அரசியலில் பக்தி சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்
-என். ராம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க, நாட்டின் பன்மைத்துவ தன்மையைப் பாதுகாக்க, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை பாதுகாக்க, எழுத்துரிமை பேச்சுரிமை பாதுகாக்க, சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளில் கட்டமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற குடியரசைப் பாதுகாக்க நடப்பு பொதுத் தேர்தல்களில் மோடி ஆட்சியை மக்கள் வீழ்த்தி முறியடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ‘தி இந்து’ குழும இயக்குநரும், நாட்டின் மூத்த இதழாளருமான என்.ராம்.
சிந்தனையாளர் மன்றம் 16.04.2024 அன்று சென்னையில் நடத்திய கருத்தரங்கில், ‘தாக்குதலுக்கு உள்ளாகி வரும் விழுமியங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ராம், பத்தாண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமாக அமைந்தது; மதவெறியைத் தூண்டி மக்களிடையே வெறுப்புணர்வை ஊட்டும் நோக்கில் இறங்கியது; கோர்ப்பரேட் நலனை முன்னிறுத்தி உழைப்பாளி மக்கள் மற்றும் சாமானிய மக்கள் வாழ்வாதாரங்களை சிதைத்தது என்று குற்றம் சாட்டினார்.
அம்பேத்கரின் எச்சரிக்கை
நவம்பர் 25, 1949 அன்று அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையின்பால் பார்வையாளர்களது கவனத்தை ஈர்த்த என். ராம், ‘அரசியலில் பக்தி என்பது சிதைவுகளுக்கு இட்டுச் சென்று இறுதியில் சர்வாதிகாரத்தின் பிடியில் தேசத்தைக் கொண்டு நிறுத்தும்’ என்று அவர் எச்சரித்தது இப்போது மிகவும் பொருத்த மானது என்றார்.
கோவிட் மரணங்கள் அரசு கொடுத்த புள்ளிவிவரங்கள் படியே 50 இலட்சம். ஆனால் அதற்காக வருத்தம் அடையவோ பொறுப்பு ஏற்கவோ மறுத்த எதேச்சதிகார ஆட்சி இது என்று வேதனையோடு குறிப்பிட்ட ராம், 1975 – 77 காலத்திய நெருக்கடி நிலையை விடவும் மோசமான காலகட்டம் இது என்று வேறுபடுத்தி விளக்கினார். முன்பு நடந்தது தனிநபர் ஒருவரது அதிகார வெறி, அவரது துதி பாடி கும்பலின் ஆட்டம். ஆனால் மோடியின் பத்தாண்டு ஆட்சி என்பது இந்து பெரும்பான்மை முதன்மைவாதத்தின் பெயரால் நடத்தப்படும் அதிகார வெறியாட்டம் என்றார் ராம்.
பால ராமர் சிலையைத் தானே பிரதிஷ்டை செய்யத் துணிந்த மோடி, அதில் பங்கேற்காத எதிர்க்கட்சிகள் இராமனுக்கு எதிரானவர்கள், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் குற்றச்சாட்டு வைக்கிறார். இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள், மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் எல்லோரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர் படுகொலை
2014 இற்குப் பிறகு பத்திரிகை சுதந்திரத்தின் கதி என்னவாக இருந்துவருகிறது என்பது, 180 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் இருந்து கீழிறங்கி 161வது இடத்திற்கு வந்திருப்பதில் புலப்படும் என்று குறிப்பிட்ட ராம், இந்தப் பத்தாண்டுகளில் 19 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மீதான தாக்குதல், 370வது சரத்து நீக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி சட்ட விரோதமாகக் கவிழ்க்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது, சிவில் உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டில் மக்களைக் கொண்டு நிறுத்தி இருப்பது எத்தனை ஜனநாயக விரோதமானது என்று விவரித்த ராம், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்வது, மாநில அதிகாரங்களில் குறுக்கிடுவது, மாநில – மத்திய உறவுகளை சீர்குலைப்பது இவற்றை வழக்கமாக்கி விட்டது பா.ஜ.க அரசு; எதேச்சதிகாரத்தின் உச்சம் மோடி ஆட்சி என்றும் என்.ராம் சாடினார்.
பாபர் மசூதி கல்லறையில் இராமர் கோவில்
“டிசம்பர் 6,1992 தகர்க்கப்பட்ட பாபர் மசூதியின் கல்லறை மீது எழுப்பப்பட்டது தான் ஜனவரி 22, 2024 இல் திறந்து வைக்கப்பட்ட இராமர் கோயில். அதற்காக 11 நாள் புனித நோன்பு கடைப் பிடித்தார் பிரதமர் மோடி. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், அரசியலும் மதமும் கலக்கக்கூடாது என்று தெளிவாகக் கோடு போட்டிருந்த உச்சநீதிமன்ற வழி காட்டுதலைக் காலில் போட்டு மிதித்திருக்கும் செயல் அது. இந்து பெரும்பான்மை முதன்மை வாதத்தை எழுப்பி மக்களை மத ரீதியில் துண்டாடுவது தான் அதன் நோக்கம்.
பா.ஜ.க வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கு தனது முகத்தை முதலீடு செய்வதில் கிடைக்கப்பெறுவது என்பதால் யாரைக் குறித்தும் கவலைப்படாது எதையும் காதில் வாங்கத் தயாரில்லாது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. பா.ஜ.க பெற்று வந்துள்ள வாக்கு சதவீத வளர்ச்சி ஒன்றும் முறியடிக்கப்பட முடியாதது அல்ல. தேர்தல் பத்திரத்தில் அவர்களது கோர்ப்பரேட் கூட்டு அம்பலப்பட்டு நிற்கிறது. வெளிப்படைத் தன்மை அற்று கோடிக்கணக்கில் பணம் அள்ளிக் கொடுத்து எந்தவித பிரதிபலனையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று கோர்ப்பரேட்கள் இயங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தங்களது தத்துவ இலக்கு நோக்கி நடைபோடும் வரை தான் மோடி போன்றவரை ஆர்.எஸ்.எஸ் அனு மதிக்கும். பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அதிகார இடைவெளி, முரண்பாடுகள் ஏற்கெனவே வெளிவந்திருக்கின்றன. ஆனால் சங் பரிவாரம் அதன் அத்தனை துணைக் கோள்களோடும் அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது நாசகார இலட்சியத்தை நோக்கி ஒன்றுபட்டு இயங்கிக் கொண்டிருப்பதைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. 144 கோடி மக்கள் நலன் அவர்களுக்குத் துச்சம்.
ஆனால் இந்த தேசத்தை, அதன் மக்களை, ஒரு பன்மைத்துவ மதச்சார் பற்ற குடியரசை, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் வலிமையான கோட்பாட்டை நாம் பாதுகாத்துத் தான் ஆகவேண்டும், அந்த முக்கிய கடமையை ஒன்றுபட்டு முன்னெடுப்போம்” என்று நிறைவு செய்தார் என்.ராம்.
தொகுப்பு : எஸ்.வி.வி.