மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்!

-ச.அருணாசலம்

வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்?

தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் இலட்சக்கணக்கான பலஸ்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

கடந்த ஒக்ரோபர் 7 ல் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் அரசு, காசா பகுதியின் மீது – அப்பாவி பலஸ்தீனிய பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்து அனைத்து இருப்பிடங்களையும், கட்டிடங்களையும் தரைமட்டமாக்கினர். ஹமாஸ் “தீவிரவாதிகளை“ அழித்து ஒழிப்பதும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதுமே எங்களது இரட்டை நோக்கம் என்று கூறி, இஸ்ரேல் இராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காசா வாழ் பலஸ்தீன மக்கள் மேல் நடத்தியது. இந்த இன ஒழிப்பை, மனிதகுல விரோத பயங்கரத்தை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும்-  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர – மற்ற நாடுகள் அனைத்தும் – கண்டனம் செய்தன!

தென்னாப்ரிக்க நாடு இஸ்ரேலின் மீது, மனித குலத்திற்கெதிரான “போர்குற்றத்திற்காக“ சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ஐ.நா சபையின் பொதுச் செயலாளரும், மற்ற நாடுகளும் இஸ்ரேல் நாட்டு இராணுவத்தின் அட்டூழியத்தை வன்மையாகக் கண்டித்தன. போர் நிறுத்தத்திற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகள் செய்தன.

மனித உரிமைகளை மதிக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசி, பேரழிவை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேல் நாட்டை எச்சரித்தனர் உலக மக்கள்.

இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தரும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் மக்கள் வீதிகளில் திரண்டு, இஸ்ரேலின் மனிதகுல விரோத தாக்குதலை கண்டித்ததோடு, இத்தகைய அட்டூழியங்களுக்கு துணை போகும், தங்கள் நாட்டு அரசுகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

அமெரிக்காவிலும் கூட பொது மக்களும், இளைஞர்களும் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தாக்குதலை எதிர்த்து கண்டனக் கூட்டங்களும், பேரணிகளும் நடத்தினர். இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க அரசின் கொள்கைகளை எதிர்த்து வீதிகளுக்கு வந்தனர். இந்த வகையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியில் உள்ள இளைய தலைமுறையினர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு ஆதரிக்க கூடாது என்று அதிபர் பைடனுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

அமெரிக்காவில் காசா வாழ் மக்களை காப்பாற்றக் கோரும் போராட்டம்.

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி ஏழு மாதங்கள் கடந்தும் , 35,000 மக்களை – பெரும்பாலும் குழந்தைகளும்,மகளிரும் – கொன்றொழித்த பின்னரும், அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கிய பின்னரும் அங்குள்ள மக்களுக்கு உணவு, சுகாதாரம் போன்ற உதவிகள் செய்துவந்த ஐ.நா அலுவலக அமைப்புகளை நிர்மூலமாக்கி, அதில் பணியோற்றுவோரைக் கூட கொன்ற பின்னரும்

இஸ்ரேலினால் தனது இரட்டை இலக்குகளை – பிணைக் கைதிகளை விடுவித்தல், ஹமாசின் படைபலத்தை முறியடித்தல் – ஆகிய இலட்சியத்தை அடைய முடியவில்லை.

முதலில் காசா தலைநகரான காசா நகரத்தை முற்றுகையிட்டு, அங்கு தீவிர குண்டுவீச்சிற்கு பின்னர், இராணுவத்தை அனுப்பி கணமூடித்தனமாக தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இராணுவம். இதனால், பல இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தெற்கு நோக்கி விரட்டப்பட்டனர்.

அப்படி விரட்டப்பட்ட மக்கள் ஜெபாலியா நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமை தஞ்சமடைந்தனர். ஆனால் அங்கும் ஹமாசை ஒழிக்கிறேன் என்று கூறி இஸ்ரேல் இராணுவம்

அப்பாவி மக்களை கொன்றொழித்தது. ஹமாசின் “சுரங்க பாதை அமைப்புகளை “ தகர்க்கிறேன் என “அல் ஷிஃபா மருத்துவமனைகளில் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளையும் தகர்த்து தரைமட்டமாக்கினர். இதனால் எண்ணற்ற இளங்குழந்தைகள் “இன்குபேட்டர்களிலேயே மாண்டனர்!

