13 ஆண்டுகளின் பின்னர் அருந்ததி ராயை சிறைப்படுத்த துடிப்பது ஏன்?
-ச.அருணாசலம்
இந்திய சமூகத்தின் மனசாட்சியாய் திகழ்பவர் அருந்ததி ராய்! அவர் பேசிய பேச்சுக்கள் சமூகத்தில் கலவரத்தை தூண்டக் கூடியதாம்! அதனால், ‘உபா’ (UAPA) சட்டம் பாய்ந்ததாம்..! பேசி, 14 ஆண்டுகளில் நடந்திராத கலவரம், இனி நடக்கும் என்றால், அதற்கு தான் இந்த ‘உபா’வா? வி.கே.சக்சேனா என்ற வில்லன் யார்? அவரது உள் நோக்கம் என்ன..?
புகழ் பெற்ற எழுத்தாளரும், தலைசிறந்த மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் மீது, டெல்லி போலீசார் UAPA பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர்.
பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகளின் துணையுடன் ஆட்சிக்கு வந்தவுடனேயே அருந்ததி ராய் மீது பயங்கரவாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கின்றனர் என்றால், அதற்கு பொருள் என்ன?
அதுவும், ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன்னர், ஓம், 2010, ஒக்ரோபரில் அவர் பேசிய பேச்சிற்காக 2024 இல் வழக்கு தொடுப்பதில் இருந்து மக்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?
பாம்பிற்கு பால் வார்த்ததால் அது தன் வேலையைக் காட்டுகிறது.
Unlawful Activities Prevention Act என்ற பயங்கரவாத தடுப்பு சட்டம் பெரும்பாலும் பேச்சுரிமைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் அரசை தட்டிக் கேட்கும் உரிமைக்கும் எதிரான அடக்குறை கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக 2019 இல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் மூலம், தனிநபர்களையும் அவர்கள் எந்த சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாமலிருந்தாலும் “பயங்கரவாதிகள்” (terrorist) என்று அரசு குற்றஞ்சாட்ட முடியும், வழக்கு தொடுக்க முடியும். இந்தப்படியாக மோடி அரசு இத்திருத்தத்தை கொண்டு வந்து தனது சுயரூபத்தைக் காட்டியது.
புது டெல்லி துணை ஆளுனர் வினய குமார் சாக்ஸேனா கடந்த வருடம் 2023 அக்டோபர் 10 இல் அருந்ததி ராய், முன்னாள் காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் சௌக்கத் ஹுசைன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் IPC 153A,153B (hate speech) பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்க காவல் துறைக்கு அனுமதி கொடுத்தார்.
2010 ஆம் ஆண்டு கொடுத்த புகாருக்கு (complaint) பதிமூன்று ஆண்டுகள் கழித்து, 2024 இல் ஆளுனர் ஏன் அனுமதி கொடுக்கிறார்?
A God of Small Things என்ற நாவலுக்காக அருந்ததி ராய்க்கு 1997 இல் உலகப் புகழ் பெற்ற புக்கர் பரிசு (Booker Prize) வழங்கப்பட்டது. அருந்ததி ராயின் எழுத்துக்கள் யாவும் சாதாரண இந்திய குடிமக்களின் வாழ்க்கைப் பாட்டையும், வலியையும் வெளிப்படுத்துபவையே! தன்னைச்சுற்றியும், இந்திய நாட்டிலும் உலக அரங்கிலும் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி பல்வேறு கட்டுரைகளை வடித்துள்ளார் .
1998 இல் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பிற்கு பின்னர் இந்திய மேல்தட்டினர் அனைவரும் வாஜ்பாய் துதி பாடிய வேளையில், அருந்ததி ராய் The End of Imagination (1998) என்ற சிந்தனையைத் தூண்டும் கட்டுரையை வெளியிட்டார்.
The Greater Common Good (1999), The Cost of Living (2000), The Algebra of Infinite Justice (2001), Listening to Grasshoppers (2002), War Talk (2003) என்று பல்வேறு விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டார். அவற்றின் மூலம் 1998 முதல் 2004 வரையிலான பா.ஜ.க வாஜ்பாய் அரசின் செயல்பாடுகளை இலக்கிய நயத்தோடும், அறச் சீற்றத்தோடும் அலசியிருந்தார்.
“ஒரு புறம் இந்திய நாட்டின் வளங்களையும், பொதுச்சொத்துக்களையும் பெரு முதலாளிகளுக்கும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்கின்றனர், மறுபுறம் இந்த கேடுகெட்ட செயலை மறக்ககடிக்க, கலாச்சார தேசீயம்- Cultural Nationalism- என்ற போலியான வெற்றுக் கூப்பாடு போட்டு மக்களை ஏய்க்கின்றனர் “ என்று வாஜ்பாய் அரசின் பாசாங்குத்தனங்களை தோலுரித்துக் காட்டினார் அருந்ததி ராய்.
பொறுப்பாளர்களா சங்கிகள்? ஆனால், அவர்களது கெட்ட நேரம் 2004 இல் ஆட்சியையே பறி கொடுத்து நின்றனர்!
அருந்ததி ராய் கட்சி சார்ந்து எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை. அடுத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகளையும் அவர்கள் ஆட்சியில் காஷ்மீரில் நடந்த அட்டூழியத்தையும் கண்டித்து பல சொற்பொழிவுகள், ஆய்வறிக்கைகள், கண்டன கட்டுரைகள், புத்தகங்கள் என பல முயற்சிகள் முன்னெடுத்தார்.
காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தினார். வன்முறைக்கு எதிர் வன்முறை என்ற சுழற்சியை எதிர்த்த அவர், காஷ்மீர் மக்களின போராட்டத்தில் மதம் கலந்து அல்லது சாரந்து விடிவு காலம் தேடவில்லை.
இந்தச் சூழலில் அரசியல் கைதிகளை விடுவிக்க இந்திய அரசைக் கோரும் – தி ஒன்லி வே’ (‘சுதந்திரம் தான் ஒரே வழி’) என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். 2010 ஆம் ஆண்டு ஒக்ரோபர் திங்கள் 21 திகதியில் டெல்லியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் ஹூரியத் தலைவர் ஜிலானி, எஸ் .ஏ. ஆர் . ஜிலானி (2001 பாராளுமன்ற தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்பு விடுதலையானவர்) மற்றும் புரட்சிக் கவிஞர் வரவர ராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சர்ச்சைக்குரிய வகையில் இவர்களின் பேச்சுகள் இருந்தன என்பதே புகார்.
# காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை’
# அந்த மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்திய இராணுவத்தால் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,
# இந்திய அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு அனைத்து முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டும்.
இத்தகைய கருத்துக்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவை, நாட்டில் கலவரத்தை உருவாக்கக் கூடியவை! என சுஷீல் குமார் பண்டிட் என்ற காஷ்மீர் பண்டிட் ஒருவர் இந்த மாநாட்டில் பேசியவர்களுக்கெதிராக , புது டெல்லி, திலக் மார்க், மாஜிஸ்டிரேட்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு FIR பதிவு செய்யப்பட்டு , ராய் மீது தேசத் துரோக வழக்கும் (sec124A of IPC) வெறுப்பு பேச்சு (154) மற்றும் UAPA பிரிவுகளிலும் குற்றஞ் சாட்டப்பட்டது.
வழக்கு பதியப்பட்டதே தவிர, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் அரசும், காவல் துறையும் எடுக்கவில்லை. இதற்கான காரணம், அப்படி எந்த கலவரத்தையும் அவரது பேச்சு ஏற்படுத்தவில்லை என்ற யதார்த்தமே!
1990 களில் குஜராத்தில் நடந்த நர்மதா பச்சா அந்தோலன் – NBA – மேதா பாட்கரால் நடத்தப்பட்டஇயக்கம் நர்மதா அணை கட்டுவதால் வாழ்விடங்களையும், விளை நிலங்களையும் இழக்கும் ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள், ஆதிவாசிகள் இயக்கத்தில் – தன்னையும் இணைத்துக் கொண்டு மேதாபட்கரோடு சேர்ந்து போராடினார் அருந்ததி ராய்.
பிரம்மாண்டமான அணை, பிரம்மாண்டமான குண்டு, பிரம்மாண்டமான சித்தாந்தம், பிரம்மாண்டமான நாடு, பிரம்மாண்டமான யுத்தம் இவையெல்லாம் நமக்கு தேவையில்லை. இவை யாவும் பிரம்மாண்டமான தவறுகள். எனவே, வரும் நூற்றாண்டை சரியானதும், சிறியதுமாக விழைந்து ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.
இதனால் பெரு முதலாளிகள், பெரிய அரசியல்வாதிகளது ‘பகையை’ சம்பாதித்தார். அருந்ததி ராயும் மேதா பாட்கரும் ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் நலனை தூக்கிப் பிடித்த நேரத்தில், குஜராத்தை சார்ந்த பிஸினஸ்மேன் பா.ஜ.க வின் ஆதரவாளரான வி.கே.சாக்சேனா என்ற நபர்
குஜராத் முதலாளிகள் நலனை தூக்கிப் பிடிக்க, மேதா மற்றும் அருந்ததியின் செயல்களுக்கெதிராக சமூக உரிமைகளுக்கான தேசீய குழு (National Council for Civil Liberties) என்ற அமைப்பை தொடங்கி செயல்பட ஆரம்பித்தார்.
மேதா பாட்கரை தனது எதிரியாக நினைக்கும் வி. கே. சாக்ஸேனா, 2002 குஜராத் கலவரத்தின் போது அமீத் ஷா, அமீத் டி.தாக்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். 2002 ஏப்ரல் 10 அன்று இஸ்லாமிய மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து சபர்மதி ஆசிரமத்தில் மேதா பாட்கர் அமைதி வேண்டி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்.
அமீத் ஷா, அமீத் தாக்கர் மற்றும் காங்கிரசை சார்ந்த ரோகித் பட்டேல் ஆகியோருடன் சேர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்ற சாக்ஸேனா, மேதா பாட்கர் கூட்டத்தில் புகுந்து மேதாவிற்கெதிராக வன்முறையில் இறங்கியதாக கூறப்படுகிறது. சாக்ஸேனா மீது வழக்கும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
வி.கே. சாக்ஸேனாவின் செல்வாக்கும் அரசியல் தொடர்பும் வழக்கை கிடப்பில் போட்டன. பல வருடங்கள் கழிந்தன, காலத்தின் கோலமா அல்லது அலங்கோலமோ , 2022ல் அதே சாக்ஸேனா மோடியால் புது டெல்லி துணை ஆளுனராக நியமிக்கப்படுகிறார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் கூட சாக்ஸேனா மீதுள்ள 2002 வழக்கு பற்றி கேள்வி கேட்டார், பதில் கூறுவோர் யாருமில்லை!
மோடியின் பா.ஜ.க அரசு சி.ஏ.ஏ சட்டம் கோண்டு வந்த போது அதை எதிர்த்து டெல்லி தெருக்களில் மக்களோடு இணைந்து போராடியவர் அருந்ததி ராய்!
2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 3 இல், ஐநூறுக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் “நியூஸ் க்ளிக்“ என்ற ஆங்கில வலை இதழ் ஆசிரியர் பிரபீர் பூர்க்காயஸ்தா அவர்களையும் அதன் பத்திரிகையாளர்களையும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் -UAPA- கைது செய்து, சிறையிலடைத்தனர்.
பத்திரிகையாளர்கள் மீது மோடி அரசால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான இந்த தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டங்கள் நாடெங்கும் நடந்தது. புது டெல்லியிலுள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ மன்றத்திலும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அருந்ததி ராய் அந்த கண்டனக் கூட்டத்தில் நடு நாயகமாக வீற்றிருந்தார்!
ஒரு சில நாட்களுக்குள் துணை நிலை ஆளுனர் சாக்ஸேனா, பதிமூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த வழக்கை தூசி தட்டி எடுத்து, அதற்கு உயிரூட்டியுள்ளார்! அருந்ததி ராய் மற்றும் ஹுசைன் மீது ஐபிசி 153A,153B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு நடத்த காவல் துறைக்கு ஆளுனர் சாக்ஸேனா அனுமதி கொடுத்தார்.
வி.கே. சாக்ஸேனா (துணைநிலை ஆளுனர்) மீது பதிவான FIR என்னவாயிற்று என்று கேட்கிறீர்களா? அவ் வழக்கு தொடர குஜராத் உயர்நீதி மன்றம் வழக்கம் போல இடைக்கால தடை விதித்துள்ளது!
பா.ஜ.க வினர் கைமாறு செய்வது இப்படித் தான் போலும்!
சாக்சேனா அனுமதி கொடுத்து, ஏழு மாதங்கள் கழித்து இப்பொழுது புதிதாக பதவியேற்றுள்ள ஒன்றிய NDA அரசு அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர அனுமதித்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.
தேர்தல் தோல்வி கண்டாலும் , கூட்டணி கட்சிகளின் தயவால் நாற்காலியில் அமர்ந்தாலும் எதேச்சதிகாரச் சாயல், இன்னும் மோடியிடம் குறையவில்லையே ஏன்?
ஒரு மாஜிஸ்டிரேட் முன்னால் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரில், போலீஸ் ரிப்போர்ட் கேட்கப்பட்ட பிறகே வழக்கு பதியப்படும். அப்போதிருந்த டெல்லி போலீசார் அருந்ததி ராய் மற்றும் சௌவுக்கத் ஹுசைன் ஆகியோர்களின் பேச்சு, வெறுப்பை தூண்டுவதாகவோ, தேச விரோதச் செயலாகவோ இல்லை என்றே அறிக்கை அளித்துள்ளனர். ஆனால், அதை நிராகரித்து மாஜிஸ்டிரேட் வழக்கை பதிவு செய்ய நவம்பர், 27, 2010-ல் உத்தரவிட்டுள்ளார்!
F I R ல் சட்ட விரோதச் செயலைக் குறிக்கும் உபா சட்டப்பிரிவு 13 ஐ உள்ளடக்கியுள்ளனர்.
கடந்த ஒக்ரோபரில் துணைநிலை ஆளுனர் சாக்சேனா வழக்கை தொடர அனுமதித்த போதே ‘உபா’ சட்டத்தின் கீழும் அனுமதி வழங்காதது ஏன்?
ஒன்றிய அரசு அந்த அனுமதியை இப்போது வழங்குவதேன்?
கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்று காட்டவா? அல்லது ஆட்டிப் பார்க்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிடமும், இந்துத்துவ கும்பலிடமும் நற்பெயர் வாங்குதற்காக இதை மோடி கும்பல் செய்கிறார்களா?
நம்மை பொறுத்தவரையில் அருந்ததி ராய் கூறியதைப் போன்று திறந்த சந்தை என்பதன் பேரால் குரோனி கேப்பிட்டலிசமும் (crony capitalism), பாசிசமும் கோடி மீடியாவும் சேர்ந்து கலந்த இடத்திற்கு இந்தியாவை இட்டுச்சென்றுள்ளது மோடி கும்பல்.
அந்த இடத்தில் சுதந்திரமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை!
இன்னும் ஓரடி எடுத்து வைத்து மோடி அரசை முற்றிலும் அகற்றினால் தான் ஜனநாயகம் துளிர் விடும், மக்கள் குரல் எடுபடும்!
62 வயதான அருந்ததி ராய் என்பவர் தனி மனுஷி அல்ல. அவர் இந்திய சமூகத்தின் குரலாய், குரலற்றவர்களின் குரலாய் ஒலித்தவர். மக்கள் இயக்கங்கள் பலவற்றுடன் இரண்டறக் கலந்தவர். அவரை கைது செய்தால், இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் மோடி அரசு கடும் கண்டணங்களை சந்திக்க நேரும்!