சர்வதேச கிரிமினல் இஸ்ரேல்!
இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) உட்பட மூன்று ஹமாஸ் தலைவர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர் யோவ் காலந்த் (Yoav Gallant) ஆகியவர்களைக் கைது செய்திட பிடியாணைகள் (warrants) பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் (International Criminal Court – ICC) தலைமை வழக்குரைஞர் கரீம் கான் (Karim Khan) கோரி இருக்கிறார்.
மேலும், காஸாவில் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் யுத்தத்தின் விளைவாக இஸ்ரேல் பிரதமரும், இராணுவ அமைச்சரும் மனித குலத்திற்கு எதிராக போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் கரீம் கான் கூறியிருக்கிறார். காஸாவில் வாழும் அப்பாவி மக்களைப் பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கி, அதன்மூலம் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்களின் நடவடிக்கைகள் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் பலியாவதற்கு இட்டுச் சென்றுள்ளன. ஹமாஸ் தலைவர்களைப் பொறுத்தவரையில், ஒக்ரோபர் 7 தாக்குதலின்போது இஸ்ரேலிய மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்டதாக வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார்.
வழக்குரைஞர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேற்படி வழக்குரைஞரின் வேண்டுகோள்களுக்கு ஆதரவாக, சர்வதேச நீதிமன்றத்தின் ஐந்து முன்னணி நடுவர்கள் (Jurists) குழு ஒருமனதாக தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறது. சமீப காலங்களில் யூதர்களுக்கு எதிராக செயல்படுபவர்களில் கடும் எதிர்ப்பாளர் என்று வழக்குரைஞர் கரீம்கான் குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எரிச்சலுடன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் என்றால் என்ன?
சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் (International Criminal Court – ICC) என்பது, ஐ.நா. ஸ்தாபனத்தின் சர்வதேச நீதிமன்றம் (ICJ-Inter national Court of Justice) போன்றது அல்ல. இது இனப்படுகொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தனிநபர்களை விசாரிக்கும் ஓர் ஒப்பந்த அடிப்படையிலான நீதிமன்றமாகும். ஆனால் ஐ.நா.ஸ்தாபனத்தின் சர்வதேச நீதிக்கான மன்றம் தனிநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்காது; மாறாக அது அரசாங்கங்கள் குறித்தே விசாரிக்கும்.
சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இது நாள் வரையிலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக உள்ள அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தலைவர்களைக் குறிவைத்தே இயங்கி வந்தது. சென்ற ஆண்டு உக்ரைன் மீதான யுத்தம் குறித்து குற்றங்கள் புரிந்ததாகக் கூறி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக செயல்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் செயல்பட்டவரையிலும், இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இவ்வாறான நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை என்ற போதிலும்கூட, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்களாக இருந்து வரும் நாடுகள், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கின்றன.
முதல் முறையாக…
இத்தகைய நிலையில், அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் நாடுகளின் தலைவர்களை விசாரிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் கோரியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவேதான் அமெரிக்காவும் அதற்கு ஆதரவாக இருந்திடும் நாடுகளும் இதற்கு எதிராக அலறத் தொடங்கி இருக்கின்றன. “இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்கினால், நாங்கள் உங்களைக் குறிவைப்போம்…” என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில் மிரட்டி இருக்கின்றனர். சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் மற்றும் நீதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள்.
இங்கிலாந்தும், ஜெர்மனியும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு ஒப்புதலின்மையை வெளிப்படுத்தி இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் முடிவினை ஆதரித்திருப்பது இவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளிடையே விரிசல்
காஸாவில் நடந்து வரும் போரின் பயங்கரம், மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டி லும் விரிசல்களை உருவாக்கியுள்ளது. நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை பலஸ்தீன அரசை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன. பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ளன.
