நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய சீனாவின் சாங் – 6 விண்கலம்
சீனாவின் சாங் – 6 (Chang’e-6) விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. தென் துருவ-எய்ட்கென் பள்ளத்தில் (Aitken basin) ஜூன் 2 ஞாயிறன்று காலை தரையிறங்கியதாக சீன தேசிய விண்வெளி மைய நிர்வாகம் உறுதிப்படுத்தியது. 2024 மே மாதம் 3 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இருந்து பாறைகள், மண் ஆகியவற்றை சேகரித்து பூமிக்கு அனுப்ப உள்ளது. பூமியில் இருந்து நிலவின் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பிய பிறகு தொடர்பு கொள்வது கடினம்.
நிலவின் தென் துருவம் பூமியை நோக்கி இருக்கும் பகுதி அல்ல. அது நிலவின் பின்பகுதி. எனவே அப்பகுதியில் தரையிறங்குவது ஆபத்து நிறைந்ததாக உள்ளது. இத்தகைய நிலையில், 2019 ஆம் ஆண்டே தென் துருவத்தில் சாங் – 4 (Chang’e-4) என்ற விண்கலத்தை தரையிறக்கியது சீனா. இந்தியாவும் வெற்றிகரமாக தென்துருவத்திற்கு 2023 ஆம் ஆண்டு சந்திரயான் 3ஐ அனுப்பி சாதித்தது. நிலவிலிருந்து மாதிரிகளை சேகரிப்பதற்காக சீனா விண்கலத்தை அனுப்பியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
நிலவில் நாம் பார்க்கக்கூடிய புயல்களின் பெருங்கடல் என்ற பொருள் கொண்ட ஓசானஸ் புரோ செல்லாரம் (Oceanus Procellarum) பகுதியில் 2020 ஆம் ஆண்டு சாங் – 5 விண்கலம் 1.7 கிலோ அளவிற்கு மாதிரிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. விண்கலத்தின் பணி இந்நிலையில் இரண்டு தினங்களில் சாங் – 6 விண்கலம் அதன் பணியை துவங்கும் என்றும் முதல் கட்டமாக 2 கிலோ அளவிற்கு நிலவின் மேல் பகுதி மற்றும் அடிப்பகுதி மண்ணையும் பாறை மாதிரிகளையும் எடுக்கும் எனவும் அந்த மாதிரிகள் நிலவை சுற்றிவரும் லேண்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜூன் 25 அன்று பூமிக்கு கொண்டுவரப்படும் எனவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நிலவின் தென்துருவ மண் மற்றும் பாறைகளை கொண்டுவந்து ஆராய்ச்சி செய்யப்போகும் உற்சாகமும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளது என அமெரிக்க அப்பல்லோ திட்டம் மற்றும் சீனாவின் முந்தைய திட்டங்கள் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலவின் பாறைகளை ஆய்வு செய்த மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஜோன் பெர்னெட்ஃபிஷர் (Professor John Pernet-Fisher) தெரிவித்தார்.
உலகம் தோன்றியது குறித்த புதிய தகவல்கள் குறிப்பாக நிலவின் முற்றிலும் வேறுபட்ட பகுதியிலிருந்து வரும் பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம் கிரகங்கள் எப்படித் தோன்றின என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என அவர் கூறினார். ஏனெனில் இதற்கு முன்பாக நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள், ஐஸ்லாந்து அல்லது ஹவாயில் இருக்கும் எரிமலைப் பாறைகளை போன்றே இருக்கும். இந்நிலையில் நிலவின் மறுபக்கத்திலிருந்து கண்டெடுக்கப்படும் பாறைகள் மாறுபட்ட இரசாயனவியல் அம்சங்களைக் கூட கொண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
கிரகங்கள் எப்படி தோன்றின? கடினமான மேற்புறப் படுகைகள் ஏன் தோன்றுகின்றன? சூரியக் குடும்பத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வந்தது? என்பது போன்ற பெரிய கேள்விகளுக்கும் கூட பதில் கிடைக்க இந்த மாதிரிகள் உதவலாம் என்று ஆச்சரியமான தகவல்களைத் தெரிவித்து மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார் பேரா.ஜோன்பெர்னெட்.
அனைவருக்கும் ஆய்வு செய்ய வாய்ப்பு நிலவின் தென்துருவ மாதிரிகளை முதலில் ஆய்வு செய்ய சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதன் தென் துருவம் அதிகம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அங்கு பனிக்கட்டி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அப்பகுதியை புரிந்துகொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வமாக உள்ளன.