசி ஒரு  திறந்த சிறையில் வாழவேண்டும். மின்சாரம், குடிநீர் என எல்லாம் இஸ்ரேலில்  இருந்து வரவேண்டும். அது காஸாவாசியின் மீது இஸ்ரேல் அரசுக்கு தயவு உள்ளவரை மட்டுமே நடக்கும்.

பலஸ்தீனர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட யூதக் குடியிருப்புகள்!

மேற்குக் கரை பகுதியில் உள்ளவர்கள் காஸா பகுதிக்கு போக முடியாது. பல பலஸ்தீனிய குடும்பங்கள், உறவுகள்  இரண்டு நிலப்பரப்பில் துண்டாடப்பட்டு உள்ளனர். இந்த குடும்பங்கள் சேர்வது இயலாத ஒன்று. மேற்கு கரையிலிருந்து இனிமேல் திரும்பி வரமாட்டேன் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே காஸா போக இஸ்ரேல் அரசு அனுமதிக்கும். மேற்கு கரைப் பகுதியில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களுக்கு குடியிருப்பு உரிமை மறுக்கப்படுகின்றது. பலர் மறு குடிபெயர்த்தல் என இடப் பெயர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இஸ்ரேல் சட்டம் பலஸ்தீனிய மக்களை பாகுபடுத்தக்கூடியது மட்டுமல்ல, அவர்களின் மனித உரிமையை பறிக்க, ஒரு கருவியாகவும் செயல்படுகின்றது. பலஸ்தீனியர்களுக்கு நில உரிமை ஒரு புறம் பறிக்கப்படுகின்றது. மறுபுறம் யூத குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுகின்றது.  இந்த நிலங்கள் உள்ள பலஸ்தீன மக்கள் நிலங்களில் 60 சதவிகிதத்தை ஒஸ்லா ஒப்பந்தம் கீழ் இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால், இப் பகுதியில் இடிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் கட்டிடங்களுடன் ஒப்பிடும் போது, நூற்றில் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே வீடு கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு அகதிகள் என்ற நிலைக்கு பலஸ்தீனியர்களை தள்ளியுள்ளது.

மேலும், இவர்கள் பகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, பொதுச் சுகாதாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவது பெரும் போராட்டம். கஸா பகுதியிலிருந்து மேற்குக் கரை பகுதிக்கு அனுமதி பெற்று வந்தவர்கள் ஒரு போதும் மேற்குக் கரை பகுதியை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றமுடியாது. ஒரு யூதருக்கு இஸ்ரேலில் கிடைக்கும் குடியுரிமை பலஸ்தீனியருக்கு கிடையாது. பலஸ்தீனர் யூத இஸ்ரேலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அந்த உரிமை கிடையாது. காஸா, மேற்குக் கரை  பலஸ்தீனரை இஸ்ரேலியர் திருமணம் செய்து கொள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம்  மற்ற இனத்தவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாகுபாடு முழுக்க இஸ்ரேலின் இனவெறியின் அடையாளம் மட்டுமல்ல, பலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இன ஒதுக்கல் மற்றும் இன அழிப்பின் வெளிப்பாடு. போர்களில் கொல்லப்படும் பலஸ்தீன மக்கள், குழந்தைகள் மற்றும் குண்டு வீச்சுக்கு உள்ளாகும் கட்டிடங்கள், மருத்துவமனைகள் வெளிப்படையாக காண முடிகின்றது . ஆனால், மேற்கண்ட இஸ்ரேல் அரசின் நிறுவன மயமான  இனவெறி பாகுபாடு, தாக்குதல்கள் பலஸ்தீன மக்களை ஒரு திறந்த சிறையில் துன்புறுத்தப்படும் நிலையின் வைத்திருப்பதன் வெளிப்பாடு.

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள்,பெண்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் இராணுவம் நான்கு பெரிய போர்களை பலஸ்தீன மக்கள் மீது  நிகழ்த்தியுள்ளது. ஒவ்வொரு தாக்குதலும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தியது. மேலும், அம் மக்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை அழிப்பதை நோக்கமாக கொண்டது. எல்லா தாக்குதலிலும் இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்ட பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்ரேலின் எல்லா அமைதியான ஆர்ப்பாட்டங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில பத்திரிக்கையாளர்களும், பலஸ்தீன பொது மக்களுடன் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், குண்டுகளை வீசி வீடுகளை அழித்த பின் உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல  மறுப்பதானது பசியை ஆயுதமாக மாற்றி மக்களை கொல்லும் கொடூரமாகும். தற்போதும் சுமார் 23 இலட்சம் மக்கள் அடிப்படை தேவைகளின்றி தவிக்கின்றனர்.

இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகள், இனவெறி, மனித குலத்திற்கு எதிரான அதன் குற்றங்கள், திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்காமல் கடந்து செல்வதும், ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீனிய போராளி குழுக்களை  மட்டும் கண்டிப்பதும்  அல்லது இரண்டு தரப்பும் தவறு  என வாதிடுவதும் வரலாற்றை முழுதாக புரிந்து கொள்ள மறுப்பதாகும். பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரிக்க இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் இல்லை. இஸ்ரேலின் பயங்கரவாதச் செயலே பலஸ்தீன போராளிக் குழுக்கள் உருவாகக் காரணம்.   இஸ்ரேலின் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளையும் அமெரிக்கா ஆதரிக்கின்றது. ஐ.நா.சபையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை பாதுகாக்கின்றது. இதுவே இனப் படுகொலைக்கு துணை போகும் போக்கு தான்.  சர்வதேச சமூகம் பலஸ்தீன மக்களின் மனித உரிமைகளுக்கு அவசியம் குரல் கொடுக்க வேண்டும்.

Tags: