நீங்களும் ‘அந்நியன்’ தான்!

P. ஜீவா

மூளை என்ற ஒரு ‘கருவி’ உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆற்றிய பங்கு மிக மிக பெரியது. ஒன்றரை கிலோ கூட தேறாத ‘அச்சாதனத்தை’ முழுமையாக புரிந்து கொள்ள சூப்பர்-கம்பியூட்டர்களையும், ரோபோக்களையும் உருவாக்கிய மனிதனால் கூட இன்னமும் முடியவில்லை. ஆனால் புரிந்துகொண்ட வரையில் மூளையின் சிறப்பும் அதன் கற்பனைக்கெட்டாத சாத்தியங்களும் நம்மை கொஞ்சமும் வியக்க வைக்க தவறியதே இல்லை. உதாரணத்திற்கு, மூளையின் ஒவ்வொரு பகுதியும் மனித உடலின் எந்தெந்த குறிப்பிட்ட செயல்பாட்டுக்கு பயன்படுகிறது என்று தெளிவாக வகுத்து விளக்கிய பல ஆண்டுகளுக்கு பின்னரும் கூட, அமெரிக்காவில் திடீரென்று நடந்தேறிய ஒரு சம்பவம் அவ்விளக்கங்களையம் தீர்மானங்களையும் நேரடியாக கேள்விக்குட்படுத்தி இருந்தது.

பத்து வயதை கூட எட்டாத ஓர் அமெரிக்க சிறுவன் இளவயதிலேயே ஏதோ விபத்தின் காரணமாக மூளையின் ஒரு பாதியை இழக்க நேரிட்டது. அவனுக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் அவன் இழந்த மூளைப்பகுதிக்கு நேரடியாக தொடர்புடைய அவனது உடல்பாகங்கள் அனைத்தும் விரைவில் செயலிழந்துவிடும் என்ற துர்ச்செய்தியை அவனது பெற்றோர்களிடம் வருத்தத்தோடு தெரிவித்தனர். இதனால், கூடிய விரைவில் அவன் இறக்கவும் நேரிடும் என்றே அம்மருத்துவர்கள் கணித்தனர். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அக்குடும்பத்தை சந்தித்த போது, அச்சிறுவன் தனது படிப்பை முடித்து விட்டு நல்ல ஆரோக்கியத்துடன் ஒரு உணவகத்தில் கேஷியர் ஆக பணிபுரிந்து வருகிறான் என்பதை அறிந்து வியந்து போனார்கள் அம்மருத்துவர்கள். அவனது மூளையை பரிசோதித்த பின்பு, அந்த மூளை அதன் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் மீதம் இருக்கின்ற பாதி இடத்துக்குள்ளேயே சரியாக திட்டமிட்டு சிக்கனமாக நடத்தி வருவதையும் வியந்து எழுதி இருக்கிறார் உலகின் தலை சிறந்த நரம்பியல் அறிஞர் ஆன டேவிட் ஈகில்மன். இப்பேர்பட்ட மனித மூளை என்னும் இயற்கையின் அதிசயத்தை ஒரு சிறிதளவேனும் புரிந்து கொள்ள இக்கட்டுரையின் மூலம் முயற்சிப்போம்.

பரிணாம வளர்ச்சியின் (evolution) மிக ஆரம்ப கட்டத்திலேயேயே பூமியில் தோன்றியவை ஊர்வன உயிரினங்கள் (reptiles). அவைகளின் தனிச்சிறப்புகள் என்று சொல்வதெனில், அவ்வுயிரினங்களின் ‘பட்டை தீட்டப்பட்ட’ குரூரம், வன்மம், அதிதீவிரமாக காம இச்சை ஆகியவற்றையே குறிப்பிட்டு சொல்லலாம். அதுவரை உருவாகி இருந்த உயிரினங்களில் இம்மூன்று குணாதிசயங்களும் வேறெந்த உயிரினத்திலும் இவ்வளவு தீவிரமாக காணப்பட்டதில்லை என்றே சொல்கிறார்கள் அறிஞர்கள். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளும் ஒரே விஷயம், ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் மூளை (reptilian brain) அவைகள் வாழ அடிப்படையாக இருந்த வன்மத்திற்கும், அதீத காமத்திற்கும் பெரிய அளவில் ஊற்றுக்கண்ணாக விளங்கியது என்பதையே. தமது அன்றாட உணவுத்தேவைகளுக்கும், இனப்பெருக்கத்திற்கும் இக்குணாதிசயங்கள் இல்லை எனில் அவ்வுயிரினங்களால் பரிணாம வளர்ச்சி என்னும் குரூரமான போட்டியில் தொடர்ந்து வெற்றி அடைந்திருக்கவே முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஊர்வன உயிரினங்கள் உருவாகி பல ஆயிரமாண்டுகளுக்கு பிறகு இப்பூமியில் தோன்றி தழைத்து வந்தவை தாம் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமான பாலூட்டிகள் (mammals). இவை தோன்றிய பின்பே முதன் முதலில் உயிரினங்கள் இடையே அன்பு செலுத்தும் தன்மை (தமது குட்டிகள் மீது), சகிப்பு, தியாகம் போன்ற குணாதிசயங்களை காண முடிந்தது. ஆனால் இதே உயிரினங்களின் மூளை அவற்றை தமது எதிரிகளை குரூரமாக வேட்டையாடவும், தனது சகப்போட்டியாளர்களை வஞ்சம் வைத்து வெல்லவும் கூட தயார் செய்திருந்தன- காரணம், ஊர்வன மூளையின் (reptilian brain) அடுத்த பரிணாம வளர்ச்சியாக உருவாகி வந்ததே இப்பாலூட்டிகளின் புதிய மூளை (mammalian brain). இன்னும் சொல்லபோனால் ஊர்வன உயிரினங்களின் அடிப்படை குணாதிசயங்களான குரூரம், வன்மம், காமம் என்னும் அடுக்குகளின் மேல் தான் பாலூட்டிகளின் குணாதிசயங்களான அன்பு, தியாகம் போன்றவையும் அப்பாலூட்டிகளின் மூளையில் program செய்யப்பட்டிருந்தன. வாட்ஸாப் என்னும் புதிய தகவல் பரிமாற்ற செயலியை கொண்ட ஸ்மார்ட்போன்கள் பழைய செல்போன்களின் தகவல் பரிமாற்ற அம்சமான SMS வசதியையும் சுமந்து கொண்டு வருவதை போலத்தான் பாலூட்டிகளின் மூளைகளும் தங்களது மூதாதையர்களான ஊர்வனவற்றின் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு உருவாகி வந்தன.

இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இப்பூமியில் தோன்றி வந்தவர்கள் தாம் மனிதர்கள் ஆகிய நாம் பாலூட்டி வகைகளை சேர்ந்தவர்களாக இருப்பினும் அவைகளிடம் இல்லாத ஒரு தனி இயல்பு நமது மூளையில் புதிய அம்சமாக சொருகப்பட்டிருந்தது – ‘சிந்தித்தல்’. எனவே பரிணாம வளர்ச்சியின் உச்சபட்ச சாதனையான நமது மனித மூளையில், மூன்று தனிப்பெரும் அம்சங்கள் ஒருங்கே, ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இடம்பெற்றிருந்தன – வன்மம், குரூரம், காமம் என்னும் ஊர்வனவற்றின் உணர்வுகளை தூண்டும் reptilian complex, தியாகம், கருணை என்னும் பாலூட்டிகளின் உணர்வுகளை தூண்டும் limbic system, இவ்விரு குணாதிசயங்களையும் எங்கே எவ்வாறு சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் சிந்தனை ஆற்றலை தரும் neocortical complex. இம்மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியே நமது மனித மூளை உருவாகி வந்திருப்பதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற நரம்பியல் அறிஞரான Dr. பால் மெக்ளீன் நம்பினார். மனித மூளையின் செயல்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் ஊடாக புரிந்து கொள்ளும் இம்முறையை (triune concept of the brain) 1960- களில் இவ்வுலகிற்கு அறிமுக படுத்தி பல அறிவியல் கேள்விகளுக்கு பதில் கிடைக்க வித்திட்டார்.

மனசோர்வு, மனச்சிதைவு, schizophrenia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை அதீத குரோதவுணர்வுகளாலும், சந்தேக உணர்வுகளாலும், காம உணர்வுகளாலும் சூழப்பட்டிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமாவில் காட்டப்படும் சைக்கோ கொலைகாரர்களில் பலர் கட்டுப்படுத்த முடியாத காமத்தாலும், கொலை வெறியாலும் தூண்டப்பட்டு கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை நாம் பல முறை கண்டிருக்கின்றோம். இம்மனநோயாளிகளின் மூளையில் reptilian பகுதி மட்டுமே சதா நேரமும் ஓய்வில்லாது இயங்கிக்கொண்டிருப்பதனாலேயே இந்த விளைவு ஏற்படுகின்றது என்று சில அறிஞர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அதே நேரத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள், ஞானிகள், மெத்த படித்த அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் மூளைகளில் அவர்களது limbic பகுதிகளும், neocortex பகுதிகளும் அம்மூளைகளின் reptilian செயல்பாடுகளை ஓரளவுக்கு ஒடுக்கி வைத்திருப்பதையும் காணலாம் என்று சொல்கின்றனர். தியானம், வாசித்தல், சமூக ஈடுபாடு போன்ற ‘பயிற்சிகளை’ மேற்கொள்வதன் மூலம் நம்மால் நமது மூளையின் ‘reptilian’ பகுதியை சிறிதளவேனும் வீழ்த்தி, நமது குடும்பத்தாருக்கும், இச்சமுதாயத்திற்கும் பயனளிக்க கூடிய சிறந்த மனிதர்களாக நம்மால் உருவெடுக்க முடியும் என்பதே இதன் மூலமாக நாம் அறியக்கூடிய உண்மை.

மெக்ளீன் உருவாக்கிய இந்த Triune concept of the brain இன்றைய நரம்பியல் அறிஞர்களால் பல காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தாலும், மனித மூளையானது பரிணாம வளர்ச்சியின் காரணமாக எத்தனை சுவாரஸ்யமான அடுக்குகளை கொண்டு கோர்க்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த concept இன் மூலமாக மட்டுமே நம்மால் எளிதில் அறிந்து கொள்ளமுடியும் என்கிறார் அமெரிக்க அறிஞரான கார்ல் சாகன். அமைதியானவர்கள் எனவும், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு ஒன்றும் செய்யமுடியாமால் பரிதவிக்கும் நடுத்தர கையாலாகாத குடிமக்களாகவும் அறியப்படும் நமக்குள் கூட ‘அந்நியனை போல்’ மூன்று பெர்சனாலிட்டிகள் ஒளிந்து கொண்டிருப்பதை விட பெருமைக்குரிய விஷயம் வேறு என்னவாக இருந்துவிட முடியும்?
***
அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள் மேலே படிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

மானுடகுலத்தையே வழிநடத்தும் சிந்தனைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியது, விளங்குவது, விளங்கிக்கொண்டிருப்பது உலகிலேயே ஐரோப்பா கண்டம் ஒன்றே என்பது எனது தனிப்பட்ட கருத்து. அக்கண்டத்தில் இன்று ஏற்படும் நிகழ்வுகளின் நிழல்களே மற்ற கண்டங்களிலும் நாடுகளிலும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக நடைபெறும் விந்தையை நான் அந்நாடுகளின் வரலாறாக படித்திருக்கின்றேன்.

1200-களில் இருந்து 1600 வரையிலும் மத வெறியாலும், இனவெறியாலும், அதனால் பெருக்கெடுத்த குரோதத்தாலும், வன்மத்தாலும் பல உயிர்களை இழந்து நின்றது ஐரோப்பா. மானுட சிந்தனை என்னும் பரிணாம வளர்ச்சியில் இக்காலகட்டத்தில் ஐரோப்பா reptilian phase -இல் இருந்தததாகவே என்னால் நினைக்க முடிகிறது. பின்னர் அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக 1600-களின் இறுதியில் இருந்து விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) என்னும் அறிவொளி காலத்து அறங்களை(enlightenment values) உலகிற்கு முன்வைத்ததும் அதே ஐரோப்பா தான். இந்த கட்டத்தில் ஐரோப்பா அதன் சிந்தனையின் mammalian phase இல் இருந்திருக்குமோ என்றே யூகிக்க முடிகிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் சகமனிதர்கள் மீது அன்பு செலுத்தவும், பொதுநலத்திற்காக சுயநலத்தை தியாகம் செய்யவுமே இந்த அறங்கள் பெரிதும் பயன்பட்டன என்பதே ஐரோப்பாவின் வரலாறு.

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்னும் இந்த புதிய ‘அறிவொளி’ அறங்களின் மேலே அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டி உருவாக்கப்பட்ட பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாகவே நான் ஐரோப்பா அறிமுகப்படுத்திய மார்க்சியத்தை காண்கிறேன். அரசியல் என்னும் கட்டற்ற, சிக்கலான பெருவெளியை வரலாற்றின் ஊடாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆராய முதன் முதலாக மானுடத்திற்கு வழி வகுத்தது மார்க்சியம் தான். இந்த கட்டத்திலே தான் ஐரோப்பிய சிந்தனை அதன் உச்சபட்ச நிலையான neo-cortical phase- ஐ அடைந்தது என்பதும் எனது நம்பிக்கை.

காட்டுமிராண்டியாக தனது வாழ்வை தொடங்கிய மனிதன் காலப்போக்கில் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்னும் சமூக அமைப்புகளுக்குள் காலடி எடுத்து வைத்து, இறுதியில் பொதுவுடைமை என்னும் சுரண்டலற்ற, அதே நேரத்தில் எல்லை அற்ற அன்பினால் மட்டுமே கட்டப்பட்ட, அதிநவீன சமூகத்திற்குள் காலடி எடுத்துவைப்பான் என்பதே மார்க்சிய சிந்தனையின் அடிப்படை. மெக்ளீன் முன்வைத்த Triune concept of the brain- உம் கூட மார்க்சியத்தின் இத்தகைய வரலாற்று தரிசனத்திற்கு ஓர் உயிரியல் ரீதியான சான்றை தந்திருப்பதாகவே எனக்கு படுகிறது. மதப்பூசல்களாலும், சாதிபிரச்னைகளாலும் வன்மம் சூழ்ந்த நமது தேசத்து இன்றைய இந்துத்துவ reptilian அரசியல் சிக்கல்களுக்கு, ஆழ்ந்த சிந்தனையின் மூலம், அன்பினாலும், அறிவியலாலும் கட்டமைக்கப்பட்ட மார்க்சிய அரசியலையே நான் மாற்றாக முன்வைக்கிறேன் என்பதை வெளிப்படையாக சொல்ல தேவையில்லை என்றே நினைக்கிறேன்!

Tags: