62ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தீக்கதிர்’

மதுக்கூர் இராமலிங்கம்

வேருக்கு நீர் வார்ப்போம்!

1963ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி ‘தீக்கதிர்’ ஏடு தனது முதல் ஒளிக்கதிரை பரப்பி வெளிவரத் துவங்கியது. ‘தீக்கதிர்’ ஏடு வெள்ளி விழா, பொன்விழா,  வைரவிழா என விழாக்கள் பல கண்ட பெருமிதத்துடன் இலட்சியப் பயணம் செய்து, இலக்கை நோக்கி தடுமாறாமலும், தடம் மாறாமலும் 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  இந்த இனிய நாளில் தீக்கதிரின் வேராய் இருந்து விரிவடையச் செய்தோருக்கும், விழுதாய் இருந்து தாங்கி நிற்போருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது, ‘தீக்கதிர்’.  

1960களில் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த கருத்தியல் விவாதங்கள் கருக்கொள்ளத் துவங்கின. பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களால் 1963 ஆம் ஆண்டு ‘தீக்கதிர்’ ஏடு துவக்கப்பட்டது. கோவை மாவட்டத் தொழிலாளர்கள் உண்டியல் குலுக்கி திரட்டிக் கொடுத்த நிதியில் உருவாக்கப்பட்ட இந்த ஏடு இன்று வரை ஆளும் வர்க்கத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆண்டவர் நகரில் இருந்த ஒரு கட்டிடத்தில் இருந்து வார ஏடாக தன்னுடைய முதல் பயணத்தை துவக்கிய ‘தீக்கதிர்’ ஏடு பல்வேறு தருணங்களில் ஆளவந்தார்களை அலற வைத்திருக்கிறது.  தீக்கதிரை அச்சிட்டுத் தந்ததற்காகவே சிறை சென்ற அச்சகத்தார் உண்டு. ஆனாலும் ஒருபோதும் ‘தீக்கதிர்’ அஞ்சியதில்லை. 

அவசர நிலைக் காலத்தில்…

அவசர நிலைக் காலம் குறித்து இன்றைக்கு ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருப்புக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அவசரமாக நினைவுக்கு வருகிறது. இவர்களது கடந்த பத்தாண்டு கால ஆட்சி என்பது அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலமாக இருந்தது என்பதும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள குடிமைச் சமூகத்திற்கான உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன என்பதையும் மறந்து விடுவதற்கில்லை.  அவசரநிலைக் காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது என்பது உண்மைதான். அன்றைக்கு அவசர நிலைக் காலத்தை எதிர்த்து ஜனநாயக உரிமைகளுக்காக சண்டமாருதம் செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பத்திரிகைகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை போல இரட்டைத் தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப் பட்ட காலம் அது. அந்த இருண்ட காலத்திலும் கூட ‘தீக்கதிர்’ தனது ஒளிப் பயணத்தில் ஓய்வெடுத்ததில்லை. அடக்குமுறைகளை எதிர்கொண்டவாறே அன்றாடம் ஜனநாயக விதைகளை விதைத்துக் கொண்டிருந்தது, ‘தீக்கதிர்’. ஜனநாயக காப்புக்கான அந்த சமரசமற்ற போராட்டம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் களம் வரை நீடித்தது என்பது தீக்கதிரின் நெடிய வரலாறு.

தாக்குதலை எதிர் கொண்டு…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டபோது, மதுரையில் இருந்த ‘தீக்கதிர்’ அலுவலகம் எவ்விதக் காரணமுமின்றி சமூக விரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. தலைவர்களும், ‘தீக்கதிர்’ ஊழியர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள். பேப்பர் ரீல்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆனால் பாதி எரிந்த நிலையிலிருந்த காகித உருளைகளைக் கொண்டு தீக்கதிரை அச்சடித்து தோழர்கள் மாநிலம் முழுவதும் சரியான நேரத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்பது காவியங்களை மிஞ்சும் வீர வரலாறு.  

மதுரை ‘தீக்கதிர்’ அலுவலகம் ஒருமுறை தீ விபத்துக்கு உள்ளான நாளில் கூட பத்திரிகை அச்சடிப்பது நிறுத்தப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுப்போக்குவரத்தையே தன்னுடைய விநியோகத்திற்கு பெரிதும் நம்பியிருக்கும் ‘தீக்கதிர்’ கடும் சவால்களை எதிர்கொண்டது. வாசகர்களுக்கு தீக்கதிரை கொண்டு சேர்க்க முடியாத நிலை 56 நாட்கள் நிலவியது. ஆயினும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி செயலி மூலமும், வாட்ஸ்அப் வழியாகவும் தன்னுடைய எண்மப் பதிப்பை வழங்கிக் கொண்டேயிருந்தது ‘தீக்கதிர்’. உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா கூட தீக்கதிரின் பயணத்தை தடுத்து விட முடியவில்லை.

5 பதிப்புகளாக…

சென்னையில் வார ஏடாக துவங்கப்பட்ட ‘தீக்கதிர்’, பின்னர் மதுரைக்கு வாடகைக் கட்டிடத்திற்கு குடி பெயர்ந்தது. பின் சொந்த அச்சகத்தில் சொந்த எந்திரத்தில் தின ஏடாக பரிணமித்தது. தொடர்ந்து 1993 இல் சென்னை, 2007 இல் கோவை, 2010 இல் திருச்சி, 2023 இல் திருநெல்வேலி என தற்போது ஐந்து அச்சுப் பதிப்புகளாக தீக்கதிரின் அறிவொளிப் பயணம் அகலமாகியுள்ளது.

எண்மப் பதிப்பு

2012ஆம் ஆண்டில் ‘தீக்கதிர்’ இ-பதிப்பு துவங்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் எண்மப் பதிப்பாக விரிவடைந்துள்ளது. செயலி, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் ஆப், யு-டியூப் மூலம் அனைத்து சமூக ஊடகங்களிலும் கால் பதித்துள்ள ‘தீக்கதிர்’ உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான வாசகர்களை வசீகரித்து வருகிறது. 

மார்க்சியத்தின் கம்பீரக் குரல்

வல்லாதிக்க சக்திகளின் சதியாலும், கெடுமதியாளர்களின் சூழ்ச்சியாலும் சோசலிச சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, இனி கம்யூனிசத்தை கல்லறையில் மட்டுமே பார்க்க முடியும்; பொதுவுடைமைச் சமூகம் என்பது கருகி விட்டது; மார்க்சியம் நிறமிழந்துவிட்டது என வர்க்க எதிரிகள் கெக்கலி கொட்டினர். ஆனால் ஏற்பட்டிருப்பது ஒரு பின்னடைவே அன்றி இறுதி வெற்றி மார்க்சியத்திற்கே; உலகம் முழுவதும் சோசலிச சமூகம் மலர்ந்தே தீரும்; இது ஆரூடம் அல்ல, அறிவியல் என உரத்து முழங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கம்பீரக் குரலை திசைகள் தோறும் எதிரொலித்தது ‘தீக்கதிர்’.

இன்றளவும் நவதாராளமயக் கொள்கையின் நாசகரக் கொள்கைகளை எதிர்த்து புவிப்பரப்பு எங்கும் பாட்டாளி வர்க்கம் நடத்தும் படை வரிசையை தமிழக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பெரும் பணியைச் செய்து வருகிறது ‘தீக்கதிர்’. உலகத்தை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாட நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகார அரசியலைத் தகர்க்கும் வலிமைமிகு ஒளி உளியாக ‘தீக்கதிர்’ திகழ்கிறது.

முடைநாற்றம் வீசும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் மனிதகுலம் அடையும் துன்ப துயரங்களை, பண்பாட்டுச் சிதைவுகளை தெளிவாக எடுத்துரைக்கிறது ‘தீக்கதிர்’. அன்றைக்கு வியட்நாமில் நடைபெற்ற வீரமிகு யுத்தம் துவங்கி இன்றைக்கு பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு – அழிவு வரை உலகத்தின் நடப்பைச் சொல்வதோடு, அதன் பின்னால் உள்ள உள்ளடக்கத்தையும் விண்டுரைக்கும் ஏடுகளில் இதுவும் ஒன்று. 

மதவெறி மாய்க்க…

இந்திய அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பமாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பரிவாரத்தின் அட்டூழியங்களையும், அநீதிகளையும் திசை திருப்பும் சில்லரைச் சேட்டைகளையும் அன்றாடம் நாட்டு மக்களுக்குச் சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் வீட்டுக் கதவை தட்டுகிறது ‘தீக்கதிர்’. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தேசம் காக்கும் பணியில் ‘தீக்கதிர்’ எப்போதும் முன்னணிப் படை வீரராக முனை முகத்தே நின்று போராடி வருகிறது. 

மாநில உரிமைகள் காக்க…

மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மனித உரிமைகளை காத்து நிற்கவும், மதச்சார்பின்மை கோட்பாட்டை போற்றிப் பாதுகாத்திடவும், இந்திய இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் கையில் படைக்களனாக சுழன்று போராடுகிறது ‘தீக்கதிர்’ ஏடு. காவல் நிலையப் படுகொலைகள், அதிகார வர்க்கத்தின் துப்பாக்கிச் சூடுகள், தடியடி தாண்டவங்களை எதிர்த்துக்குரல் கொடுக்கிறது. 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அன்றாடம் நிகழும் பாலியல் கொடுமைகளை நாட்டு மக்களிடம் எடுத்துரைத்து நீதி கேட்டுப் போராடுகிறது ‘தீக்கதிர்’. நாடு விடுதலை பெற்ற பின்பும், இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் தீண்டாமைக் கொடுமை, சாதியப் பாகுபாடு, சமூகக்கொடுமைகளுக்கு எதிராக  சமரசமின்றி சமர்புரியும் ஏடு இது. சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுக்கிறது. வேலையின்மை, வறுமை போன்ற சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, இதற்கு காரணமாக உள்ள அநீதியான சமூக அமைப்பையும் அம்பலப்படுத்தி பொதுவுடைமைச் சமூகம் பூக்க வேண்டியதன் அவசியத்தை அன்றாடம் அறிவுறுத்தும் ஏடு இது. 

‘நடுநிலை’ நாளேடு அல்ல!

‘தீக்கதிர்’ தன்னை ஒருபோதும் நடுநிலை நாளேடு  என்று பம்மாத்து செய்ததில்லை. முதலாளி வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான பெரும் போரில் உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளின் பக்கமே நிற்கிறது ‘தீக்கதிர்’. சீர்திருத்தங்களால் மட்டும் அனைத்து சீர்கேடுகளையும் சீர் செய்திட முடியாது; அடிப்படை மாற்றம் அவசியமானது என்பதில் அசைக்க முடியாத கருத்து தீக்கதிருக்கு உண்டு. எனவே தான் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என சமூகத்தின் சகல பகுதியினரையும் மாற்றத்திற்காக அணிதிரட்டும் ஏடாக இது திகழ்கிறது.  

நித்தியக் கண்டம், பூரண ஆயுசு என்பது போல தீக்கதிரின் 61 ஆண்டு காலப் பயணம் என்பது மலர்ப் பாதை மீதான சொகுசுப் பயணமல்ல; ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடும் சவால்மிக்க பயணமே ஆகும். கொள்கைத் திறம் வாய்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு என்பதாலும், தொழிலாளர்களே இதன் முதலாளிகள் என்பதாலும் மட்டுமே இந்தப் பயணம் சாத்தியமாயிற்று. 

Tags:

Leave a Reply