ஆபத்தில் ராஃபா
அதே சமயத்தில், காஸாவின் ரஃபா நகரில் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பலஸ்தீன மக்களைக் காலி செய்யுமாறு இஸ்ரேல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன்மூலம் இஸ்ரேல் இந்நகரின்மீது தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிட்டிருக்கிறது. ரஃபா நகரில் தஞ்சம் அடைந்திருந்த 15 இலட்சம் மக்களில் எட்டு இலட்சம் பேர், இப்போது மத்திய காஸா மற்றும் இதர இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். ரஃபா நகரில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது குறித்தும், பாதுகாப்பின்மை ஏற்பட்டிருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருப்பதன் மூலம், இஸ்ரேல் பட்டினியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆயுதங்கள்
ரஃபாவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பொது மக்கள் உயிரிழப்புக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்று அமெரிக்கா முதலைக் கண்ணீர் வடித்திடும் அதே சமயத்தில், இஸ்ரேல் இராணுவத்துக்கு மிகவும் கொடிய ஆயுதங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது. இஸ்ரேலுக்கு சுமார் 26 பில்லியன் டொலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அளிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவுக்கு அமெரிக்க காங்கிரசும் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிந்திட, இந்தியா, அமெரிக்கா அளவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்ற போதிலும், அதுவும் சிறிய அளவில் தன் பங்கினைச் செய்து வருகிறது.
இந்தியாவில் இருந்து சென்ற ஆயுதங்கள்
சென்ற வாரம் சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு, டென்மார்க் கொடியுடன் புறப்பட்ட ஒரு சரக்குக் கப்பலில் 27 தொன்கள் வெடிமருந்துகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பல் தங்கள் நாட்டின் வழியே செல்வதற்கு ஸ்பெயின் அரசாங்கம் அனுமதி மறுத்தது. இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியுள்ள ஸ்பெயின், தங்கள் நாட்டிலுள்ள கார்டஜெனா (Cartagena) துறைமுகத்தில் இந்தியக் கப்பலை நிறுத்த அனுமதித்திடவில்லை. ஏராளமான மக்களைக் கொன்று குவித்திடும் இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்கள் செல்வதை தாங்கள் விரும்பவில்லை என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்திய அரசாங்கம், இஸ்ரேலுக்கு அனுப்பிய இராணுவத் தளவாடங்களில் என்ன வகையான ஆயுதங்கள் இருந்தன என்பது குறித்தோ, அவை எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தோ விளக்கம் எதுவும் அளித்திடவில்லை. ஆயினும், இந்தியா, இஸ்ரேலுக்கு இராணுவத் தளவாடங்களை அனுப்பிய தாகப் பதிவேடுகள் காட்டுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 20 ஹெர்ம்ஸ் ரக இராணுவ ஆளில்லா விமானங்கள் (Hermes military drones) ஏற்றுமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் அதானி குழுமம் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) ஆகியவற்றின் கூட்டுத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவைகளாகும். அமெரிக்க ஜனாதிபதி பைடனின் எடுபிடியாக மாறியிருக்கும் மோடி அரசாங்கம், காஸாவில் மக்கள் மடிவது குறித்து முதலைக் கண்ணீர் வடித்திடும் அதே சமயத்தில், இஸ்ரேலுக்கு இராணுவரீதியாக உதவிகள் புரிவதற்கு அமெரிக்காவுடன் உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறது.
தவறாக நின்று தனிமைப்படும் மோடி அரசு
மனிதப் பேரழிவைத் தவிர்ப்பதற்காக ரஃபாவில் இஸ்ரேலியத் தாக்குதல் நிறுத்தப்பட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.மன்றத்தின் சர்வதேச நீதிக்கான மன்றத்திற்கு தென்னாப்பிரிக்கா ஒரு புதிய மனுவை அனுப்பியிருக்கிறது. இதனை சர்வதேச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. இவ்வாறு இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பலஸ்தீனத்திற்கு நீதி வழங்கக் கோரியும் தென்னாப்பிரிக்காவும், உலகின் தெற்கு நாடுகள் சிலவும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மோடி அரசாங்கமோ இந்த முக்கியமான போராட்டத்தில் வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்கிறது.
மூலம்: Make Israeli Rulers Accountable for War Crimes
தமிழில்: ச.வீரமணி