அடுத்து கான் யூனிஸ் என்ற நகரையும் தரைமட்டமாக்கி, பலஸ்தீன மக்கள் எந்தவித சுகாதார வசதிகளுமின்றி, குழந்தைகள் மகளிர், முதியோர் என்ற பேதமின்றி, கூடாரங்களிலும், வெட்ட வெளிகளிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

முதலில், ஆயுதந்தாங்கிய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவே இந்த இராணுவ நடவடிக்கை என இஸ்ரேல் தெரிவித்தாலும், விரைவில் காசா பகுதி முழுவதையும் பட்டினி போடும் நோக்கில் முற்றுகையிட்டு , ஒவ்வொரு நிமிடமும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் இராணுவத்திற்கு “பொதுமக்கள் உயிரிழப்பை தவிர்ப்பது” என்றால், அதன் கணக்கு வேறானது ஆகும் . ஒரு ஹமாஸ் போராளியை கொல்வதற்கு எத்தனை அப்பாவிகளை கொல்லலாம் என்ற அவர்களது”உள்நாட்டு கணக்கு” அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு ஹமாஸ் போராளியைக் கொல்ல 50 அப்பாவி பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டாலும் அது “ஏற்றுக்கொள்ளக்கூடியதே” என இஸ்ரேல் இராணுவம் நினைத்தது. ஆனால் இந்த கணக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என்பதை, அவர்களது கூட்டாளியும் “காட் ஃபாதருமான” அமெரிக்க அரசே சுட்டிக்காட்டியுள்ளது.

“இஸ்ரேல் தாக்குதல் நடத்து முன் பொதுமக்கள் நலனை முதன்மையாக கருத வேண்டும்” என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதில் தவறினால் இஸ்ரேல் “தனிமைப்படும்” என எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு

“நாங்கள் தனியாக நின்றாலும் பரவாயில்லை, தாக்குதல் தொடரும்” என கூறியுள்ளார். ஆனால், வெட்கங்கெட்ட அமெரிக்கா இன்னும் ஆயதங்கள் அளிப்பதை நிறுத்தவில்லை.

இந்தியாவிலிருக்கும் சென்னை முதல் பாண்டிசேரி வரையிலான ஒரு பகுதியை கற்பனை செய்து பாருங்கள். இந்தப் பகுதியில் ஒருபுறம் கடலும், மற்ற மூன்று பகுதிகளும் நிலத்தால் சூழப்பட்டிருப்பதாக நினைத்தால், பாண்டிசேரியை ரஃபா நகரமாக கற்பனை செய்து பாருங்கள். சென்னை பகுதி மக்கள் அனைவரையும் அடித்து விரட்டி, சின்னஞ்சிறு பாண்டிச்சேரியில் குவித்தால் என்ன நிலை ஏற்படுமோ, அதே நிலை தான் காசா பகுதியின் தென்கோடி நகரமான ரஃபாவிற்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் கூட்டத்தினூடே குண்டு மழை பொழிவதும் உணவு, உடை, சுகாதார தேவைகளை மறுத்து அடைத்து வைப்பதும் இஸ்ரேல் இராணுவத்தால் தொடரப்படுகிறது.

உணவு, தண்ணீரின்றி சுகாதாரக் கேடுகளுடன், தொற்று நோய்களுடன் பலஸ்தீன மக்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 1,70,000 பேர்கள் வாழத் தகுதியான இடத்தில் இன்று 17 இலட்சம் மக்கள் இருக்க வேண்டியுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள்.

இஸ்ரேல் இராணுவம், இம் மக்களிடையே ஷெல் அடிப்பதும், கிளஸ்டர் குண்டுகளை வீசுவதும், துப்பாக்கி சூடுகளை கண்மூடித்தனமாக நடத்துவதும் அதிகரித்துள்ளது. ஒருபுறம் கடலும், மறுபுறம் இஸ்ரேலும், தென்பகுதியில் எகிப்து நாடும் சூழ்ந்துள்ள  ரஃபா  நகரம் இன்று இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சதுர கிமீ பகுதியில் 22,000 மக்கள் எந்தவித குடியிருப்பு வசதிகளின்றி கூடாரங்களிலும், கடற்கரைகளிலும், வெட்ட வெளிகளிலும் முண்டியடித்து வாழுகின்றனர். இவர்களை இங்கு இப்படி கொடுமையாக குவித்துவிட்டு, இன்று ஹமாஸ் போராளிகளை பிடிக்கிறேன் என்று கூறி, மீண்டும் குண்டுகளை வீசி அவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறச் செய்கிறது இஸ்ரேல் இராணுவம்.

குண்டு வீச்சால் தகர்க்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி!

இதன்மூலம் என்ன சாதிக்க விரும்புகிறது இஸ்ரேல்?

பலஸ்தீன விடுதலை வீர்ர்களான ஹமாசை முற்றிலும் முறியடிப்பதே இஸ்ரேலின் எண்ணம்   . அடுத்து பிணைக் கைதிகளை விடுவிப்பது என்று இஸ்ரேல் கூறுகிறது. வடக்கு மற்றும் மத்திய காசா பகுதியை(காசா நகரம்,கான் யூனிஸ் நகரம், ஜெபாலியா முகாம் ) முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டு ஹமாசை வீழ்த்திவிட்டோம் என்று கூறியது இஸ்ரேல் இராணுவம் .

ஆனால், இன்றோ, மீண்டும் ஹமாசை முறியடிக்க, பிணைக் கைதிகளை விடுவிக்க ரஃபா நகரை முற்றுகை இடுகிறோம் என்று இஸ்ரேல் கூறுவது அதன் தோல்வியைத் தான் காட்டுகிறது.

எகிப்து நாடும் கத்தார் மற்றும் அமெரிக்க நாடும் இணைந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பல முயற்சிகள் செய்தன. இதை முதலில் ஹமாஸ் எதிர்த்தாலும், இறுதியில் தனது சம்மதத்தை தெரிவித்தது. இதன் பின்னரும் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

கண்மூடித்தனமான தாக்குதல்களை பலஸ்தீனர்கள் மீது மட்டுமின்றி ஊடகத்தினர் மீதும் ஐ. நா. ஊழியர்கள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

14.05.2024 அன்று இந்திய இராணுவ முன்னாள் அதிகாரி, தற்போது ஐ.நா. அமைதிக்குழுவில் உள்ள திரு. வைபவ் அனில் காலே என்ற ‘கர்னல்’ இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . ஐ. நா சின்னம் பொறித்த வாகனத்தில் அவர் பயணித்தாலும் இஸ்ரேல் இராணுவம் அதை பொருட்படுத்தாமல் அவ்வாகனத்தையும் தாக்கியுள்ளது!

இத்தகைய அத்துமீறல்களை, அட்டூழியங்களை மனித குல விரோத போர்க் குற்றங்களை உலக நாடுகள் கண்டிக்கின்றன. எகிப்து நாடும் தென்னாப்ரிக்க நாட்டுடன் இணைந்து இஸ்ரேல் மீதான “போர்க் குற்றத்தை” ஆமோதிக்கிறது. ஆனால், இந்தியாவோ – மோடி அரசோ- வாய்மூடி மௌனியாக உள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

1948 இஸ்ரேல் நிறுவப்பட்ட பொழுது 7 இலட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் இன ஒழிப்பு மூலம் (ethnic cleansing) அவர்களது உடமைகள், நிலங்களை பிடுங்கி விட்டு விரட்டியடித்தனர். அப்படி சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் காசா பகுதியில் குடியேறினர்.

1967 யுத்தத்தின் போது, காசா பகுதியை எகிப்து நாட்டிடமிருந்து இஸ்ரேல் பறித்துக் கொண்டது. சொந்த இடங்களை விட்டு விரட்டப்பட்ட பலஸ்தீனர்களின் வம்சாவளியினர் தான் இன்றைய காசா பகுதி பலஸ்தீன மக்கள். 2005 முதல் (கேம்ப் டேவிட் ஒப்பந்தம் மூலம்) காசா பகுதி பலஸ்தீனர்களின் தன்னாட்சியின் கீழ் உள்ளது . ஹமாஸ் அமைப்பு காசா பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும் இவர்கள் நகர சிவில் நடவடிக்கைகளை (கல்வி,சுகாதாரம், தற்காப்பு) கண்காணித்து வந்தனர் .

தொடர்ந்து ஐந்து தலைமுறைகளுக்கு மேல் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் இம்மக்கள் தங்கள் விடுதலைக்கும், தற்காப்பிற்கும் ஏற்றார் போல் பூமிக்கடியில் சுரங்கப் பாதைகள் வெட்டி தங்களது தற்காப்பினை , விடுதலையினை உறுதிப்படுத்தி வந்தனர். இதில் முன்னணியில் திகழ்ந்தது ஹமாஸ் அமைப்பு. மீன் பிடிப்பதற்கு கூட இஸ்ரேல் இராணுவத்தின் அனுமதி தேவை என்ற நிலையில், தங்கள் விடுதலையை திட்டமிட அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால், ஆதிக்கவாதிகளுக்கும், காலனியாளர்களுக்கும் இந்த விடுதலை வேட்கை உணர்வு புரியாது. இஸ்ரேலின் கூட்டாளிகளான ஆதிக்க மனப்பான்மை மிக்க அமெரிக்கர்களையும் ‘இந்துத்துவ’ கும்பலையும் என்ன வென்று அழைப்பது?

போர் நிறுத்தமும், நிரந்தர தீர்வும் பலஸ்தீனர்களுக்கு மறுக்கப்பட்டால், தனிமைப்பட போவது பலஸ்தீனியர்கள் அல்ல, இஸ்ரேல் நாட்டு ஜியோனிஸ்டுகள் தான் !

Tags: