இஸ்ரேல் உயர் அதிகாரிகள் அனைவரும் போர்க் குற்றவாளிகள்

காஸாவில் கடந்த எட்டு மாத காலமாக நடை பெற்று வரும்  இனப்படுகொலை போரில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்த குற்றவாளிகள் இஸ்ரேல் அதிகாரிகள் தான் என ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம்  ஜூன் 12 அன்று தெரிவித்துள்ளது.

போரில் வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்தது, அவர்களது உடமைகள் மீது தாக்குதல் நடத்தியது, வலுக்கட்டாயமாக அவர்களை இடமாற்றம் செய்தது, பாலியல் வன்முறைகளை ஏவியது, சித்ரவதை உள்ளிட்ட மனிதாபிமானமற்ற கொடூர செயல்களை அரங்கேற்றியது, அவர்களை செயற்கை பட்டினியில் தள்ளியது உள்ளிட்ட போர்க் குற்றங்களுக்கு இஸ்ரேல் அதிகாரிகளே பொறுப்பு என கண்டறிந்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளான மேற்கு கரை மற்றும் காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் மேற்கொள்ளும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக 2021ஆம் ஆண்டே ஐ.நா சர்வதேச விசாரணை ஆணையம்  நிறுவப்பட்டது. காஸாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் அவர்களின் வீடுகள் உள்ளிட்ட  உள்கட்டமைப்பை அழித்தது,  முன்னெச்சரிக்கை விடுக்காமல் புறக்கணித்து, தாக்குதல் நடத்தியது  அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் என அனைத்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் இனப்படுகொலையை தூண்டுகிற மற்றும் பிற தீவிர குற்றங்களை உருவாக்கலாம் என்றும்; அவ்வாறு செய்வதை இனப்படுகொலையை நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுவதே ஆகும் என்றும்; அது சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனர்கள் ரஃபா பகுதி நோக்கி சென்ற பாதைகள், அவர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களை சர்வதேச விசாரணை ஆணையம் வன்மையாகக் கண்டித்துள்ளது. உயர்மட்ட இஸ்ரேல் அதிகாரிகள் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் தண்ணீர், உணவு, மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவிகளை துண்டித்து  உயிர் வாழத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையே ஆயுதங்களாக பயன்படுத்தியுள்ளனர் என விசாரணை ஆணையம்  உறுதிப்படுத்தியுள்ளது.  

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனர்கள் மீது பாலியல் வன்முறை, சித்ரவதை, மனிதாபிமானமற்ற கொடூரமான நடவடிக்கைகளை ஏவியுள்ளதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.  சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அடுத்த  வாரம் ஐ.நா மனித உரிமைகள் அவையில்  சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: